80. பிரார்த்தனைகள்

பாடம் : 34 (இறைவா) என்னால் எவரேனும் மன வேதனை அடைந்திருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிடுவாயாக என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.
6304. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன்.2
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 80
6305. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
`ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்துவிட்டனர்` அல்லது `ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப் பிரார்த்தனை உண்டு; அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர்.` அது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய வைத்துள்ளேன்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :80
பாடம் : 2 பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது அல்லாஹ் கூறுகின்றான்: (நூஹ் கூறினார்:) நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன். (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அவன் செல்வங்களையும், புதல்வர்களையும் அளித்து உங்களுக்கு உதவி செய்வான்; இன்னும்,உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து) ஓடுமாறு செய்வான். (71:10-12) அல்லாஹ் கூறுகின்றான்: (இறையச்சம் உடையோரான) அவர்கள் (பிறர் விஷயத்தில்) ஏதேனும் ஒரு குற்றம் புரிந்துவிட்டாலோ,தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ (அந்த நிமிடமே மனம் வருந்தி) அல்லாஹ்வை நினைத்துத் தம் பாவங்களுக்காக மன்னிப்புக் கோரு வார்கள். அல்லாஹ்வையன்றி பாவங்களை மன்னிப்பவர் யார்? இன்னும் அவர்கள் அறிந்து கொண்டே, தாம் செய்த(த)வற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள். (3:135)
6306. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
`அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துன}ப இல்லா அன்த்த` என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)
இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 80
பாடம் : 3 பக-லும் இரவிலும் நபி (ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் (உடைய அளவு).
6307. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
`அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் `அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி` என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)3
Book : 80
பாடம் : 4 பாவத்தைக் கைவிட்டு இறைவன் பக்கம் திரும்புவது (தவ்பா).4 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:(66:8ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) தவ்பத்தந் நஸூஹா" எனும் சொற்றொடருக்கு உண்மையான முறையில் தூய்மையான எண்ணத்தோடு (மனப்பூர்வ மாகப் பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல்" என்று பொருள்.
6308. ஹாரிஸ் இப்னு சுவைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மற்றொன்றைக் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:)
1. இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான் - இதைக் கூறியபோது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தங்களின் மூக்குக்கு மேலே (ஈயை) விரட்டுவது போன்று தம் கையால் சைகை செய்தார்கள்.
பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (பின்வருமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச்) சொன்னார்கள்:
2. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் `கடுமையான வெப்பமும் தாகமும்` அல்லது `அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று` ஏற்பட்டது. அவன், `நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்` என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான்.
இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Book : 80
6309. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.5
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
Book :80
பாடம் : 5 வலப் பக்கத்தின் மீது ஒருக்களித்து படுப்பது
6310. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவது வழக்கம். ஃபஜ்ர் (வைகறை) உதயமாம்விட்டால் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள்.
பிறகு பாங்கு சொல்பவர் வந்து தம்மை அழைக்கும் வரை தம் வலப் பக்கத்தின் மீது ஒருக்களித்துப் படுத்திருப்பார்கள்.6
Book : 80
பாடம் : 6 அங்க சுத்தி (உளூ) செய்து கொண்டு இரவில் உறங்குவது.
6311. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு, `அல்லாஹும்ம அஸ்லகித்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வளத்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த` என்று ஓதிக்கொள். (பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பி வைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன். (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில் நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப்பேச்சாக ஆக்கிக்கொள்.
இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
`நான் இவற்றைத் திரும்ப ஓதிக்காட்டுகிறேன்` என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். (`நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்` என்பதற்கு பதிலாக) `நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்` என்று நான் சொல்லிவிட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள், `இல்லை; `நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்` என்று சொல்` என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள்.7
Book : 80
பாடம் : 7 உறங்கச் செல்லும் போது ஓத வேண்டியது
6312. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, `பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா` ( (இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) எழும்போது `அல்ஹம்து லில்லாஹில்தீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்` (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.
Book : 80
6313. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒருவருக்கு அறிவுரை கூறினார்கள். அப்போது `நீ படுக்கைக்குச் செல்ல நினைத்தால், `அல்லாஹும்ம அஸ்லகித்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வளத்து அம்ரீ இலைக்க. வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த, வபி நபிய்யக்கல்லதீ அர்சல்த்த` என்று ஓதிக்கொள். (பொருள்: இறைவா! உனக்கு நான் அடிபணிந்தேன். என்னுடைய காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய முகத்தை உன்னை நோக்கித் திருப்பினேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னை சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலாலும் (அதே நேரத்தில்) உன் மீதுள்ள அச்சத்தாலும் (இதை நான் செய்கிறேன்.) உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை நீ அருளிய உன்னுடைய வேதத்தையும் நீ அனுப்பி வைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்) (இவ்வாறு பிரார்த்தனை செய்து நீ உறங்கி அன்றைய இரவில்) நீ இறந்துவிட்டால், (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய்` என்றார்கள்.8
Book :80
பாடம் : 8 வலக் கன்னத்திற்குக் கீழே வலக் கையை வைத்(து உறங்கு)தல்.
6314. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்கு உறங்கச் சென்ற பின்னால் தம் (வலக்) கையைத் தம் (வலக்) கன்னத்திற்குக் கீழே வைத்துக் கொள்வார்கள். பிறகு, `அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா` (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து எழும்போது `அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வஇலைஹிந் நுஷூர்` (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.9
Book : 80
பாடம் : 9 வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவது
6315. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால், வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவார்கள். பிறகு, `அல்லாஹும்ம அஸ்லமத்து நஃப்ஸீ இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஸீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரி இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன் ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த` என்று ஓதுவார்கள். (பொருள்: இறைவா! உனக்கு நான் அடிபணிந்தேன். என்னுடைய முகத்தை உன்னை நோக்கித் திரும்பினேன். என்னுடைய காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலாலும் (அதே நேரத்தில்) உன் மீதுள்ள அச்சத்தாலும் (இதை நான் செய்கிறேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன் வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன் நபியையும் நான் நம்பினேன்) மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் `இவற்றைக் கூறிவிட்டு அன்னைறய இரவே இறந்துவிடுகிறவர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்` என்று கூறினார்கள்.
Book : 80
பாடம் : 10 இரவில் (இடையே) விழிக்கும் போது ஓதவேண்டியது.
6316. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள்.
பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப் பக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள் பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால்(ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக் கொண்டிருந்தார்கள். `அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன். (பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார்.
(உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.
Book : 80
6317. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹ்ஜ்ஜுத் (எனும் இரவுத் தொழுகை) தொழுவதற்காக இரவில் எழுந்ததும் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்வார்கள்:
அல்லாஹும்ம! லக்கல் ஹம்து, அன்த்த நூருஸ் ஸமாவாத்தி, வல் அர்ளி, வமன் ஃபீஹின்ன. வ லக்கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி வல் அர்ளி வ மன்ஃபீஹின்ன வ லக்கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்க ஹக்குன். வ வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வஸ்ஸாஅத்து ஹக்குன். வந் நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் ஹக்குன். அல்லாஹும்ம! லக்க அஸ்ஸகித்து. வ அலைக்க தவக்கல்த்து. வபிக்க ஆமன்த்து. வ இலைக்க அனப்த்து. வ பிக்க காஸகித்து. வ இலைக்க ஹாக்ககித்து. ஃபஃபக்ஃபிர்லீ மா கத்தகித்து, வமா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. `லா இலாஹ இல்லா அன்த்த` அல்லது `லா இலாஹ ஃகைருக்க.
(பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றி உள்ளவர்களின் ஒளி ஆவாய். உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களை நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும், நீ உண்மையானவன். உன் வாக்கு உண்மையானது. உன்னுடைய கூற்று உண்மை. உன்னுடைய தரிசனம் உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமைநாள் உண்மை நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையானவர்கள். முஹம்மத்(ஸல்) அவர்கள் உண்மையானவர்கள். இறைவா! உனக்கே அடிபணிந்தேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன். உன்னிடம் நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக. நீயே (என்னை மறுமையில்) முதலில் எழுப்புகிறவன். நீயே (என்னை இம்மையில்) இறுதியில் அனுப்பியவன். `உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை` அல்லது `உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.)
Book :80
பாடம் : 11 உறங்கப் போகும் போது அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்) என்றும் கூறுவது.
6318. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
(என் துணைவியார்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார். இது தொடர்பாக நபியவர்களிடம் தெரிவிக்கும் படி கூறினேன்.ன எனவே, ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி(ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அப்போது வீட்டில் இல்லாததால் ஆயிஷா(ரலி) அவர்களிடம் அது பற்றிக் கூறி(விட்டுத் திரும்பலா)னார்கள். நபி(ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா(ரலி) அவர்கள் விஷயத்தை தெரிவித்தார்கள்.
உடனே நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள், `(எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்` என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்தார்கள். அப்போது (என்னைத் தொட்டுக் கொண்டிருந்த) அவர்களின் பாதங்களின் குளிர்ச்சியை என்னுடைய நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.) `பணியாளரைவிட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் `படுக்கைக்குச் சென்றதும்` அல்லது `விரிப்புக்குச் சென்றதும்` அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும், அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். இது பணியாளைவிட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும். என்றார்கள்.
இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் `சுப்ஹானல்லாஹ் என முப்பத்து நான்கு முறை கூற வேண்டும்` என்று அறிவித்தார்கள்.
Book : 80
பாடம் : 12 உறங்கப் போகும் போது இறைவனிடம் பாதுகாப்புக் கோருவதும் (குர்ஆன் அத்தியாயங்களை) ஓதுவதும்.
6319. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் இறைப் பாதுகாப்புக் கோரும் (112, 113, 114 ஆகிய மூன்று) அத்தியாயங்களை தம் மேனியில் தடவிக் கொள்வார்கள்.
Book : 80
பாடம் : 13
6320. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்:
பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.
(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.
Book : 80
பாடம் : 14 நள்ளிரவில் பிரார்த்திப்பது
6321. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
சுபிட்சமும் உயர்வும் உடைய நம் இறைவன் ஒவ்வோர் இரவும் கீழ் வானிற்கு இறங்கி இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது, `என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரின் பிரார்த்தனையைநான் அங்கிகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்` என்று கூறிகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 80
பாடம் : 15 கழிவறைக்குச் செல்லும் போது ஓத வேண்டிய பிரார்த்தனை.
6322. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது `அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி` என்று கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
Book : 80
பாடம் : 16 அதிகாலையில் ஓத வேண்டிய பிரார்த்தனை
6323. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
`அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. ல இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்ததஅத்து, அபூ உ லக்க பி நிஅமத்திக்க, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃபக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக் ஃபிருத் துன}ப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி ஸனஅத்து` என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும்.
(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
மாலை நேரத்தில் ஒருவர் இதைச் சொல்லிவிட்டு (அன்று மாலையே) அவர் இறந்தால் அவர் (சொர்க்கம் செல்வார்` அல்லது சொர்க்கவாசியாவார்` காலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு அன்று பகலிலேயே இறந்தால் அதே போன்றுதான் (அவரும் சொர்க்கம் செல்வார்)
என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 80
6324. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உறங்க விரும்பினால் `பிஸ்மிக்கல்லாஹும்ம அமூத்து வ அஹ்யா (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்)` என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து எழுகிறபோது, `அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர் (அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.) என்று கூறுவார்கள்.
Book :80
6325. அபூ தர் அல்கிஃபாரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது `அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா` (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன். உயிர் வாழவும் செய்கிறேன்)` என்று கூறுவார்கள். (உறக்கத் திலிருந்து விழிக்கும்போது, `அல்ஹம்து லில்லாஹில் லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நூஷூர் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்து பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.) என்று கூறுவார்கள்.
Book :80
பாடம் : 17 தொழுகையில் ஓதும் பிரார்த்தனை
6326. அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அறிவித்தார்.
`தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓதவேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்கக் கற்றுத் தாருங்கள்` என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அப்போது `அல்லாஹும்ம இன்னீ ழலகித்து நஃப்ஸீ ழல்மன் கஸீரன். வலா யஃக்ஃபிருத் துன}ப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃஹ்பிரத்தம் மின் இந்திக்க வர்ஹம்னீ. இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்` என்று கூறுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். (பொருள்: இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறெவராலும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன்னிடமிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! மேலும், எனக்குக் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனுமாவாய்.)
Book : 80
6327. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
`மேலும், உங்கள் தொழுகையில் உங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடியுங்கள்` எனும் (திருக்குர்ஆன் 17:110 வது) வசனம் பிரார்த்தனை (துஆ ஓதுவது) குறித்தே அருளப்பெற்றது.
Book :80
6328. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் தொழுகையில் (அமர்வில்) `அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலாஃபுலான்` (அல்லாஹ்வுக்கு சாந்தியுண்டாகட்டும்; இன்னாருக்கு சாந்தியுண்டாகட்டும்) என்று கூறிவந்தோம். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம், `நிச்சயமாக அல்லாஹ்வே `சலாம்` (சாந்தியளிப்பவன்) ஆவான். எனவே, நீங்கள் தொழுகையில் (இருப்பில்) அமர்ந்தால், `அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ் ஸலாவாத்து வத்தய்யிப் பாத்து. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக் காத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி உண்டாகட்டும்)` என்று கூறுங்கள். இவ்வாறு நீங்கள் கூறினாலே வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறினார்கள் எனம். மேலும், `அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லால்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்)` என்றும் கூறுங்கள். பிறகு உங்களுக்கு விருப்பமான இறைத் துதிகளைக் கூறலாம்` என்றார்கள்.
Book :80
பாடம் : 18 தொழுகைக்குப் பின்னால் ஓதும் பிரார்த்தனை.
6329. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மக்கள் (சிலர்), `இறைத்தூதர் அவர்களே! வசதி படைத்தோர் (உயர்) அந்தஸ்துகளையும் (சொர்க்கத்தின்) நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர்` என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், `அது எவ்வாறு?` என்று கேட்டார்கள். `(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். (அறவழியில்) நாங்கள் போரிடுவதைப் போன்றே அவர்களும் போரிடுகின்றனர். தங்களின் அதிகப்படியான செல்வங்களை (நல்வழியில்) செலவிடுகின்றனர். ஆனால், (அவ்வாறு செலவிட) எங்களிடம் பொருள்களேதும் இல்லையே?` என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். இதைப் போன்று செய்தால் தவிர, வேறு எவரும் நீங்கள் செய்ததற்கு நிகராகச் செய்திட முடியாது. (அது யாதெனில்) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பத்துமுறை `சுப்ஹானல்லாஹ்` (அல்லாஹ் தூயவன்) என்றும், பத்து முறை `அல்ஹம்து லில்லாஹ்` எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும், பத்து முறை `அல்லாஹுஅக்பர்` (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்றும் கூறுங்கள்` என்றார்கள்.
இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Book : 80
6330. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான வர்ராத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்கள் முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சலாம் கொடுத்தவுடன் (பின்வருமாறு) கூறுவார்கள்.
லா இலாஹ இல்லால்லாஹு வஹ்தஹு. லா ஷரீக்க லஹு லஹுல் முல்க்கு. வ லஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஉதைத்த வலா முஉத்திய லிமா மனஅத்த வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்.
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன். எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்திலும் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. எச்செல்வரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது.)
இன்னும் சில அறிவிப்பாளர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
Book :80
பாடம் : 19 மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டி)ப் பிரார்த்தியுங்கள் எனும் (9:103ஆவது) இறைவசனமும்,ஒருவர் தமக்காக அல்லாமல் தம் சகோதரருக்காகப் பிரார்த்திப்பதும். அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள், இறைவா! அபூஆமிர் உபைதுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! இறைவா! அப்தில்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னிப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்.22
6331. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காகப்) புறப்பட்டுச சென்றோம். அப்போது மக்களில் ஒருவர், (என் தந்தையின் சகோதரரிடம்), `ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களுக்குக் கேட்கச் செய்யமாட்டீர்களா?` என்று கூறினார். உடனே (கவிஞர்) ஆமிர்(ரலி) அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதைகளைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். `அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்` என்று (தொடங்கும் பாடல்களைப்) பாடினார்கள்.
அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அவர்கள் இஃதல்லாத மற்றொரு கவிதையையும் குறிப்பிட்டார்கள் ஆனால், நான் அதை மனனம் செய்யவில்லை.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `யார் இந்த ஒட்டகவோட்டி?` என்று கேட்டார்கள். மக்கள், `ஆமிர் இப்னு அக்வஃ` என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!` என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!` என்று கூறினார்கள். (இந்தப் பிரார்த்தனையின் பொருள் புரிந்த) மக்களில் ஒருவர், `இறைத்தூதர் அவர்களே! அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா?` என்று கேட்டார். பிறகு மக்கள் அணிவகுத்து நின்று எதிரிகளுடன் போரிட்டனர். அப்போது தம் வாளின் மேற்பகுதியினாலேயே (முழங்காலில்) காயமேற்பட்டு ஆமிர்(ரலி) அவர்கள் இறந்தார்கள்.
(கைபர் வெற்றிகொள்ளப்பட்ட அன்று) மாலையில் மக்கள் அதிகமான நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டியிருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `இது என்ன நெருப்பு? எதற்காக இதை மூட்டியிருக்கிறீர்கள்?` என்று கேட்டார்கள். `நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைச் சமைப்பதற்காக` என்று மக்கள் பதிலளித்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `பாத்திரங்களில் உள்ளவற்றைக் கொட்டிவிட்டு அந்தப் பாத்திரங்களை உடைத்து விடுங்கள்` என்று கூறினார்கள்.
ஒருவர், `இறைத்தூதர் அவர்களே! பாத்திரங்களில் உள்ளவற்றைக் கொட்டிவிட்டுப் பாத்திரங்களைக் கழுவி(வைத்து)க் கொள்ளலாமா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், `அப்படியே ஆகட்டும்` என்று பதிலளித்தார்கள்.
Book : 80
6332. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
யாரேனும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஸகாத் பொருளைக் கொண்டு வந்தால் `இறைவா! இன்னாரு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!` என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பது வழக்கம். என் தந்தை (அபூ அவ்ஃபா(ரலி) அவர்கள்) தம் ஸகாத்தை நபி(ஸல்) அவர்கள், `இறைவா! அபூ அவ்ஃபாவு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!` என்று பிரார்த்தித்தார்கள்.
Book :80
6333. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், என்னிடம், `துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா? என்று கேட்டார்கள். துல்கலஸா என்பது, (அறியாமைக் காலத்திலிருந்து) ஒரு பலிபீடமாகும். அதனை மக்கள் வழிபட்டு வந்தனர். அது `யமன் நாட்டு கஅபா` என அழைக்கப்பட்டுவந்தது. நான், `இறைத்தூதர் அவர்களே! குதிரையில் நான் சரியாக உட்கார முடியாதவனாக இருக்கிறேன்` என்று கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்துவிட்டு, `இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக. இது வரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக` என்று பிரார்த்தித்தார்கள்.
இதையடுத்து என் சமுதாயத்தாரான `அஹ்மஸ்` குலத்தாரில் ஐம்பது பேருடன் நான் (துல்கலஸா நோக்கிப்) புறப்பட்டேன்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: `என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினருடன் நான் நடந்தேன்` என்று சுஃப்யான்(ரஹ்) அவர்கள் சில நேரங்களில் அறிவித்தார்கள்:
பிறகு, நான் `துல்கலஸா` சென்று அந்த பலிபீடத்தை எரித்துவிட்டேன். பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அ(ந்தப் பலிபீடத்)தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று ஆக்கிவிட்டுத்தான் தங்களிடம் நான் வந்துள்ளேன்` என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், (என்) `அஹ்மஸ்` குலத்தாருக்காகவும் அவர்களின் குதிரைகளுக்காகவும் (வளர்ச்சி) வேண்டிப் பிரார்த்தித்தார்கள்.
Book :80
6334. அனஸ்(ரலி) கூறினார்:
(என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், `அனஸ் தங்களின் சேவகர். (அவருக்காகப் பிரார்த்தியுங்கள்)` என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ்வே, அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியவற்றில் வளத்தை அளிப்பாயாக!` என்று பிரார்த்தித்தார்கள்.
Book :80
6335. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ் அவருக்குக் கருணை புரிவானாக! இன்ன இன்ன அத்தியாயங்களில் நான் மறந்தவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவுபடுத்திவிட்டார்` என்றார்கள்.
Book :80
6336. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.
(ஒரு நாள்)நபி(ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்டார்கள். அப்போது ஒருவர், `நிச்சயமாக இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்` என்று (அதிருப்தியுடன்) அறிவித்தார். (அதை) நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். (அதைக் கேட்ட போது) நபி(ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அவர்களின் முகத்தில் நான் அக்கோபத்தைக் கண்டேன். (அப்போது) அவர்கள், `(இறைத்தூதர்) மூஸா அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதைவிட அதிகமாக அவர்கள் புண்படுத்தப் பட்டார்கள். இருப்பினும், சகித்துக் கொண்டார்கள்` என்றார்கள்.
Book :80
பாடம் : 20 எதுகைமோனையுடன் (அலங்கார ஒ- நயத்துடன்) பிரார்த்திப்பது வெறுக்கப்பட்ட தாகும்.29
6337. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
வாரத்தில் ஒரு முறை மக்களுக்கு உரை நிகழ்த்துங்கள். (அது போதாது எனக் கருதி) அதற்கு நீங்கள் மறுத்தால் (வாரத்தில்) இரண்டு முறை உரை நிகழ்த்துங்கள். அதை விட அதிகமாகப் போனால் மூன்று முறை உரை நிகழ்த்துங்கள். (அதை விட அதிகமாகப் போய்) இந்தக் குர்ஆன் மீது மக்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடாதீர்கள்.
மக்கள் எதையோ பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் அவர்களிடம் சென்று உரையாற்ற, அதையடுத்து அவர்களின் பேச்சு தடைபட்டுவிட, அதனால், அவர்களை நீங்கள் சோர்வடையச் செய்கிற நிலையில் உங்களை நான் காணக் கூடாது. மாறாக, நீங்கள் (அப்போது) மெளனமாக இருங்கள். அவர்களாக விரும்பி உங்களைக் கேட்டுக் கொண்டால் அவர்களிடையே உரையாற்றுங்கள். எதுகைமோனையுடன் பிரார்த்திப்பதைக் கவனமாக இருந்து தவிர்த்து விடுங்கள். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இவ்வாறு செய்வதிலிருந்து தவிர்ந்திருக்கவே நான் கண்டுள்ளேன்.
Book : 80
பாடம் : 21 கேட்பதை வ-யுறுத்திக் கேட்க வேண்டும். (இது, இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை யாராலும் நிர்ப்பந்திக்க முடியாது.
6338. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். `அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு` என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 80
6339. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக` என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :80
பாடம் : 22 அவசரப்படாத வரையில் அடியானின் பிரார்த்தனை ஏற்கப்படும்.
6340. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
`நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை` என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 80
பாடம் : 23 பிரார்த்திக்கும் போது கைகளை உயர்த்துவது அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தையின் சகோதரர் அபூஆமிர் கொல்லப்பட்ட சமயம்) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் இரு கைகளையும் உயர்த்தினார்கள். அப்போது அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நான் கண்டேன்.30 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தியவாறு, இறைவா! கா-த் செய்த தவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என உன்னிடம் நான் அறிவிக்கிறேன் என்று கூறினார்கள்.31
6341. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது) அவர்களின் அக்குள்களின் வெண்மையை நான் காணும் அளவுக்கத் தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள்.
Book : 80
பாடம் : 24 கிப்லாவை முன்னோக்காமல் பிரார்த்திப்பது
6342. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஒரு) வெள்ளிக் கிழமையன்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து, `இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்றார். நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனைக்குப் பின்) மேகமூட்டம் உண்டாம் மழை பொழிந்தது. எந்த அளவிற்கென்றால், அந்த மனிதரால் தம் வீட்டுக்குப் போய்ச் சேர முடியவில்லை. அடுத்த வெள்ளிக்கிழமை வரை மழை நீடித்தது. (அந்த வெள்ளிக்கிழமை) `அதே மனிதர்` அல்லது `வேறொருவர்` எழுந்து, `மழையை வேறு பக்கம் திருப்பிவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். (கன மழையினால்) நாங்கள் நீரில் மூழ்கிவிட்டோம்` என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `இறைவா! (இந்த மழையை) எங்கள் சுற்றுவட்டாரங்களுக்குத் திருப்பிவிடுவாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே` என்று பிரார்த்தித்தார்கள். அந்த மேகம் கலைந்து மதீனாவின் சுற்றுப் புறங்களுக்குச் சென்றது மதினாவாசிகளுக்கு மழை பொழியவில்லை. அந்த மேகம் கலைந்து மதீனாவின் சுற்றுப் புறங்களுக்குச் சென்றது. மதீனாவாசிகளுக்கு மழை பொழியவில்லை.
Book : 80
பாடம் : 25 கிப்லாவை முன்னோக்கியவாறு பிரார்த்திப்பது
6343. அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க இந்தத் தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டார்கள். (இங்கு வந்து) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கி, தம் மேல்துண்டை (இடம் வலமாக) மாற்றிப் போட்டார்கள்.
Book : 80
பாடம் : 26 நபி (ஸல்) அவர்கள் தம் சேவகரின் நீண்ட ஆயுளுக்காகவும் நிறைந்த செல்வத்திற் காகவும் பிரார்த்தித்தது.
6344. அனஸ்(ரலி) அறிவித்தார்.
என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், `இறைத்தூதர் அவர்களே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள்` என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ள (ஆயுள் முதலான) வற்றில் வளம் சேர்ப்பாயாக!` என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 80
பாடம் : 27 துன்பம் நேரும் போது பிரார்த்திப்பது
6345. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது `லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்` என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)
Book : 80
6346. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது, `லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்` என்று ஓதுவார்கள். (பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)
Book :80
பாடம் : 28 தாங்க முடியாத சோதனையிலிருந்து பாதுகாப்புக் கோருவது.
6347. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த அறிவிப்பில் மூன்று மட்டுமே உள்ளது. நான்தான் ஒன்றை அதிகபட்சமாக அறிவித்துள்ளேன். இவற்றில் அது எதுவென எனக்குத் தெரியவில்லை. (மறந்துவிட்டேன்.)
Book : 80
பாடம் : 29 இறைவா! உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்திடுவாயாக) என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.
6348. ஆயிஷா(ரலி) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, `சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்துவிட்டுப் பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பு வழங்கப்படாத வரையில் எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை` என்று கூறுபவர்களாயிருந்தார்கள்.
பின்னர் அவர்களின் தலை என்னுடைய மடிமீதிருக்க அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் சிறிது நேரம் மயக்கமுற்றார்கள். பிறகு அவர்களின் மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலைகுத்தி நின்றது. பின்னர் `இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)` என்று பிரார்த்தித்தார்கள். அப்போது நான் `அப்படியானால், நம்முடன் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. (மறுமை வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.)` என்று (மனத்திற்குள்) சொல்லிக் கொண்டேன். மேலும், அவர்கள் ஆரோக்கியமாக இருந்தபோது (இறைத்தூதர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று) அவர்கள் நமக்கு அறிவித்த செய்தி இதுதான் என நான்புரிந்து கொண்டேன். `இறைவா! உயர்ந்த நண்பர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)` என்பதே நபி(ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தையாக இருந்தது.
இதை அறிஞர்கள் பலருக்கு முன்னால் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) ஆகியோர் அறிவித்தனர்.
Book : 80
பாடம் : 30 வாழ்வையும் சாவையும் வேண்டிப் பிரார்த்திப்பது.
6349. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்களிடம் (அவர்களை உடல் நலம் விசாரிக்கச்) சென்றேன். அவர்கள் (கடும் வயிற்று வலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத் தம் வயிற்றில்) ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் `மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால் மரணத்தை வேண்டி நான் பிரார்த்தனை செய்திருப்பேன்` என்று கூறினார்கள்.
Book : 80
6350. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்களிடம் (அவர்களை உடல் நலம் விசாரிக்கச்) சென்றேன். அவர்கள் (கடும் வயிற்று வலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத்) தம் வயிற்றில் ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது `மரணத்தை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால் நான் மரணத்தை வேண்டிப் பிரார்த்தித்திருப்பேன்` என்று அவர்கள் கூறியதைச் செவியேற்றேன்.
Book :80
6351. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
உங்களில் எவரும் தமக்க நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆகவேண்டும் என்றிருந்தால், `இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!` என்று கேட்கட்டும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :80
பாடம் : 31 சிறுவர்களுக்காகச் சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்திப்பதும் அவர்களுடைய தலையை (அன்புடன்) தடவிக்கொடுப்பதும். அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்: எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்காகச் சுபிட்சம் வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.39
6352. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, `இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது` என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பரும்னேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.
Book : 80
6353. அபூ அக்கீல் ஸுஹ்ரா இப்னு மஅபத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
என் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அவர்கள் `சந்தையிலிருந்து) அல்லது `சந்தைக்கு` என்னை அழைத்துச் சென்று உணவுப் பொருள் வாங்குவார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களும் அன்னாரைச் சந்தித்து `எங்களையும் (உணவு வியாபாரத்தில் கூட்டுச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் உங்களுக்காகச் சுபிட்சம் வேண்டிப் பிரார்த்தித்துள்ளார்கள்` என் பாட்டனாரும் அவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொள்வார்கள். சில வேளைகளில் ஒரு முழு ஒட்டகம் (சுமக்கும் அளவுக்கு உணவுப் பொருள்கள்) அப்படியே அவர்களுக்கு (இலாபமாக)க் கிடைக்கும். அதை (தம்) வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.
Book :80
6354. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.
நான் (நான்கு அல்லது ஐந்து வயது) சிறுவனாக இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் (பரக்கத்திற்காக) உமிழ்ந்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.
Book :80
6355. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டு வரப்படுவதுண்டு. அப்போது குழந்தைகளுக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் தெளித்தார்கள். (அதிகமாகத் தண்ணீர் ஊற்றி) அதனைக் கழுவவில்லை.
Book :80
6356. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு ஸஅலபா இப்னி ஸுஐர்(ரலி) அவர்கள் (சிறுவராக இருந்தபோது மக்கா வெற்றி ஆண்டில் அவர்கள்) உடைய கண்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அன்போடு) தடவிக் கொடுத்தார்கள். அன்னார், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் ஒரு ரக்அத் `வித்ர்` தொழுததைத் தாம் பார்த்ததாகக் கூறினார்கள்.
Book :80
பாடம் : 32 நபி (ஸல்) அவர்களுக்காக (ஸலவாத்" ஓதி)ப் பிரார்த்திப்பது.
6357. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிலைலா(ரஹ்) அவர்கள் கூறினார்:
கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, `உங்களுக்கு ஓர் அன்பளிப்பை வழங்கட்டுமா?` என்று கேட்டுவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்.
(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே வந்தபோது நாங்கள் `இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு எவ்வாறு நாங்கள் `சலாம்` உரைக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளோம். ஆனால், தங்களின் மீது நாங்கள் எவ்வாறு `ஸலவாத்` கூறவேண்டும்?` என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்` என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கும் கருணை புரிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ சுபிட்சத்தை வழங்கியதைப் போன்று முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கும் சுபிட்சம் வழங்கிடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய்.)
Book : 80
6358. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள், `இறைத்தூதர் அவர்களே! இது தங்களின் மீது சலாம் கூறும் முறையாகும். (தொழுகையில் ஓதப்படும் `அத்தஹிய்யாத்` மூலம் இதை நாங்கள் அறிவோம்.) ஆனால், நாங்கள் (தங்களுக்கு) `ஸலவாத்` சொல்வது எப்படி? என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம` என்று கூறுங்கள் என்றார்கள்.
பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களின் மீது அருள் புரிந்ததைப் போன்று உன் அடியாரும் உன் தூதருமான முஹம்மத்(ஸல்) அவர்களின் மீதும் அருள் புரிவாயாக! இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்கிடுவாயாக!)
Book :80
பாடம் : 33 நபி (ஸல்) அவர்கள் அல்லாத மற்றவர்களுக் காக ஸலவாத்" கூறலாமா? அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) அவர்களுக்காக ஸலவாத்" கூறுவீராக! (பிரார்த்தனை செய்வீராக!) நிச்சயமாக உங்களுடைய பிரார்த்தனை அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். (9:103)
6359. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
யாரேனும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஸகாத் பொருளைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹும்ம ஸல்லி அலைஹி (இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக)` என்று பிரார்த்திப்பது வழக்கம். (அவ்வாறு) என் தந்தை அபூ அவ்ஃபா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் தம் ஸகாத் பொருளைக் கொண்டுவந்தபோது, `அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி அபீ அவ்ஃபா` (இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தாருக்குக் கருணை புரிவாயாக)` என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 80
6360. அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள், `அல்லாஹ்வின்தூதரே! தங்களின் மீது நாங்கள் எப்படி `ஸலவாத்` சொல்ல வேண்டும்?` என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்` என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கும் கருணை புரிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ சுபிட்சத்தை வழங்கியதைப் போன்று முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கும் சுபிட்சம் வழங்கிடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய்.)
Book :80
பாடம் : 1 ஆரோக்கியம் மற்றும் ஓய்வு குறித்தும் மறுமையின் வாழ்வைத் தவிர வேறு (நிலையான) வாழ்வில்லை என்பது குறித்தும் வந்துள்ளவை.
6361. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், `இறைவா! நான் எந்த இறைநம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) ஏசியிருந்தால், அதையே மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றிவிடுவாயாக!` என்று கூறியதை செவியுற்றேன்.
இதை ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.
Book : 80
பாடம் : 35 சோதனைகளிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.
6362. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபித்தோழர்கள் (சிலர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, `(நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.) இன்று நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவு படுத்தாமல் இருக்கப்போவதில்லை` என்றார்கள். அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொரு வரும் தம்தம் ஆடையால் தம் தலைகளைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஒருவர் தம் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என தாம் அழைக்கப்படுவது குறித்துச் சிலருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர், `இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?` என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `ஹுதாஃபா (தாம் உன் தந்தை)` என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் சாந்த முகத்தில் கோபத்தின் ரேகை படர்வதைக் கண்ட) உமர்(ரலி) அவர்கள், `நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்` என்று கூறலானார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் நான் ஒருபோதும் கண்டதில்லை. எனக்கு சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்த சுவருக்கு அப்பால் கண்டேன்` என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.)
இந்த நபிமொழியை அறிவிக்கும்போது கத்தாதா(ரஹ்) அவர்கள் `இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (ஏனெனில்) அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால், உங்களுக்கு மனவருத்ததை ஏற்படுத்தும்` எனும் (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனத்தைக் குறிப்பிடுவார்கள்.
Book : 80
பாடம் : 36 மனிதர்களின் அடக்கு முறையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.
6363. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம், `உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடி (அழைத்து) வாருங்கள். (நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்)` என்று கூறினார்கள் எனவே, அபூ தல்ஹா(ரலி) அவர்கள் என்னை வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு (கைபரை நோக்கிப்) புறப்பட்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வழியில்) தங்கும்போதெல்லாம் அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்` என்று அதிகமாகப் பிரார்த்திப்பதை செவிமடுத்துவந்தேன். (பொருள்: இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
கைபரிலிருந்து (மதீனாவுக்குத்) திரும்பும் வரை அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து கொண்டிருந்தேன். (அப்போரில் கிடைத்த போர்ச் செல்வங்களில் தமக்கரிய பங்கிற்காக) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களைப் பெற்று (மணந்து) கொண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றி ஒரு துணியைக் கட்டியதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அதில் தமக்குப் பின்னால் ஸஃபிய்யா(ரலி) அவர்களை அமர்த்திக் கொண்டார்கள். (அந்தப் பயணத்தில்) நாங்கள் `சத்துஸ் ஸஹ்பா` எனுமிடத்தை அடைந்தபோது ஒரு தோல் விரிப்பில் (பேரீச்சம்பழம், பாலாடை, நெய் ஆகியவற்றைக் கலந்து) `ஹைஸ்` எனும் பலகாரத்தைத் தயாரித்தார்கள். பிறகு (மணவிருந்துக்கு மக்களை அழைப்பதற்காக) என்னை அனுப்பி வைத்தார்கள். எனவே, நான் மக்களை அழைத்தேன். அவர்களும் (வந்து வலீமா விருந்து) உண்டனர். அதுதான் ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கிய நிகழ்ச்சியாக அமைந்தது.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் (மதீனா நோக்கி) வந்து கொண்டிருந்தபோது `உஹுத்` மலை அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் `இந்த சிறிய மலை நம்மை நேசிக்கின்றது. நாமும் அதனை நேசிக்கிறோம்` என்றார்கள். பிறகு மதீனாவைப் பார்த்தபோது, `இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனித(நகர)மாக அறிவித்ததைப் போன்று இந்த இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியைப் புனித(நகர)மாக அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் (அளவைகளான) `முத்(து)` மற்றும் `ஸாஉ` ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக` என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 80
பாடம் : 37 மண்ணறையின் (கப்றின்) வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.
6364. உம்மு காலித் பின்த் காலித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை செவியுற்றேன்.
(இதன் அறிவிப்பாளர்களின் ஒருவரான) மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நபி(ஸல்) அவர்களிடமிருந்து உம்மு காலித்(ரலி) அவர்களைத் தவிர வேறெருவரும் இந்த நபிமொழியைக் கூற நான் கேட்டதில்லை.
Book : 80
6365. முஸ்அப் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(என் தந்தை) ஸஅத் இப்னு ஆபீ வாக்காஸ்(ரலி) அவர்கள் ஐந்து விஷயங்களிலிருந்து பாதுகாப்புக் கோரும்படி கூறி, நபி(ஸல்) அவர்கள் அந்த ஐந்து விஷயங்களையும் குறிப்பிட்டு அவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு கட்டளையிட்டுவந்தார்கள் என்று கூறுவார்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க அக் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊ பிக்க மிக் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற்.
(இறைவா! உன்னிடம் நான் கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக்கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்)` இம்மையின் சோதனையென்பது தஜ்ஜாலின் சோதனையைக் குறிக்கிறது.
Book :80
6366. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) `மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்` என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், `இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், `இருவரும் உண்மையே சொன்னார்கள். (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)தனை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன` என்றார்கள். அதற்குப் பின் நபி(ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.
Book :80
பாடம் : 38 வாழ்வு மற்றும் சாவின் சோதனைகளிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.
6367. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் `அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்ஹரம். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மாமத்` என்று பிரார்த்தித்து வந்தார்கள்.
(பொருள்: இறைவா! இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
Book : 80
பாடம் : 39 பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.
6368. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் கஸலி வல்ஹரமி வல்மஃஸமி வல் மஃக்ரமி, வ மின் ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்திந் நாரி வஅதாபிந் நாரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃம்னா. வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக்ஸில் அன்னீ கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்ககைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப்` என்று பிரார்த்தித்து வந்தார்கள்.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக)
Book : 80
பாடம் : 40 கோழைத்தனத்திலிருந்தும் சோம்ப-லிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவது.
6369. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல்அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்புக்லி, வளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்` எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.
(பொருள்: இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
Book : 80
பாடம் : 41 கருமித்தனத்திலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல். (கருமித்தனம் என்பதை) புக்ல்" மற்றும் பகல்" என (இரு முறைகளிலும்) கூறலாம். இது (சொல் வடிவத்தில்) ஹுக்ஷ்ஸ்ன்" மற்றும் ஹக்ஷ்ஸன்" (கவலை) போன்றுள்ளது.
6370. முஸ்அப் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் இந்த ஐந்து விஷயங்களிலிருந்தும் பாதுகாப்புக் கோருமாறு கூறி, அவற்றை நபி(ஸல்) அவர்கள் தெரிவித்ததாகக் கூறுவார்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். (பொருள்: இறைவா! உன்னிடம் நான் கருமித் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
Book : 80
பாடம் : 42 தள்ளாத வயதிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல். தள்ளாமை" என்பதை அர்தல்" என்பர். இதற்குத் தாழ்ந்தது" என்று பொருள்.
6371. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருவனவற்றிலிருந்து அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மினல் ஹரமி, வ அஊது பிக்க மினல் புக்ல்.
பொருள்: இறைவா! சோம்பலிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாமையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். கருமித்தனத் திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
Book : 80
பாடம் : 43 கொள்ளைநோய் முதலான நோய்களை அகற்றுமாறு பிரார்த்திப்பது.
6372. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், `இறைவா! மக்கா நகரை எங்கள் நேசத்திற்குரியதாக நீ ஆக்கியதைப் போன்று மதீனாவையும் எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை `ஜுஹ்ஃபா` எனும் பகுதிக்கு நீ இடம்பெயரச் செய்திடுவாயாக! இறைவா! (எங்களுடைய அளவைகளான) ஸாஉ, முத்(து) ஆகியவற்றில் (அதாவது எங்கள் உணவில்) எங்களுக்கு நீ செழிப்பை (பரக்கத்) ஏற்படுத்துவாயாக` என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 80
6373. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
`விடைபெறும்` ஹஜ்ஜின்போது நோயுற்றிருந்த என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நலம் விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்றுவிட்டிருந்தேன். (நபி(ஸல்) அவர்களிடம்) நான், `இறைத்தூதர் அவர்களே! தாங்கள் காண்கிற இ(ந்த நோயான)து எனக்கு வந்திருக்கிறது. இ(ந்த நோயான)து எனக்கு வந்திருக்கிறது. நான் ஒரு செல்வ(ந்த)ன் என் ஒரேயொரு மகளைத் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாக வரமாட்டார்கள். எனவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `(அந்த அளவு) வேண்டாம்` என்றார்கள். நான், `அப்படியென்றால் அதில் பாதியை தர்மம் செய்துவிடட்டுமா?` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், (மூன்றிலொரு பங்கு போதும் என்று கூறிவிட்டு,) `மூன்றிலொரு பங்கே அதிகம்தான். (சஅதே!) நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிடத் தன்னிறைவு டையவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே` என்றார்கள்.
நான், `இறைத்தூதர் அவர்களே! (அனைவரும் மதீனா சென்றுவிட்ட பிறகு) நான் மட்டும் (இங்கே மக்காவில்) என் தோழர்களைவிட்டுப் பின்தங்கிவிடுவேனா?` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `(சஅதே!) நீங்கள் (இங்கு) தங்கியிருந்து அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீங்கள் புரியும் நற்செயல் எதுவாயினும் அதன் மூலம் உங்களுக்கு அந்தஸ்தும் உயர்வும் அதிகமாகவே செய்யும். சில சமுதாயத்தார் உங்களால் பயனடைவதற்காகவும் வேறு சிலர் இழப்புக்குள்ளாவதற்காகவும் (உங்கள் ஆயுள் நீட்டிக்கப்பட்டு இங்கேயே) நீங்கள் பின்தங்கி விடக்கூடும்` என்று சொல்லிவிட்டு `இறைவா! என் தோழர்கள் ஹிஜ்ரத்தை முழுமையாக நிறைவேற்றும்படி செய்வாயாக! அவர்களைத் தம் கால்சுவடுகளின் வழியே (பழைய அறியாமைக் கால நிலைக்குத்) திருப்பியனுப்பிவிடாதே` எ-ன்று பிரார்த்தித்தார்கள். மேலும், `ஆனால், ஸஅத் இப்னு கவ்லா தான் பாவம்` என்றார்கள்.
ஸஅத் இப்னு கவ்லா(ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக அனுதாபம் தெரிவிக்கும் விதத்திலேயே நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
Book :80
பாடம் : 44 தள்ளாத வயது, இம்மைச் சோதனை, நரகத்தின் சோதனை ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.
6374. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எந்த வார்த்தைகளால் பாதுகாப்புக் கோரிவந்தார்களோ அவற்றைக் கூறி நீங்களும் பாதுகாப்புக் கோருங்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மின் அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அதாபில் கப்ற்.
(பொருள்: இறைவா! கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். கருமினத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நான் தள்ளாத வயதுக்குத் தள்ளப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
Book : 80
6375. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்ஹரமி, வல்மஃக்ரமி, வல்மஃஸம். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபிந் நாரி, வ ஃபித்னத்திந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றி, வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃம்னா, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக்ஸில் கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ். வபாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷரிக்கீ வல்மஃக்ரிப்` என்று பிரார்த்தித்து வந்தார்கள்.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் கடனிலிலிருந்தும் பாவத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நரகத்தின் வேதனை, நரகத்தின் சோதனை, மண்ணறையின் சோதனை, மண்ணறையின் வேதனை, செல்வத்தின் தீமை, வறுமையின் தீமை, (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் தீமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன்.
இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என்னிலிருந்தும் என் தவறுகளைக் கழுவிடுவாயாக!மேலும், வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப் படுவதைப் போன்று என் உள்ளத்தைத் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக!.)`
Book :80
பாடம் : 45 செல்வத்தினால் ஏற்படும் சோதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.
6376. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (பின்வருவனவற்றிலிருந்து அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ மின் அதாபிந் நார். வ அஊது பிக்க மின் பித்னத்தில் ஃம்னா. வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் ஃபக்ர். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.
பொருள்: இறைவா! நரகத்தின் சோதனை யிலிருந்தும் நரகத்தின் வேதனiயிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். செல்வத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். வறுமையின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். வறுமையின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
Book : 80
பாடம் : 46 வறுமையினால் ஏற்படும் சோதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.
6377. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்திப்பவர்களாய் இருந்தார்கள்; அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றிஇ வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ர், அல்லாஹும்ம மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக் ஸில் கல்பீ பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமாநக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மிஷ்ரிக்கி வல் மஃக்ரிப். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்மஃஸமி, வல்மஃக்ரம்.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் சோதனையிலிருந்தும், நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், செல்வச் சோதனையின் தீமையிலிருந்தும், வறுமைச் சோதனையின் தீமையிலிருந்தும், வறுமைச் சோதனையின் தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நான் (மகாபொய்யன்) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியின் நீராலும் ஆலங்கட்டியின் நீராலும் என் உள்ளத்தைக் கழுவிடுவாயாக! அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தை நீ தூய்மைப்படுத்துவாயாக! மேலும், கிழக்கிற்கும் மேற்கிற்கும்இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக! இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், பாவத்திலிருந்தும் கடனிலிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.
Book : 80
பாடம் : 47 சுபிட்சத்துடன் செல்வம் பெருகிடப் பிரார்த்திப்பது.
6378. & 6379. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள், `இறைத்தூதர் அவர்களே! அனஸ் தங்களின் சேவகராவார். அவருக்காகப் பிரார்த்தியுங்கள்` என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், `இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கிடுவாயாக! அனஸுக்கு நீ வழங்கிய(எல்லா) வற்றிலும் சுபிட்சத்தை ஏற்படுத்துவாயாக` என்று பிரார்த்தித்தார்கள்.
இதைக் போன்றே அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடமிருந்து ஹிஷாம் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.
Book : 80
6380. & 6381. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், `அனஸ் தங்களின் சேவகர், (அவருக்காகப் பிரார்த்தியுங்கள்)` என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், `இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கிடுவாயாக! அவருக்கு நீ வழங்கியவற்றில் சுபிட்சத்தை ஏற்படுத்துவாயாக` என்று பிரார்த்தித்தார்கள்.
(இரண்டில்) நல்லதைத் தேர்ந்தெடுக்க ஓதும் பிரார்த்தனை
Book :80
6382. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
(அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், `அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதுஅலமு வலா அஉலமுஇ வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ `ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆம்பத்தி அம்ரீ` ஃ ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹிஃ ஃபக்துர்ஹு லீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆஜிலிஹி`ஃ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர கான, ஸும்ம ரள்ளினீ பிஹி` என்று பிரார்த்தித்து, `உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்` என்று கூறினார்கள்.
(பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், `நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு `என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்` அல்லது `என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்` நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு `என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.)
Book :80
பாடம் : 49 அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு ளதம் தோழருக்காக நபி (ஸல்) அவர்கள்ன பிரார்த்தித்தது.
6383. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். பிறகு தம் இரண்டு கரங்களையும் உயர்த்தி, `இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக! மறுமை நாளில் மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்கிடுவாயாக` என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் பார்த்தேன்
கணவாயில் ஏறும்போது ஓதும் பிரார்த்தனை
Book : 80
பாடம் : 50 கணவாயில் ஏறும் போது ஓதும் பிரார்த்தனை
6384. அபூ மூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். நாங்கள் மேடான பகுதியில் ஏறும்போது `அல்லாஹுஅக்பர்` (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (சப்தமிட்டுக்) கூறலானோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், `மக்களே! உங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள் (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்!) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. மாறாக, செவியுறுவோனையும் பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்` என்றார்கள். பிறகு என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் (மனதுக்குள்) `லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்` (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ (நல்லறங்கள்) புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று கூறிக்கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், `அப்துல்லாஹ் இப்னு கைஸே! லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்` என்று சொல்வீராக! `ஏனெனில், அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்` அல்லது `உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்` என்று கூறியவாறு (அந்த வார்த்தை) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (என்பதாகும்)` என்பதாகும். என்றார்கள்.
பள்ளத்தாக்கில் இறங்கும்போதுஓதும் பிரார்த்தனை
இது குறித்து ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் வந்துள்ளது.
Book : 80
பாடம் : 51 பள்ளத்தாக்கில் இறங்கும் போது ஓதும் பிரார்த்தனை. இது குறித்து ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் வந்துள்ளது.64 பாடம் : 52 பயணம் புறப்பட விரும்பும் போது, அல்லது பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் பிரார்த்தனை. இது குறித்து அனஸ் (ரலி) அவர் களிடமிருந்து யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.65
6385. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் புனிதப் போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜிலிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது ஒவ்வொரு மேடான பகுதியில் ஏறும்போதெல்லாம் மூன்று முறை `அல்லாஹுஅக்பர்` (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வார்கள். பிறகு (பின்வருமாறு) கூறுவார்கள். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல்லி ஷைஇன் கதீர். ஆயிபூன தாயிபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன, ஸதக்கல்லாஹு வஅதஹு வ நஸர அப்தஹு வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ். (பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் பெற்றவன். நாங்கள் பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும் (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாகவும் (திரும்புகிறோம்.) அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டான்; தன் அடியாருக்கு உதவினான் தன்னந் தனியாகக் குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்.)
Book : 80
பாடம் : 53 மணமகனுக்காகப் பிரார்த்திப்பது
6386. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் (ஆடை) மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது `விஷயம் என்ன?` அல்லது `என்ன(இது)?` என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், ஒரு பேரீச்சங்கொட்டை எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்` என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், `பாரகல்லாஹு லக்க` (அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, `ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளியுங்கள்` என்று கூறினார்கள்.
Book : 80
6387. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறங்கும்போது) `ஏழு` அல்லது `ஒன்பது` பெண் மக்களைவிட்டுச் சென்றார்கள். எனவே, (அவர்களைப் பராமரிப்பதற்கேற்ப) நான் (ஒரு கன்னிகழிந்த பெண்ணை) மணந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) `ஜாபிரே! மணமுடித்துக் கொண்டாயாமே?` என்று கேட்டார்கள். நான் `ஆம்` என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், `கன்னிப் பெண்ணையா? அல்லது கன்னி கழிந்த பெண்ணையா? (யாரை மணந்தாய்?)` என்று கேட்டார்கள். நான், `கன்னி கழிந்த பெண்ணைத்தான்` என்று சொன்னேன். `கன்னிப் பெண்ணை மணந்து `அவளோடு நீயும் உன்னோடு அவளுமாக கூடிக்குலாவி மகிழ்ந்திருக்கலாமே!` அல்லது `நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!` என்று கேட்டார்கள்.
நான், `என் தந்தை ஏழு அல்லது ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். அந்தப் பெண்மக்களைப் போன்று (இளவயதுப்) பெண்ணை (மணந்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, அவர்களைப் பராமரிக்கும் (தகுதியுள்ள கன்னிகழிந்த ஒரு) பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்` என்று கூறினேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், `பாரக்கல்லாஹு அலைக்க` (அவ்வாறாயின் அல்லாஹ் உங்கள் மிது அருள்வளம் பொழிவானாக) என்று பிரார்த்தித்தார்கள்.
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) மற்றும் முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் `பாரக்கல்லாஹு அலைக்க` என்பது இடம்பெறவில்லை.
Book :80
பாடம் : 54 மனைவியிடம் (தாம்பத்திய உறவுகொள்ளச்) செல்லும் போது ஓத வேண்டிய பிரார்த்தனை.
6388. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள விரும்பும்போது, `பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா` (அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக) என்று பிரார்த்தித்து, அந்த உறவினால் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 80
பாடம் : 55 எங்கள் இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மை அருள்வாயாக! என நபி (ஸல்) அவர்கள் கூறியது.
6389. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் `ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆம்ரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்` என்றே அதிகமாகப் பிரார்த்தித்துவந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக் மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக
Book : 80
பாடம் : 56 இம்மையின் சோதனைகளிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.
6390. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
எழுத்து கற்பிக்கப்படுவதைப் போன்று இந்த (பிரார்த்தனை)ச் சொற்களை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கற்பித்துவந்தார்கள். (அவை) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மின் அன் நுறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க, மின் ஃபித்னத்தித் துன்யா, வ அதாபில் கப்ற். (பொருள்: இறைவா! உன்னிடம் நான் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். உன்னிடம் நான் கோழைத்தனத்திலிருந்தும் பாதுகாப்புக்கோருகிறேன். நாங்கள் தள்ளாடும் வயதுக்குத் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
Book : 80
பாடம் : 57 திரும்பத் திரும்பப் பிரார்த்திப்பது
6391. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), `(ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்` என்று கூறினார்கள். அதற்கு நான், `அது என்ன? இறைத்தூதர் அவர்களே!` என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்.
(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும் மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், `இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டதற்கு அவரின் தோழர், `இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது` என்று பதிலளிக்க முதலாமவர், `இவருக்குச் சூனியம் வைத்தது யார்?` என்று வினவியதற்கு `லபீத் இப்னு அஃஸம்` என்று தோழர் பதிலளித்தார். `அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, `சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்` என்று பதிலளித்தார். அவர், `அது எங்கே உள்ளது?` என்று கேட்க, மற்றவர், `தர்வானில் உள்ளது` என்றார்.
`தர்வான்` என்பது பனூஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.
பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு)விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன` என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், `இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?` என்று கேட்டேன். அதற்கு அவர்கள்`எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை வெளியே எடுக்கவில்லை)` என்றார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், `நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)` என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
Book : 80
பாடம் : 58 (கொடுஞ் செயல் புரிந்த) இணை வைப்பாளருக்கெதிரான பிரார்த்தனை. நபி (ஸல்) அவர்கள், இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது காலத்துப் பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்களைப் போன்று இவர்களுக்கும் ஏழு வருடங்களை அளித்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.73 மேலும், இறைவா! (கொடியவன்) அபூஜஹ்லை நீயே கவனித்துக்கொள் வாயாக! என்றும் பிரார்த்தித்தார்கள்.74 இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், இறைவா! இன்னான் இன்னானை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை... எனும் (3:128ஆவது) வசனத்தை அருளினான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75
6392. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
(அகழ்ப் போரின்போது ஒன்று திரண்டு தாக்க வந்து) எதிரணியினருக்கெதிராக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அப்போது, `அல்லாஹும்ம முன்ஸிலல் கித்தாபி, சரீஅல் ஹிஸாபி, அஹ்ஸிமில் அஹ்ஸாப, அஹ்ஸிம்ஹும் வ ஸல்ஸில்ஹும்` என்று கூறினார்கள். (பொருள்: இறைவா! வேதம் அருளியவனே! விரைவாகக் கணகக்கு வாங்குபவனே! (சத்திய நெறியை வேரறுக்கப் பல குலங்களிலிருந்து ஒன்று திரண்டு வந்துள்ள) இந்த கூட்டத்தாரைத் தோற்கடிப்பாயாக! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!)
Book : 80
6393. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் `சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்` (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு `குன}த்` (சிறப்பு துஆ) ஓதினார்கள். அதில், `இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ஸலமா இப்னு ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் சில ஆண்டுகளை அளிப்பாயாக!` என்று பிரார்த்தித்தார்கள்.
Book :80
6394. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை (நஜ்தை நோக்கி மார்க்கப் பிரசாரத்திற்காக) அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு `குர்ரா` (குர்ஆன் அறிஞர்கள்) என்று கூறப்படும். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் கவலைப் பட்டதைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் கவலைப்பட்டதை நான் பார்த்ததில்லை. எனவே, ஒரு மாதம் ஃபஜ்ர் தொழுகையில் `குன}த்` (எனும் சிறப்பு துஆ) ஓதிப் பிரார்த்தித்தார்கள். மேலும், `உஸய்யா குலத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்` என்றும் சொன்னார்கள்.
Book :80
6395. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
யூதர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு `அஸ்ஸாமு அலைக்க` (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று சற்றே மாற்றி முகமன் கூறிவந்தார்கள். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான், `அலைக்குமுஸ் ஸாமு வல்ல அனா (மரணமும் சாபமும் உண்டாகட்டும்)` என்று பதில் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், `ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்` என்றார்கள். அதற்கு நான் `இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொல்வதை நீங்கள் செவியுறவில்லையா?` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `அ(வர்கள் சொன்ன)தையே அவர்களுக்கு நான் பதிலாகக் கூறியதை நீ செவியுறவில்லையா? நான் `வ அலைக்கும்` (அவ்வாறே உங்களுக்கு ஆகட்டும்) என்று (நளினமாய்) குறிப்பிட்டேனே?` என்றார்கள்.
Book :80
6396. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போரின்போது நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், `எதிரிகளுடைய புதை குழிகளையும் அவர்களின் வீடுகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள், சூரியன் மறையும் வரை நடுத் தொழுகையிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்` என்று கூறினார்கள். அஸ்ர் தொழுகையே நடுத் தொழுகையாகும்.
Book :80
பாடம் : 59 இணைவைப்பாளர்களுக்காகப் பிரார்த்திப்பது
6397. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) துஃபைல் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, `அல்லாஹ்வின்தூதரே! தவ்ஸ் குலத்தார் (இறைவனுக்கு) மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க) மறுத்துவிட்டனர். அவர்களுக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தியுங்கள்` என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே அவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என்று மக்களும் எண்ணினர். (ஆனால்) நபி(ஸல்) அவர்கள், `இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்துவிடுவாயாக` என்று (நல்வழி வேண்டிப்) பிரார்த்தித்தார்கள்.
Book : 80
பாடம் : 60 இறைவா! நான் முன்னால் செய்த பாவங்களையும், பின்னால் செய்த பாவங்களையும் மன்னித்திடுவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.
6398. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.
(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.
இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.
Book : 80
6399. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள்கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ. (பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கண்ட விரயத்iயும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)
Book :80
பாடம் : 61 வெள்ளிக்கிழமையன்று (துஆ ஏற்கப்படும்) அந்த நேரத்தில் பிரார்த்திப்பது.
6400. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபுல்காசிம் நபி(ஸல்) அவர்கள், `வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை` என்று கூறினார்கள். அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்.
Book : 80
பாடம் : 62 யூதர்கள் விஷயத்தில் நாம் செய்யும் பிரார்த்தனை ஏற்கப்படும். எமது விஷயத்தில் அவர்கள் செய்யும் பிரார்த்தனை ஏற்கப் படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
6401. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து `அஸ்ஸாமு அலைக்க` (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினார்கள் நபி(ஸல்) அவர்கள், `வ அலைக்கும்` (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று பதிலளித்தார்கள். உடனே, நான் (வேகப்பட்டவளாக) `அஸ்ஸாமு அலைக்கும், வ லஅனக்கமுல்லாஹு, வஃகளிப அலைக்கும்` (உங்களுக்கு மரணம் நேரட்டும். இறைவனின் சாபம் உங்களுக்கு ஏற்படட்டும். உங்களின் மீது அவனுடைய கோபம் உண்டாகட்டும்) என்று பதிலளித்தேன்.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `ஆயிஷா! நிதானம்! நளினத்தைக் கடைப்பிடிப்பாயாக! `வன்மையாக நடந்து கொள்வதிலிருந்து` அல்லது `அருவருப்பாகப் பேசுவதிலிருந்து` உன்னை எச்சரிக்கிறேன்` என்று கூறினார்கள். நான், `அவர்கள் சொன்னதை தாங்கள் செவியுறவில்லையா?` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `நான் (பதில்) சொன்னதை நீ செவியுறவில்லையா?` என்று (திருப்பி என்னிடம் கேட்டுவிட்டு), `அவர்களுக்கு நான் பதில் (முகமன்) கூறிவிட்டேன். அவர்களின் விஷயத்தில் நான் செய்த பிரார்த்தனை (இறைவனிடம்) அங்கீகரிக்கப்படும். என் விஷயத்தில் அவர்கள் புரிந்த பிரார்த்தனை அங்கீகரிக்கப்படாது` என்றார்கள்.83
Book : 80
பாடம் : 63 ஆமீன்" (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக" என்று) கூறுவது.
6402. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
இமாம் `ஆமீன்` கூறும்போது நீங்களும் `ஆமீன்` கூறுங்கள். ஏனெனில், வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். யார் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்திருக்கிறதோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.84
Book : 80
பாடம் : 64 லாயிலாஹ இல்லால்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று) கூறுவதன் சிறப்பு.
6403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
`லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)` என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர!
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.85
Book : 80
6404. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்கள் கூறியாதாவது:
(மேற்கண்ட வாக்கியங்களை) பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்).
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உமர் இப்னு அபீ ஸாயிதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதே நபிமொழி இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. நான் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரபீஉ இப்னு குஸைம்(ரஹ்) அவர்களிடம், `இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?` என்று கேட்டேன். அதற்கவர்கள், `அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்களிடமிருந்து (இதைச் செவியுற்றேன்)` என்றார்கள். எனவே, நான் அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்களிடம் சென்று, `இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?` என்று கேட்டேன். அதற்கவர்கள், `இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)` என்றார்கள். எனவே, நான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களிடம் சென்று, `இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்களா?` என்று கேட்டேன். அதற்கவர்கள், `இதை நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)` என்றார்கள்.
இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.
அபூ அய்யூப்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், `இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என வந்துள்ளது.
Book :80
பாடம் : 65 சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்" என்று) கூறுவதன் சிறப்பு.
6405. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
`சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி` (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 80
6406. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.
(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.)
Book :80
பாடம் : 66 அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவதன் சிறப்பு.
6407. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book : 80
6408. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் `உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்` என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் `என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?` என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்` என்று வானவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், `அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?` என்று கேட்பான். அதற்கு வானவர்கள், `இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை` என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், `என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?` என்று கேட்பான். வானவர்கள், `உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்` என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், `என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?` என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், `அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்` என்பார்கள். அதற்கு இறைவன், `அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?` என்று கேட்பான். அதற்கு வானவர்கள், `இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை` என்பர். அதற்கு இறைவன், `அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?` என்று கேட்பான். வானவர்கள், `சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்` என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், `அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?` என்று வினவுவான். வானவர்கள், `நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)` என்று பதிலளிப்பார். இறைவன், `அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?` என்று கேட்பான். வானவர்கள், `இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை` என்பர். அதற்கு இறைவன், `அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?` என்று கேட்பான் வானவர்கள், `நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்` என்பர். அப்போது இறைவன், `எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்` என்று கூறுவான்.
அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், `(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்` என்பார். அதற்கு இறைவன், `அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்` என்று கூறுவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.
Book :80
பாடம் : 67 லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று கூறுவது.
6409. அபூ மூஸா அப்தில்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
(நாங்கள் கைபர் பயணத்தில் இருந்த போது) நபி(ஸல்) அவர்கள் ஒரு `குன்றில்` அல்லது `மேட்டில்` ஏறலானார்கள். அதன் மீது ஏறியபோது ஒருவர் உரத்த குரலில் `லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்` (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் கோவேறு கழுதையில் இருந்தபடி, `(மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேளாதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை` என்று கூறினார்கள். பிறகு, `அபூ மூஸா! அல்லது `அப்துல்லாஹ்!` (என்று என்னைக் கூப்பிட்டு) `சொர்க்கத்தின் கருவூலமான ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?` என்று கேட்டார்கள். நான், `ஆம் (அறிவித்துத்தாருங்கள்)` என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், `(அந்த வார்த்தை:) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது)` என்றார்கள்.86
Book : 80
பாடம் : 68 அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உண்டு.87
6410. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 80
பாடம் : 69 விட்டுவிட்டு அறிவுரை வழங்குதல்
6411. அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை (அவர்களின் அறிவுரையைக் கேட்பதற்காக) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். அப்போது யஸீத் இப்னு முஆவியா வந்தார். அப்போது நான், `(யஸீத் அவர்களே!) நீங்கள் அமரவில்லையா?` என்று கேட்டேன். யஸீத், `இல்லை. நான் உள்ளே சென்று உங்கள் தோழரை (இப்னு மஸ்வூதை) அழைத்து வருகிறேன். அவர் வராவிட்டால், நான் வந்து (உங்களுடன்) அமர்ந்து கொள்கிறேன்` என்று கூறினார். (பிறகு உள்ளே சென்றார்.) அதன்பின் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் யஸீதின் கையைப் பிடித்தவராக வெளியே வந்து எங்களிடையே நின்று, `நீங்கள் இங்கு இருக்கும் விஷயம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து)விட்டுவிட்டு எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள். இதுவே உங்களிடையே (அறிவுரை கூற) வரவிடாமல் என்னைத் தடுக்கின்றது` என்றார்கள்.88
Book : 80

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.