பாடம் : 5 நபி (ஸல்) அவர்கள் அரபு தூதுக் குழுக் களிடம், உங்களுக்குப் பின்னால் (ஊரில்) இருப்பவர்களுக்கு எடுத்துரையுங்கள் என்று உபதேசம் செய்தது. இது தொடர்பாக மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள் ளார்கள்.24
7266. அபூ ஜம்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் என்னைக் கட்டிலின் மீது (தம்முடன்) அமரச் செய்து (தாம் கூறும் ஹதீஸ்களை மக்களுக்கு மொழிபெயர்த்துக் கூறுமாறு சொல்லி வந்தார்கள். (ஒரு முறை பின்வருமாறு) கூறினார்கள்: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தபோது `தூதுக் குழுவினர் யார்?` என்று நபியவர்கள் கேட்க, `(நாங்கள்) `ரபீஆ` குலத்தார்` என்று தூதுக் குழுவினர் பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், `இழிவுக்குள்ளாகாமலும் மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருகை புரிந்த `தூதுக் குழுவினரே!` அல்லது `சமூகத்தாரே!` வருக` என்று (வாழ்த்துக்) கூறினார்கள். அப்போது அக்குழுவினர் `இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே `முளர்` குலத்து இறைமறுப்பாளர்கள் (தடையாக) உள்ளனர். எனவே, எந்தக் கட்டளைகளைச் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் செல்லவும் எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் போன)வர்களுக்குத் தெரிவிக்கவும் ஏதுவாக இருக்குமோ அத்தகைய கட்டளைகளில் (முக்கியமான) சிலவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்` என்று கேட்டுக்கொண்டார்கள். அப்போது அவர்கள் குடிபானங்கள் பற்றியும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.
எனவே, அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் நான்கு விஷயங்களைத் தடை செய்தார்கள். நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். 1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, `இறைநம்பிக்கை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?` என்று கேட்க, அத்தூதுக் குழுவினர், `அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்` என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், `வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் இறைத்தூதராவார்கள் என்றும் உறுதி கூறுவதுதான் (இறை நம்பிக்கை என்பது)` என்று கூறினார்கள். 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. ஸகாத் வழங்குவது - ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது என்றும் அவர்கள் கூறினார்கள் எனவே கருதுகிறேன். 4. போர்ச் செல்வங்களில் ஐந்திலொரு பங்கை நீங்கள் (அரசு கருவூலத்திற்குச்) செலுத்துவது.
(மது ஊற்றிவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும் `இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பின்னால் இருப்போரிடம் இதைத் தெரிவித்து விடுங்கள்` என்றும் கூறினார்கள்.25
Book : 95