498. முன்செய்த நல்லறங்கள் நன்மைகளாக மாறும்

 

அல்லாஹ்வையும், மறுமை நாளையும், நம்பிக்கை கொள்ள வேண்டிய அனைத்தையும் முறையாக ஒருவர் நம்பினால் மட்டுமே மறுமையில் அவர்களுக்குச் சொர்க்கம் வழங்கப்படும். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

 

இஸ்லாத்தை ஏற்காத ஒருவர் தானதர்மம் செய்தாலும், இன்ன பிற நல்லறங்கள் செய்தாலும் அதற்கான புகழை அவர் இவ்வுலகில் அடைவார். அல்லாஹ்வுக்காக அவர் அந்த நல்லறங்களைச் செய்யவில்லை என்பதாலும், அல்லாஹ்வை அவர் நம்பவும் இல்லை என்பதாலும் அவருக்கு அல்லாஹ் மறுமையில் கூலி வழங்க மாட்டான். அவரும் அல்லாஹ்விடம் இதற்கான பிரதிபலனை எதிர்பார்க்க முடியாது.

 

அதுபோல் முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராக ஒருவர் வாழ்ந்தால் அவரது தொழுகை, நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கத்துக்கும் அல்லாஹ்விடம் பரிசு கிடைக்காது. அனைத்தும் பாழாகிவிடும். இதை 6:88, 29:65 வசனங்களில் இருந்து அறியலாம்.

 

இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் அதற்கு முன் நல்லறங்கள் செய்திருந்தால் இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் அவர் செய்த நல்லறங்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் செய்த நல்லறங்களாக இறைவனால் கருதப்படும்.

 

அதுபோல் முஸ்லிமாகப் பிறந்து இஸ்லாத்தை அறியாமல் ஒருவர் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து விட்டு பின்னர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்டாலோ, இஸ்லாம் கூறும் தொழுகை நோன்பு உள்ளிட்ட வணக்கங்களை இஸ்லாம் கூறும் முறைப்படி செய்யாமல் தவறான முறையில் செய்திருந்து நல்வழிக்குத் திரும்பினாலோ அவர்கள் செய்த நல்லறங்கள் அழியாது. அவர்கள் தவறாக செய்த வணக்கங்கள் சரியான முறையில் செய்ததாக அல்லாஹ்வால் கருதப்படும் என்பதை இவ்வசனங்களிலிருந்து (29:7, 2:143, 25:70) அறிந்து கொள்ளலாம்.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.