50. நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் நோன்பின் சட்டம்

 

நோன்பு நோற்றிருப்பவர் பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது; இரவு நேரங்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

 

ஆனால் பகலில் மட்டுமின்றி இரவிலும் தம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்ற சட்டம் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் இருந்தது. அது மாற்றப்பட்டு நோன்பாளிகள் இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபட இவ்வசனத்தின் (2:187) மூலம் அனுமதிக்கப்படுகிறது.

 

இந்த விஷயத்தைத்தான் இவ்வசனம் நேரடியாகக் கூறுகிறது. அத்துடன் குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலச் சான்றாக உள்ளதோ அதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் மூலச் சான்றாகும் என்ற கொள்கை விளக்கமும் இதனுள் அடங்கியுள்ளது. அதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்

 

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இரவிலும் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று அல்லாஹ் தடை செய்திருந்தான். அத்தடையை நபித்தோழர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை. அந்தத் தடையை அவர்கள் மீறினார்கள். மக்களின் பலவீனத்தைக் கருத்தில் கொண்டு அந்தத் தடையை அல்லாஹ் நீக்கி இப்போது முதல் இரவில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்று அனுமதி வழங்கினான் என்பது இவ்வசனத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

 

இவ்வசனத்தில் "நீங்கள் உங்களுக்கே துரோகம் செய்தீர்கள்'' என்று அல்லாஹ் கூறுவதால் இரவில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது என்பதை அறிய முடியும். அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் செய்யும்போது அதைத் துரோகம் எனக் கூற முடியாது. தடை செய்யப்பட்டிருந்த ஒரு செயலை அம்மக்கள் செய்திருந்தால் தான் அது துரோகம் எனச் சொல்லப்படும்.

 

"எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான்'' என்ற சொற்றொடரிலிருந்தும் இதை அறியலாம். தடை செய்யப்பட்டதைச் செய்தால் தான் மன்னிப்பு தேவைப்படும். அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் செய்யும்போது மன்னிக்கும் பேச்சுக்கு இடமில்லை. இரவில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது என்பதை இதிலிருந்தும் அறியலாம்.

 

இரவில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்ததால் "இப்போது முதல் குடும்ப வாழ்வில் ஈடுபடலாம்'' எனக் கூறி தடையை அல்லாஹ் நீக்குகிறான்.

 

நோன்புக் காலத்தில் இரவில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடை இருந்ததையும், அந்தத் தடை இப்போது முதல் நீக்கப்படுகிறது என்பதையும் இம்மூன்று சொற்றொடர்களைப் பயன்படுத்தி அல்லாஹ் கூறுகிறான்.

 

குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து குர்ஆன் அல்லாத செய்திகள் வராது என்ற வாதம் உண்மையாக இருந்தால் இரவில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடை குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இரவில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது முன்னர் தடுக்கப்பட்டு இருந்தது என்ற தகவல் தான் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. இரவில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற கட்டளை எந்த வசனத்திலும் காணப்படவில்லை.

 

பகலிலும், இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே தடை இருந்ததாக அல்லாஹ் கூறுகிறானே ஏற்கனவே அவ்வாறு தடை விதித்த வசனம் எது? அப்படி ஒரு வசனம் குர்ஆனில் இல்லை.

 

அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் அவ்வாறு தடை செய்திருக்க வேண்டும். அவர்கள் சுயமாகத் தடை செய்திருக்க முடியாது. அவர்கள் சுயமாகத் தடை செய்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டிக்கவில்லை. "நீங்கள் இரவில் அவ்வாறு நடந்து கொண்டது குற்றமில்லை, முஹம்மது தவறாகக் கூறி விட்டார்'' என்று இறைவன் கூறியிருக்க வேண்டும்.

 

அவ்வாறு கூறாமல் "நீங்கள் செய்து கொண்டிருந்தது குற்றம் தான்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கும்போது அது குர்ஆனில் இல்லாவிட்டாலும் அதை மீறுவது பாவம் தான்; என்றாலும் உங்களை நான் மன்னித்து விட்டேன்'' என்ற பொருள்பட மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளியுள்ளான்.

 

இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ குர்ஆன் மட்டுமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இறைவன் போடுகின்ற கருத்துக்களும் வஹீ தான். அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதற்கு இவ்வசனம் சான்றாக அமைந்துள்ளது.

 

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 51518