462. பல்லாண்டுகள் உறங்கமுடியுமா?
இவ்வசனங்கள் (18:11 முதல் 18:18 வரை) ஒரு அதிசயமான வரலாற்றைக் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நின்றனர். இக்கொள்கையை ஏற்காத அவர்களின் சமுதாயத்தினர் இந்த இளைஞர்களுக்குப் பல்வேறு துன்பங்களைக் கொடுத்தனர். தமது சமுதாயத்துக்குப் பயந்து அவர்கள் ஒரு குகையில் போய்ப் பதுங்கினார்கள். பதுங்கிய அவர்களை அல்லாஹ் பல ஆண்டுகள் தூங்க வைத்தான். அந்தக் கால தலைமுறையினர் அழிந்த பின்னர் அவர்களை அல்லாஹ் எழுப்பினான் என்பதுதான் அந்த வரலாறு.
பல ஆண்டுகள் மனிதர்களால் உறங்க இயலுமா என்ற சந்தேகம் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஏற்படலாம். அல்லாஹ் எல்லா ஆற்றலும் மிக்கவன் என்பதால் முஸ்லிம்களுக்கு இதில் எந்தச் சந்தேகமும் ஏற்படாது.
அதிசயமான எந்த வரலாற்றைக் கூறினாலும் அது உண்மைதான் என்று நம்புவதற்குரிய சான்றுகளை உள்ளடக்கியே அல்லாஹ் பேசுவான்.
இந்தச் சம்பவத்திலும் இது குறித்த சான்றுகள் உள்ளன.
அவர்களைப் பல்லாண்டுகள் உறக்க நிலையில் வைத்திருந்ததைப் பற்றிக் கூறும்போது அவர்களை உறங்க வைத்தோம் எனக் கூறாமல் அவர்களின் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்தச் சொல் வழக்கு தற்போது தூக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும் திருக்குர்ஆனுக்கு முன்னர் தூக்கத்தைக் குறிக்க, காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.
அத்தஹ்ரீர் வத்தன்வீர் என்ற நூலில் அதன் ஆசிரியர் பிற்கால இலக்கியங்களில் இந்தச் சொல் வழக்கு தூக்கத்தைக் குறிக்க பயன்படுத்தப்பட்டாலும் திருக்குர்ஆனுக்கு முன்னர் இந்தச் சொல்வழக்கு பயன்பாட்டில் இருக்கவில்லை என்று கூறுகிறார்.
வழக்கத்தில் இல்லாத இந்தச் சொல்வழக்கை இறைவன் ஏன் பயன்படுத்த வேண்டும்?
மனிதன் உறங்கும்போது கண்களின் இயக்கம் நின்று விடும். ஆனால் சிறு சப்தம் கேட்டாலும் அவன் விழித்து விடுவான்.
இடியோசை, மிருகங்களின் ஓலம் போன்றவை காரணமாக அவர்களால் பல ஆண்டுகள் உறங்க முடியாமல் போய்விடும். பல ஆண்டுகள் அவர்கள் உறங்க வேண்டுமானால் அவர்களின் காதுகளில் சிறிய சப்தமோ, பெரிய சப்தமோ விழாமல் தடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பல ஆண்டுகள் விழிக்காமல் உறங்க முடியும்.
அதைத் தான் வழக்கத்தில் இல்லாத சொல்லைப் பயன்படுத்தி திருக்குர்ஆன் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று கூறுகிறது.
(இச்சொல் வழக்கு ஆரம்ப காலம் முதல் தூக்கத்தைக் குறிக்கப் பயன்படும் வார்த்தை என்று பொதுவாக நாம் கருதி இருந்தோம். ஆனால் இச்சொல் வழக்கு குர்ஆனுக்குப் பின்னர் தான் வந்தது என்பதை அறிந்து அதை மாற்றிக் கொண்டோம்.)
மேலும் இவ்வசனத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் அவர்களைப் பார்த்தால் விழித்திருப்பது போல் தோன்றும் என்றும் நீ அவர்களைப் பார்த்தால் வெருண்டு ஓடுவாய் என்றும், அச்சமடைவாய் என்றும் கூறப்பட்டுள்ளது.
கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்கினார்கள் என்று இதற்கு பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் சிலர் கண்களைத் திறந்து கொண்டே தூங்குவதுண்டு. அவர்களைப் பார்த்தால் அவர்கள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று யாரும் கருத மாட்டார்கள். அதைப் பார்த்து பயப்படவும் மாட்டார்கள்.
எனவே குகைவாசிகள் விழித்திருப்பவர்களைப் போன்று கண்களைச் சிமிட்டிக் கொண்டே தூங்கினார்கள் என்று தான் கருத முடியும்.
ஆயினும் மற்றவர்களுக்கு இல்லாமல் இவர்களுக்குக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே தூங்கும் தன்மை ஏன் வழங்கப்பட்டது?
ஒருவர் நீண்ட காலம் கண்களை மூடிக் கொண்டே இருந்தால் காட்சிகளை மூளைக்கு எடுத்துச் செல்லும் (optical nerves) நரம்புகள் சுருங்க ஆரம்பித்து கடைசியில் செயலற்றுப் போய்விடும். இதன் காரணமாக அவரது கண்கள் குருடாகிவிடும். பின்னர் அவர்கள் கண்களைத் திறந்தால் எதையும் பார்க்க இயலாது.
விழியின் வெண்படலத்துக்கு இரத்த நாளங்கள் இல்லை. எனவே கண்ணீர் சுரப்பிகளால் இது அவ்வப்போது ஈரப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். எனவே கண்களை நீண்ட நேரத்திற்கு திறந்தே வைத்திருந்தால் விழிவெண்படலம் வரண்டு போக நேரிடும். நாளடைவில் "கார்னியோ செராசிஸ் (Corneo-xerosis) எனும் பாதிப்பால் குருட்டுத் தன்மை ஏற்படும்.
சுருங்கக் கூறினால் ஒருவர் வருடக்கணக்காக கண்களை மூடியே வைத்திருந்தாலும், அல்லது திறந்தே வைத்திருந்தாலும் அவரது பார்வை குருடாகி விடும் என்பது நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளிலிருந்து தெரிய வருகின்றது. இந்த நவீன அறிவியல் உண்மைகளே மேற்கண்ட வசனங்களில் அடங்கியுள்ளன.
பல்லாண்டுகள் ஒருவர் விழிக்காமல் படுத்துக் கிடந்தால் தரையில் படிந்துள்ள உடல் பகுதி சூடாகி வெந்து புண்ணாகி அழுகிப் போய்விடும். அல்லது அதுவே அவர்களை விழிக்கச் செய்து விடும். பல்லாண்டுகள் தூங்க முடியாமல் ஆக்கிவிடும்.
இதனால் தான் அவர்களை வலப்புறமும் இடப்புறமும் புரட்டி இந்த விளைவயும் அல்லாஹ் தடுக்கிறான்.
இது இறைவனின் வார்த்தை என்பதால் தான் பல்லாண்டுகள் தூங்கினால் என்ன விளைவு ஏற்படுமோ, என்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிவியல் உலகம் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளதோ அந்த விளைவுகளை இல்லாமலாக்கி அவர்களைத் தூங்க வைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.
இந்த விளைவுகள் இருந்தாலும் அல்லாஹ்வால் தூங்க வைக்க முடியும் என்றாலும் அதிசயமான வரலாறை நம்பத் தயங்கும் மனிதர்களுக்காக தனது அளப்பரிய அறிவை வெளிப்படுத்தி எல்லாம் அறிந்த இறைவனாகிய நான் சொல்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறான் இறைவன்.