472. பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது

 

இவ்விரு வசனங்களும் (24:31, 33:59) பெண்களின் ஆடைகளுக்கான வரம்புகளைப் பற்றி பேசுகின்றன.

 

பெண்கள் தமது ஆடைகளுக்கு மேல் ஜில்பாப் என்ற மேலங்கியை அணிய வேண்டும் என்று 33:59 வசனம் கூறுகிறது.

 

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற கருத்துடையோர் இந்த வசனத்தை தங்களின் முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். ஜில்பாப் என்பது முகத்தை மறைக்கும் ஆடை என்று இவர்கள் கொடுக்கும் விளக்கமே இந்த வாதத்திற்கு அடிப்படையாகும்.

 

ஜில்பாப் என்ற சொல்லுக்கு அகராதி நூல்களில்

 

தலை மீது போட்டுக் கொள்ளும் கிமார் எனும் முக்காட்டை விட பெரிய துணி என்றும்,

 

ஆடைக்கு மேல் போர்த்திக் கொள்ளும் மேலங்கி என்றும்,

 

கைலி போன்ற ஆடை என்றும்,

 

உடலை முழுமையாக மறைக்கும் ஆடை என்றும்

 

பல அர்த்தங்கள் உள்ளன.

 

பெண்கள் தமது முகம் உட்பட அனைத்து உறுப்புக்களையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடையோர் உடல் முழுவதும் மறைக்கும் ஆடை என்ற அர்த்தத்தை எடுத்துக் கொண்டு வாதிடுகின்றனர்.

 

ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருந்தால் குறிப்பிட்ட இடத்தில் எது பொருத்தமான அர்த்தம் என்று கவனித்துத் தான் அதற்குப் பொருள் செய்ய வேண்டும். அகராதியில் இருக்கிறது என்பதற்காக நாம் விரும்புகின்ற ஒரு அர்த்தத்தைச் செய்யக் கூடாது. இந்த அடிப்படையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

 

இவ்வசனத்தில் (33:59) பயன்படுத்தப்பட்டுள்ள ஜில்பாப் என்ற சொல்லுக்கு முழு உடலையும் மறைக்கும் ஆடை என்று பொருள் செய்ய முடியாது. தலையில் போட்டு மார்பில் தொங்க விடும் ஆடை என்ற அர்த்தம் தான் செய்ய வேண்டும். இப்படித்தான் பொருள் செய்ய வேண்டும் என்று இவ்வசனமே நமக்கு வழிகாட்டுகிறது.

 

முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 

ஜில்பாப் எனும் ஆடை இரண்டு அம்சங்களைக் கொண்டது என இவ்வசனத்தில் கூறப்படுகிறது.

 

ஜில்பாப் அணிவதால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பது முதல் விஷயம்.

 

அவர்கள் அறியப்பட வேண்டும் என்பது இரண்டாவது விஷயம்.

 

ஜில்பாப் எனும் மேலங்கி ஆண்களால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அவர்கள் யார் என்று அறியப்படும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் மேற்கண்ட வசனத்தில் உள்ள இரு அம்சங்கள்.

 

பொதுவாகப் பெண்கள் தமது மார்பகங்களை எடுப்பாகக் காட்டுவதுதான் ஆண்களால் அவர்கள் தொல்லைப்படுத்தப்படுவதற்கு முதல் காரணமாக உள்ளது. ஆடை அணிந்த பின்னர் மார்பகங்கள் மீது மேலங்கியைப் போட்டுக் கொண்டால் அந்த நிலை நீங்கி விடும்.

 

அதே நேரத்தில் முகத்தின் மீது மேலங்கியைப் போட்டுக் கொள்ளக் கூடாது. அவ்வாறு போட்டுக் கொண்டால் அவர்கள் அறியப்படுவது அவசியம் என்ற இரண்டாவது அம்சம் அடிபட்டு போய்விடும்.

 

யார் என்று அறியப்படும் வகையில் தான் பெண்களின் ஆடை இருக்க வேண்டும் என்று இவ்வசனம் தெளிவாகக் கட்டளையிடுகிறது. ஒருவர் யார் என்று அறியப்படுவதற்கு முகம் திறந்திருப்பது அவசியமாகும். முகத்தை வைத்துத் தான் இன்னார் என்று அறிய முடியும்.

 

24:31 வசனத்தில் தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் என்று சொல்லப்படுவதும் இதையே குறிக்கிறது.

 

ஜில்பாப் என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை அறிந்து கொள்ள ஜில்பாப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள சில ஹதீஸ்களை நாம் துணையாகக் கொள்ளலாம்.

 

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பி வைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். தொழும் இடத்திலிருந்து மாதவிடாயுள்ள பெண்கள் விலகியிருக்க வேண்டும் (என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள ஜில்பாப் (மேலங்கி) இல்லையே (அவள் என்ன செய்வாள்?) என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளுடைய தோழி தனது ஜில்பாப்களில் (மேலங்கிகளில்) ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும் என்றார்கள்.

நூல் : புகாரி 351

 

33:59 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஜில்பாப் என்ற சொல்லே இந்த ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வருவதற்கு அவர்கள் ஜில்பாப் அணிவது அவசியம் என்றும் ஜில்பாப் இல்லாதவர்களுக்கு, இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.

 

பெருநாள் தொழுகைக்கு வரும் பெண்கள் ஜில்பாப் போட்டுக் கொண்டு தான் வர வேண்டும் என்பது இதில் இருந்து தெரிகிறது. ஜில்பாப் அணிந்த பின்னரும் பெண்களின் முகம் திறந்து இருந்துள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

 

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் பாங்கும், இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும், இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும், நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் 'தர்மம் செய்யுங்கள்! நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகுகள் ஆவீர்கள்' என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து, ஏன் (இந்த நிலை) அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 1607

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட பெண்மணி பற்றி அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) குறிப்பிடும்போது கண்ணங்கள் கருத்த பெண்மனி என்று கூறுகிறார். இதில் இருந்து அந்தப் பெண்மணி முகத்தை மறைக்கவில்லை என்பது தெரிகிறது. பெண்கள் முகம் மறைப்பது அவசியம் என்றால் தன்னை நோக்கி கேள்வி கேட்ட பெண்ணின் முகம் வெளியே தெரிந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். அவர்கள் கண்டிக்காமல் இருந்தது, பெண்கள் அந்நிய ஆண்கள் முன்னிலையில் முகத்தை மறைப்பது அவசியம் இல்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

 

ஜில்பாப் என்பதற்கு தலையிலிருந்து முகத்தை மறைக்கும் வகையில் தொங்கவிடுதல் என்ற பொருள் இருக்குமானால் அப்பெண்ணின் முகம் தெரிய வாய்ப்பில்லை. அந்தப் பெண் ஜில்பாப் போடவில்லை என்றும் கூற முடியாது. பெருநாள் தொழுகைக்கு வரும்போது பெண்கள் அவசியம் ஜில்பாப் அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதால் அப்பெண் ஜில்பாப் இல்லாமல் பெருநாள் தொழுகைக்கு வந்திருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் ஏன் ஜில்பாப் அணியவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டிருப்பார்கள்.

 

அந்தப் பெண் ஜில்பாப் அணிந்திருந்தும் கூட அவரது கண்ணம் கருப்பாக இருந்ததை ஒரு ஆண் சொல்ல முடிகிறது என்றால் ஜில்பாப் என்பது முகத்தை மறைக்கும் ஆடை அல்ல என்பதும், தலையில் இருந்து மார்பின் மீது போடும் ஆடை தான் என்பதும் உறுதியாகிறது.

 

பெண்கள் முகத்தை மறைக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருபோதும் கட்டளையிடவும் இல்லை. ஆர்வமூட்டவும் இல்லை. மாறாக தமது முன்னிலையில் பெண்களின் முகம் திறந்திருந்தும் அவர்கள் அதைக் கண்டிக்கவில்லை என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்து கொள்ள முடியாது.

நூல் : புகாரி 578

 

பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் அந்த முகத்திரையே அவர்கள் யார் என்று அறிவதற்குத் தடையாக இருந்திருக்கும். ஆனால் இருளின் காரணமாக அப்பெண்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதிலிருந்தே தொழுகைக்கு வந்த பெண்கள் தொழுது விட்டு வெளியே செல்லும்போது முகத்திரை அணிந்திருக்கவில்லை என்பதை விளங்கலாம்.

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள் எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும், மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும், எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது தர்மமாகக் கருதப்படுமா என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' எனக் கூறிவிட்டார். எனவே நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு, ஸைனப் என பிலால் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஸைனப்? எனக் கேட்டதும் பிலால் (ரலி), 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 1466

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வந்த இரண்டு பெண்களும் " நபியவர்களிடம் நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்" என பிலால் (ரலி) அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். அந்த இரு பெண்களும் முகத்திரை அணிந்திருந்தால் தாங்கள் யார் என்பதை பிலால் அவர்களிடமே தெரிவிக்காமல் மறைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் முகத்தை வெளிப்படுத்தியவர்களாக வந்திருந்த காரணத்தினால் தான் அவர்கள் யார் என்பதை பிலால் தெரிந்து கொண்டிருக்க முடியும். அவர்களை பிலால் அறிந்து கொண்ட காரணத்தினால்தான் அவ்விரு பெண்களும் வீட்டிற்குள் இருந்த நபியவர்களிடம் தங்களைப் பற்றி சொல்ல வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கிறார்கள்.

 

இந்தச் சம்பவமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்காமல் தான் இருந்துள்ளார்கள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) உளூ செய்வார்கள்.

 

நூற்கள் : புகாரி 193

 

ஆண்களும் பெண்களும் ஒரு இடத்தில் சேர்ந்து உளூ செய்துள்ளார்கள் என்றால் பெண்களின் முகத்தை ஆண்கள் பார்க்காமல் இருக்க முடியாது. முகத்தை மறைத்துக் கொண்டு உளூச் செய்ய முடியாது.

 

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட வந்துள்ளேன் என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள்! என்று சொன்னார்.... (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

நூல் : புகாரி 5030

 

இந்தச் சம்பவத்தில் அப்பெண் நபியவர்களின் சபைக்கு வரும்போது முகத்திரை அணியாமல்தான் வந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதன் காரணமாகத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணைப் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, சபையிலிருந்த அனைத்து நபித்தோழர்களும் பார்க்கிறார்கள்.

 

ஒரு நபித்தோழர் எழுந்து அப்பெண்ணைத் தனக்கு மணமுடித்து வைக்குமாறு நபியவர்களிடம் கோரிக்கை வைக்கிறார். அப்பெண்ணின் முகம் அந்த நபித்தோழரைக் கவர்ந்த காரணத்தினால்தான் அவர் நபியவர்களிடம் கோரிக்கை வைக்கிறார். ஏனெனில் திருமணம் செய்பவர்கள் மணமுடிக்கும் பெண்ணின் முகத்தைப் பார்க்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முகத்திரை அணிவது கட்டாயம் என்றிருந்தால் ஒரு பெண் நபித்தோழர்களோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்த சபைக்கு முகத்திரை அணியாமல் வந்திருக்க மாட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.

 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அப்பெண்மணி, ஆம் (தெரியும்) என்று கூறினார். அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுது கொண்டிருக்கும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண், என்னைவிட்டு விலகிச் செல்வீராக! எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை (அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்) என்று சொன்னாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்து சென்றுவிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அவ்வழியே சென்றார். அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்? என்று கேட்டார். அப்பெண், எனக்கு அவர் யாரென்று தெரியாது எனக் கூறினாள். அம்மனிதர், அவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்று சொல்ல அவள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. ஆகவே அவள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை என்று சொன்னாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 7154

 

கப்ருக்கு அருகில் அழுது கொண்டிருந்த பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்த சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்தது. பின்னாளில் "இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா" என அனஸ் (ரலி) அவர்கள் தம் வீட்டிலுள்ள பெண்களிடம் கேட்கிறார்கள். அப்படியென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பெண்ணைக் கண்டித்தார்களோ அப்பெண்ணை அனஸ் (ரலி) அவர்கள் அந்த நேரத்தில் பார்த்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

 

சமாதிக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் முகத்தை மறைத்திருந்தால் அப்பெண் யார் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிந்திருக்க முடியாது. சமாதிக்கு அருகில் அந்தப் பெண் அழுது கொண்டு இருந்தபோதும் அனஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் முகத்தைப் பார்த்துள்ளார் என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னரும் அப்பெண்ணின் முகத்தை அவர் பார்த்துள்ளார் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

 

அடிமைப் பெண்கள் தவிர வேறு பெண்கள் இதன் பிறகு உமக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் (மனைவிமார்களாக உள்ளவர்களை விவாகரத்துச் செய்து விட்டு) அவர்களுக்குப் பகரமாக வேறு மனைவியரை மாற்றுவதும் கூடாது. அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தபோதும் சரியே. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33 : 52

 

இவ்வசனத்தில் பெண்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் இனி வேறு பெண்களைத் திருமணம் செய்யக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிடுகின்றான். பெண்களின் அழகு பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று சட்டம் இருந்திருந்தால் அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தபோதும் என்று கூறுவது பொருளற்றதாகி விடும்.

 

இதிலிருந்து நபியவர்களின் காலத்தில் பெண்களின் முகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

எதேச்சையாக (அந்நியப் பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக் கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் 4363

 

பெண்கள் முகத்தை மறைப்பவர்களாக இருந்தால் அந்நியப் பெண்ணைப் பார்த்து பார்வையைத் திருப்பிக் கொள்வதற்கு தேவை இல்லை.

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

 

நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள் என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். பாதையின் உரிமை என்ன? என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மையை எடுத்துச் சொல்வதும், தீமையைத் தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 2465

 

இந்தச் சான்றுகளில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்காமல் பொது இடங்களுக்கு வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் அநாதைச் சிறுமி ஒருத்தி இருந்தாள். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தச் சிறுமியைப் பார்த்துவிட்டு, "நீயா அது? மிகவும் பெரியவளாகிவிட்டாயே! உன் வயது அதிகரிக்காமல் போகட்டும்!'' என்று கூறினார்கள். அந்த அநாதைச் சிறுமி அழுதுகொண்டே உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் திரும்பிச் சென்றாள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "மகளே! உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுமி, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வயது அதிகரிக்காமல் போகட்டும் என எனக்கெதிராகப் பிரார்த்தித்து விட்டார்கள். இனி ஒருபோதும் என் வயது அதிகமாகாது?'' என்று கூறினாள்.

 

உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தமது முக்காட்டுத் துணியை தலையில் சுற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மு சுலைமே! உமக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள்...........(சுருக்கம்)

நூல் : முஸ்லிம் 5073

 

கிமார் அணிந்து வரும் உம்சுலைம் (ரலி) அவர்களைப் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு சுலைமே! உமக்கு என்ன ஆயிற்று? என்று கேட்கிறார்கள். முகம் தெரிந்தால்தான் இவ்வாறு கேட்கமுடியும். முகம் மறைக்கப்பட்டிருந்தால் நபியவர்களுக்கு அந்தப் பெண் யாரென்றே தெரிந்திருக்காது. இதிலிருந்து உம்மு சுலைம் (ரலி) அவர்களின் முகம் மறைக்கப்படவில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

 

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், சொர்க்கவாசியான ஒரு பெண் மணியை உங்களுக்குக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான், ஆம்; (காட்டுங்கள்) என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு தடவை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

 

.... அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர்தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்தபடி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.

நூல் : புகாரி 565

 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் உம்மு சுஃபர் (ரலி) அவர்களைப் பார்த்திருக்கிறார்கள்.

 

நபியவர்களின் காலத்திற்குப் பின்னர் அதாவு பின் அபீ ரபாஹ் அவர்களுக்கு உம்மு சுஃபர் அவர்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உம்மு சுஃபர் அவர்களை இப்னு அப்பாஸ் பார்த்த காரணத்தினால்தான் நபியவர்களின் காலத்திற்குப் பிறகும் அவர்களைச் சரியாக இனம் கண்டு கொள்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உம்மு சுஃபர் (ரலி) அவர்கள் தமது முகத்தை மறைத்திருந்தால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் நபியவர்களின் காலத்திலும், நபியவர்களின் காலத்திற்குப் பிறகும் உம்மு சுஃபர் (ரலி) அவர்களை அடையாளம் கண்டிருக்க முடியாது.

 

உம்மு சுஃபர் அவர்கள் தமது முகத்தை மறைத்திருந்தால் அவர் கருப்பு நிறப் பெண்மணி என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் கூறமுடியாது.

 

இதிலிருந்து உம்மு சுஃபர் (ரலி) அவர்கள் நபியவர்களின் காலத்திலும் தம்முடைய முகத்தை மறைத்திருக்கவில்லை; அவர்களின் காலத்திற்குப் பிறகும் தமது முகத்தை மறைத்திருக்கவில்லை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

 

அதற்குப் பிறகு ஒரு காலத்தில் "கஅபாவின் திரை மீது சாய்ந்திருந்த உம்மு சுஃபர் அவர்களை" அதாவு பின் அபீரபாஹ் அடையாளம் கண்டு கொள்கிறார்.

 

நபியவர்களால் சொர்க்கத்துப் பெண்மணி என்று நற்செய்தி கூறப்பட்ட உம்மு சுஃபர் (ரலி) அவர்கள் நபியவர்களின் காலத்திலும், அதற்குப் பின்வந்த காலங்களிலும் தமது முகத்தை மறைக்காதவர்களாகத் தான் இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து நாம் அறிய முடிகிறது. இதுவும் நபியவர்களின் காலத்தில் நபித்தோழியர் முகத்தை மறைக்கவில்லை என்பதற்கு நேரடிச் சான்றாகும்.

 

உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 24 : 60

 

இவ்வசனம் பிறர் வீட்டில் உண்பது பற்றிய ஒழுங்குகளைப் பற்றிப் பேசுகிறது. ஒரு மனிதன் மற்றொரு குடும்பத்தாரோடு கலந்து உண்ணலாமா என்ற கேள்விக்கு இவ்வசனம் விடையளிக்கிறது.

 

ஒரு மனிதன் தனது பெற்றோர் வீட்டில் அவர்களுடன் உண்ணலாம். அது போல் சகோதரர்கள், சகோதரிகள், தந்தையின் உடன் பிறந்தவர்கள், தாயின் உடன் பிறந்தவர்கள் போன்ற உறவினர்கள் வீட்டில் ஆண்கள் பெண்கள் அனைவரும் சேர்ந்தும், தனியாகவும் உண்ணலாம்.

 

அதுபோல் நெருங்கிய நண்பர்களாக இருந்தால் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து உணவு உட்கொள்வது குற்றமில்லை.

 

அது போலவே நெருங்கிய உறவினராகவோ, உற்ற நண்பராகவோ இல்லாத குருடரையும், ஊனமுற்றோரையும், நோயுற்றவர்களையும் நம்முடன் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் இவ்வசனம் கூறும் தெளிவான கருத்தாகும்.

 

அன்னிய ஆண்களும், பெண்களும் தனித்திருப்பதைத் தடை செய்திருக்கும் இஸ்லாம் நெருங்கிய உறவினர்கள் கூட்டாகச் சேர்ந்து உண்ணலாம்; அது குற்றமாகாது என்று இங்கே கூறுகிறது. முகம் திறந்திருந்தால் தான் வாயில் உணவைக் கொண்டு செல்ல முடியும்.

 

அதே நேரம் இஸ்லாம் தடை செய்துள்ள வகையில் ஆடை அணிகலன்கள் அணிந்து வருவதையும், ஆணும் பெண்ணும் ஒட்டி உரசுவது போன்றவைகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 

ஒரே வீட்டில் உள்ள நெருங்கிய உறவினர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது முகம் மற்றும் கைகள் கண்டிப்பாக வெளிப்படத்தான் செய்யும்.

 

பெண்களின் முகம் கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டியதென்றால் படைத்த அல்லாஹ் இதனை அனுமதித்திருக்க மாட்டான்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் தம் வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் பார்க்கும் வகையில் நபித்தோழியர்கள் உணவருந்தியுள்ளனர். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?... அல்லது இவருக்கு விருந்தளிப்பவர் யார்?... என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (விருந்தளிக்கிறேன்) என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து என்று சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு என்று சொன்னார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான். ...அல்லது வியப்படைந்தான் என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாது காக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள் என்னும் (59:9ம்) வசனத்தை அருளினான்.

நூல் : புகாரி 3798

 

மேற்கண்ட நபித்தோழரும், அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள் என்ற வாசகம் கவனிக்கத்தக்கதாகும்.

 

சாப்பிடுவது போல் பாவனை செய்வதை இருட்டில் கூட விருந்தாளி அறிந்து கொள்ள முடியும் என்றால் கண்டிப்பாக முகத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

 

விளக்கை அணைப்பதற்கு முன்னால் விருந்தாளிக்காக உணவை எடுத்து வைக்கும்போதும், விளக்கைச் சரிசெய்வது போல் பாவனை செய்யும்போதும் அந்த ஸஹாபி பெண்மணியின் முகம் வெளிச்சத்தில் கண்டிப்பாக தெரிந்திருக்கும.

 

பெண்களின் முகம் வெளியே தெரிவது தடைசெய்யப்பட்டதாக இருந்திருந்தால் அந்த நபித்தோழர் மற்றும் நபித்தோழியரின் செயலை அல்லாஹ் பாராட்டியிருக்க மாட்டான்.

 

அந்நியரின் முன்னால் அந்தப் பெண்ணின் முகம் தெரிந்த பிறகும் அவர்கள் செய்த செயலை அல்லாஹ் பாராட்டுகிறான் என்றால் நிச்சயமாக முகத்தை வெளிப்படுத்துவதுதான் மார்க்கத்திற்கு உட்பட்ட செயல் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

 

முகத்தை மறைக்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் சில ஹதீஸ்களையும் தமது சான்றுகளாக எடுத்துக் காட்டுகின்றனர்.

 

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 1838

 

முகத்திரை அணியும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் தான் இஹ்ராமின்போது மாத்திரம் அதை அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மற்ற நேரங்களில் முகத்தை மறைக்க வேண்டும் என்பது இந்த ஹதீஸில் இருந்து விளங்குகிறது என்பது இவர்களின் வாதம்.

 

பெண்கள் ஜில்பாப் எனும் மேலங்கி அணிந்த பின்னரும் அவர்களின் முகம் தெரிய வேண்டும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதால் அதற்கு முரணில்லாத வகையில் தான் இந்த ஹதீஸை விளங்க வேண்டும்.

 

இஹ்ராம் அணிந்திருக்கும்போது முகத்தை மறைக்கக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் மறைக்க வேண்டும் என்று கருத்து கொடுப்பது பெண்கள் அறியப்பட வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாகும்.

 

மேற்கண்ட வசனத்திற்கு முரணில்லாத வகையில் பொருள் கொள்ள இடம் உள்ளதா என்றால் நிச்சயமாக அதற்கு இடம் உண்டு,

 

உதாரணமாக 24:31 வசனத்தில் உங்கள் பெண்கள் ஒழுக்கத்தை விரும்பினால் அவர்களை விபச்சாரம் செய்ய வற்புறுத்தாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

 

பெண்கள் ஒழுக்கத்தை விரும்பாவிட்டால் விபச்சாரம் செய்ய வற்புறுத்தலாம் என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். ஒழுக்கம் கெட்டவர்களை விபச்சாரத்துக்கு வற்புறுத்துவதை விட ஒழுக்கமான பெண்களை வற்புறுத்துவது கடும் குற்றம் என்பதற்காகவே இவ்வாறு சொல்லப்படுகிறது.

 

உன் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியுடன் விபச்சாரம் செய்வது பெரும்பாவம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (பார்க்க புகாரி 4207)

 

பக்கத்து வீட்டுக்காரியாக இல்லாத மற்ற பெண்களுடன் விபச்சாரம் செய்வது சிறுபாவம் என்றோ, பாவமில்லை என்றோ இதை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள். மற்ற விபச்சாரத்தை விட இதில் நம்பிக்கை துரோகம் அதிகம் உள்ளதால் இவ்வாறு முக்கியப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

 

பெண்கள் முகத்தை மறைக்காமல் ஜில்பாப் அணிய வேண்டும் என்று அல்லாஹ் கூறுவதால் ஹஜ்ஜின்போதும் மறைக்கக் கூடாது; வேறு சந்தர்ப்பங்களிலும் மறைக்கக் கூடாது. ஆனால் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் இக்கட்டளையை அதிக முக்கியத்துவத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள் என்று கருதுவது தான் குர்ஆனுக்கு முரணில்லாத விளக்கமாகும்.

 

முகத்தை மறைக்க வேண்டும் என்போர் பின்வரும் வசனத்தையும் சான்றாகக் காட்டுகிறார்கள்.

 

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

திருக்குர்ஆன் 24 : 31

 

முக்காடுகள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் கும்ரு என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. கிமார் என்பது இதன் ஒருமைச் சொல்லாகும். கிமார் என்றால் முகம் உட்பட தலையை மறைக்கும் ஆடை எனக் கூறி இந்த வசனத்தையும் தங்களின் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

 

இவ்வசனத்தில் முக்காடுகளைப் போட்டுக் கொள்ளுமாறு பொதுவாகக் கூறப்படாமல் மார்பின் மீது போட்டுக் கொள்ள வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. முகத்தின் மீது போட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தால்தான் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டலாம். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை என்பதால் இதை முகத்தை மறைப்பதற்கான சான்றாகக் காட்ட முடியாது.

 

கிமார் என்ற சொல்லின் நேரடிப் பொருள் மறைக்கக் கூடியது என்பதாகும். தலையை மறைத்தல் என்ற பொருளிலும், முகத்தை மறைத்தல் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. இடத்துக்கு ஏற்ப இரண்டில் ஒரு பொருளைக் கொள்ள வேண்டும்.

 

இப்னு ஹஜர் அவர்கள் கிமார் என்பதற்கு தமது நூலான ஃபத்ஹுல் பாரியில் ஒரு இடத்தில் தலையை மறைக்கும் ஆடை எனவும், மற்றொரு இடத்தில் முகத்தை மறைக்கும் ஆடை எனவும் விளக்கம் கூறுகிறார்.

 

இவ்வாறே அரபு அகராதி நூற்களிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது. அல்முஃஜமுல் வசீத் மற்றும் லிசானுல் அரப் ஆகிய அகராதி நூற்களில் பெண்களின் கிமார் என்பது அவர்கள் தங்களுடைய தலையை மறைத்துக் கொள்ளும் துணிக்கும் சொல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

மேற்கண்ட வசனத்தில் கிமார்களைப் போட்டுக் கொள்ளட்டும் எனக் கூறப்படாமல் கிமார்களை மார்பில் போட்டுக் கொள்ளட்டும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டதால் இந்த இடத்தில் முகத்தை மூடும் ஆடை என்று பொருள் கொள்வது தவறானது. தலையை மறைக்கும் துணி என்பதே இதன் சரியான பொருள்.

 

ஹதீஸ்களில் கிமார் என்பது தலைத்துணி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

 

பருவமடைந்த பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத் 5460

 

பெண்கள் தொழும்போது முக்காடுடன் தொழ வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. முக்காடு என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் கிமார் என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது. கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை என தவறான பொருளை இங்கே பொறுத்தினால் பெண்கள் தொழுகையின்போது முகத்தை மூடுவது கட்டாயம் என்ற தவறான முடிவு ஏற்படும்.

 

பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்ற கருத்துடையவர்கள் தொழுகையின்போது பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று கூறுவதில்லை. மேற்கண்ட ஹதீஸில் உள்ள கிமார் என்பதற்கு முகத்தை மறைக்கும் ஆடை என்று பொருள் கொடுப்பதில்லை. தலையை மறைக்கும் ஆடை என்றே பொருள் கொடுக்கின்றனர்.

 

உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

 

எனது சகோதரி காலணி அணியாமலும், கிமார் (தலைத்துணி) அணியாமலும் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துள்ளார் என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள் உங்களுடைய சகோதரிக்கு நீங்கள் உத்தரவிடுங்கள். அவர் தலைத்துணி அணிந்து கொள்ளட்டும். வாகனத்தில் ஏறி வரட்டும். அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள்.

 

நூல் : அபூதாவூத் 2865

 

ஹஜ் செய்யும் பெண்கள் முகத்தை மூடக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அந்த ஹதீஸை முன்பே பார்த்து விட்டோம். இந்த ஹதீஸில் கிமார் அணிய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் சகோதரிக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

 

கிமார் என்பது முகத்தை மறைக்கும் ஆடையாக இருந்தால் முகத்தை மறைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட ஹஜ்ஜில் கிமாரை அணியுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள்.

 

கிமார் என்பது தலையை மட்டும் மறைக்கும் துணி என்பதாலே இதை ஹஜ்ஜின்போது அணியுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

 

பெண்கள் முகத்தை மறைப்பது நபியின் மனைவியருக்கான சட்டமாகும் என்பதை 500வது குறிப்பில் காணலாம்.

 

முகத்தை மறைப்பதால் தற்காலத்தில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாகச் செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்கக் கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

 

முஸ்லிமல்லாத பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும்போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு முகத்திரை போட்டு கண்டபடி சுற்றும் இளவட்டங்களில் சரிபாதிப் பேர் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.

 

முகத்தை மறைத்துக் கொள்வதைக் கேடயமாகப் பயன்படுத்தி கூடாத செயலில் பெண்கள் ஈடுபடுதல்,

 

வேசித்தொழில் செய்யும் முஸ்லிமல்லாத கேடுகெட்ட பெண்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முகம் மறைப்பதைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்வது,

 

சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகத்தை மூடிக் கொண்டு தீய கரியங்களில் ஈடுபடுவது

 

இப்படி பலவாறான கேடுகள் ஏற்படும்போது எதில் கேடு இல்லையோ அதைத்தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

 

முகம் மறைக்காமல் இருப்பதால் ஏற்படும் கேடுகளை விட மறைப்பதால் ஏற்படும் கேடுகள் மிக அதிகமாகும்.

 

பெண்கள் முகம் கைகள் தவிர மற்ற உறுப்புக்களை அன்னிய ஆண்கள் முன்னால் மறைக்க வேண்டும் என்பது அவர்களின் உரிமையைப் பறிக்கும் செயலா என்பது குறித்து அறிய 300வது குறிப்பைக் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 219848