461. ஸுஹுபும் கிதாபும் ஒன்றா?

 

வேதங்களைக் குறிப்பிடுவதற்கு கிதாப் என்ற சொல்லும் சுஹுஃப் என்ற சொல்லும் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு சொற்களும் வேதத்தைக் குறிக்கும் இரு சொற்களாக இருந்தும் சில அறிஞர்கள் இரண்டையும் வேறுபடுத்திக் கூறுகின்றனர்.

 

அதாவது இறைவன் அருளிய வேதம், பெரிய அளவுடையதாக இருந்தால் அது கிதாப் என்று சொல்லப்படும். சிறிய அளவுடைய வேதமாக இருந்தால் அது சுஹ்ஃபு எனப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

இப்படி வேறுபடுத்திக் கூற எந்த ஆதாரமும் இல்லை. இவர்களின் வாதம் தவறு என்பதற்கு இவ்வசனங்கள் (80:13, 98:2) சான்றுகளாக உள்ளன.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதமாகிய திருக்குர்ஆன் பெரிய அளவுடையதாக இருக்கிறது. அதை கிதாப் என்று பல வசனங்களில் சொல்லப்பட்டாலும் இவ்விரு வசனங்களில் (80:13, 98:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுஹுஃபை ஓதுவார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது பெரிய வேதமாக இருந்தாலும் அதுவும் சுஹுஃப் என்ற சொல்லால் குறிப்பிடப்படலாம் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.