திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில்



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.


இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு அவர்கள் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.


"திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்காதீர். அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' என்று திருக்குர்ஆன் கூறியது. திருக்குர்ஆன் 75:16-19, 20:114


இன்னொரு வசனத்தில் (87:6) "உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.


எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும் ஒலிநாடாவில் பதிவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.


இறைவன் தனது தூதராக அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.


திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.


நபித்தோழர்களின் உள்ளங்களில்



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது.


பொதுவாக எழுத்தாற்றல் இல்லாதவர்களுக்கு அதிக அளவிலான நினைவாற்றல் இருப்பதை இன்றைக்கும் கூட நாம் காணலாம். நினைவாற்றல் மூலமாக மட்டும்தான் நம்மால் எதையும் பாதுகாத்து வைக்க முடியும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக இத்தகையோரின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அதிகரிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற உண்மை.


எழுதவும், படிக்கவும் தெரியாத அந்தச் சமுதாய மக்களில் தம்மை ஏற்றுக் கொண்டவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்து கொள்வார்கள்.


திருக்குர்ஆன் ஒட்டுமொத்தமாக ஒரு நாளிலோ, குறுகிய காலத்திலோ அருளப்பட்டிருந்தால் அதை அந்தச் சமுதாயத்திற்கு மனனம் செய்து கொள்ள இயலாமல் போயிருக்கலாம்.


23 ஆண்டுகளில் இந்தக் குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டிருப்பதால் மனனம் செய்வது மிகவும் எளிதாகவே இருந்திருக்கும். 23 ஆண்டுகளுக்கு எட்டாயிரத்திற்கும் அதிகமான நாட்கள் உள்ளன. சுமார் ஆறாயிரம் வசனங்கள் கொண்ட திருக்குர்ஆனை தினம் ஒரு வசனம் என்ற அளவில் மனனம் செய்தாலே எட்டாயிரம் நாட்களில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திட முடியும்.


மேலும் மனனம் செய்ததை மறந்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாத்தில் சிறப்பான ஒரு ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள். "முஸ்லிம்கள் தினமும் நடத்துகின்ற ஐந்து நேரத் தொழுகைகளிலும், தாமாக விரும்பித் தொழுகின்ற தொழுகைகளிலும் திருக்குர்ஆனின் சில பகுதிகளையாவது ஓதியாக வேண்டும்'' என்பது தான் அந்த ஏற்பாடு.


திருக்குர்ஆனை மனனம் செய்த முஸ்லிம்கள் அதை மறந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு உதவியாக இருந்தது. மேலும் மனனம் செய்யாதவர்களும் தொழுகையில் ஓத வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனை மனனம் செய்யும் நிலை ஏற்பட இது உதவியாக இருந்தது.


மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட வசனங்களைச் சிரத்தை எடுத்து மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.


எங்கெல்லாம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காக சில தோழர்களை அனுப்பி வைத்தார்கள். உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு இது மேலும் உறுதுணையாக அமைந்தது.


இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த கடைசி வருடத்தில் ஜிப்ரீல் அவர்கள் இரண்டு முறை வந்து இவ்வாறு தொகுத்து வழங்கியதாக ஏற்கத்தக்க நபிவழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (நூல்: புகாரி 6, 1902, 3220, 3554, 4998)


இவ்வாறாக திருக்குர்ஆன் மனிதர்களுடைய உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.


குறிப்பாக,


அபூபக்ர் (ரலி)


உமர் (ரலி)


உஸ்மான் (ரலி)


அலீ (ரலி)


தல்ஹா (ரலி)


ஸஅது (ரலி)


இப்னு மஸ்வூத் (ரலி)


ஹுதைஃபா (ரலி)


ஸாலிம் (ரலி)


அபூஹுரைரா (ரலி)


இப்னு உமர் (ரலி)


இப்னு அப்பாஸ் (ரலி)


அம்ர் பின் ஆஸ் (ரலி)


அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


முஆவியா (ரலி)


அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)


அப்துல்லாஹ் பின் ஸாஇப் (ரலி)


ஆயிஷா (ரலி)


ஹஃப்ஸா (ரலி)


உம்மு ஸலமா (ரலி)


உபை பின் கஅபு (ரலி)


முஆத் பின் ஜபல் (ரலி)


ஸைத் பின் தாபித் (ரலி)


அபூதர்தா (ரலி)


மஜ்மா பின் ஹாரிஸா (ரலி)


அனஸ் பின் மாலிக் (ரலி)


ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


இவர்களில் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்கள். சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு மனனம் செய்தார்கள்.


இவ்வாறு கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக 29:49 வசனமும் கூறுகிறது.


எழுத்து வடிவிலும்



கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப்போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.


இவ்வாறு பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


இந்த எழுத்தர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயம், இவற்றைத்தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தது.


இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.


இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக்குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும், எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது. இவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்.


(312, 461வது குறிப்புகளையும் பார்க்கவும்.)


அபூபக்ர் (ரலி) ஆட்சியில்..



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு 'யமாமா' என்ற ஒரு போர் நடந்தது.


முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத்தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித்தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.


இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (


ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணிதான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலைசிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.


அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார். (நூல்: புகாரி 4988, 4989)


திருக்குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன், "இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதிக் கொள்வார்கள். மனனம் செய்தும் கொள்வார்கள். (பார்க்க: திர்மிதீ 3011)


இன்று நாம் பயன்படுத்தும் குர்ஆனில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எந்த வரிசையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையில் தான் அமைந்துள்ளது.


வசனங்களின் வரிசை அமைப்பும், ஒரு அத்தியாயத்தில் இடம் பெற்ற வசனங்கள் எவை என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைப்படியே முடிவு செய்யப்பட்டது.


அப்படியானால் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இதில் என்ன வேலை என்ற சந்தேகம் ஏற்படலாம்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள். சில வசனங்கள் அருளப்படும்போது வெளியூரில் இருந்தவர்கள் தமது ஏடுகளில் அந்த வசனங்களை எழுதியிருக்க மாட்டார்கள்.


இதனால் ஒவ்வொரு எழுத்தருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ, அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது.


ஒவ்வொரு எழுத்தரும், தம்மிடம் உள்ளதுதான் முழுமையான குர்ஆன் என்று தவறாக எண்ணும்போது குர்ஆனில் முரண்பாடு இருப்பது போல் தோன்றும்.


அனைத்து எழுத்தர்களின் அனைத்து ஏடுகளையும் ஒன்று திரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையிலும் சரி பார்த்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியாயங்களை எழுதாமல் விட்டுள்ளார் என்று கண்டறிய இயலும்.


இந்தப் பணியைத்தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்து முடித்தார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த ஏடுகளையும், குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.


இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளைச் சீர்படுத்தினார்கள்.


பாதுகாக்கப்பட்ட இந்த மூலப்பிரதி அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை. மனனம் செய்தவர்கள் மரணம் அடைந்து விட்டாலும் அப்போது இந்த ஆவணத்தின் அடிப்படையில் குர்ஆனைத் தயாரித்திட முடியும்.


அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு இந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்களின் மகளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.


உஸ்மான் (ரலி ஆட்சியில்..



இந்தக் குர்ஆன் ஆவணம் பொதுமக்களுக்குப் பரவலாகச் சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.


மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து, இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில் அரைகுறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.


இதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் "இந்த ஆவணத்தைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்; மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்; அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத்தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்'' என்று கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.


அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல்


ஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த அந்த ஒரே மூலப் பிரதியைப் பெற்று அதைப்போல் பல பிரதிகள் தயாரிக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்யலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரித்த மூலப் பிரதியில் ஒவ்வொரு அத்தியாயமும் முழுமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது அத்தியாயம் என்று அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்படாமல் இருந்தன.


உதாரணமாக, பல பக்கங்களைக் கொண்ட தனித்தனியான ஐம்பது கட்டுரைகளை தனித்தனியாகச் சுருட்டி ஒரு பெட்டியில் போட்டு வைத்தால், எது முதலில் வர வேண்டும், எது இரண்டாவதாக வரவேண்டும் என்று அறிய முடியாது. ஆனால் அந்தக் கட்டுரைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைத்தால் எது முதலாவது, எது இரண்டாவது என்ற வரிசை அமைப்பை அறிய முடியும்.


வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கும் இந்தப் பணியைத்தான் உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்கள். அத்தியாயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இப்போது இருக்கும் வரிசைப்படி அமைத்தார்கள் என்று சிலர் கூறியுள்ளனர். இக்கூற்று தவறாகும்.


ஆயிஷா (ரலி) அவர்களிடம் இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, "உங்கள் குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்'' என்றார். ஏன் என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். "குர்ஆன் அத்தியாயங்களை சரியான வரிசைப்படி அமைத்துக் கொள்வதற்காக'' என்று அவர் கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி), "எதை முன்னால் ஓதினாலும் அதனால் உனக்கு எந்தக் கேடும் இல்லை'' என்று குறிப்பிட்டார்கள். (நூல்: புகாரி 4993)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில், பகரா (எனும் 2வது) அத்தியாயத்தையும், பின்னர் நிஸா (எனும் 4வது) அத்தியாயத்தையும், பின்னர் ஆலு இம்ரான் (எனும் 3வது) அத்தியாயத்தையும் ஓதினார்கள். (நூல்: முஸ்லிம் 1421)


உஸ்மான் (ரலி) அவர்களால் வரிசைப்படுத்தப்பட்டு, நம் கைகளில் இருக்கும் குர்ஆன் பிரதிகளில் உள்ள வரிசைக்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறிந்து கொள்ளலாம்.


உஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித்தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம் என்பதாலும், தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படும் அத்தியாயம் என்பதாலும் 'அல்ஃபாத்திஹா' என்ற அத்தியாயத்தை முதல் அத்தியாயமாக அமைத்தார்கள். "இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.


அதன்பிறகு குர்ஆனுடைய அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாகவும், அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற்கடுத்ததாகவும், அமைத்து குர்ஆனுடைய அத்தியாயங்களை உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தினார்கள்.


சில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் வரிசைப்படுத்தினார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.


ஒரு ஒழுங்குக்குள் இருந்தால்தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டு விட்டது.


இந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல. இறைத்தூதரின் வழிகாட்டுதலின்படியும் அமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்கள். முதல் அத்தியாயமாக 96வது அத்தியாயம் அவரது ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்களை அவர் எழுதி வைத்திருந்தார்.


அதே போல் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் முதல் அத்தியாயமாக 'பகரா' அத்தியாயத்தை எழுதியிருந்தார்கள். அது குர்ஆனில் தற்போது இரண்டாவது அத்தியாயமாக இருக்கிறது. இப்பொழுதுள்ள வரிசைக்கும் அவரது வரிசைக்கும் இடையே இதுபோன்று ஏராளமான மாற்றங்கள் இருந்தன.


உபை இப்னு கஅப் என்ற நபித்தோழர் 5வது அத்தியாயமாக இருக்கும் அல்மாயிதாவை 7வது அத்தியாயமாகவும், 4வது அத்தியாயமான அன்னிஸா அத்தியாயத்தை 3வது அத்தியாயமாகவும், 3வது அத்தியாயமான ஆலுஇம்ரான் அத்தியாயத்தை 4வது அத்தியாயமாகவும், 6வது அத்தியாயமான அல்அன்ஆம் அத்தியாயத்தை 5வது அத்தியாயமாகவும், 7வது அத்தியாயமான அல் அஃராஃப் அத்தியாயத்தை 6வது அத்தியாயமாகவும் எழுதி வைத்திருந்தார்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களை வரிசைப்படுத்தியிருந்தால் பல நபித்தோழர்கள் பல வரிசைப்படி தங்களது ஏடுகளை அமைத்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி.


மற்றும் சிலர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தொகுத்த பிரதியில் அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். அதற்கு எந்தச் சான்றுமில்லை.


எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் தான் அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று ஹாகிம் போன்ற அறிஞர்கள் கூறுவதுதான் தக்க காரணங்களுடனும், போதுமான சான்றுகளுடனும் அமைந்துள்ளது.

சமுதாயத்தின் அங்கீகாரம்



உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்த ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்தில் இருந்த நபித்தோழர்களிலும், நல்லோர்களிலும் யாருமே ஆட்சேபிக்கவில்லை. இது தேவையான, சரியான ஏற்பாடு தான் என்பதை ஒப்புக் கொண்டார்கள்.


அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டு விட்டார்.


ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏகமனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் இவ்வாறு திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.


ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது திருக்குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்தவர். எனவே குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவும், பல்வேறு பிரதிகள் தயாரிக்கவும் உஸ்மான் (ரலி) நியமித்த குழுவுக்கும் அவரையே தலைவராக நியமித்தார்கள்.


இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


இந்தப் பணிகளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 25ஆம் ஆண்டு செய்தார்கள். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து 15 ஆண்டுகளுக்குள் திருக்குர்ஆன் இப்போதிருக்கும் வரிசைப்படி அமைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



பிரதிகள் எடுத்தல்



மேலும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏராளமான பிரதிகளை எடுக்கச் சொல்லி அந்தப் பிரதிகளை தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படையிலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்துள்ள முழுமைப்படுத்தப்படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள்.


உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக திருக்குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.


உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் 'இஸ்தன்புல்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் 'தாஷ்கண்ட்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள எழுத்து வடிவிலான திருக்குர்ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம்.


இது தான் திருக்குர்ஆன் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட வரலாறு.


அத்தியாயங்களின் பெயர்கள்



திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களும் தனித்தனி பெயர்களுடன் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் பெயர்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்வோ, அவனது தூதரோ, அபூபக்ர் (ரலி) அவர்களோ, உஸ்மான் (ரலி) அவர்களோ சூட்டவில்லை.


உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் அந்த அத்தியாயத்திற்குப் பெயர் எதையும் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்று மட்டுமே குறிப்பிட்டார்கள். ஒரு அத்தியாயம் முடிந்து மறு அத்தியாயம் துவங்குகிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.


ஆயினும் சில அத்தியாயங்களுக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். வேறு சில அத்தியாயங்களுக்கு நபித்தோழர்கள் பெயரிட்டனர். சில அத்தியாயங்களுக்கு பிற்காலத்தில் வந்தவர்கள் பெயர் சூட்டினார்கள்.


முதல் அத்தியாயம் 'அல்ஃபாத்திஹா' என்று பரவலாக மக்களால் அறியப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தின் பெயரை 'ஃபாதிஹதுல் கிதாப்' (இவ்வேதத்தின் தோற்றுவாய்) எனக் குறிப்பிட்டுள்ளனர். (நூல் புகாரி: 756, 759, 762)


இந்த அத்தியாயத்திற்கு 'உம்முல் குர்ஆன்' (குர்ஆனின் தாய்) என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரிட்டுள்ளனர். (நூல்: புகாரி 7407,)


'அஸ்ஸப்வுல் மஸானீ' (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரிட்டுள்ளனர். (நூல்: புகாரி 7407)


திருக்குர்ஆனிலும் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் 15:87


'அல்குர்ஆனுல் அளீம்' (மகத்தான குர்ஆன்) எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தைக் குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி 7407)


திருக்குர்ஆனிலும் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் 15:87


இரண்டாவது அத்தியாயம் 'அல்பகரா' என்று கூறப்படுகிறது. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த அத்தியாயத்தைக் குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி 4008, 5010, 5040, 5051)


மூன்றாவது அத்தியாயமான 'ஆலுஇம்ரான்' அத்தியாயத்தை இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். (நூல்: திர்மிதீ 2802)


நான்காவது அத்தியாயத்தின் பெயர் 'அன்னிஸா' எனப்படுகிறது. இப்பெயரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். (நூல்: முஸ்லிம் 980, 3304)


ஐந்தாவது அத்தியாயம் 'அல்மாயிதா' எனப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரிட்டதாக நாம் காணவில்லை. ஆயினும் நபித்தோழர்கள் காலத்தில் இந்த அத்தியாயத்திற்கு 'அல்மாயிதா' எனக் குறிப்பிட்டுள்ளதற்கு சான்றுகள் உள்ளன. (நூற்கள்: புகாரி 347, முஸ்லிம் 452, 601)


ஆறாவது அத்தியாயம் 'அல்அன்ஆம்' எனப்படுகிறது. இந்த அத்தியாயத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு பெயரிட்டதாக ஏற்கத்தக்க ஹதீஸ்கள் இல்லை. ஆயினும் நபித்தோழர்கள் இந்த அத்தியாயத்தை 'அல்அன்ஆம்' என்று குறிப்பிட்டுள்ளதற்குச் சான்றுகள் உள்ளன. (நூல்: புகாரி 3524)


இது போல் 114 அத்தியாயங்களையும் தேடினால் அனைத்து அத்தியாயங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் சூட்டவில்லை என்பதை அறியலாம்.


நபித்தோழர்கள் பெயரிட்டுள்ள சில அத்தியாயங்களுக்குக் கூட பிற்காலத்தில் வேறு பெயர் சூட்டப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.


உதாரணமாக 65வது அத்தியாயம் 'தலாக்' என்ற பெயரில் அச்சிடப்படுகிறது. ஆனால் நபித் தோழர்கள் இதை 'நிஸாவுல் குஸ்ரா' எனக் குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி 4910)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களுக்குச் சூட்டிய பெயர்களானாலும், நபித்தோழர்கள் சூட்டிய பெயர்களானாலும் அதை அத்தியாயங்களின் துவக்கத்தில் எழுதுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.


உஸ்மான் (ரலி) அவர்கள் வரிசைப்படுத்தி, தொகுத்து இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதியில் எந்த அத்தியாயத்தின் துவக்கத்திலும் எந்தப் பெயரும் எழுதப்படவில்லை.


மிகவும் பிற்காலத்தில் தான் அத்தியாயங்களின் பெயர்களை அவற்றின் துவக்கத்தில் எழுதும் வழக்கம் வந்தது.


எனவே அத்தியாயங்களின் துவக்கத்தில் பெயர்களை எழுத வேண்டும் என்பது அவசியமில்லை.


முப்பது பாகங்கள்



அடுத்தது திருக்குர்ஆன் முப்பது ஜுஸ்வு எனும் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருப்பதை நாம் அறிவோம். இது பிற்காலத்தில் வந்தவர்களால் வசதிக்காகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்குமாறு அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களின் மூலப் பிரதியிலும் 30 பாகங்கள் இல்லை.


திருக்குர்ஆனுடைய அத்தியாயங்களைப் பொருத்த வரை அனைத்து அத்தியாயங்களும் சமமான அளவு கொண்டதாக இருக்கவில்லை. சில அத்தியாயங்கள் 286 வசனங்களைக் கொண்டதாகவும், சில அத்தியாயங்கள் மூன்றே மூன்று வசனங்களைக் கொண்டதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.


இந்த நிலையில் மாதத்திற்கு ஒரு முறையாவது குர்ஆனை முஸ்லிம்கள் ஓதி முடிக்க வேண்டும் எனக் கருதிய சிலர் அதற்கேற்ப சம அளவிலான பாகங்களாகக் குர்ஆனைப் பிரித்தனர்.


குர்ஆனை முப்பது நாட்களில் சமஅளவில் ஓதியாக வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை; நபித்தோழர்களிடமும் இத்தகைய வழிமுறை இருக்கவில்லை.


முப்பது பாகங்களாகப் பிரித்தபோது அறிவுப்பூர்வமான வழிமுறையைக் கூட அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. குர்ஆனுடைய மொத்த சொற்களை எண்ணி அதை முப்பதால் வகுத்து அதனடிப்படையில் முப்பது பாகங்களாகப் பிரித்துள்ளனர். இதனால் கருத்துச் சிதைவு ஏற்பட்டாலும் அது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.


ஒரு முழு அத்தியாயத்தைக் கூட மூன்று துண்டுகளாகப் பிரித்துள்ளனர். உதாரணம் பகரா அத்தியாயம்.


ஒரு அத்தியாயத்தின் ஒரு பாதி முந்திய பாகத்திலும், அடுத்த பாதி அடுத்த பாகத்தில் இருக்குமாறும் பிரித்துள்ளனர்.


உதாரணத்திற்கு முஸ்லிம்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்ற 'யாஸீன்' என்ற அத்தியாயத்தை எடுத்துக் கொண்டால் அதில் 21 வசனம் வரை 22ஆம் பாகத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். 22ஆம் வசனம் முதல் இறுதி வரை 23ஆம் பாகத்தில் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.


ஐந்தாம் பாகத்தின் முதல் வசனம் "உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள மற்ற பெண்களும்'' என்று ஆரம்பமாகிறது. இந்த வசனத்தை இப்படி ஆரம்பித்தால் எந்தப் பொருளும் தராது. காரணம் இது முந்தைய வசனத்தின் தொடர்ச்சியாகும். அந்த வசனத்தில் உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள்....... என்று ஒரு பட்டியலைக் கூறி இவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகிறது. அந்தப் பட்டியலின் தொடர்ச்சி தான் உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர என்ற அடுத்த வசனம்.


இவ்விரு வசனங்களில் ஒன்றை நான்காம் பாகத்திலும், இன்னொன்றை ஐந்தாம் பாகத்திலும் பிரித்து பொருளற்றதாக ஆக்கியுள்ளனர்.


இந்த வசனத்தை மட்டும் வாசித்தால் அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. முந்தைய வசனத்தோடு சேர்த்தால் மட்டுமே இதற்கு அர்த்தம் வரும். குர்ஆனை முப்பது பாகங்களாகப் பிரித்தவர்கள் சொற்களின் எண்ணிக்கையைத்தான் கவனத்தில் கொண்டார்களே தவிர கருத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.


ஒரு அத்தியாயத்தின் ஒரே ஒரு வசனத்தை மட்டும் ஒரு பாகத்திலும், அந்த அத்தியாயத்தின் மீதியை அடுத்த பாகத்திலும் சேர்த்துள்ளனர். உதாரணம் 15 ஆம் அத்தியாயம். இதன் முதல் வசனத்தை மட்டும் 13வது பாகத்தில் சேர்த்துள்ளனர். மீதியை 14வது பாகத்தில் சேர்த்துள்ளனர்.


இது இறைவனே வகுத்துத் தந்தது போல ஒரு எண்ணத்தையும் கூட ஏற்படுத்தியிருக்கிறது.


அன்றாடம் குறிப்பிட்ட அளவில் குர்ஆனை ஓதுவதற்கு உதவியாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு பிற்காலத்தில் வந்த சமுதாயமும் இதை ஏற்றுக் கொண்டது.


இதனை நம்முடைய வசதிக்காக நாம் தான் பிரித்தோம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டும்.


இன்று வரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மூலப் பிரதியில் முப்பது பாகம் என்பது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.


ஒவ்வொரு மாதமும் குர்ஆனை ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் மார்க்கத்தில் இல்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப ஓதுமாறுதான் மார்க்கத்தில் கட்டளை இருக்கிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 73:20)


எனவே 30 பாகங்களாகப் பிரித்ததற்கு மார்க்கரீதியான எந்த நியாயமும் இல்லை.


முப்பது பாகங்களாகப் பிரித்தது மட்டுமின்றி ஒவ்வொரு பாகத்தையும் நான்கு கால் பாகங்களாகவும் பிரித்தனர். அதற்கு அடையாளமாக முதல் கால் பாகத்தில் 'அர்ருபுவு' (கால்) என்ற சொல்லையும், இரண்டாவது கால் பாகத்தில் 'அந்நிஸ்ஃப்' (அரை) என்ற சொல்லையும், மூன்றாவது கால் பாகத்தில் 'அஸ்ஸலாஸத்' (முக்கால்) என்ற சொல்லையும் ஓரத்தில் அச்சிட்டு வருகின்றனர்.


இதுவும் பிற்காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


மேலும் திருக்குர்ஆனின் ஒவ்வொரு பாகத்தையும் சமமான 8 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் 'ஸுமுன்' (எட்டில் ஒன்று) என்று குறிப்பிடுவது சமீப கால வழக்காகும்.


மன்ஜில்கள்



முப்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டது போல் ஏழு மன்ஜில்களாகவும் குர்ஆனைச் சிலர் பிரித்துள்ளனர்.


இது திருக்குர்ஆனின் ஓரங்களில் இன்றளவும் அச்சிடப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும் என்பதற்காக சமஅளவிலான ஏழு பாகங்களாகக் குர்ஆனைப் பிரித்தனர். இதுவே மன்ஜில் எனப்படுகிறது.


இதுவும் நம்முடைய வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட பிரிவு தானே தவிர, அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பிரித்தது அல்ல. இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதியில் மன்ஜில் என்பது இல்லை.


வாரத்தில் ஒரு முறை திருக்குர்ஆனை ஓதி முடிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. ஆயினும் தினமும் இந்த அளவு தான் ஓத வேண்டும் என்பது அவரவர் தீர்மானம் செய்ய வேண்டியதே தவிர மற்றவர்கள் அதை அளவிட்டுக் கூறுவது ஏற்க முடியாதது. மேலும் குர்ஆன் அல்லாததை குர்ஆனில் எழுதியிருப்பதும் ஏற்க முடியாததாகும்.


ருகூவுகள்



தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வளவு தான் ஓத வேண்டும் என்று சிலர் தன்னிச்சையாக எவ்விதச் சான்றுமில்லாமல் முடிவு செய்து திருக்குர்ஆனை 558 ருகூவுகளாகவும் பிரித்தனர். இதை ஐன் என்றும் குறிப்பிடுகின்றனர்.


இதற்கு அடையாளமாக ஓரங்களில் 'ஐன்' என்ற அரபு எழுத்தை அச்சிட்டுள்ளனர்.


தொழுகையைப் பொறுத்த வரை ஒவ்வொருவரும் தமக்கு இயன்ற அளவுக்கு ஓதலாம் எனத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது திருக்குர்ஆன் 73:20


இந்த அளவுதான் ஓத வேண்டும் என்று அளவிட்டுக் கூறுவது மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு முரணாக இருப்பதால் இந்தப் பிரிவை நமது இந்த வெளியீட்டில் அடியோடு புறக்கணித்து விட்டோம். 'ஐன்' என்ற எழுத்தை அச்சிடுவதைத் தவிர்த்து விட்டோம். ஏனெனில் தொழுகை எனும் வணக்கத்தில் தலையிடுவதாக இந்தப் பிரிவு அமைந்துள்ளது. ஒரு ரக்அத்தில் இவ்வளவு தான் ஓத வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை.


ஸஜ்தாவின் அடையாளங்கள்



ஸஜ்தாவைப் பற்றிக் கூறுகின்ற வசனங்கள் மிக அதிக அளவில் இருந்தும் 14 வசனங்களின் ஓரங்களில் ஸஜ்தா என்று அச்சிட்டுள்ளனர்.


எந்தெந்த வசனங்களை ஓதும்போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே நாம் விவாதிக்கவில்லை.


(ஸஜ்தா வசனங்கள் எவை என்பதை 'விளக்கங்கள்' என்ற தலைப்பில் 396வது குறிப்பில் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளோம்.)


திருக்குர்ஆனின் மூலப் பிரதியில் இல்லாத இத்தகைய சொற்களை ஓரங்களில் அச்சிட்டிருக்கக் கூடாது என்பதைத்தான் இங்கே நாம் சுட்டிக் காட்டுகிறோம்.


உதாரணமாக, 22வது அத்தியாயமான அல்ஹஜ் அத்தியாயத்தில் 77வது வசனத்தின் ஓரத்தில் அரபியில் ஒரு வாக்கியத்தை அச்சிட்டுள்ளனர். "இது ஷாபி இமாமின் கருத்துப்படி ஸஜ்தாச் செய்ய வேண்டிய வசனம்'' என்பது இதன் கருத்து.


ஷாபி இமாமுடைய கருத்துப்படி ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற மனித அபிப்பிராயத்தை ஏன் குர்ஆனுடன் அச்சிட வேண்டும் என்பது சிந்திக்கத்தக்க கேள்வியாகும்.


ஷாபி இமாமுடைய காலத்துக்குப் பிறகு தான் ஓரங்களில் தேவையற்றவைகளை இவ்வாறு அச்சிடும் வழக்கம் தோன்றியது என்பதற்கு இதைச் சான்றாகக் கொள்ளலாம்.


நிறுத்தல் குறிகள்



திருக்குர்ஆனில் ஒவ்வொரு வசனத்தின் இறுதியிலும், வசனங்களுக்கு இடையேயும் சில அடையாளங்களையும் சேர்த்து தற்போது அச்சிட்டு வருகின்றனர். இத்தகைய அடையாளங்கள் எதுவும் இன்றளவும் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியில் இல்லை. <


* இந்த இடங்களில் நிறுத்துவது அவசியம்


* இந்த இடங்களில் நிறுத்துவது சிறந்தது


* இந்த இடங்களில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓதுவது சிறந்தது


* இந்த இடங்களில் நிறுத்துவதும், நிறுத்தாமலிருப்பதும் சமமானது


* இந்த இடங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிறுத்தியுள்ளார்கள்


* இந்த இடங்களில் ஜிப்ரீல் நிறுத்தியுள்ளார்கள்


என்று சில அடையாளங்கள் மூலம் உணர்த்துகின்றனர். இவை அனைத்தும் எந்தச் சான்றுமில்லாத கட்டுக் கதைகளாகும்.


இப்படி குர்ஆன் நெடுகிலும் சில இடங்களில் ஜீம், சில இடங்களில் ஸே, சில இடங்களில் வாவ், சில இடங்களில் மீம், சில இடங்களில் காஃப், சில இடங்களில் லாம் அலிஃப், சில இடங்களில் ஸாது, சில இடங்களில் ஸாது லாம் ஏ - இப்படி ஏராளமான அடையாளங்களை இடையிடையே நுழைத்திருக்கிறார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி ஓதுவார்கள் என்பதற்கு மட்டும் தான் சான்றுகள் உள்ளனவே தவிர, இவர்கள் குறிப்பிட்டுள்ள இந்தக் குறியீடுகளுக்கும், அது தொடர்பாகக் கூறும் சட்டங்களுக்கும் எந்தச் சான்றும் இல்லை. ஒருவர் தமது விருப்பப்படி எந்த இடத்திலும் நிறுத்தி வாசிக்கலாம்.


இது போன்ற அடையாளங்களைத் தவிர்த்திருந்தால் குர்ஆன் இன்னும் அதன் தனித்தன்மையோடு துலங்கியிருக்கும்.


உதாரணமாக, மூன்றாவது அத்தியாயத்தில் 94வது வசனத்தின் ஓரத்தில் ஜிப்ரீல் நிறுத்திய இடம் என்று எழுதியிருக்கிறார்கள். ஜிப்ரீல் இந்த இடத்திலே நிறுத்தினார் என்பதற்கு எந்த நூலிலும் எந்தச் சான்றுமில்லை.


ஒரு சான்றுமில்லாமல் அவரவர் தமக்குத் தோன்றியதை ஓரங்களில் எழுதினார்கள். அதுவே பிற்காலத்தில் அச்சு வடிவமும் பெற்றிருக்கிறது என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும்.


வேண்டாத ஆய்வுகள்



'கஹ்ஃபு' (குகை) என்ற 18வது அத்தியாயத்தின் 19வது வசனத்தில் 'வல்யத்தலத்தஃப்' என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் பெரிய எழுத்தாக எழுதியிருப்பார்கள்.


திருக்குர்ஆனின் எழுத்துக்களை எண்ணி, அதில் சரிபாதி இடமாக இந்தச் சொல் இடம் பெற்றுள்ளது என ஓரத்தில் குறிப்பு எழுதியுள்ளனர்.


இப்படி எழுத்துக்களை, புள்ளிகளை, குறியீடுகளை எண்ணுமாறு அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. ஒரு சொல் சரிபாதி இடத்தில் அமைந்திருப்பதால் அதற்கு மார்க்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.


இதில் மக்களுக்கு எந்த அறிவுரையும், வழிகாட்டலும் இல்லை. மேலும் குர்ஆனில் அதை மட்டும் பெரிதாக எழுதியிருப்பது குர்ஆனுடன் விளையாடுவதாகவே அமையும்.


இவை வேண்டாத வேலைகள். பிற்காலத்தில் வரும் மக்களுக்கு இது ஒரு புரியாத புதிர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.


இவ்வாறு எழுத்துக்களை எண்ணியே சிலர் வழிகெட்டுப் போனதையும் இங்கு நினைவு கூர வேண்டும்.


மக்கீ மதனீ



திருக்குர்ஆனின் சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின்போது அருளப்பட்டன. அவை 'மக்கீ' எனப்படும். சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையின்போது அருளப்பட்டன. அவை 'மதனீ' எனப்படும்.


உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த திருக்குர்ஆன் மூலப் பிரதிகளில் "இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டது; இந்த அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது'' என்று எந்தக் குறிப்பும் இல்லை.


ஆனாலும் உலகமெங்கும் அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளில் சில அத்தியாயங்களுக்கு மேல் "இது மக்காவில் அருளப்பட்டது" என்றும், வேறு சில அத்தியாயங்களின் மேல் "இது மதீனாவில் அருளப்பட்டது" என்றும் அச்சிடப்படுகின்றன.


திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை மக்காவில் அருளப்பட்டது என்று முடிவு செய்ய வேண்டுமானால் அதற்குத் தகுந்த சான்றுகள் இருக்க வேண்டும். இத்தகைய சான்றுகள் பல வகைப்படும்.


இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்று நபித் தோழர்கள் குறிப்பிட்டிருந்தால் அதனடிப்படையில் அந்த வசனம் எங்கே அருளப்பட்டது என்று தீர்மானிக்க முடியும்.


அல்லது ஒரு வசனத்தின் கருத்தைக் கவனத்தில் கொண்டு இந்த வசனம் இந்தக் கட்டத்தில் தான் அருளப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம். உதாரணமாக போர் செய்வது தொடர்பான வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையில் அருளப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் மக்காவில் எதிரிகளை எதிர்த்துப் போரிடும் நிலையில் இருக்கவில்லை.


அது போல குற்றவியல் சட்டங்கள் குறித்த வசனங்களை எடுத்துக் கொண்டால் இது போன்ற சட்டங்களை ஒரு ஆட்சியை நிறுவிய பிறகு தான் அமுல்படுத்த முடியும் என்ற அடிப்படையில் அவை மதீனாவில் அருளப்பட்டவை என்று முடிவு செய்யலாம்.


இத்தகைய சான்றுகள் இல்லாமல் ஒரு அத்தியாயத்தையோ, ஒரு வசனத்தையோ மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்றோ கூறுவது மிகப்பெரும் தவறாகும்.


பல அத்தியாயங்கள் இரண்டு காலகட்டங்களிலும் அருளப்பட்ட வசனங்களை உள்ளடக்கி உள்ளன. எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்றோ குறிப்பிடுவதாக இருந்தால் அதற்குத் தெளிவான சான்றுகள் இருக்க வேண்டும்.


இத்தகைய சான்றுகள் ஏதுமின்றியே மக்காவில் அருளப்பட்டவை, மதீனாவில் அருளப்பட்டவை என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிட்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது குர்ஆனைக் குறித்து தவறான தகவல் தரும் குற்றத்தில் சேர்ந்து விடும்.


எவ்விதச் சான்றும் இல்லாமல் அவரவர் தமக்குத் தோன்றியவாறு இவ்வாறு குறிப்பிட்டதால் தான் இது விஷயத்தில் மாறுபட்ட நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.


உதாரணமாக, திருக்குர்ஆனில் கடைசி இரண்டு அத்தியாயங்களான 113, 114 ஆகிய அத்தியாயங்கள் மக்காவில் அருளப்பட்டவை என்று ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதே அத்தியாயங்கள் பற்றி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட குர்ஆன் பிரதிகளில் மதீனாவில் அருளப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


பல அத்தியாயங்களில் இது போன்ற கருத்து வேறுபாடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே அத்தியாயங்களின் தலைப்பில் "இவை மக்காவில் அருளப்பட்டவை" அல்லது "மதீனாவில் அருளப்பட்டவை" என்று குறிப்பிடுவதை நாம் தவிர்த்துள்ளோம்.


எங்கே அருளப்பட்டது என்பதைத் தீர்மானிக்க சிலர் தவறான அளவு கோல்களைப் பயன்படுத்தி உள்ளதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


எந்த அத்தியாயத்தில் 'மனிதர்களே' என்று அழைக்கும் வசனங்கள் உள்ளனவோ அந்த அத்தியாயங்கள் மக்காவில் அருளப்பட்டவை என்பது இவர்களின் ஒரு அளவுகோல். இந்த அளவுகோல் எவ்விதச் சான்றுமில்லாத அளவுகோலாகும். திருக்குர்ஆனின் நான்காவது அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அந்த அத்தியாயத்தில் 'மனிதர்களே' என்று அழைக்கும் வசனம் முதல் வசனமாக இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.


அது போல் 'நம்பிக்கை கொண்டவர்களே' என்று அழைக்கும் வசனங்கள் இடம் பெறும் அத்தியாயங்கள் மதீனாவில் அருளப்பட்டவை என்பதும் இவர்களின் மற்றொரு அளவுகோலாகும். ஆனால் மக்காவில் அருளப்பட்ட 22வது அத்தியாயத்தில் 77வது வசனத்தில் 'நம்பிக்கை கொண்டவர்களே' என்ற அழைப்பு இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.


எனவே திருக்குர்ஆனில் சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையிலும், சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையிலும் அருளப்பட்டன என்பது உண்மையென்றாலும் இவை தக்க சான்றுகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட வேண்டும். எந்த வசனங்கள் குறித்து இது போன்ற சான்றுகள் கிடைக்கவில்லையோ அந்த வசனங்கள் குறித்து எந்த முடிவும் கூறாமல் இருப்பதே இறையச்சமுடைய மக்களுக்குச் சிறந்ததாகும்.


நாம் இதுவரை கூறிய விளக்கங்களின் அடிப்படையில், அத்தியாயங்களின் பெயர்கள், முப்பது பாகங்கள், கால், அரை, முக்கால் பாகங்கள், ஸஜ்தா அடையாளங்கள், நிறுத்தல் குறிகள், ருகூவுக்கள், சில எழுத்துக்களைப் பெரிதாக எழுதுதல், மக்கீ மதனீ என்று தலைப்பில் எழுதுதல் போன்றவை குர்ஆனின் மூலப் பிரதியில் இல்லாமல் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.


முஸ்லிம் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று இந்த உண்மைகளைச் சரியாகப் புரிந்து கொள்வார்களானால் மூலப் பிரதியில் இல்லாத, பின்னாளில் ஓரங்களிலும் தலைப்புகளிலும், வசனங்களுக்கு இடையிலும் சேர்க்கப்பட்ட அனைத்தையும் நீக்கி விடுவது குர்ஆனுக்குச் செய்யும் பெரிய தொண்டாக இருக்கும்.


வசனங்களின் எண்கள்



குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


அலீ (ரலி) அவர்கள் 6218 வசனங்கள் என்கிறார்கள்.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 வசனங்கள் என்கிறார்கள்.


ஹுமைத் என்பார் 6212 வசனங்கள் என்கிறார்கள்.


அதா என்பார் 6177 வசனங்கள் என்கிறார்கள்.


இன்னொரு சந்தர்ப்பத்தில் 6204 வசனங்கள் என்றும் குறிப்பிடுகிறார்.


மக்கள் பொதுவாக 6666 வசனங்கள் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்கள்.


இப்போது உலகம் முழுவதும் அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளில் 6236 வசனங்கள் உள்ளன.


வசனங்கள் எத்தனை என்று அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கூறவில்லை. மேலும், உஸ்மான் (ரலி) அவர்களுடைய மூலப் பிரதியிலும் குர்ஆனுடைய மொத்த வசனங்கள் குறித்து எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் குறிப்பிடப்படவில்லை.


உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் ஒவ்வொரு வசனம் முடிவுறும்போது அதன் இறுதியில் வசனத்தின் எண் குறிப்பிடப்படவில்லை. எந்தவொரு வசனத்தின் முடிவும் மூலப் பிரதியில் அடையாளமிடப்படவில்லை.


எனவே தான் வசனங்களை எண்ணும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். எண்ணிக்கை எத்தனை என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் எந்த எண்ணிக்கையைக் கூறினாலும் குர்ஆனில் எதுவும் அதிகரிப்பதோ, குறைவதோ இல்லை.


ஒருவர் இரண்டு வசனங்களை ஒரு வசனமாகக் கருதுவார்; இன்னொருவர் ஒரு வசனத்தை இரண்டு வசனங்களாகக் கருதுவார்; எங்கே வசனத்தை முடிப்பது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.


உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தி வருகின்ற குர்ஆனில் இப்போது போடப்பட்டிருக்கின்ற எண்களை நாம் ஆய்வு செய்தால் எண்களிடுவதில் அறிஞர்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.


சில இடங்களில் எழுவாயை ஒரு வசனமாகவும், பயனிலையை இன்னொரு வசனமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து ஒரு வசனமாகக் கூறும்போது தான் அதனுடைய பொருள் முழுமை பெறும்.


வசனங்களைக் குறிக்க 'ஆயத்' என்ற சொல்லை திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. 'ஆயத்' என்றால் சான்று என்று பொருள். ஒவ்வொரு வசனமும் முழுமையான கருத்தைத் தந்து சான்றாக அமைந்திருப்பதால் இவ்வாறு குர்ஆன் குறிப்பிடுகிறது.


ஒரு செய்தி முழுமை பெறும்போது தான் அது ஒரு சான்றாக ஆக முடியும். கருத்து முழுமை பெறாதபோது அதைச் சான்று எனக் கருத முடியாது.


ஆனால் வசனங்களுக்கு எண்கள் இட்டவர்கள் கருத்து முழுமை பெறுவதைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இப்போது போடப்பட்டிருக்கின்ற எண்களை ஆய்வு செய்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.


சில இடங்களில், ஒரு கருத்து ஒரு வசனமாகவும், அந்தக் கருத்திலிருந்து விதிவிலக்கு இன்னொரு வசனமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டையும் சேர்த்து ஒரு எண்ணாக அவர்கள் அமைத்திருந்தால் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும்.


உதாரணத்திற்காகச் சில வசனங்களை நாம் காண்போம்.


நான்காவது அத்தியாயத்தில் 168, 169 ஆகிய இரு வசனங்களை எடுத்துக் கொள்வோம்.


இதில் 'அவர்களுக்கு வழிகாட்ட மாட்டான்' என்பது 168வது வசனத்திலும், 'நரகத்தின் வழியைத் தவிர' என்பது 169வது வசனத்திலும் உள்ளது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியமாகும். ஆனாலும் இதை இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.


7வது அத்தியாயத்தின் 121, 122 ஆகிய வசனங்களை எடுத்துக் கொண்டால், 121வது வசனத்தில் "நாங்கள் அகிலத்தின் இறைவனை நம்பினோம் எனக் கூறினார்கள்'' என்றும் 122வது வசனத்தில் "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய'' என்றும் உள்ளது.


"மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய'' என்பதில் எந்தவொரு கருத்தும் முழுமை பெறவில்லை. "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நாங்கள் நம்பினோம்'' என்று சொன்னால் தான் வாக்கியம் முழுமை பெறுகிறது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியமாகும். ஆனாலும் இதையும் இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.


இதே போல் 11வது அத்தியாயத்தில் 96, 97 வசனங்களை எடுத்துக் கொண்டால் 96வது வசனத்தில் "மூஸாவைத் தகுந்த சான்றுகளோடு அனுப்பினோம்'' என்று இருக்கிறது. 97வது வசனத்தில் "ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்'' என்று இருக்கிறது.


"ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்'' என்பது 96 வசனத்துடன் இணைய வேண்டிய சொற்றொடராகும். ஆனால் "ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்'' என்பதை தனியாகப் பிரித்ததால் அதற்குப் பொருள் இல்லாமல் போய் விடுகிறது.


இப்படி ஏராளமான வாக்கியங்களைக் கருத்து முழுமை பெறாத வகையில் வசனங்களாகப் பிரித்திருப்பதை நாம் பார்க்கிறோம். சில இடங்களில் ஒரு வாக்கியத்தை நான்கு, ஐந்து வசனங்களாகக் கூட பிரித்து வைத்திருக்கிறார்கள். கருத்து முழுமை பெறாத ஒரே ஒரு சொல்லைக் கூட ஒரு வசனம் என்று சில இடங்களில் கணக்கிட்டிருக்கிறார்கள்.


குர்ஆன் அதனுடைய ஆழமான கருத்துக்களுக்காகவும், அதன் அழகான நடைக்காகவும் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது.


வசனங்களைப் பிரிப்பதென்றால் அதற்கு இரண்டு அளவு கோல்கள் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதும்போது எந்த இடத்தில் நிறுத்தினார்களோ அந்த இடத்தை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது ஏற்கத்தக்கதாக இருக்கும்.


அல்லது ஒரு கருத்து எந்த இடத்தில் முழுமை பெறுகிறதோ அதை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது அறிவுப்பூர்வமானதாக இருந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு அளவுகோல்களின் அடிப்படையில் வசனங்களுக்கு எண்கள் இடப்படவில்லை.


மாறாக ஒவ்வொரு வசனத்தையும் குறிப்பிட்ட ஒரு எழுத்தைக் கொண்டு முடிக்க வேண்டும் என்பதைத்தான் வசனங்களைப் பிரிப்பதற்கு அளவு கோலாகக் கொண்டுள்ளனர்.


உதாரணமாக 'யஃலமூன்', 'தஃலமூன்', 'யஃப்அலூன்' என்று வருகிறதா எனப் பார்த்து அந்த இடங்களில் வசனங்களை முடித்துள்ளார்கள். கருத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை.


பொருத்தமில்லாமல் வசனங்களுக்கு எண்களிட்டதால் வேறு சில இடையூறுகளும் ஏற்படுகின்றன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு குர்ஆன் மாற்றப்படும்போது முழுமை பெறாத அந்தப் பகுதியை முழுமைப்படுத்துவதற்காக அடைப்புக்குறியில் சில வார்த்தைகளைச் சொந்தமாகச் சேர்க்கும் நிலை ஏற்படுகிறது.


எல்லா மொழிபெயர்ப்புகளிலும் அதிக அளவிலான அடைப்புக் குறிகள் இடம் பெறுவதற்கு கருத்து முழுமை பெறாத இடத்தில் வசனங்களைப் பிரித்தது தான் முக்கியக் காரணம்.


மேலும் வசனங்களுக்கு எண்கள் போடப்பட்ட இந்த வரலாற்றைத் தெரியாதவர்கள், இறைவன்தான் இவ்வாறு வசனங்களுக்கு எண்களை இட்டிருக்கிறான் என்று நினைப்பார்கள்; முழுமை பெறாத வசனங்களைப் பார்த்தால் அவர்களுடைய நம்பிக்கை பாதிப்படையும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.


அவர்கள் அரபுமொழி பேசுவோராக இருந்ததால் மொழிபெயர்ப்பினால் ஏற்படும் சங்கடங்களும், மற்றவர்கள் குர்ஆனைப் பற்றி தவறான எண்ணம் கொள்வதற்கு நாம் காரணமாக ஆகி விட்டோம் என்பதும் அவர்களுக்குத் தோன்றவில்லை.


ஆனாலும் இப்போது சான்றுகளை எடுத்துக் காட்டுவதற்கும், விவாதங்கள் புரிவதற்கும், சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கும், குறிப்பிட்ட ஒரு வசனத்தைத் தேடி எடுப்பதற்கும் இந்த வசன எண்கள் உதவியாக இருக்கின்றன.


இப்போது இதில் ஒவ்வொருவரும் மாற்றம் செய்யப் புகுந்தால் தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும். எனவே எந்த எண்களைச் சில நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோமோ அதில் நாம் எந்த மாறுதலும் செய்யவில்லை.


அதே சமயத்தில் முழுமை பெறாத அந்த வசனங்களைச் சேர்த்து தமிழாக்கம் செய்து தேவையற்ற அடைப்புக் குறிகள் வருவதைத் தவிர்த்திருக்கிறோம்.


வசனங்களுக்கு எண்கள் போட்டவர்கள் தாமாகத்தான் போட்டனர் என்பதற்கு இரண்டு தமிழ் மொழி பெயர்ப்புகளை உதாரணமாகக் கூறலாம்.


ஆ.கா.அப்துல் ஹமீத் பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பில் 6வது அத்தியாயம் 73வது வசனத்தை ஒரு வசனமாகக் குறிப்பிட்டுள்ளார்.


இதையே நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் 73, 74 என இரண்டு வசனங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.


இதனால் இந்த அத்தியாயம் முழுவதும் இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கிடையே ஒரு எண் வித்தியாசத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.


சில சகோதரர்களுக்கு இதுவரை கேள்விப்பட்டிராத செய்திகளைப் போல் இது தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது அந்தந்தக் காலத்தவருக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது.


குர்ஆனில் இல்லாத வசன எண்கள், ஸஜ்தாவுடைய அடையாளங்கள், பத்து வசனங்கள் முடியும்போது ஒரு அடையாளம், நிறுத்தல் குறிகள் இவை குர்ஆனில் கலக்கவே கூடாது என்று பைஹகீ இமாம் கூறியதாக அறிஞர் ஸுயூத்தி அவர்கள் தமது 'அல்இத்கான்' என்ற நூலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.


ஐந்து வசனங்களுக்கு ஒரு அடையாளம், பத்து வசனங்களுக்கு ஒரு அடையாளம், அத்தியாயங்களின் பெயர்கள், வசனங்களின் எண்கள், இவற்றை எழுதுவது வெறுக்கத்தக்கது என்றும் இதே நூலில் 'சுலைமி' என்ற அறிஞர் கூறியதை ஸுயூத்தி எடுத்துக் காட்டுகிறார்.


சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்" என்பதைத் தவிர வசன எண்களோ, அத்தியாயத்தின் பெயர்களோ, இடையிடையே எழுதப்படுகின்ற விஷயங்களோ மூலப் பிரதியில் இல்லை.


ஏழு கிராஅத்கள்



ஏழு கிராஅத் அல்லது பத்து கிராஅத் என்ற பெயரில் பலரும் திருக்குர்ஆனுடன் விளையாடி உள்ளனர்.


அல்லாஹ் திருக்குர்ஆனை நானே நேரடியாகப் பாதுகாப்பேன் என்று உத்தரவாதம் தருகிறான். (பார்க்க 15:9)


அல்லாஹ்வின் வேதத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறினால் அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆனால் ஏழு கிராஅத் என்ற பெயரில் இந்த அக்கிரமத்தைத் தான் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் பலர் அரங்கேற்றியுள்ளனர்.


திருக்குர்ஆன் ஏழு வகைகளில் அருளப்பட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரி 2419, 3219, 4991, 4992, 5041, 7556)


இதை ஆதாரமாகக் காட்டி ஏழு கிராஅத்கள் உள்ளன என்று அவர்கள் வாதம் செய்கின்றனர். இந்த வாதம் தவறாகும். திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாகக் கூறியுள்ளதற்கு முரணில்லாத வகையில் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


பரந்து விரிந்த எந்த மொழியாக இருந்தாலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விதமாக உச்சரிப்பார்கள்.


உதாரணமாக வாழைப்பழம் என்பதைச் சரியான ழகர உச்சரிப்புடன் சிலர் வாசிப்பார்கள். ஆனால் இதை வாளைப்பளம், வாளப்பளம், வாலைப்பலம், வாலப்பலம், வாயப்பயம், வாஸப்பஸம் என்றெல்லாம் ஒவ்வொரு வட்டாரத்தில் ஒவ்வொரு விதமாக உச்சரிக்கிறார்கள்.


ஆனால் எழுத்தில் எல்லோரும் வாழைப்பழம் என்றே எழுதுவார்கள்.


எண்பது என்று எழுதி எம்பலது என்று தஞ்சை மாவட்டத்தில் வாசிப்பார்கள்.


மதுரை என்று எழுதி மருதை என்று வாசிப்பவர்களும் உள்ளனர்.


இதுபோல் அரபு மொழியிலும் வட்டார வழக்குகள் இருந்தன.


மக்கா, மதீனாவை உள்ளடக்கிய ஹிஜாஸ் பகுதியில் உள்ள வழக்கப்படி மற்ற பகுதிகளில் உள்ளவர்களும் ஓத வேண்டும் என்று சொன்னால் தங்கள் வழக்கத்திற்கு மாறாக நாவை வளைப்பது அந்த மக்களுக்குச் சிரமமாக இருக்கும். எனவே ஏழு வட்டார வழக்கின்படியும் ஓதிக் கொள்ளலாம் என்பது தான் ஏழு வகைகள் என்பதன் பொருளாகும்.


ஒரு வகையில்தான் குர்ஆன் அருளப்பட்டது. நான் ஜிப்ரீலிடம் மேலும் மேலும் அதிகரித்துத் தருமாறு கேட்டுக்கொண்டே இருந்ததால் ஏழு வரை அதிகப்படுத்தினார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பார்க்க : புகாரி 4991)


மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காகவே அன்று வழக்கத்தில் இருந்த ஏழு வட்டார வழக்குகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகாரம் பெற்றுத் தந்தார்கள்.


ஒவ்வொரு வட்டாரத்தினரும் உச்சரிப்பிலும், ஓதும் முறையிலும் தங்கள் வழக்கப்படி ஓதுவதால் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகாது.


ஆனால் கிராஅத் என்ற பெயரில் இவர்கள் செய்துள்ள கோமாளித்தனங்கள் குர்ஆனுடன் விளையாடுவதாக உள்ளது.


உதாரணமாக 2:198வசனத்தில் ஃப்ள்லன் மின் ரப்பிகும் என்று குர்ஆனில் உள்ளது. இதனுடன் ஃபீ மவாசிமில் ஹஜ் என்ற சொற்களைச் சேர்த்து இப்னு அப்பாஸ் ஓதினார்கள். (பார்க்க : புகாரி 2050,2098)


மனிதர் என்ற முறையில் ஞாபக மறதியாக இப்னு அப்பாஸ் இப்படி தவறாக ஓதி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ளாமல் இது ஒரு கிராஅத் என்று சொல்கின்றனர்.


இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு வார்த்தைக்கு பதிலாக வேறு வார்த்தைகளைப் போட்டு ஓதுவதும், ஒரு வார்த்தையுடன் இன்னொரு வார்த்தையை அதிகப்படுத்தி ஓதுவதும் ஏழு கிராஅத்களில் அடங்கும் என்று கூறி குர்ஆனுடைய பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளனர்.


இப்படி ஓதுவது அந்த ஏழு வகைகளில் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் என்பதற்கு எந்தச் சான்றுமில்லாமல் இருந்தும் இவர்களாகத் தான் இப்படி ஓதுகிறார்கள்.


இப்படி குர்ஆனைப் பலவாறாக ஓதியவர்களில் ஏழுபேர் முக்கியமானவர்கள் என்று கூறுகின்றனர். ஏழு காரிகள் எனப்படும் இவர்கள் நபித்தோழர்கள் அல்லர். தாபியீன்களும் அல்லர். அதன் பின்னர் வந்தவர்களாவர். இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) ஓதியதைக் கேட்டவர்களல்லர்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியதை நேரில் கேட்காமல் இவர்களாக உருவாக்கிக் கொண்டவை எப்படி குர்ஆனாக இருக்க முடியும் என்ற சாதாரண விஷயம் கூட ஏன் இவர்களுக்குப் புரியாமல் போனது என்று தெரியவில்லை.


ஏழு கிராஅத் என்ற பெயரில் இவர்கள் செய்துள்ள குளறுபடிகளால் தான் குர்ஆனுக்கு எதிரான கேள்விகள் உருவாயின. ஏழு வகை குர்ஆனை வைத்துக் கொண்டு பாதுகாக்கப்பட்ட வேதம் இருக்கிறது என்கிறீர்களா என்பன போன்ற கேள்விகளை எழுப்பக் காரணமான ஏழு கிராஅத்கள் ஒழிக்கப்பட வேண்டும்.


எழுத்துப் பிழைகள்



திருக்குர்ஆனைப் பற்றி இன்னொரு செய்தியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


உஸ்மான் (ரலி) அவர்களால் திருக்குர்ஆனுக்குப் பல பிரதிகள் எடுக்கப்பட்டபோது எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர்.


இவ்வாறு பிழையாக எழுதப்பட்டாலும் மனனம் செய்தவர்களின் உள்ளங்களில் அது பாதுகாக்கப்பட்டு இருப்பதால் அதை அளவுகோலாகக் கொண்டு எழுத்தில் ஏற்பட்ட பிழைகளை உலக முஸ்லிம் சமுதாயம் அப்படியே தக்கவைத்து வருகின்றது.


ஏனெனில் பிழையாக எழுதப்பட்ட பிரதிகள் ஒருவரிடம் இருந்து, சரி செய்யப்பட்ட பிரதிகள் வேறொருவரிடம் இருந்தால் திருக்குர்ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்திவிடும்.


இது போன்ற சில எழுத்துப் பிழைகளை இங்கே நாம் எடுத்துக் காட்டுகிறோம்.


லில்லதீன என்பது திருக்குர்ஆன் முழுவதும் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 70:36 வசனத்தில் மட்டும் பிழையாக அலிப் அதிகமாக எழுதப்பட்டுள்ளது.


21:88 வசனத்தில் நுன்ஜி எனும் சொல் நுஜி என்று எழுதப்பட்டுள்ளது. இதை மக்கள் அப்படியே வாசித்துவிடக் கூடாது என்பதற்காக மேலே சிறிய நூன் எழுத்து பிற்காலத்தில் எழுதப்பட்டது.


அஃபஇன் என்ற சொல் 3:144, 21:34 ஆகிய வசனங்களில் அஃபா இன் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை அஃபஇன் என்றுதான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.


3:158 வசனத்தில் லா இலல்லாஹி என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் ல இலல்லாஹி என்று தான் இதை வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.


37:68 வசனத்தில் லா இலல் ஜஹீம் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை ல இலல் ஜஹீம் என்றுதான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.


5:29 வசனத்தில் தபூஆ என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது பிழையாகும். இதை தபூஅ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.


7:103, 10:75, 11:97, 23:46, 28:32, 43:46 ஆகிய வசனங்களில் மலாயிஹி என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை மலயிஹி என்றுதான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.


9:47 வசனத்தில் வலா அவ்லவூ என்று பிழையாக எழுதியுள்ளனர். ஆனால் வல அவ்லவூ என்றுதான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.


ஸமூத என்ற சொல் 7:73, 11:61, 17:59, 27:45, 51:43 ஆகிய வசனங்களில் ஸமூத என்று சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 11:68 வசனத்தில் இச்சொல் இரு இடங்களில் உள்ளது. இதில் ஒரு இடத்தில் மட்டும் ஸமூதா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஸமூத என்றுதான் இதை எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.


ஷைஇன் என்ற சொல் எல்லா இடங்களிலும் சரியாக எழுதப்பட்டுள்ளபோதும் 18:23 வசனத்தில் மட்டும் ஷா இன் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை ஷைஇன் என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.


18:14 வசனத்தில் நத்வுவ என்று எழுதுவதற்குப் பதிலாக நத்வுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை நத்வுவ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.


லாகின்ன என்ற சொல்லை 18:38 வசனத்தில் லாகின்னா என்று பிழையாக எழுதியுள்ளனர். இதை லாகின்ன என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.


13:30 வசனத்தில் லி தத்லுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை லி தத்லுவ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும். v 27:21 வசனத்தில் லா அத்பஹன்னஹு என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை ல அத்பஹன்னஹு என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.


47:4 வசனத்தில் லியப்லுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை லி யப்லுவ என்று தான் வாசிக்கவும் எழுதவும் வேண்டும்.


59:13 வசனத்தில் லா அன்தும் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை ல அன்தும் என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.


கவாரீர என்ற சொல் 76:16, 27:44 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 76:15 வசனத்தில் கவாரீரா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை கவாரீர என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.


ஸலாஸில என்ற சொல் 76:4 வசனத்தில் ஸலாஸிலா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை ஸலாஸில என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.


47:31 வசனத்தில் நப்லுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை நப்லுவ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.


அல்ஐகத் என்ற சொல் 15:78, 50:14 ஆகிய வசனங்களில் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் 26:176, 38:13 வசனங்களில் அலிபை விட்டு விட்டு பிழையாக எழுதியுள்ளனர்.


ஷுரகாவு என்ற சொல் 4:12, 7:190, 39:29 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. இந்தச்சொல் 6:94, 42:21 ஆகிய வசனங்களில் இறுதியில் ஒரு அலிப் பிழையாக எழுதப்பட்டுள்ளது. மேலும் வாவ் என்ற எழுத்தும் இதில் பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.


லுஅஃபாவு என்ற சொல் 2:226 வசனத்தில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 14:21, 40:47 ஆகிய வசனங்களில் இறுதியில் ஒரு அலிப் பிழையாக எழுதப்பட்டுள்ளது. மேலும் வாவ் என்ற எழுத்தும் இதில் பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.


நபயி என்ற சொல் 6:67, 28:3, 76:2 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 6:34 வசனத்தில் இறுதியில் யே எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.


வராயி என்ற சொல் 2:101, 11:71, 33:53 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 42:53 வசனத்தில் இறுதியில் யே எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.


நஷாவு என்ற சொல் 8:31, 6:83 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 11:87 வசனத்தில் இறுதியில் அலிப் எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.


يَبْسُطُ என்ற சொல் 13:26, 17:30, 28:82, 29:62, 30:37, 34:36, 34:39, 39:52, 42:12, ஆகிய வசனங்களில் يَبْسُطُ என்று சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 2:245வது வசனத்தில் மட்டும் இச்சொல் يَبْصطُ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஸீன்' என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக 'ஸாத்' என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்.


بَسْطَةً என்ற சொல்லை 2:247 வசனத்தில் சரியாக எழுதியுள்ளனர். ஆனால் 7:69 வசனத்தில் بَصْطَةً என்று பிழையாக எழுதியுள்ளனர். بَسْطَةً என்று 'ஸீன்' எழுதுவதற்குப் பதிலாக بَصْطَةً என்று 'ஸாத்' எழுதியுள்ளனர். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம்.


இதுபோல் இன்னும் சில சிறிய அளவிலான எழுத்துப் பிழைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூலப் பிரதியில் சரியாகவே எழுதப்பட்டுள்ளன. இந்தப் பிழைகளும் கூட பாரதூரமான பிழைகள் இல்லை; சாதாரணமான மனிதர்களுக்கும் ஏற்படும் பிழைகள் தான்.


குர்ஆன் இறைவனிடமிருந்து எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது. ஒலி வடிவமாக அருளப்பட்டதை எழுத்து வடிவமாக ஆக்கியது மனிதர்கள் தான். எனவே எழுத்துக்களில் ஒன்றிரண்டு பிழைகள் இருப்பதற்கு, இது மனிதர்களின் செயல் என்பதுதான் காரணம். இறைவனே எழுதித் தந்திருந்தால் எழுத்திலும் பிழை ஏற்பட்டிருக்காது.


எழுத்தர்கள் இவ்வாறு பிழையாக எழுதியுள்ளனர் என்ற கருத்தை 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மொழியியல் வல்லுனரும் மார்க்க மேதையுமான இப்னு குதைபா, இப்னு கல்தூன், இமாம் பாகில்லானி, இமாம் உஸ்புஹானி உள்ளிட்ட பல அறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் எழுத்தர்கள் பிழையாக எழுதியுள்ளதால் குர்ஆனுடைய பாதுகாப்புத் தன்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் குர்ஆன் ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது. எழுத்து வடிவில் அல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


எனவே மனிதர்களால் ஏற்பட்ட இந்தத் தவறுகளை நாம் சுட்டிக் காட்டுவதால், திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகி விடாது. திருக்குர்ஆன் அதன் ஒலி வடிவத்தில் பாதுகாக்கப்பட்டே இருக்கின்றது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.


இதனால் தான் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதைப் பற்றிப் பேசும்போது "கல்வியாளரின் உள்ளங்களில் இது பாதுகாக்கப்படுகிறது'' என்று 29:49 வசனம் குறிப்பிடுகிறது.


தவறாக எழுதப்பட்ட இந்த வசனங்களை மனனம் செய்தவர்கள் சரியாகத்தான் மனனம் செய்தார்கள். மனனம் செய்வதிலே எந்தக் குழப்பமும் வரவில்லை. தவறாக எழுதப்பட்ட பிறகும் கூட உலக முஸ்லிம்கள் அனைவரும் வாசிக்கும்போது சரியாகவே வாசிக்கிறார்கள்.


இந்தச் சிறிய எழுத்துப் பிழைகளை அப்படியே தக்க வைத்திருப்பது குர்ஆனைப் பாதுகாப்பதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு இருந்த அக்கறையை எடுத்துக் காட்டுகிறது.


இதனால் தான் ஊருக்கு ஒரு குர்ஆன், காலத்திற்கு ஏற்ப ஒரு குர்ஆன் என்று குர்ஆனில் எந்த வேறுபாடும் இல்லாமல் உலகம் முழுவதும் ஒரே குர்ஆனாக, எந்தவித மாறுதலும் இல்லாமல் 14 நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.


மேலோட்டமாகப் பார்க்கும்போது இது ஒரு குறைபோல தோன்றினாலும், உண்மையில் குர்ஆனில் யாரும் கை வைப்பதை இந்தச் சமுதாயம் அனுமதிக்காது என்பதைக் காட்டுவதற்கான சான்று எனலாம்.


அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள்



அடுத்து குர்ஆனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாறுதல்களாகும்.


திருக்குர்ஆன் அருளப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 14 நூற்றாண்டுகள் கடக்கும்போது எந்த ஒரு மொழியும் அதனுடைய அடையாளங்களில் பலவற்றை இழந்து விடுவதைக் காண்கிறோம். அதனுடைய எழுத்துக்களில் மாற்றம் ஏற்படும்; அமைப்புகளில் மாற்றம் ஏற்படும்; பேச்சு வழக்குகளில் மாற்றம் ஏற்படும். இப்படி பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவது எல்லா மொழிகளிலும் காணப்படும்.


அத்தகைய மாற்றங்கள் அரபுமொழியிலும் ஏற்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கும், இப்போது உலகம் முழுவதும் உள்ள குர்ஆனுடைய எழுத்துக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.


அன்று எழுதப்பட்ட மூலப் பிரதியை இன்று அரபுமொழி தெரிந்தவரிடத்திலே கொடுத்தால் அவரால் அதை வாசிக்கவே முடியாது என்ற அளவுக்கு மாறுதல் ஏற்பட்டுள்ளது.


இந்த மாறுதலால் குர்ஆனின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விட்டதாகக் கருதக்கூடாது. ஏனென்றால் குர்ஆன் எழுத்து வடிவமாக வழங்கப்படவில்லை. ஒலி வடிவமாகக் தான் வழங்கப்பட்டது.


இறுதி வரை நிலைத்திருக்கும் ஒரு ஆவணமாக ஆக்குவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்து வடிவமாக்கினார்கள்.


இறைவனிடமிருந்து குர்ஆன் நபிகள் நாயகம் அவர்களுக்கு வந்தபோது ஒலி வடிவமாகத்தான் வந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த ஒலி வடிவம் இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்து வருகிறது.


இன்றைக்கும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னால் அவர் வாசிப்பதும், இப்போது அச்சிடப்படும் குர்ஆனை வாசிப்பதும் ஒரே ஓசை கொண்டதாகவும், ஒரே உச்சரிப்பைக் கொண்டதாகவும் இருக்கும். இரண்டுக்குமிடையே எந்த வித்தியாசமும் இருக்காது.


தமிழக மக்கள் புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம். தஞ்சையிலே சரஸ்வதி மஹாலில் பழங்காலச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்தத் தமிழ்ச் சுவடிகளை நம்மால் வாசிக்க முடியாது. ஆனால் அந்தச் சுவடியில் உள்ள ஒரு பகுதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவர் வாசித்தால் தற்போது நம் கைவசத்தில் இருக்கும் பிரதியைப் போன்று தான் வாசிப்பார்.


அதே போல் தான் அரபுமொழியின் எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டாலும், குர்ஆனுடைய உச்சரிப்பிலோ, ஓசையிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு எந்தக் குந்தகமும் ஏற்படவில்லை.


இதனால் தான் திருக்குர்ஆன் நல்லோரின் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது என்று இறைவன் கூறுகிறான் (29:49).


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு அரபு மொழியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதைப் பார்ப்போம்.


புள்ளிகள்



அரபு மொழியில் ஒரு புள்ளி உள்ள எழுத்துக்கள், இரண்டு புள்ளி உள்ள எழுத்துக்கள், மூன்று புள்ளி உள்ள எழுத்துக்கள், மேலே புள்ளி உள்ள எழுத்துக்கள், கீழே புள்ளி உள்ள எழுத்துக்கள் என உள்ளன.


அரபுமொழியில் ஐந்தாறு எழுத்துக்களுக்கு ஒரே வடிவம் உள்ளதால் இந்தப் புள்ளிகளை வைத்துத்தான் இன்ன இன்ன எழுத்து என அறிந்து கொள்ள முடியும்.


ஆனால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் எழுத்துக்களுக்குப் புள்ளிகள் இருக்கவில்லை. இதனால் ஒரே வடிவத்தில் பல எழுத்துக்கள் இருந்தன. ஆயினும் அந்த மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள், இந்த இடத்தில் இன்ன எழுத்துத்தான் இருக்க முடியும் என்று வாக்கிய அமைப்பைக் கவனித்துச் சரியாக வாசித்து விடுவார்கள்.


இஸ்லாம் உலகம் முழுவதும் பரவிய பிறகு, அரபுமொழியின் பொருள் தெரியாமலே இறைவேதம் என்பதற்காக அதை வாசிக்கின்ற மக்கள் பெருகியபோது, புள்ளிகள் இட்டு எழுத்துக்களை இனம் காட்டினார்கள்.


புள்ளிகள் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் மூலப் பிரதியில் கிடையாது. புள்ளி வைப்பது மக்களுக்கு உதவிகரமாக இருப்பதால் முஸ்லிம் உலகம் இதை ஒட்டு மொத்தமாக அங்கீகரித்துக் கொண்டது.


குர்ஆனுக்காகச் செய்யப்பட்ட இந்த மாறுதலை அரபுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் பழகிக் கொண்டார்கள். அவர்களும் பழங்கால எழுத்து முறையை மறந்து விட்டார்கள். இது அரபுமொழியில் செய்யப்பட்ட ஒரு முக்கியமான மாறுதல்.


உயிர் மெய்க் குறியீடுகள்




தமிழ் மொழியில் 'க' என்று எழுதினால் பார்த்தவுடனே அதை க என்று வாசிக்க முடியும். 'கீ' என்பது வேறு வடிவம் பெறுவதால் அதை 'கீ' என வாசிக்க முடியும். 'கு' என்பது இன்னொரு வடிவம் பெறுவதால் அதை 'கு' என்று வாசிக்க முடியும்.


ஆனால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் அரபு மொழியில் உயிர், மெய்க் குறியீடுகள் இருக்கவில்லை. க, கி, கு, க் ஆகிய நான்கிற்கும் ஒரே வடிவம் தான் இருந்தது. எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தை வைத்து அதை எவ்வாறு வாசிப்பது என்பதை அன்றைய அரபுகள் கண்டு கொள்வார்கள்.


ஆயினும் இஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் பரவி, பொருள் தெரியாதவர்களும் குர்ஆனை வாசிக்கும் நிலை ஏற்பட்டபோது அவர்களுக்கு உதவிகரமாக இருக்க பிற்காலத்தில் உயிர், மெய்க் குறியீடுகள் (உருது மொழியில் ஸேர், ஸபர், பேஷ், ஸுக்கூன்) இடப்பட்டன.


இந்த வேறுபாடுகள் மூலப் பிரதியில் இருக்காது. அதில் க, கி, கு, க் என்று அனைத்துமே ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டிருக்கும்.


இந்த மாறுதலையும் முஸ்லிம் உலகம் ஏற்றுக் கொண்டது. அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் குர்ஆனைத் தவிர மற்ற நூல்களில் உயிர், மெய்க் குறியீடுகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. குறியீடுகள் இல்லாமலே அவர்கள் அதனைச் சரியாக வாசித்து விடுவார்கள்.


அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சியில் ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்ற அதிகாரியின் மேற்பார்வையில் பல அறிஞர்கள் கூடி இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். இதை உலக முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டார்கள்.


குர்ஆனுடைய மூலப் பிரதியில் உள்ள எழுத்துக்கும், இப்போது உள்ள பிரதிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பார்த்து குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கருதிடக் கூடாது.


குர்ஆனை முடிக்கும் துஆ

<


தற்காலத்தில் குர்ஆனை முடிக்கின்ற நீண்ட பிரார்த்தனையையும் குர்ஆனின் இறுதியில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாளடைவில் இது குர்ஆனோடு கலந்து விடும் அபாயம் இருக்கிறது. இதில் ஆழமான கருத்துக்களோ, அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களோ ஏதுமில்லை. இந்தப் பிரார்த்தனையை ஓத வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.


மேலும் இதன் பொருளை அறிந்து கொண்டால் இப்பிரார்த்தனை குர்ஆனுடன் விளையாடும் வகையில் அமைந்துள்ளதை யாரும் அறியலாம்.


உதாரணமாக 'கதவு' என்ற சொல்லை நாம் கூறுகிறோம். கதவு என்பதில் 'க' வைக் கூறியதற்காக கஞ்சியையும், 'த'வைக் கூறியதற்காக தண்ணீரையும், 'உ' வைக் கூறியதற்காக உணவையும் 'தா' என்று கூறினால் அது எத்தகைய தரத்தில் அமையுமோ அது போன்ற தரத்தில் தான் இந்தப் பிரார்த்தனையும் உள்ளது.


'ஜீம்' என்ற எழுத்தை ஓதியதால் ஜமால் (அழகை) தா!


'ஹா' என்ற எழுத்தை ஓதியதால் 'ஹிக்மத்' (அறிவு) தா


என்று ஒவ்வொரு எழுத்தையும் குறிப்பிட்டு அந்த எழுத்தில் துவங்கும் வேறொரு வார்த்தையின் பொருளை அல்லாஹ்விடம் கேட்கும் வகையில் இந்தப் பிரார்த்தனை அமைந்துள்ளது.


ஜீம் என்ற எழுத்து ஜமால் என்பதற்கு மட்டும் முதல் எழுத்தாக இல்லை. ஜஹ்ல் (மடமை) என்பதற்கும் முதல் எழுத்தாகவுள்ளது. மேலும் 'ஜீம்' என்பதற்கு ஜமாலைத்தான் தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் கேட்பது அதிகப் பிரசங்கித்தனமாகும். எனவே இந்த துஆவை அச்சிடுவது மட்டுமின்றி அதை வாசிப்பது பாவமாகவும், குர்ஆனுடன் விளையாடியதாகவும் அமையும்.


 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 294771