9. அத்தவ்பா
மன்னிப்பு
மொத்த வசனங்கள் : 129
117, 118 ஆகிய இரு வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், ஹிஜ்ரத் செய்து வந்தவர்களையும், அடைக்கலம் தந்து உதவியவர்களையும், குறிப்பாக தபூக் யுத்தத்தில் பங்கெடுக்காத மூன்று நபித்தோழர்களையும் அல்லாஹ் மன்னித்ததாகக் கூறுகிறான். ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே பாவமன்னிப்பு வழங்கியது பற்றி இந்த அத்தியாயம் பேசுவதால் இந்த அத்தியாயத்திற்கு 'அத்தவ்பா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்'' என்ற பொருள்படும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்ற சொற்றொடர் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அந்தச் சொற்றொடர் அமைக்கப்படவில்லை. இதற்குப் பலரும் பலவிதமான காரணங்களையும், தத்துவங்களையும் கூறுகின்றனர். திருக்குர்ஆனைப் பிரதி எடுத்த இஸ்லாத்தின் மூன்றாவது ஜனாதிபதியான உஸ்மான் (ரலி) அவர்கள் பின்வரும் காரணத்தைக் கூறுகின்றார்கள்.
திருக்குர்ஆனில் ஒன்பதாவது அத்தியாயமும், எட்டாவது அத்தியாமும் ஒரே அத்தியாயமாக இருக்குமோ என்று நான் நினைக்கிறேன். இரண்டும் ஒரே மாதிரியான செய்திகளையே சொல்லுகின்றன. எனவே தான் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்பதை நான் எழுதாமல் விட்டிருக்கிறேன் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
மேலும் அவர்கள் இது பற்றிக் கூறும் பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு அத்தியாயம் அருளப்பட்டவுடன் எழுத்தர்களை அழைத்து எழுதிக் கொள்ளச் சொல்வார்கள். ஒவ்வொரு வசனமும் எந்த அத்தியாயத்தில் இடம் பெற வேண்டும் என்பதையும் சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டு அத்தியாயங்களும் சேர்ந்து இரு அத்தியாயங்களா? அல்லது ஒரே அத்தியாயமா? என்பதை அவர்கள் கூறாமல் சென்று விட்டதால் நான் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்பதைச் சேர்க்கவில்லை. இது தான் அவர்கள் கூறிய காரணம்.
இந்தச் செய்தி ஏற்கத்தக்கதா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. காரணம் எதுவாக இருந்தாலும், இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' எழுதப்படவில்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.