485. தேவைகளற்ற இறைவனுக்கு வணக்கங்கள் எதற்காக?

 

இவ்வசனங்களில் (2:263, 2:267, 3:97, 3:182, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6, 112:2) அல்லாஹ் தேவைகளற்றவன் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

அல்லாஹ் எவ்விதத் தேவைகளுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடாகும். தேவைகளுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது.

 

கடவுள் தேவைகளற்றவன் என்பதை அறியாத காரணத்தால் தான் மதத்தின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

 

கடவுளுக்குக் காணிக்கைகள் செலுத்துவதற்கும், கடவுளை வழிபடுவதற்குக் கட்டணம் செலுத்துவதற்கும், உணவுகளையும் இன்னபிற பொருட்களையும் படையல் செய்வதற்கும் இதுவே காரணம். கடவுளுக்காக நாம் செலுத்தும் காணிக்கைகளை மனிதர்கள் தான் எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொண்டே மனிதர்கள் இந்தத் தவறைச் செய்கின்றனர்.

 

அது போல் ஒரு மனிதன் தன்னை மதகுருவாக காட்டிக் கொண்டால் அவருக்குக் கடவுள் தன்மை இருப்பதாக மனிதன் நினைக்கிறான். கடவுள் என்று கருதப்படும் மனிதன் சாப்பிடுவதையும், உறங்குவதையும் இன்னும் பல தேவைகள் அவனுக்கு இருப்பதையும் பார்த்த பிறகும் அவனைக் கடவுளாக நம்புவதற்குக் காரணம் கடவுள் தேவைகளற்றவன் என்பதைப் புரிந்து கொள்ளாதது தான்.

 

இதுபோல் கடவுளின் பெயரைச் சொல்லி யாரும் ஏமாறாமல் இஸ்லாத்தின் இந்தக் கொள்கை காப்பாற்றுகிறது.

 

கடவுளுக்குத் தேவைகள் இல்லாவிட்டால் தன்னைத் தொழுமாறும், நோன்பு வைக்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுவது ஏன்? என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.

 

இறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் பலியிட வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவைகளுள்ளவன் என்று கருத முடியாது. இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை.

 

இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை. இந்தக் கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியும் உள்ளது.

(நூல்: முஸ்லிம் 5033)

 

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக, நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே.

 

ஒருவரின் நன்மைக்காக ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் அவருக்கு அறிவுரை கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின் பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.

 

ஒருவன் தனது மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறான். போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறான். இவை தனது தேவைக்காக அல்ல. மாறாக தனது மகனின் நன்மைக்காகவே இவ்வாறு வலியுறுத்துகிறான்.

 

'மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான்' என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும்.

 

அல்லாஹ்வுக்கு செய்யும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது. எனவே, நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 158187