481. ஜும்ஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா?

 

இவ்வசனத்தில் (62:9) ஜும்ஆவுக்கு பாங்கு சொல்லப்பட்ட உடன் வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைச் சரியான முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ, ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தை நடத்தச் செய்து தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

 

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! என்று இவ்வசனம் (62:9,10) கூறுகிறது.

 

தொழுகைக்கு விரைய வேண்டும்; வியாபாரத்தை விட வேண்டும் என்று இவ்வசனத்தில் இரண்டு கட்டளைகள் இடப்படுகின்றன.

 

தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால் மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்து கொள்ளலாம்.

 

நாம் மட்டும் தொழுகைக்குச் சென்று விட்டு வியாபாரத்தை மற்றவர்கள் மூலம் நடத்தினால் ஒரு கட்டளையை நாம் மீறுகிறோம்.

 

மேலும் இதே வசனத்தில் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும் என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். தொழுகை முடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம் இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத் தான் பொருள்.

 

நான் வியாபாரம் செய்யவில்லையே? எனது நிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம் செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும் இல்லை. மனசாட்சிக்கும், உலக நடைமுறைக்கும் இது எதிரானதாகும்.

 

நம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் செய்யும் வியாபாரம் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்துக்கும், வருமானத்துக்கும் நான் வரி செலுத்த மாட்டேன் என்று அரசாங்கத்திடம் கூறமுடியுமா? கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அந்த வருமானம் எங்களுடையது அல்ல எனக் கூறமுடியுமா?

 

நாம் இல்லாதபோது நம்முடைய ஊழியர் நம் அனுமதியுடன் கலப்படமோ, மோசடியோ செய்தால் அதை நான் செய்யவில்லை என்று கூறுவதை யாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா? நாமே செய்யும் காரியங்களும், நம்முடைய அனுமதியின் பேரிலும் உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும் காரியங்களும் நாம் செய்ததாகத் தான் பொருள்.

 

நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களை வைத்து நடத்தும் வியாபரமும் நாம் செய்ததாகத் தான் அர்த்தம். எனவே ஜும்ஆவுக்கு பாங்கு சொல்லப்பட்டது முதல் ஜும்ஆ தொழுகை முடியும் எந்த வியாபாரமும் செய்யக் கூடாது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 77759