54. மதம் மாற்ற போர் செய்யக்கூடாது

 

இவ்வசனங்களில் (2:193, 8:39) "கலகம் இல்லாதொழிந்து தீன் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை போரிடுங்கள்'' என்று கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் இடம் பெற்றுள்ள 'தீன்' என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர்.

 

இந்த விளக்கத்தின்படி மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து ஏற்படுகிறது. ஆனால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதை 2:256, 10:99, 9:6, 109:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

 

அவ்வாறிருக்க "மதமாற்றம் செய்யும் வரை போரிடுங்கள்'' என்று பொருள் கொள்ளவே முடியாது.

 

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள், குறிப்பாக யூத கிறித்தவர்கள், யூத கிறித்தவர்களாகவே வாழ்ந்து வந்தனர். கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை. இதன் காரணமாகவும் அவ்வாறு பொருள் கொள்ள முடியாது.

 

மேலும் மேற்கண்ட இரு வசனங்களின் பிற்பகுதியைக் கவனித்தால் கூட அவ்வாறு பொருள் கொள்வது தவறு என்பதை விளங்க முடியும்.

 

"அவர்கள் விலகிக் கொண்டால் அவர்கள் மீது வரம்பு மீறக் கூடாது'' என்று அவ்வசனங்கள் முடிகின்றன. போரில் இருந்து விலகிக் கொண்டால் என்பதுதான் இவ்வாறு கூறப்படுகிறது. மேற்கண்ட விளக்கம் தவறு என்பது இதிலிருந்தும் உறுதியாகின்றது.

 

'தீன்' எனும் சொல் பல அர்த்தங்கள் கொண்ட சொல்லாகும். மார்க்கம், கூலி, பரிசு, தீர்ப்பு, அதிகாரம் என்று பல அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன.

 

இவ்விரு வசனங்களிலும் அதிகாரம் என்று மொழிபெயர்ப்பது தான் சரியானது. போர் வந்து விட்டால் அதிகாரம் கைக்கு வரும் வரை போரிட வேண்டும் என்பதுதான் இதன் கருத்தாகும். இது உலக நாடுகள் அனைத்துமே கடைப்பிடிக்கின்ற சாதாரண நடவடிக்கை தான்.

 

(போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 55, 76, 89, 197, 198, 199, 203, 359 ஆகிய குறிப்புகளையும் பார்க்கவும்.)

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 51624