479. தொழுகையைக் களாவாக ஆக்கக் கூடாது

 

இவ்வசனத்தில் (4:103) தொழுகை, நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று சொல்லப்பட்டுள்ளது.

 

ஐவேளைத் தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரங்களில் தொழுது முடித்து விடவேண்டும். அதைப் பிற்படுத்துவது கூடாது. கடமையான தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல், அந்தத் தொழுகையின் நேரம் முடிந்த பின் தொழலாம் என்று சிலர் கருதுகின்றனர். இதைக் களாத் தொழுகை என்றும் குறிப்பிடுகின்றனர். இது தவறாகும் என்பதற்கு இவ்வசனம் சான்றாக உள்ளது.

 

நேரம் குறிப்பிடப்பட்ட கடமை என்றால் அந்த நேரத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும்.

 

ரமலானில் தான் நோன்பு நோற்க வேண்டும் என்றாலும் நோயாளிகள் மற்றும் பயணிகள் வேறு நாட்களில் நோற்கலாம் என்று சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழுகையில் அந்த நேரத்தில் தொழ இயலாதவர்கள் வேறு நேரத்தில் தொழலாம் என்று சலுகை அளிக்கப்படவில்லை.

 

நிற்க இயலாவிட்டால் எப்போது நிற்க இயலுமோ அப்போது நின்று தொழு என்று இஸ்லாம் கூறவில்லை. உரிய நேரத்தில் எந்த முறையில் தொழ இயலுமோ அந்த முறையில் தொழுது விடவேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

 

தண்ணீர் கிடைக்காவிட்டால் தண்ணீர் கிடைக்கும்போது தொழுங்கள் எனக் கூறாமல் தயம்மம் செய்தாவது உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. உரிய நேரத்தில் தான் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

 

மாதவிடாய்க் காலத்தில் விடுபட்ட நோன்பை பின்னர் நோற்க வேண்டும்; ஆனால் விடுபட்ட தொழுகையைப் பின்னர் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

 

ரமலான் முடிந்து விட்டால் வேறு நாட்களில் நோன்பு நோற்க அனுமதி உள்ளது. ஆனால் தொழுகை நேரம் முடிந்து விட்டால் அந்தத் தொழுகையை மீண்டும் தொழ முடியாது. இதனால் தான் மாதவிடாய் நேரத்தில் விட்ட தொழுகைகளைத் தொழக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. நேரம் முக்கியம் என்பது தான் இந்த வித்தியாசத்துக்குக் காரணம் என்று இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகையின் ஆரம்ப நேரம் மற்றும் இறுதி நேரம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அந்த நேரங்களுக்குள் தொழுகைகளை முடித்துவிட வேண்டும்.

 

ஒருவர் மறந்து தொழாமல் இருந்து விட்டால் நினைவு வந்ததும் தொழுது விடவேண்டும். உறங்கி விட்டால் விழித்ததும் தொழ வேண்டும். இது தான் அதற்குரிய பரிகாரம்.

 

'யாரேனும் ஒரு தொழுகையை மறந்து விட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர வேறு பரிகாரம் எதுவுமில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பார்க்க : புகாரி 597

 

'யார் தொழுகையை மறந்து விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பார்க்க : முஸ்லிம் 1216

 

மறதி, தூக்கம் இந்த இரண்டைத் தவிர வேறு காரணங்களுக்காகத் தொழுகையை விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

 

மேலும் பயணத்தில் இருப்பவர்கள் லுஹர், அஸர் ஆகியவற்றையும், மக்ரிப், இஷா ஆகியவற்றையும் சேர்த்து ஜம்வு அடிப்படையில் தொழும்போது நேரம் தவறினாலும் அது குற்றமாகாது. இதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

 

பயணத்தில் இல்லாமல் ஊரில் இருக்கும்போது லுஹர் அசர் தொழுகைகளை ஒரு நேரத்திலும், மக்ரிப் இஷா தொழுகைகளை ஒரு நேரத்திலும் தொழ அரிதாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பார்க்க : புகாரி 543

 

இதைத் தவிர வேறு காரணங்களுக்காக தொழுகையை நேரம் கடந்து தொழுவது கூடாது. அப்படி விட்டு விட்டால் அதைக் களாச் செய்வதும் கிடையாது. வல்ல அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு, திருந்திக் கொள்வதே இதற்கான ஒரே வழியாகும்.

 

அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நரகத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 19:59,60)

 

பிற்காலத்தில் வரும் சிலரைப் பற்றி அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். அவர்கள் தொழாமல் இருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றான். இவர்களுக்கு மன்னிப்புக் கிடைக்க வேண்டுமானால் அவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொண்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டுமென கட்டளையிடும் இறைவன், விட்ட தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டும் என்று கட்டளையிடவில்லை.

 

எனவே தூக்கம், மறதி, பயணம் போன்ற காரணங்கள் இல்லாமல் வேறு காரணங்களுக்காகத் தொழுகையை உரிய நேரத்தில் தொழாதவர் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு விட்டு, இனி வரும் காலங்களில் தொழுகையை விடாமல் தொழ முயற்சிக்க வேண்டும்.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.