494.மாதவிடாய் பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

 

பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிவாசல் அல்லாத இடங்களில் நாம் நடந்து கொள்வதைப் போன்று பள்ளிவாசல்களில் நடந்து கொள்வது கூடாது.

 

பள்ளிவாசலின் ஒழுக்கங்களில் ஒன்றுதான் குளிப்புக் கடமையான ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய குளிப்புக் கடமை நீங்கி சுத்தமாகின்ற வரை பள்ளிவாசல்களுக்குள் நுழைவது கூடாது என்ற ஒழுக்கமாகும்.

 

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிவாசல்களுக்குள் நுழைவது கூடாது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் சான்றாக உள்ளன. சில மார்க்க அறிஞர்கள் இந்த ஆதாரங்கள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்களை எடுத்து வைத்து மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாம் எனக் கருதுகின்றனர்.

 

ஆனால் மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்ற தங்களுடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அவர்கள் என்ன வாதங்களை எடுத்து வைக்கின்றார்களோ அவை அவர்களின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் இல்லை. மாறாக பலவீனமான வாதங்களாகவே இருக்கின்றன. அது தொடர்பான விவரங்களை நாம் விரிவாகக் காண்போம்.

 

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்ற கருத்துடையவர்கள் இவ்வசனத்தை (4:43) முதல் ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

 

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4 : 43

 

இவ்வசனத்தில் பள்ளிவாசல் என்ற சொல் இடம் பெறவில்லை. அதன் கருத்தை விளக்கும் வகையில் அடைப்புக் குறிக்குள் (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) என்று நாம் சேர்த்துள்ளோம். அந்த அடைப்புக்குறியை நீக்கி விட்டுப் பார்த்தால்

 

"நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரையும், குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரையும் பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர தொழுகைக்கு நெருங்காதீர்கள்!" என்பது இதன் நேரடி மொழிபெயர்ப்பாகும்.

 

பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர தொழுகைக்கு நெருங்காதீர்கள்க் என்று இவ்வசனம் கூறுகிறது.

 

தொழாதீர்கள் என்று சொல்லாமல் தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.

 

தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்பதுடன் கடந்து செல்லுதல் என்று சேர்த்துக் கூறப்படுவதால் பள்ளிவாசலுக்குள் குளிப்புக் கடமையானவர்கள் செல்லக் கூடாது என்பது தான் இவ்வசனத்தின் பொருள் என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். நாமும் இக்கருத்தில் உடன்படுகிறோம்.

 

ஆனால் இவ்வசனத்தின் பொருள் இதுவல்ல. இதற்கு வேறு பொருள் தான் கொடுக்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். நாம் செய்யும் பொருளோ, அல்லது அவர்கள் செய்யும் பொருளோ இரண்டில் ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும். எனவே மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாம் என்ற கருத்து உள்ளவர்கள் இவ்வசனத்துக்கு எவ்வாறு பொருள் கொடுக்கின்றனர் என்பதை இப்போது பார்ப்போம்.

 

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும்போது வழிப்போக்கர்களைத் தவிர (மற்றவர்கள்) குளிக்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!

 

பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர என்று நாம் பொருள் செய்த இடத்தில் வழிப்போக்கர்களைத் தவிர என்று மாற்றுக் கருத்து உள்ளவர்கள் பொருள் கொள்கின்றனர்.

 

பாதையைக் கடந்து செல்பவர் என்பதற்கு வழிப்போக்கர் என்று பொருள் கொள்ளவும் அகராதி அனுமதிக்கிறது. அகராதியில் இடம் இருந்து அது பொருந்தாமல் போனால் அந்தப் பொருளைக் கொடுக்காமல் பொருந்தக் கூடிய பொருளைத் தான் கொடுக்க வேண்டும்.

 

இவர்கள் செய்யும் பொருள் பொருத்தமானது தானா? என்பதை அறிவதற்கு முன்னால் இவ்வாறு பொருள் செய்தால் அதிலிருந்து கிடைக்கும் சட்டங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

 

குளிப்புக் கடமையாக இருக்கும்போது வழிப்போக்கர்களைத் தவிர (மற்றவர்கள்) குளிக்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்று இவர்கள் செய்துள்ள பொருளின் படி வழிப்போக்கர்களுக்கு ஒரு சட்டமும், வழிப்போக்கர் அல்லாதவருக்கு ஒரு சட்டமும் உள்ளதாகத் தெரிகிறது.

 

வழிப்போக்கர்களாக இருப்பவர்கள் - அதாவது பயணத்தில் இருப்பவர்கள் - தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிக்காமல் தயம்மும் செய்து தொழலாம்; வழிப்போக்கர்களாக இல்லாவிட்டால் அவர்கள் குளித்து விட்டுத்தான் தொழ வேண்டும்; தயம்மும் செய்து தொழக் கூடாது என்பது தான் இவர்கள் கொடுக்கும் பொருளின்படி கிடைக்கும் சட்டமாகும்.

 

வேறு வார்த்தையில் இதைச் சொல்வதாக இருந்தால் பயணிகளைத் தவிர மற்றவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக இருந்து அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர்கள் குளித்தே ஆக வேண்டும். பயணிகளாக இருந்து அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர்கள் மட்டும் குளிப்பதற்குப் பதிலாக தயம்மும் செய்யலாம் என்ற கருத்து இவர்கள் செய்யும் அர்த்தத்தில் இருந்து பெறப்படுகிறது.

 

தயம்மும் என்ற சட்டம் பயணிகளுக்கு மாத்திரம் உரியது. மற்றவர்களுக்கு அல்ல என்பது இதன் சுருக்கமாகும்.

 

இப்படி வாதிடுவோர் தாங்கள் செய்த பொருளுக்கு ஏற்ப சட்டம் இயற்ற வேண்டுமல்லவா? பயணிகளாக இருந்தாலும் பயணிகளாக இல்லாவிட்டாலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யலாமா என்று இவர்களிடம் கேட்டால் இருவரும் தயம்மும் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.

 

தண்ணீர் கிடைக்காவிட்டால் வழிப்போக்கரும் தயம்மும் செய்யலாம்; வழிப்போக்கர் அல்லாதவரும் தயம்மும் செய்யலாம் என்று இவர்கள் சட்டம் சொல்கின்றனர். அப்படியானால் வழிப்போக்கரைத் தவிர என்று அல்லாஹ் கூறியது அர்த்தமற்றது என்று இவர்கள் ஆக்குகிறார்கள்.

 

பள்ளிவாசலைக் கடப்பது பற்றி இவ்வசனம் பேசவில்லை என்பதற்காக வழிப்போக்கர்களைத் தவிர என்று பொருள் செய்தவர்கள் தாங்கள் செய்த பொருளின்படி என்ன கருத்து வருகிறதோ அதை மறுக்கிறார்கள். வழிப்போக்கர்களைத் தவிர என்ற சொற்றொடரைப் பொருளற்றதாக ஆக்குகின்றனர்.

 

வழிப்போக்கர்களைத் தவிர என்ற அர்த்தம் பொருத்தமற்றதாகவுள்ளதால் நாம் செய்த அர்த்தத்தைத் தான் செய்தாக வேண்டும். நாம் செய்த அர்த்தம் தான் இங்கே செய்ய முடியும் எனும்போது இவ்வசனம் பள்ளிவாசலைக் கடந்து செல்வது பற்றியே பேசுகிறது என்பதில் சந்தேகமில்லை.

 

குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிவாசலைக் கடந்து செல்லலாமே தவிர பள்ளிவாசலில் தங்கக் கூடாது என்ற கருத்தை மிகத் தெளிவாகச் சொல்லும் வசனமாக இது அமைந்து விடுகிறது. அதாவது குளிப்புக் கடமையானவர்கள் தொழுவதும் கூடாது. தொழுமிடத்திற்குள் தங்குவதும் கூடாது. ஆனால் தொழுமிடம் வழியாகக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் அவர்கள் தொழுமிடத்திற்குள் நுழைந்து கடந்து செல்வதில் எவ்விதக் குற்றமும் இல்லை என்பதே மேற்கண்ட வசனத்தின் பொருளாகும்.

 

குளிப்புக் கடமையானவர் உள்ளூரில் இருந்தாலும், பயணியாக இருந்தாலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யலாம். தண்ணீர் கிடைத்து விட்டால் உள்ளூரில் உள்ளவர்களும், பயணிகளும் தண்ணீரைக் கொண்டுதான் குளிப்புக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் மார்க்கத்தின் நிலைப்பாடு.

 

இவ்வாறு இருக்கையில் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்கின்ற சட்டம் பயணிகளுக்கு மட்டும் உரியது என்ற கருத்தைத் தரும் வகையில் பொருள் செய்வது தவறானதாகும். எனவே மேற்கண்ட வசனத்தில் ஆபிரீ சபீல் என்ற வார்த்தைக்கு வழிப்போக்கர்கள் அல்லது பயணிகள் என்று பொருள் செய்வது மிகவும் தவறானது என்பதும் ஆபிரீ சபீல் என்பதற்கு (பள்ளிவாசலை) பாதையாகக் கடந்து செல்வோர் என்று நாம் கொடுக்கும் பொருளே சரியானது என்பதும் இதிலிருந்து உறுதியாகின்றது.

 

இங்கே மற்றொரு சந்தேகம் எழலாம். மேற்கண்ட வசனத்தில் குளிப்பு கடமையானவர்கள் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. மாதவிடாய்ப் பெண்கள் என்று சொல்லப்படவில்லையே என்பது தான் அந்தச் சந்தேகம். குளிப்புக் கடமையானவர்கள் என்று நாம் பொருள் செய்த இடத்தில் ஜுனுப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் உள்ளடங்குவர்.

 

ஜனாபத் - ஜுனுப் என்பதின் பொருள் தூரமாகுதல் என்பதாகும். இதற்கு இந்திரியம், அசுத்தம் என்ற பொருளும் உண்டு. உடலுறவு கொள்ளுதல், இச்சையுடன் இந்திரியத்தை வெளியேற்றுதல், மாதவிலக்கு ஏற்படுதல், பிரசவத்தீட்டு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் மறைமுக அசுத்தத்திற்கும் இச்சொல் பயன்படுத்தப்படும்.

நூல் : முஃஜமு லுகத்தில் ஃபுகாஹாயி

 

மாதவிடாய் ஏற்பட்டவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாம் என்று கூறுவோர் ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பான பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "பள்ளிவாசலில் உள்ள தொழுகை விரிப்பை எடுத்து என்னிடம் கொடு'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதற்கு நான் "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றேன். அப்போது அவர்கள் "மாதவிடாய் என்பது உனது கையில் இல்லை'' என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 502, 503

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது "ஆயிஷா! அந்தத் துணியை எடுத்து என்னிடம் தா!'' என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மாதவிடாய் உனது கையிலில்லை'' என்று சொன்னார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.

நூல் : முஸ்லிம் 504

 

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் செல்லலாம் என்ற கருத்தில் உள்ளவர்கள் அதற்குச் சான்றாக மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் முன்வைக்கின்றனர்.

 

முதல் ஹதீஸில் பள்ளிவாசலில் உள்ள தொழுகை விரிப்பை எடுத்துத் தா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தொழுகை விரிப்பு பள்ளிவாசலில் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெரிகிறது. பள்ளிவாசலில் உள்ள விரிப்பை எடுத்துத் தா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

 

பள்ளிவாசலுக்குள் இருந்து கொண்டு பள்ளிவாசலில் உள்ள விரிப்பை எடுத்துத் தா என்று யாரும் கூற மாட்டார்கள். பள்ளிவாசலில் தொழுகை விரிப்பு இருந்துள்ளது. வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்துள்ளதால் ஆயிஷா (ரலி) அவர்களும் வீட்டில் தான் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் இருந்த விரிப்பை எடுத்துத் தருமாறு ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் சென்று அந்த விரிப்பை எடுத்து வந்து இருக்கலாம். அல்லது பள்ளிக்குள் கையை நீட்டி எடுத்து இருக்கலாம். ஏனெனில் பள்ளியும் வீடும் அருகருகில் தான் இருந்தன.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது என்னிடத்தில் வருபவர்களாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் என்னுடைய அறையின் கதவில் சாய்ந்து இருந்து கொள்வார்கள். நான் என்னுடைய அறையில் இருந்தவளாக அவர்களின் தலையை கழுவி விடுவேன். நபியவர்களின் ஏனைய உடல் பகுதி பள்ளியிலே இருக்கும்.

நூல் அஹ்மத் 24608

 

பள்ளிவாசலும் ஆயிஷா (ரலி) அவர்களின் வீடும் ஒன்றாகத்தான் இருந்தது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் சென்று அந்த விரிப்பை எடுத்து வந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இது நமது நிலைபாட்டுக்கு எதிராக ஆகாது. நமது நிலைபாட்டை ஒட்டியதாகத் தான் அமையும். பள்ளியில் மாதவிடாய்ப் பெண்களும் குளிப்புக் கடமையானவர்களும் தங்கக் கூடாது; ஆனால் கடந்து செல்வதற்காக பள்ளிக்குள் போகலாம் என்பது தான் நமது நிலைபாடு. குர்ஆன் வசனமும் அதைத்தான் சொல்கிறது.

 

இரண்டாவது ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு தொழுகை விரிப்பை எடுத்துக் கேட்டனர் என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த தொழுகை விரிப்பை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொண்டு வந்து பள்ளியில் இருந்த நபியவர்களிடம் கொடுத்தார்கள் என்று இதை விளங்கினாலும் இதுவும் நமது நிலைபாட்டுக்கு ஏற்றதாகத் தான் உள்ளது. பள்ளிக்குள் இருக்கும் பொருளை மாதவிடாய் ஏற்பட்டவர்கள் எடுத்து வரலாம் என்ற கருத்து மேற்கண்ட வசனத்தில் இருந்து தெரிவதால் அதற்கு விளக்கமாக இந்தச் செயல் அமைந்துள்ளது.

 

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிவாசலில் தங்குவதற்கு இது ஆதாரமாக ஆகாது. கடந்து செல்வதற்குத் தான் ஆதாரமாகும். கடந்து செல்லலாம் என்பதுதான் நமது நிலைபாடாகும்.

 

மாதவிடாய் உன் கையில் இல்லையே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் சொன்னார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். பள்ளிக்குள் நுழையாமல் கையை மட்டும் பள்ளிக்குள் நீட்டி விரிப்பை எடுத்துக் கொடுத்திருப்பார்கள் என்பதை இதில் இருந்து விளங்கலாம். உன் கையில் மாதவிடாய் இல்லையே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து இப்படி விளங்கலாம். இப்படி விளங்கினால் பள்ளிக்குள் கையை மட்டும் தான் நீட்டினார்கள் என்பதற்குத் தான் இது ஆதாரமாக அமையும்.

 

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழக் கூடாது என்பதால் தொழுகைக்கான விரிப்பையும் தொடக் கூடாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் தயங்கி இருக்கலாம். அந்தத் தயக்கத்தை நீக்குவதற்காக உன் கையில் மாதவிடாய் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கலாம்.

 

சில அறிவிப்புகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை விரிப்பை எடுத்துக் கேட்டபோது ஆயிஷா (ரலி) அவர்கள் நான் தொழக்கூடியவளாக இல்லையே என்று பதில் கூறியதாக இடம் பெற்றுள்ளது. இது ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகை விரிப்பைத் தொடுவதை தவறு என்று எண்ணினார்கள் என்ற கருத்தையும் தரலாம்.

 

மாதவிடாய் நிலையிலுள்ள பெண்கள் பள்ளிக்குள் செல்லலாம் என்று கருதுபவர்கள் பின்வரும் செய்தியையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

 

ஒரு கருப்பு நிற அடிமைப்பெண் அரபுகளில் ஒரு குடும்பத்தாருக்குச் சொந்தமானவளாயிருந்தாள். (நீண்ட சம்பவம்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அந்தப் பெண்ணுக்கென ரோமத்தினாலான ஒரு கூடாரம் அல்லது சிறிய குடில் இருந்தது.

நூல் : புகாரி 429

 

மேற்கண்ட செய்தியில் ஒரு கருப்பு நிற அடிமைப் பெண்ணிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் ஒரு கூடாரம் அமைத்துத் தங்குமாறு கூறினார்கள் என்று இடம் பெற்றுள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பெண்ணிற்கு பள்ளியில் கூடாரம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் வருவது கூடாது என்றிருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருப்பார்களா? எனவே மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாம் என வாதிடுன்றனர்.

 

ஆனால் மேற்கண்ட செய்தியில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் வரலாம் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. மேற்கண்ட செய்தியை அவர்கள் புரிந்து கொண்டதில்தான் தவறு ஏற்பட்டுள்ளது. ஹதீஸ்களில் பள்ளிவாசல் என்ற சொல் தொழுகை நடக்கும் இடத்துக்கும் சொல்லப்படும். பள்ளிவாசலுக்கு உரிமையாக உள்ள தொழுகை நடக்காத இடங்களுக்கும் சொல்லப்படும். இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் தான் இதை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

 

இதற்கு உதாரணமாக சில ஹதீஸ்களை முன்வைக்கிறோம்.

 

நாங்கள் நபியவர்களுடன் இருக்கும்போது ஒரு மனிதர் ஒட்டகத்தில் ஏறி வந்தார். ஒட்டகத்தைப் பள்ளிவாசலில் படுக்கவைத்து அதைக் கட்டிப்போட்டார்.

பார்க்க : புகாரி 63

 

ஒட்டகத்தைப் பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்தில் கொண்டு வந்து கட்டினார் என்று இதை நாம் புரிந்து கொள்ள மாட்டோம். மாறாக பள்ளிவாசலுக்குச் சொந்தமான வளாகத்தில் ஒட்டகத்தைக் கட்டினார் என்று தான் புரிந்து கொள்வோம்.

 

இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி பள்ளிவாசலுக்குள் ஒட்டகத்தைக் கட்டிப் போடலாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

 

அபீசீனியர்கள் பள்ளிவாசலில் வீர விளையாட்டு விளையாடினார்கள். அதை நான் பார்க்கும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

பார்க்க : புகாரி 455, 988

 

அபீசீனியர்கள் பள்ளிவாசலுக்குள் அம்பெய்து வீர விளையாட்டுக்கள் விளையாடினார்கள் என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். மாறாக பள்ளிவாசலுக்குச் சொந்தமான வளாகத்தில் இது நடந்தது என்று தான் புரிந்து கொள்வோம்.

 

விபச்சாரம் செய்த யூத ஆணும், யூதப் பெண்ணும் பள்ளிவாசலில் ஜனாஸா வைக்கும் இடத்தில் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.

பார்க்க : புகாரி 1329, 3332, 4556

 

பள்ளிக்கு அருகில் ஜனாஸா வைப்பதற்கு ஒரு திறந்த வெளி இருந்தது என்றும், அந்த இடத்தில் தான் கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் இதைப் புரிந்து கொள்கிறோம். பள்ளிவாசலுக்குள் கல்லால் எறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்றலாம் என்று புரிந்து கொள்ள மாட்டோம்.

 

அகழ்ப்போரில் சஅது (ரலி) அவர்களுக்குக் காயம் பட்டபோது அவர்களை அருகில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரிப்பதற்காக பள்ளியில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது. அவரது காயத்தில் இருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது.

பார்க்க : புகாரி 463, 4122

 

பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் காயம் பட்டவருக்காக எப்போது ஒரு கூடாரம் எழுப்பப்பட்டு விட்டதோ அப்போது அது பள்ளிவாசல் என்ற நிலையில் இருந்து நீங்கி விடும் என்று இதைப் புரிந்து கொள்கிறோம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் பாயினால் ஒரு கூடாரத்தை அமைத்து தொழுதார்கள். மக்கள் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். பிறகு நபியவர்களின் சப்தம் கேட்காததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வருவதற்காக மக்கள் கனைத்துப் பார்த்தனர். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வந்து நீங்கள் உங்கள் வீடுகளில் தொழுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்தது எனக் கூறினார்கள்.

 

பார்க்க : புகாரி 731, 7290

 

உபரித் தொழுகைகளைப் பள்ளியில் தொழுவது சிறந்தது அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரையை அவர்கள் தான் முதலில் பேணுவார்கள். பள்ளிக்குள் கூடாரம் அமைத்த பின்னர் அதை அவர்கள் பள்ளியாகக் கருதவில்லை. தமது வீடு என்ற நிலையில் வைத்து உபரித் தொழுகையைத் தொழுதுள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

 

இதில் இருந்து தெரிய வரும் உண்மை என்ன? பள்ளிவாசலில் அனைவருக்கும் பொது என்ற நிலையை மாற்றி குறிப்பிட்ட ஒரு நபருக்காக அல்லது குறிப்பிட்ட பணிக்காக ஒதுக்கப்பட்ட இடம் பள்ளிவாசல் என்று சொல்லப்பட்டாலும் பள்ளியின் சட்டங்கள் அதற்கு இல்லை என்பது தான் இதில் இருந்து தெரிய வரும் உண்மையாகும்.

 

ஒரு பெண்மணிக்குக் கூடாரமாக அமைக்கப்பட்டு விட்டால் அது அந்தப் பெண்ணின் தனி உரிமையாகி விடும். அதில் யாரும் நினைத்த நேரத்தில் நுழைந்து விட முடியாது. பள்ளிவாசல் என்றால் அது எல்லா நேரத்திலும் யாரும் நுழையும் உரிமை இருக்கும். எனவே இந்த ஹதீஸை மாதவிடாய்ப் பெண்கள் பள்ளியில் தங்கலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுவது ஏற்புடையது அல்ல.

 

பள்ளிவாசலுக்குப் போய் சிறுநீர் கழித்து விட்டு வந்தேன் என்று ஒருவர் கூறினால் அதை எப்படிப் புரிந்து கொள்வோம்? பள்ளிவாசலில் சிறுநீர் கழிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சிறுநீர் கழித்தார் என்று தான் புரிந்து கொள்வோம். தொழுகை நடக்கும் இடம் என்று புரிந்து கொள்ள மாட்டோம்.

 

திண்ணைத் தோழர்கள் குளிப்புக் கடமையுடன் பள்ளியில் தங்கியிருந்த்தையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இதுவும் மேற்கண்ட செய்திகளைப் போன்றது தான். அவர்கள் திண்ணைத் தோழர்கள் என்று குறிப்பிடப்பட்டதில் இருந்து பள்ளிவாசல் அல்லாத ஒரு திண்ணை, பள்ளிவாசல் வளாகத்தில் இருந்துள்ளது என்று அறியலாம்.

 

அதில் நபித்தோழர்கள் தமது வீடுகளைப் போல் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். பள்ளிக்குச் சொந்தமான ஆனால் பள்ளிவாசலாக இல்லாத ஒரு திண்ணையில் தங்கும்போது ஸ்கலிதம் ஏற்பட்டால் அது பள்ளிவாசலில் ஏற்பட்டதாக ஆகாது.

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப்படைப் பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூஹனீஃபா குலத்தாரைச் சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண் ஒன்றில் கட்டி வைத்தனர்.

நூல் : புகாரி 469

 

இதுவும் மேலே சொன்னவாறு அமைந்த செய்திதான். எந்த இடம் தொழுகை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டதோ அந்த இடத்தில் கட்டப்பட்டார் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. பள்ளி வளாகத்தில் பல்வேறு பணிகளுக்காக இடம் ஒதுக்கப்பட்டது போல் கைதிகளைக் கட்டிப்போடுவதற்கும் தூண்கள் இருந்தன. அதில் தான் அவர் கட்டப்பட்டார் என்பதுதான் இதன் கருத்தாக இருக்க முடியும்.

 

புகாரி 462, 2422, 4372 ஆகிய ஹதீஸ்களில் அவர் பள்ளியின் தூணில் கட்டப்பட்டார்; அவரை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள் என்று சொல்லப்பட்டதில் இருந்து பள்ளிக்கு வெளியில் உள்ள தூணில் தான் அவர் கட்டப்பட்டார்; பள்ளிக்கு உள்ளே அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

பின்வரும் ஹதீஸையும் மாற்றுக் கருத்துடையோர் தமது ஆதாரமாக வைக்கின்றனர்.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

 

நாங்கள் ஹஜ் செய்யும் எண்ணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவிற்கு அருகிலுள்ள) சரிஃப்' என்ற இடத்தில் நாங்கள் வந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் நான் அழுது கெண்டிருந்தேன். அப்போது என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து, ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்கள். நான், இந்த வருடம் அல்லாஹ்வின் மீதானையாக என்னால் ஹஜ் செய்ய முடியாது என்று நினைக்கிறேன் என்றேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது ஆதமின் பெண்மக்களுக்கு அல்லாஹ் விதியாக்கிய ஒன்றாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் அனைத்தையும் நீயும் நிறைவேற்றிக்கொள். ஆயினும் தூய்மையாகும் வரை இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வராதே! என்றார்கள்.

நூல் : புகாரி 305

 

மேற்கண்ட ஹதீஸில் மாதவிடாய் ஏற்பட்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்வதற்கு அனுமதி கொடுத்து விட்டார்கள். எனவே மாதவிடாய்ப் பெண்கள் பள்ளியில் சென்று தங்குவது குற்றமாகாது என்று ஒரு பிரிவினர் தங்களது வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அவர்களது இந்த வாதமும் தவறானதே.

 

மாதவிடாய் ஏற்பட்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு தவாஃபைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி கொடுக்கின்றார்கள். மற்ற அனைத்தையும் செய்யலாம் என்றால் மாதவிடாய்ப் பெண்கள் கஅபாவில் தொழலாமா? நோன்பு நோற்கலாமா? என்று கேட்க முடியாது.

 

மாதவிடாய்ப் பெண் தொழக்கூடாது, நோன்பு நோற்கக் கூடாது என்பதற்கு ஏனைய ஆதாரங்கள் இருப்பதால் தவாஃப் தவிர அனைத்தையும் செய் என்பதில் தொழுகை, நோன்பு அடங்காது என்று நாம் விளங்கிக் கொள்கிறோம்.

 

அது போன்று குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்குள் நுழையக் கூடாது என்று இவ்வவசனம் கூறுவதால் தவாஃப் தவிர அனைத்தையும் செய் என்பதில் பள்ளிக்குள் நுழைவது அடங்காது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃபைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய் என்று குறிப்பிட்டது ஹஜ் சம்பந்தப்பட்ட விசயத்தில்தான். இதில் ஹஜ் தொடர்பில்லாத அனைத்துக் காரியங்களும் அடங்கும் என்று முடிவெடுக்க முடியாது.

 

ஹஜ் தொடர்பில்லாத காரியங்களில் மாதவிடாய்ப் பெண்கள் எதை எதைச் செய்யலாம் என்று பொதுவான அனுமதி இருக்கிறதோ அவற்றை ஹஜ்ஜின்போது செய்வதற்குத் தடை இல்லை என்றால் அவர்கள் செய்து கொள்ளலாம். இது பொதுவான அனுமதியின் அடிப்படையில் ஆகும்.

 

மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணை அவளுடைய கணவன் உடலுறவு கொள்ளாமல் கட்டி அணைத்துக் கொள்வதற்கும், அவளுடைய மடியில் தலைவைத்து படுத்துக் கொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆனால் ஹஜ்ஜில் உள்ளவர்கள் இவ்வாறு செய்வது கூடாது. ஏனெனில் ஹஜ்ஜின்போது இவை தடுக்கப்பட்டுள்ளன. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கூறிய வாசகம் ஹஜ் தொடர்பான விசயங்களில் தவாஃபைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளலாம் என்பதுதான். ஹஜ் தொடர்பில்லாத விசயங்களுக்கும் அனுமதி கொடுத்தார்கள் என்று அதிலிருந்து புரிந்து கொள்வது மிகவும் தவறானதாகும்.

 

எனவே மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளியில் தங்கயிருப்பது கூடாது என்பதற்கு ஏனைய ஆதாரங்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் கஅபாவிற்குள்ளும் தங்கியிருப்பது கூடாது.

 

பின்வரும் ஹதீஸையும் மாற்றுக் கருத்துடையவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

குளிப்பு கடமையான நிலையில் மதீனாவின் ஒரு சாலையில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து (நழுவிச்) சென்று மறைந்து கொண்டேன். உடனே நான் (வீட்டிற்குச்) சென்று குளித்துவிட்டு வந்தேன். (இவ்வளவு நேரம்) எங்கிருந்தாய் அபூஹுரைரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் குளிப்பு கடமையான நிலையில் இருந்தேன். சுத்தமில்லாமல் தங்கள் அருகே அமர்வதை நான் வெறுத்தேன் என்று சொன்னேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகி விடமாட்டார் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 283

 

பெருந்தொடக்கினால் ஒருவர் அசுத்தமாக மாட்டார் என்று இந்த ஹதீஸ் கூறுவதால் குளிப்புக் கடமையானவர்களும், மாதவிடாய் ஏற்பட்டவர்களும் பள்ளிக்கு வருவதில் தவறில்லை என இவர்கள் கருதுகின்றனர்.

 

குளிப்புக் கடமையானவர்கள் பரிசுத்தமாகிக் கொள்ள வேண்டும் எனத் திருக்குர்ஆன் 5:6 வசனத்தில் கட்டளையிடுவதால் ஒரு முஃமின் அசுத்தமாக மாட்டார் என்பது, குளிப்புக் கடமை ஏற்பட்டவர் சுத்தமாகாமல் தொழலாம் என்ற அர்த்தத்தில் அல்ல.

 

தொழுவது, பள்ளிவாசலுக்கு வருவது , தவாஃப் செய்வது போன்ற காரியங்களைக் குளிப்புக் கடமையாகி இருக்கும்போது செய்யக் கூடாது என்று மார்க்கம் தடுத்துள்ளது. முஸ்லிம் அசுத்தமாக மாட்டான் என்பதை வைத்து இது போன்ற காரியங்களைச் செய்வது கூடும் என்று யாரும் வாதிட மாட்டார்கள். வாதிடக் கூடாது.

 

மாதவிலக்கு பெண்கள் பள்ளிவாசலுக்குள் நுழையலாம் என்பதற்கு நேரடியான எந்தச் சான்றும் இல்லை. எனவே மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் வருவது கூடாது என்பதே சரியானதாகும். ஏதாவது தேவைக்கு பள்ளியைக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்கள் உள்ளே சென்று உடனடியாக வெளியே வருவதில் எந்தத் தவறும் இல்லை.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 294409