404. இத்தாவின்போது ஆண்களுடன் பேசுதல்

 

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் மறுமணம் செய்வதைத் தள்ளிப்போட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் அலங்காரங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இது இத்தா எனப்படும். இதற்கான காரணத்தை 69வது குறிப்பில் காண்க!

 

இக்காலகட்டத்தில் இஸ்லாம் சொல்லாத ஏராளமான கெடுபிடிகளை சில முஸ்லிம்கள் பெண்கள் மீது விதித்து வருகின்றனர்.

 

இத்தா காலத்தின்போது பெண்கள் இருட்டறையில் இருக்க வேண்டும்; இரத்த உறவுகளான ஆண்களைக் கூடப் பார்க்கக் கூடாது; ஆண் குழந்தைகளையும் பார்க்கக் கூடாது; கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை இருக்கலாம் என்ற காரணம் கூறி கர்ப்பிணிகளையும் பார்க்கக் கூடாது போன்ற மூட நம்பிக்கைகள் இதற்கு உதாரணம்.

 

இவர்களின் இந்த மூட நம்பிக்கைக்கு இவ்வசனம் (2:235) மரண அடியாக அமைந்துள்ளது.

 

இத்தா காலத்தின்போது பெண்களிடம் அந்நிய ஆண்கள் பேசலாம் என்றும், திருமணம் செய்வதாக நேரடி வாக்குறுதி அளிப்பதைத் தவிர மார்க்கம் அனுமதித்த எந்தப் பேச்சையும் பேசலாம் என்றும், திருமணம் பற்றிய பேச்சைக் கூட மறைமுகமாகப் பேசலாம் என்றும் இந்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

 

இத்தா குறித்த மேலதிக விபரங்களை அறிந்திட 69, 360, 424 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.