486. உயிர்கள் இரு வகை.

 

இவ்வசனத்தில் (39:42) மனிதன் மரணிக்கும்போதும், உறங்கும்போதும் உயிர்களை அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதே கருத்து 6:60 வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

 

மரணிக்கும்போது இறைவன் உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தூக்கத்தின்போது உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பது நமக்குப் புரியவில்லை.

 

தூக்கத்தின்போது உயிர்களைக் கைப்பற்றினால் எப்படி மூச்சுவிட முடிகின்றது? எப்படி புரண்டு படுக்க முடிகிறது? எறும்பு கடித்தால் நம்மை அறியாமல் எப்படி தட்டி விட முடிகிறது? உண்ட உணவு எப்படி ஜீரணமாகிறது? இது போல் உடலில் பல இயக்கங்கள் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம். இந்த வகையில் பார்க்கும்போது தூங்குபவரின் உயிர் கைப்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.

 

தூக்கத்தில் நாம் சிந்திப்பதில்லை. கவலைப்படுவதில்லை. திட்டமிடுவதில்லை. மனனம் செய்வதில்லை. இதுபோல் பல காரியங்கள் தூக்கத்தில் நடப்பதில்லை என்பதைக் கவனிக்கும்போது உயிர் இல்லை என்பது போல் இருக்கிறது.

 

இதிலிருந்து உயிர்கள் இரு வகைகளாக உள்ளன என்பது தெரிகிறது.

 

உடலின் இயக்கத்துக்கான உயிர் ஒரு வகை.

 

மற்றொன்று உணர்வுகள் சம்மந்தப்பட்ட உயிர்.

 

நாம் தூங்கும்போது உடலின் இயக்கத்துக்கான உயிர் நம்மை விட்டுப் பிரிவதில்லை. உணர்வுகளை இயக்குவதற்கான உயிர் நம்மை விட்டு நீங்கி விடுகிறது.

 

கருவில் உருவாகும் குழந்தைக்கு 120வது நாளில் உயிர் ஊதப்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (புகாரி 3208, 3332, 6594, 7454) இதுவும் உயிர்களில் இரு வகை உள்ளதை உறுதி செய்கிறது.

 

120 நாட்களுக்கு முன்னரும் கருவுக்கு உயிர் இருந்தது. உயிர் இருந்ததால் தான் அது வளர முடிந்தது. மூன்று நிலைகளை அடைய முடிந்தது.

 

உணர்வு சம்மந்தமான உயிர் 120வது நாளில் தான் ஊதப்படுகிறது என்பதும் அதற்கு முன் இருந்தது வேறு வகையான உயிர் என்பதும் இதில் இருந்து தெரிகிறது.

 

பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் இதைத் தெளிவாகக் கூறுகிறது.

 

பின்னர் விந்துத் துளியைக் கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

திருக்குர்ஆன் 23:14

 

இது குறித்து மேலும் அறிய 296, 314, 487 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 219844