85. பாகப் பிரிவினைச் சட்டங்கள்

பாடம் : 1 அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்; பெண்மக்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு, இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு(ச் சொத்தில்) பாதி கிடைக்கும். இறந்தவருக்குப் பிள்ளை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவருடைய) பெற்றோர் ஒவ்வொரு வருக்கும் உண்டு. ஆனால், இறந்தவருக்குப் பிள்ளை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு) உரிய தாகும். அப்போது இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்குச்) சேரும். (இவ்வாறு பிரித்துக் கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். உங்களுடைய பெற்றோர் மற்றும் மக்கள் ஆகியோரில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்; (ஆகையால்,) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளை(யான இந்தப் பாகப் பிரிவினைச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.2 மேலும், உங்கள் மனைவியர் விட்டுச் சென்ற(சொத்)தில் அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால் பாகம்தான். (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். தவிர உங்களுக்குப் பிள்ளை இல்லாதி ருப்பின், நீங்கள் விட்டுச் சென்ற(சொத்)தில் நான்கில் ஒரு பாகம் உங்கள் மனைவியருக்குக் கிடைக்கும். உங்களுக்குப் பிள்ளை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற(சொத்)தில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியருக்குக் கிடைக்கும். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாசனத்தையும் கடனையும் நிறை வேற்றிய பின்னரேதான். (தந்தை, பாட்டன் போன்ற மூல வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற கிளை வாரிசுகளோ) யாரும் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ -இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால்-அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால், இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாசனமும் கடனும் நிறைவேற்றப்பட்ட பின்னர்தான்; ஆயினும் (மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது; (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான் (4:11, 12).3
6723. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.
நான் (ஒரு முறை) நோய்வாய்ப்பட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் என்னை உடல் நலம் விசாரிக்க நடந்தே வந்தனர். என்னிடம் அவர்கள் வந்தபோது நான் மயக்கமுற்றிருந்தேன். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உ@) செய்தார்கள். பிறகு அந்தத் தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண்விழித்)தேன். அப்போது நான், `இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தின் விஷயத்தில் நான் என்ன முடிவு செய்ய வேண்டும்?` என்று கேட்டேன். அப்போது அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. முடிவில் வாரிசுரிமை தொடர்பான (மேற்கண்ட வசனம்) இறங்கிற்று.4
Book : 85
பாடம் : 2 பாகப் பிரிவினை (கல்வி)யைக் கற்பித்தல் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: யூகத்தின் அடிப்படையில் பேசக்கூடிய வர்கள் தோன்றுவதற்கு முன் (அடிப்படை யுள்ள பாகப் பிரிவினை போன்ற) கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள்.
6724. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
(அடிப்படையில்லாமல் பிறர் மீது சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இவ்வாறு சந்தேகம் கொள்வது மாபெரும் பொய்யாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரின் மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 86
பாடம் : 3 (இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.6
6725. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்) ஃபாத்திமா(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கேட்டனர். அப்போது அவர்களிருவரும் `ஃபதக்` பகுதியிலிருந்து தம் நிலத்தையும் கைபரில் தமக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு கோரினர்.7
Book : 86
6726. அவர்கள் இருவரிடமும் அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவையாகும். இச்செல்வத்திலிருந்து தான் முஹம்மதின் குடும்பத்தினர் உண்பார்கள் என்று சொல்லக் கேட்டுள்ளேன்` என்று கூறிவிட்டு, `அல்லாஹ்வின் மீதாணையாக! இச்செல்வத்தின் விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்படக் கண்டேனோ அதில் எதையும் கைவிடாமல் நானும் அவ்வாறே செயல்படுவேன்` என்று பதிலளித்தார்கள். இதனால் கோபித்துக் கொண்டு ஃபாத்திமா(ரலி) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் தாம் இறக்கும் வரை பேசவில்லை.8
Book :86
6727. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :86
6728. முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அவர்கள் கூறினார்:
நான் மாலிக் இப்னு அவ்ஸ் இப்னி அல் ஹதஸான்(ரலி) அவர்களிடம் சென்று (ஃபதக் தொடர்பான நிகழ்ச்சி குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:
நான் உமர்(ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது உமர்(ரலி) அவர்களின் மெய்க்காவலர் `யர்ஃபஉ` என்பவர் அவர்களிடம் வந்து, `உஸ்மான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்கத் தங்களுக்கு இசைவு உண்டா?` என்று கேட்டார். உமர்(ரலி) அவர்கள், `ஆம்` என்று கூறி, அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். (சற்று நேரத்திற்குப்) பிறகு யர்ஃபஉ (வந்து), `அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் சந்திப்பதில் தங்களுக்கு இசைவு உண்டா?` என்று கேட்டார். `ஆம்` என்றார்கள். (அனுமதிக்குப் பின் அவர்கள் இருவரும் உள்ளே வந்தனர்).
அப்பாஸ்(ரலி) அவர்கள், `இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (-அலீக்கும்) இடையே (இச்சொத்துத் தொடர்பாகத்) தீர்ப்பளியுங்கள்` என்றார்கள்.
உமர்(ரலி) அவர்கள், `வானமும் பூமியும் எந்த அல்லாஹ்வின் கட்டளையால் நிலை பெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கிறேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாகமாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே` என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?` என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்த) அந்தக் குழுவினர், `நபியவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்` என்று பதிலளித்தனர். உமர்(ரலி) அவர்கள், அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?` என்று கேட்டார்கள். அவ்விருவரும், `(ஆம்) அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்` என்று பதிலளித்தனர்.
உமர்(ரலி) அவர்கள், `அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயம் குறித்துப் பேசுகிறேன்: (போரிடாமல் கிடைத்த) இந்த (ஃபய்உ)ச் செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கினான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை வழங்கவில்லை` என்று கூறிவிட்டு, `அல்லாஹ் எச்செல்வத்தை (எதிரிகளான) அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அச்செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஒட்டிச் சென்றதால் கிடைத்ததன்று. மாறாக அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்` எனும் (திருக்குர்ஆன் 59:6 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
தொடர்ந்து, `எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை; அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே எஞ்சியது. நபி(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடாந்திர செலவை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு எஞ்சியதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள்.` (இவ்வளவும் சொல்லிவிட்டு, அக்குழுவினரை நோக்கி) `அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?` என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், `ஆம்` (அறிவோம்) என்று பதிலளித்தனர். பிறகு, அலீ(ரலி) அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும்? `உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நீங்கள் இதை அறிவீர்களா?` என்று வினவினார்கள். அவர்கள் இருவரும், `ஆம்` (அறிவோம்) என்று பதிலளித்தனர்.
(தொடர்ந்து), `பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள், `நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்` என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்தார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான், `நான் அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதியின் பிரதிநிதியாவேன்` என்று கூறி, அதை (என் ஆட்சிக் காலத்தில்) இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்துகொண்ட முறைப்படி செயல்பட்டு வந்தேன். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் வந்தீர்கள் (பேசினீர்கள்). உங்கள் இருவரின் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது; உங்கள் இருவரின் விஷயமும் ஒன்றாகவே இருந்தது.
(அப்பாஸ்(ரலி) அவர்களே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரரின் புதல்வர் (-நபி) இடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள். அவரும் (-அலீயும்) தம் துணைவியாருக்கு அவரின் தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி என்னிடம் வந்தார். அப்போது நான் (உங்கள் இருவரிடமும்,) `(நபிகளார் செயல்பட்டபடி செயல்படவேண்டும் எனும் நிபந்தனையின் பேரில்) நீங்கள் இருவரும் விரும்பினால் உங்கள் இருவரிடமும் அதைக் கொடுத்து விடுகிறேன்` என்று சொன்னேன். (இப்போது) அதன்றி வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா? எவனுடைய அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் அச்செல்வம் தொடர்பாக இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் இறுதிநாள் வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்` என்றார்கள்.9
Book :86
6729. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.10
Book :86
6730. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் துணைவியர் உஸ்மான்(ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர். அப்போது நான் (அவர்களைப் பார்த்து), `(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்லவில்லையா?` என்று கேட்டேன்.
Book :86
பாடம் : 4 ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவருடைய குடும்பத்தாருக்குரிய தாகும் எனும் நபிமொழி.
6731. இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களை விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வனாவேன். எனவே, தம் மீது கடன் இருக்கும் நிலையில் அதனை அடைப்பதற்கான ஒன்றையும்விட்டுச் செல்லாமல் இறந்துவிடுபவரின் கடனை அடைப்பது என்னுடைய பொறுப்பாகும். (இறக்கும் போது) ஒரு செல்வத்தைவிட்டுச் ஒருவர் விட்டுச் செல்வாராயின் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.11
Book : 86
பாடம் : 5 தாய், தந்தையிடமிருந்து ஒருவருக்குக் கிடைக்கும் சொத்துரிமை. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஆண் அல்லது பெண், ஒரு புதல்வியை விட்டுச்சென்றால் (அவர்களுடைய சொத்தி லிருந்து) அவளுக்குச் சரிபாதி (பங்கு) கிடைக்கும். பெண்மக்கள் இருவராகவோ அல்லது அதைவிடக் கூடுதலாகவோ இருந்தால் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பாகங்கள் கிடைக்கும். பெண்மக்களுடன் ஆணும் இருந்தால் அவர்களுடன் சொத்தில் பங்காளியாகும் நபருக்குச் சேர வேண்டிய பாகத்தை முதலில் கொடுத்துவிட்டுப் பிறகு எஞ்சியுள்ளவற்றை ஓர் ஆணின் பங்கு இரு பெண்ணின் பங்கிற்குச் சமமானது" என்ற விகிதத்தில் அவர்களிடையே பகிர்ந்தளிக்கப் படும்.12
6732. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
(பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.13
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 86
பாடம் : 6 புதல்வியருக்கு(ப் பெற்றோரிடமிருந்து) கிடைக்கும் சொத்துரிமை.
6733. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
(`விடைபெறும்` ஹஜ்ஜின்போது) மக்காவில் நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான், `இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் எனக்கில்லை. எனவே, என்னுடைய செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா?` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `வேண்டாம்` என்றார்கள். `அவ்வாறாயின் பாதியை தர்மம் செய்யட்டுமா?` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், வேண்டாம் என்றார்கள். `அவ்வாறாயின் பாதியை தர்மம் செய்யட்டுமா?` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `வேண்டாம்` என்றார்கள். `மூன்றிலொரு பங்கை தர்மம் செய்யட்டுமா?)` என்று கேட்டேன். நபியவர்கள், `மூன்றிலொரு பங்கு கூட அதிகம்தான். நீங்கள் உங்கள் பிள்ளைகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிடத் தன்னிறைவு உடையவர்களாகவிட்டுச் செல்வதே சாலச்சிறந்ததாகும். (நல்ல நோக்கத்தில்) நீங்கள் செய்கிற ஒவ்வொரு செலவுக்கும் உங்களுக்கு நிச்சயம் நற்பலன் வழங்கப்படும்; நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவளம் உணவாயினும் சரி! (அதற்கும் நற்பலன் உண்டு)` என்றார்கள். உடனே நான், `இறைத்தூதர் அவர்களே! (ஹஜ் முடிந்து என் தோழர்கள் அனைவரும் மதீனா செல்வார்கள்.) நான் மட்டும் என் ஹிஜ்ரத் பூமி(யான மதீனாவு)க்குச் செல்லாமல் (மக்காவிலேயே) தங்கிவிடுவேனா?` என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `நான் (மதீனா) சென்ற பிறகு நீங்கள் இங்கேயே தங்கியிருந்து, அல்லாஹ்வின் திருப்தியை நாடி எந்த நல்லறம் புரிந்தாலும் அதன் மூலம் உங்கள் உயர்வும் அந்தஸ்தும் அதிகமாகவே செய்யும். நான் (மதீனா) சென்ற பிறகு, உங்களின் மூலம் சிலர் நன்மையடைவதற்காகவும் மற்ற சிலர் துன்பம் அடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்கவைக்கப்படலாம். ஆனால், பாவம், ஸஅத் இப்னு கவ்லா! (அவரின் ஆசை நிறைவேறவில்லை)` என்று மக்காவிலேயே இறந்துவிட்ட ஸஅத் இப்னு கவ்லா(ரலி) அவர்களுக்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுதபாம் தெரிவித்தார்கள்.
இதன் அறிவிப்பார்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸஅத் இப்னு கவ்லா(ரலி) அவர்கள் ஆமிர் இப்னு லுஅய் குலத்தைச் சேர்ந்தவராவார்.14
Book : 86
6734. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் யமன் நாட்டுக்கு எங்களின் போதகராகவும் ஆட்சியாளராகவும் வந்தார்கள். அன்னாரிடம் நாங்கள், தம் மகளையும் சகோதரியையும்விட்டுவிட்டு இறந்த ஒருவரைக் குறித்து (பாகப் பிரிவினை தொடர்பாக)க் கேட்டோம். அப்போது அவர்கள் (மொத்தச் சொத்தில்) மகளுக்குப் பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் அளிக்கும்படி கூறினார்கள்.
Book :86
பாடம் : 7 (இறந்தவருக்கு) மகன் (உயிருடன்) இல்லாத போது மகனின் மகனுக்கு (பேரனுக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறு கின்றார்கள்: (இறந்தவருக்கு) ஆண் மக்கள் (உயிருடன்) இல்லாத போது, அவர்களுடைய குழந்தைகள் (பேரன்கள்,சொந்தக்) குழந்தைகளின் அந்தஸ்தைப் பெறுவர். பேரக் குழந்தைகளில் (-மகனுடைய மக்களில்) ஆண்கள் சொந்த ஆண் மக்களைப் போன்றும், அவர்களில் பெண்கள் சொந்த பெண் மக்களைப் போன்றும் ஆவர். அவர்கள் வாரிசுரிமை பெறுவதைப் போன்றே இவர்களும் வாரிசுரிமை பெறுவார்கள். அவர்கள் (இருக்கும் போது மற்ற வாரிசுகளில் யார் யாரை வாரிசுரிமை பெறாமல்) தடுப்பார்களோ (அவர்களை யெல்லாம்) இவர்களும் தடுப்பார்கள். மகன் (உயிருடன்) இருக்கும் போது மகனுடைய மக்கள் வாரிசுரிமை பெற மாட்டார்கள்.
6735. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
(பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 86
பாடம் : 8 (இறந்தவருக்கு) மகள் இருக்கும் போது மகனுடைய மகளுக்கு (பேத்திக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.
6736. ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அபூ மூஸா(ரலி) அவர்களிடம், (இறந்த ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் `மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் கிடையாது)` என்று கூறிவிட்டு, `(வேண்டுமானால்,) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்று (கேட்டுப்) பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிபலிப்பார்கள்` என்றார்கள். எனவே, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் (சென்று) அபூ மூஸா(ரலி) அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், `இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழிதவறியவனாம்விடுவேன்; நான் நேர்வழியடைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மூன்றில் இரண்டு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும்` என்றார்கள். பின்னர் அபூ மூஸா(ரலி) அவர்களிடம் சென்று இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அப்போது, `இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடையே இருக்கும் வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள்` என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.16
Book : 86
பாடம் : 9 (இறந்தவருக்குத்) தந்தையும் சகோதரர்களும் இருக்கும் போது பாட்டனாருக்குரிய சொத்துரிமை.17 அபூபக்ர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) ஆகியோர் பாட்டனார் தந்தை(யைப் போன்றவர்) ஆவார் என்று கூறினர். (அதற்கு ஆதாரமாக) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆதமின் மக்களே! எனும் (7:26ஆவது) வசனத் தொடரையும் நான் என் தந்தையரான இப்ராஹீம்,இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரின் மார்க்கத்தையே பின்பற்றுகிறேன் (என்று யூசுஃப் கூறினார்) எனும் (12:38ஆவது) வசனத் தொடரையும் ஓதினார்கள்.18 அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்கள் நிறைந்திருந்தும் அவர்களில் யாரும் அபூபக்ர் (ரலி) அவர் களு(டைய இக்கருத்துக்)க்கு மாறுபடவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: எனக்கு (மகன் இல்லாத போது) என் மகனுடைய மகன் (பேரன்)தான் வாரிசாவானே தவிர சகோதரர்கள் அல்லர். (அப்படியிருக்கும் போது) என் பேரனுக்கு (அவனுடைய தந்தை இல்லாத போது பாட்டனாகிய) நான் ஏன் வாரிசாக முடியாது?19 (இது தொடர்பாக) உமர் (ரலி), அலீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரிடமிருந்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.20
6737. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
(பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.21
Book : 86
6738. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், இந்தச் சமுதாயத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அவரையே ஆக்கிக் கொண்டிருப்பேன். என்றாலும், இஸ்லாமிய சகோதரத்துவமே (எல்லா உறவுகளையும்விடச்) `சிறந்தது` அல்லது `நல்லது` என்று யார் விஷயத்தில் கூறினார்களோ (அந்த அபூ பக்ர்(ரலி) அவர்கள் தாம், (சொத்துரிமை பெறுவதில்) பாட்டனாரை `தந்தையின் இடத்தில் வைத்தார்கள்` அல்லது `தந்தை` எனத் தீர்ப்பளித்தார்கள்.22
Book :86
பாடம் : 10 (இறந்துபோன பெண்ணுக்குக்) குழந்தை உள்ளிட்ட வாரிசுகள் இருக்கும் போது கணவனுக்குக் கிடைக்கும் சொத்துரிமை.
6739. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(இறந்தவர்விட்டுச் சென்ற) செல்வம் (அவருடைய) குழந்தைகளுக்கு (மட்டுமே) உரியதாக இருந்தது. பெற்றோருக்கு(ப் பங்கு கிடைக்க வேண்டுமெனில் இறந்தவர்) மரண சாசனம் செய்திருக்க வேண்டும் என்றிருந்தது. இதில் அல்லாஹ் தான் நாடியதை மாற்றியமைத்து, `ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களின் பங்கு` என்ற விம்தத்தை ஏற்படுத்தினான். பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் என்று நிர்ணயித்தான். (குழந்தை இருக்கும்போது) மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் (குழந்தை இல்லாதபோது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான். (குழந்தை இல்லாதபோது) கணவனுக்குச் சரிபாதியும் (குழந்தை இருக்கும்போது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான்.23
Book : 86
பாடம் : 11 (இறந்தவருக்குக்) குழந்தை உள்ளிட்ட வாரிசுகள் இருக்கும் போது மனைவி, (அல்லது) கணவனுக்குக் கிடைக்கும் சொத்துரிமை.
6740. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
`பனூ லிஹ்யான்` குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிலிருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அதற்கு நஷ்ட ஈடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். பின்னர், நஷ்டஈடு வழங்கும்படி நபியவர்கள் தீர்ப்பளித்த அந்த(க் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டார். எனவே, (அவர் சார்பாக) அவரின் தந்தைவழி உறவினர்கள் (அஸபாக்கள்) நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமென்றும், அவரின் சொத்து அவரின் ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.24
Book : 86
பாடம் : 12 (இறந்தவருக்குப்) புதல்வியர் இருக்கும் போது மீதியைப் பெறும் சகோதரிகளின் சொத்துரிமை.25
6741. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (யமன் நாட்டுக்கு வந்த) முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள், `(சொத்தில்) பாதி இறந்தவரின்) மகளுக்கும் (மீதிப்) பாதி சகோதரிக்கும் உரியது` என்று தீர்ப்பளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் இப்னு மிஹ்ரான் அல்அஃமஷ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் `முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் எங்களிடையே (மேற்கண்டவாறு) தீர்ப்பளித்தார்கள்` என்று காணப்படுகின்றது. `இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில்` என்ற குறிப்பு இடம் பெறவில்லை. 26
Book : 86
6742. ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் `(மகனின் மகளுக்குக் கிடைக்க வேண்டிய) இச்சொத்து விஷயத்தில் `நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே அளிக்கிறேன்` அல்லது `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என்று சொல்லிவிட்டு `(இறந்தவரின் சொத்தில்) மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும்; எஞ்சியது சகோதரிக்கு உரியதாகும்` என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.27
Book :86
பாடம் : 13 சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமை.28
6743. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது (என்னை நலம் விசாரிப்பதற்காக) நபி(ஸல்) அவர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள். அங்கசுத்தி (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கேட்டு வாங்கி அங்கசுத்தி செய்தார்கள். பிறகு தாம் அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது தெளிந்துவிட்டது. அப்போது நான், `இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சகோதரிகள் மட்டுமே இருக்கின்றனர். (என் சொத்துகள் யாருக்குச் சேர வேண்டும்?)` என்று கேட்டேன். அப்போதுதான் பாகப் பிரிவினை தொடர்பான வசனம் அருளப்பெற்றது.29
Book : 86
பாடம் : 14 (நபியே!) கலாலா" (-அதாவது மூலவாரிசு களோ கிளைவாரிசுகளோ இல்லாத நிலை-) குறித்து உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள். (அவர்களிடம்) கூறுக: கலாலா" தொடர்பாக அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன் இறந்து, அவனுக்கு ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச்சென்ற(சொத்)தில் பாதி கிடைக்கும். குழந்தை இல்லாத ஒருத்தி (இறந்து, அவளுக்கு ஒரு சகோதரன் மட்டும் இருந்தால் அவளு)க்கு அவன் (முழு) வாரிசாவான். சகோதரிகள் இருவராக இருந்தால் அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரு பாகம் கிடைக்கும். சகோதர சகோதரிகளாகப் பலர் இருந்தால் அவர்களில் இரு பெண்களின் பங்குக்குச் சமமான(பங்கான)து ஓர் ஆணுக்குக் கிடைக்கும். நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கிக் கூறுகின்றான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான் (எனும் 4:176ஆவது இறைவசனம்).
6744. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (பாகப்பிரிவினை தொடர்பான) வசனம், `அந்நிஸா` அத்தியாயத்தின் இறுதி வசனமான `(நபியே!) `கலாலா` குறித்து உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள்` என்று தொடங்கும் வசனமாகும்.30
Book : 86
பாடம் : 15 (இறந்துபோன ஒரு பெண்ணுக்குத்) தந்தையின் சகோதரர் புதல்வர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் ஒருவர் (அவளுடைய) தாய் வழிச் சகோதரர் ஆவார். மற்றொருவர் (அவளுடைய) கணவர் ஆவார். (இவர் களிடையே அவள் விட்டுச் சென்ற சொத்தை எவ்வாறு பங்கிட வேண்டும்?)31 கணவருக்கு (அவளுடைய சொத்தில்) பாதியும், தாய் வழிச் சகோதரருக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும். எஞ்சியிருப்பது அவர்கள் இருவரிடையே சரி பாதியாகப் பங்கிடப்படும் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.32
6745. இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரைவிட நானே நெருக்கமான (உரிமையுடைய)வனாவேன். எனவே, செல்வத்தைவிட்டுவிட்டு இறந்தவரின் செல்வம் (அவருடைய) தந்தை வழியிலுள்ள நெருங்கிய உறவினர்களுக்குரியதாகும். (குடும்பம் மற்றும் கடன் போன்ற) சுமைகள், சொத்தில்லா குழந்தைகள் ஆகியவற்றைவிட்டுச் செல்கிறவருக்கு நான் பொறுப்பாளியாவேன். அவருக்காக என்னை அழைக்கலாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 86
6746. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
(பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆன் நிர்ணயித்துள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்து விடுங்கள். பாகம் நிர்ணயிக்கப்பட்டவர்கள் எடுத்தது போக எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.33
Book :86
பாடம் : 16 இரத்த பந்துக்கள்34
6747. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
`தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும்விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக்காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கும் அவர்களின் பங்கை அளித்துவிடுங்கள்` எனும் (திருக்குர்ஆன் 04:33 வது) வசனத்தின் விளக்கமாவது:
முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது, அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு அவரின் உறவினர்கள் (-தவுல் அர்ஹாம்) அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பரே) வாரிசாம்வந்தார். நபி(ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம். (பின்னர்) இந்த வசனத்தின் முதல் தொடர் இறங்கியபோது, அது இரண்டாவது தொடரை மாறிவிட்டது.35
Book : 86
பாடம் : 17 சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்த பெண் (தன் பிள்ளைகளிடமிருந்து) வாரிசுரிமை பெறுவது.36
6748. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் தம் மனைவிக்கு எதிராக சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார். மேலும், அவர் அவளுடைய குழந்தையைத் தம்தல்ல என்றார். எனவே, அவ்விருவரையும் நபி(ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள்; குழந்தையை மனைவியிடம் சேர்த்தார்கள்.37
Book : 86
பாடம் : 18 பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கி றாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். அவள் அடிமைப் பெண்ணாயிருப்பினும், சுதந்திரம் பெற்றவளாய் இருப்பினும் சரியே!38
6749. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உத்பா இப்னு அபீ வக்காஸ் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் `ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். எனவே, அவனை நீ பிடித்து வைத்துக் கொள்` என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டின்போது ஸஅத்(ரலி) அவர்கள் அவனைப் பிடித்தார்கள். மேலும், அவர்கள், `இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் இவனைக் கைப்பற்றும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியுள்ளார்` என்றார்கள். அப்போது ஸம்ஆவின் புதல்வர் அப்து(ரலி) அவர்கள் எழுந்து, இவன் என் சகோதரன் என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். அவரின் படுக்கையில் (அதாவது அவரின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்` என்று கூறினார்கள். எனவே, இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென்றனர். ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள், `இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரருடைய மகன். அவர் இவனைக் கைப்பற்றிக் கொள்ளும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்` என்று கூற, ஸம்ஆவின் புதல்வர் அப்து(ரலி) அவர்கள், `(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன். அவரின் படுக்கையில் (அவரின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்` என்றார். நபி(ஸல்) அவர்கள், `அப்து இப்னு ஸம்ஆவே! இவன் உனக்கே உரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பே உரியது` என்று கூறினார்கள்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியும்) ஸம்ஆவின் புதல்வி(யுமான) சவ்தா(ரலி) அவர்களிடம், `இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!` என்றார்கள். சாயலில் அவன் உத்பாவைப் போன்று இருந்ததை நபியவர்கள் பார்த்ததே இதற்குக் காரணம். அதன் பிறகு அந்த மனிதர் இறக்கும்வரை அவரை சவ்தா(ரலி) அவர்கள் பார்க்கவில்லை.39
Book : 86
6750. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
தாய் (பெண்) யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :86
பாடம் : 19 (அடிமையாயிருந்த ஒருவருக்கு) வாரிசாகும் தகுதி அவரை விடுதலை செய்தவருக்கே உண்டு என்பது பற்றியும், கண்டெடுக்கப் பட்ட குழந்தைக்கு வாரிசு யார் என்பது பற்றியும்.40 கண்டெடுக்கப்பட்ட குழந்தை அடிமை யாகாது என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
6751. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், `அவளை விலைக்கு வாங்கிக் கொள். ஏனெனில், (அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அந்த அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு` என்றார்கள். மேலும், பரீராவுக்கு ஓர் ஆடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் `அந்த ஆடு பரீராவுக்கு தர்மமாகும். (பரீராவிடமிருந்து நமக்கு அது அன்பளிப்பாகும்` என்றார்கள்.41
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் இப்னு உதைபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பரீராவின் கணவர் (முஃகீஸ்) சுதந்திரம் பெற்றவராக இருந்தார்.
ஹகம் அவர்களின் இந்த அறிவிப்பு `முர்சல்` (அறிவிப்பாளர்தொடரில் நபித் தோழர் விடுபட்டது) ஆகும்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், `முஃகீஸை நான் அடிமையாகவே கண்டேன்` என்றார்கள்.
Book : 86
6752. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
(அடிமையாயிருந்த ஒருவருக்கு) வாரிசாகும் தகுதி (அவரை) விடுதலை செய்தவருக்கே உண்டு.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :86
பாடம் : 20 உன் மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது" என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்ட அடிமைக்கு (-சாயிபா), வாரிசு யார்?42
6753. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
`உன் மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது` என்ற நிபந்தனையின் பேரில் அடிமைகளை முஸ்லிம்கள் விடுதலை செய்வதில்லை. அறியாமைக் காலத்தவர்தாம் அவ்வாறு விடுதலை செய்துவந்தனர்.
Book : 86
6754. அஸ்வத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்கள் (அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விடுதலை செய்வதற்காக விலைக்கு வாங்க விரும்பினார்கள். பரீராவின் எசமானார்கள் `பரீராவின் வாரிசுரிமை தங்களுக்கே இருக்கவேண்டும்` என நிபந்தனையிட்டார்கள். எனவே, ஆயிஷா(ரலி) அவர்கள், `இறைத்தூதர் அவர்களே! விடுதலை செய்வதற்காக நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமானர்களோ அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனையிடுகிறார்கள்` என்றார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `(பரீராவை) விலைக்கு வாங்கி) விடுதலை செய்! ஏனெனில், (பொதுவாக) விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு` அல்லது `விலையைக் கொடுத்துவிடு` என்றார்கள். எனவே, ஆயிஷா(ரலி) அவர்கள் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். (தொடர்ந்து கணவர் முஃகீஸுடன் சேர்ந்து வாழ, அல்லது திருமண உறவை முறித்துக்கொள்ள) பரீராவிற்கு விருப்ப உரிமை அளிக்கப்பட்டது. அப்போது பரீரா தன்னுடைய விருப்பத்திற்கேற்ப தனித்து) வாழ்வதையே தேர்ந்தெடுத்துக் கொண்டதுடன், `இவ்வளவு இவ்வளவு செல்வம்) எனக்குக் கொடுக்கப்பட்டாலும் நான் அவருடன் இருக்கமாட்டேன்` என்று சொல்லிவிட்டார்.
அறிவிப்பாளர் அஸ்வத்(ரஹ்) அவர்கள் `பரீராவின் கணவர் (முஃகீஸ்) சுதந்திர மனிதராக இருந்தார்` என்றார்கள்.
(அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்:) அஸ்வத்(ரஹ்) அவர்களின் இந்த அறிவிப்பு `முன்கதிஃ` (அறிவிப்பாளர் தொடரில் தொடர்பு அறுந்தது) ஆகும். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் `முஃகீஸை நான் அடிமையாகவே கண்டேன்` என்று கூறியதே சரியானதாகும்.
Book :86
பாடம் : 21 விடுதலை செய்த எசமானர்களின் உறவிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அடிமை பாவி ஆவான்.
6755. யஸீத் இப்னு ஷரீக் அத்தைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அலீ(ரலி) அவர்கள், `நாங்கள் ஓதி வருகிற அல்லாஹ்வின் வேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறெதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை` என்று கூறிவிட்டு, அந்த ஏட்டை வெளியே எடுத்தார்கள். அதில் காயங்களுக்கான தண்டனை குறித்தும் (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது குறித்தும் எழுதப்பட்டிருந்தன. மேலும், அதில் (பின்வருமாறு குறிப்பிடப்பட்டு) இருந்தது: மதீனா நகரம் `அய்ர்` எனும் மலையிலிருந்து `ஸவ்ர்` மலை வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை உருவாக்குகிறானே, (அவ்வாறு) புதிதாக ஒன்றை உருவாக்குகிறவனுக்கு அடைக்கலம் அளிக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ எதுவுமே அவனிடமிருந்து ஏற்கப்படாது. தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமை மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவனிடமிருந்து ஏற்கப்படாது. முஸ்லிம்களின் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கூட அடைக்கலம் தர முன்வரலாம் ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவரேனும் முறித்தால் அவன் முது அல்லாஹ்வின் சாபமும் வானர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாடு உபரியான வழிபாடு மற்றும் எதுவுமே மறுமை நாளில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது.43
Book : 86
6756. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள்இ `(முன்னாள் அடிமையின் சொத்திற்கு) வாரிசாகும் உரிமையை விற்கபதற்கும் அதை அன்பளிப்புச் செய்வதற்கும் தடை விதித்தார்கள்.44
Book :86
பாடம் : 22 ஒருவரின் உதவியால் மற்றொருவர் இஸ்லாத்தை ஏற்றால் (இவருக்கு அவர் வாரிசாவாரா?) (இஸ்லாத்தை ஏற்க உதவிய) அவருக்கு வாரிசுரிமை இல்லை என்றே ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருதிவந்தார்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு என்றுதான் கூறினார்கள்.45 நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாத்தை ஏற்க உதவியாக இருந்த) அவரே இவருடைய வாழ்விலும் சாவிலும் மனிதர்களிலேயே மிகவும் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார். (புகாரியாகிய நான் கூறுகின்றேன்:) இது சரியான ஹதீஸா என்பதில் கருத்துவேறுபாடு காணப்படுகிறது.
6757. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (பரீரா எனும்) ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாதங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். பரீராவின் எசமானர்களோ `பரீராவின் வாரிசுரிமை எங்களுக்கே வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் அவளை நாங்கள் உங்களுக்கு விற்கிறோம்` என்று கூறினார். எனவே,ஆயிஷா(ரலி) அவர்கள் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `(அதற்காக) நீ விடுதலை செய்யாமல் இருந்துவிடாதே! விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது` என்றார்கள்.
Book : 86
6758. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது பரீராவின் எசமானர்கள் அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். நான் இது குறித்து நபி(ஸல்) அவர்களிடன் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `அவளை நீ விடுதலை செய்! ஏனெனில், வெள்ளியைக் கொடுத்(து விலைக்கு வாங்கி விடுதலை செய்)தவருக்கே வாரிசுரிமை உரியது` என்றார்கள். எனவே, நான் பரீராவை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவள் தன்னுடைய கணவரிடமிருந்து (பிரிந்துவிட) விருப்ப உரிமையளித்தார்கள். அப்போது பரீரா, `அவர் எனக்கு இவ்வளவு இவ்வளவு (செல்வம்) தந்தாலும் நான் அவருடன் சேர்ந்து வாழமாட்டேன்` என்று கூறி தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்தார்.
என அஸ்வத்(ரஹ்) அறிவித்தார்.46
Book :86
பாடம் : 23 (தம்மால் விடுதலையான அடிமைக்கு) வாரிசாகும் உரிமை பெண்களுக்கும் உண்டு.
6759. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விலைக்கு வாங்க ஆயிஷா(ரலி) அவர்கள் விரும்பினார்கள். அப்போது அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் `பரீராவின் எசமானர்கள் வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என்று நிபத்னையிடுகின்றனர்` என்றார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள்`அவளை வாங்கி (விடுதலை செய்து) விடு! ஏனென்றால், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது` என்றார்கள்.
Book : 86
6760. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
வெள்ளியை(க் கிரயமாக)க் கொடுத்து (விலைக்கு வாங்கி, விடுதலை எனும்) பேருபகாரம் செய்தவருக்கே (அடிமைக்கு) வாரிசாகும் உரிமை உண்டு.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :86
பாடம் : 24 ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களைச் சேர்ந்தவனே. ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே!
6761. & 6762. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
`ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களில் உள்ளவனே` என்றோ, `இதைப் போன்றோ`இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.48
Book : 86
பாடம் : 25 (எதிரிகளால்) சிறை பிடிக்கப்பட்டவரின் வாரிசுரிமை.49 (பிரபல நீதிபதி) ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், எதிரிகளின் கையில் சிறைக் கைதியாய் உள்ளவருக்கு வாரிசுரிமை அளித்துவந்தார்கள். மேலும், (மற்றவர்களை விட) அவருக்குத்தான் அ(ந்தச் சொத்)து மிகவும் தேவை என்று கூறுவார்கள். உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சிறைக் கைதியின் மரண சாசனம், அடிமை விடுதலை, தனது செல்வத்தில் அவன் மேற்கொள்ளும் இதரப் பொருளாதார நடிவடிக்கைகள் ஆகியவற்றை, அவன் மதம் மாறாமல் இருக்கும்வரை அனுமதியுங்கள். ஏனெனில், அது அவனது செல்வம்; அதில் தான் விரும்பியவாறு அவன் செயல்படலாம்.
6763. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துவிட்ட) ஒருவர் ஒரு செல்வத்தைவிட்டுச்சென்றால் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) தம் மனைவி மற்றும் மக்களைவிட்டுச்சென்றால் அவர்களைப் பராமரிப்பது (மக்கள் தலைவரான) எம்முடைய பொறுப்பாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.50
Book : 86
பாடம் : 26 ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கோ, ஓர் இறைமறுப்பாளர் ஒரு முஸ்லிமுக்கோ வாரிசாக மாட்டார்.51 (முஸ்லிமான தந்தை இறந்த போது) இறைமறுப்பாளராக இருந்த ஒருவர் சொத்து பங்கிடுவதற்கு முன்பு முஸ்லிமானாலும் அவருக்கு வாரிசுரிமை கிடையாது.52
6764. ` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்.
என உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
Book : 86
பாடம் : 27 கிறிஸ்தவ அடிமை மற்றும் பின்விடுதலை அளிக்கப்பட்ட (முகாதப்) கிறிஸ்தவ அடிமை ஆகியோருக்கு வாரிசாகும் உரிமை யாருக்கு உண்டு என்பது பற்றியும், (தமக்குப் பிறந்த குழந்தையை) தம்முடையதல்ல" என்று மறுப்பவருக்குரிய பாவம் பற்றியும்.54 பாடம் : 28 (ஒருவர் மற்றொருவரை) சகோதரன் என்றோ, சகோதரன் மகன் என்றோ வாதிடுவது.
6765. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு அபீ வாக்கஸ்(ரலி) அவர்களும் அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்களும் ஒரு சிறுவன் (யாருடைய மகன் என்பது) ஸஅத்(ரலி) அவர்கள், `இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரர் உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களின் மகன், இவன் தம் மகன் (எனவே இவனைப் பிடித்து வர வேண்டும்) என்று அவர் என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார். இவனுடைய சாயலை (நீங்களே) பாருங்கள்!` என்று கூறினார்கள்.
அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள், `இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரன், என் தந்தையின் படுக்கையில் அவரின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்`எ ன்று சொன்னார்.
எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறுவனின் சாயலைப் பார்த்தார்கள். உத்பாவின் சாயல் வெளிப்படையாக அமைந்திருககக் கண்டார்கள்.
இருப்பினும், `அப்து இப்னு ஸம்ஆவே! இவன் உனக்கே உரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பே உரியது` என்று கூறிவிட்டு(த் தம் துணைவியரிடம்), `சவ்தா பின்த் ஸம்ஆவே! இவனிடமிருந்து உன்னைத் திரையிட்டு மறைத்துக் கொள்!` என்றார்கள்.
அதற்குப் பறிகு அந்த மனிதர் சவ்தா(ரலி) அவர்களை நேரடியாகப் பார்க்கவில்லை.
Book : 86
பாடம் : 29 வேறொருவரை தன் தந்தை என வாதிடு கின்றவன்.56
6766. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
`தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே - தந்தை என்று வாதிடுகிறவரின் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாம் விடும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்.
Book : 86
6767. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) உபூஉஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் அபூ பக்ரா(ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள் `இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன் என் இதயம் மனனமிட்டுக் கொண்டது` என்றார்கள்.
Book :86
6768. `உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகிறவர் நன்றி கொன்றவராவார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.57
Book :86
பாடம் : 30 ஒரு பெண் தன் மகன் என (ஒருவனை) வாதிட்டால்...
6769. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
(தாவூத்(அலை) அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடன் அவர்களின் புதல்வர்களும் இருந்தனர். (ஒருநாள்) ஓநாய் ஒன்று அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவனைக் கொண்டு சென்றுவிட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம், `உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது` என்று கூற, அதற்கு மற்றவள், `உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது` என்று சொன்னாள். எனவே, இருவரும் தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள். தாவூத்(அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின் மீது கருத்து வேறுபட்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத்(அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்க) புறப்பட்டுச் சென்றார்கள். அன்னாரிடம் விஷயத்தைத் தெரிவித்தார்கள். அப்போது சுலைமான் (அலை) அவர்கள், `என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்` என்று கூறினார்கள். உடனே இளையவள் `அவ்வாறு செய்துவிடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்` என்று (பதறிப்போய்) கூறினாள். எனவே, சுலைமான்(அலை) அவர்கள் `அந்தக் குழந்தை இளையவளுக்கே உரியது` என்று தீர்ப்பளித்தார்கள்.
இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், `அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்றுதான் (கத்திக்கு) `சிக்கீன்` எனும் சொல்லை. (நபியவர்களின் வாயிலாக)ச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) `முத்யா` என்னும் சொல்லைத் தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம்` என்று கூறினார்கள்.58
Book : 86
பாடம் : 31 அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை - பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்.
6770. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் நெற்றிக் கோடுகள் மின்னும் வண்ணம் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, `உனக்குத் தெரியுமா? சற்றுமுன (அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை - பிள்ளையைக் கண்டறியும்) முஜஸ்ஸிஸ், (என் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸாவையும் (அவரின் புதல்வர்) உஸாமா இப்னு ஸைதையும் (அவர்கள் படுத்திருந்தபோது அவர்களின் பாதங்களைப்) பார்த்துவிட்டு `இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது` என்றார்` என்றார்கள்.59
Book : 86
6771. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, `ஆயிஷா! முஜஸ்ஸிஸ் அல்முத்லிஜீ என்னிடம் வந்தார். அப்போது உசாமாவும் (அவரின் தந்தை) ஜைத்கி ஒரு துணியைப் போர்த்தி(க் கொண்டு படுத்து) இருப்பதைக் கண்டார். அவர்களிருவரும் தம் தலையை மூடியிருந்தனர்; (ஆனால்,) அவர்களின் பாதகங்கள் வெளியே தெரிந்தன. அப்போது முஜஸ்ஸிஸ் `இந்தப் பாதங்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானவை` என்றார்` என்றார்கள்.60
Book :86

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.