482. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

 

இவ்வசனங்களில் (53:11-13) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார் கூறப்பட்டுள்ளது.

 

அவரைப் பார்த்தார் என்பது ஜிப்ரீல் எனும் வானவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததைப் பற்றி பேசுகிறது.

 

சிலர் அவரை என்ற இடத்தில் அவனை என்று மொழிபெயர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று விளக்கமளித்துள்ளனர்.

 

(அரபு மொழியில் அவர் என்பதற்கும் அவன் என்பதற்கும் ஒரே சொல்லமைப்புதான் உள்ளது.)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்பது சரியான கருத்து அல்ல. ஜிப்ரீலைப் பார்த்தார்கள் என்பதுதான் சரியான கருத்தாகும்.

 

ஜிப்ரீல் அவர்கள் முதல் வஹீயைக் கொண்டு வந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீலை அவரது இயல்பான தோற்றத்தில் கண்டார்கள். பின்னர் மிஃராஜ் சென்றபோது ஜன்னத்துல் மஃவா எனும் இடத்தில் மற்றொரு தடவையும் ஜிப்ரீல் எனும் வானவரைக் கண்டார்கள்.

 

இதைத் தான் இவ்வசனங்கள் சொல்கின்றன.

 

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய இயல்பான உருவிலும், அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி கண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 3234

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியபோது, 53:13 வசனத்தை சான்றாகக் காட்டி, அவரை மற்றொரு முறையும் கண்டார் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே என்று இந்த ஹதீஸை அறிவிக்கும் மஸ்ரூக் கேட்கும்போது ஆயிஷா (ரலி) அவர்கள் "அது ஜிப்ரீலைக் குறிக்கின்றது'' என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 3235

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 291

 

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜின்போது இறைவனைக் கண்டார்கள் என்பது பொய் என்பதில் சந்தேகமில்லை.

 

இறைவனை இவ்வுலகில் காண முடியுமா என்பதை மேலும் விளக்கமாக அறிய 21, 249, 488வது குறிப்புகளைப் பார்க்கவும்.

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 48304