74. குடிபானங்கள்

பாடம் : 1 நம்பிக்கை கொண்டோரே! மதுபானம், சூதாட்டம், ப-பீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியன ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் அடங்கும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள் எனும் (5:90ஆவது) இறைவசனம்.
5575. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான்.2
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 74
5576. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் (ஒன்றில்) மதுவும் (மற்றொன்றில்) பாலும் இருந்த இரண்டு கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. அவர்கள் அவ்விரண்டையும் பார்த்துவிட்டுப் பால் கிண்ணத்தை எடுத்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் `இயற்கை மரபில் உங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நீங்கள் மதுக் கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயமே வழி தவறிப் போயிருக்கும்` என்று கூறினார்கள்.3
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :74
5577. அனஸ்(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை (ஹதீஸை)க் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்து போவதும், விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரேயோர் ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்துவிடுவதும் மறுமைநாளின் அடையாளங்களில் அடங்கும்.4
Book :74
5578. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (அது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்யாளனாக இருந்தபடி திருட மாட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.
அப்துல் மலிக் இப்னு அபீ பக்ர்(ரஹ்) இந்த ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து (தம் தந்தை) அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) தமக்கு அறிவித்து வந்ததாகக் கூறினார்கள். மேலும், அப்துல் மலிக்(ரஹ்) `(என் தந்தை) அபூ பக்ர்(ரஹ்) இந்த (ஹதீஸில் இடம் பெற்றுள்ள மூன்று) விஷயங்களுடன் (நான்காவதாக), `(மக்களின்) மதிப்புமிக்க செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக்கொண்டிருக்கக் கொள்ளைடியப்பவன் அதைக் கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்க மாட்டான்` என்பதையும் (நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக) சேர்த்து அறிவித்தார்கள்` என்று கூறினார்கள்.
Book :74
பாடம் : 2 திராட்சை முதலானவற்றிலிருந்து தயாரிக்கப் படும் மது.6
5579. இப்னு உமர்(ரலி) கூறினார்
(திராட்சையினால் தயாரிக்கப்படும்) மது மதீனாவில் சிறிதும் இல்லாதிருந்த நிலையில் அது தடைசெய்யப்பட்டது.7
இதை நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
Book : 74
5580. அனஸ்(ரலி) கூறினார்
மது எங்களுக்குத் தடை செய்யப்பட்டது. அது தடை செய்யப்பட்டபோது மதீனாவில் திராட்சையினால் தயாரிக்கப்படும் மது சிறிதளவே எங்களுக்குக் கிடைத்துவந்தது. எங்கள் மதுபானங்களில் பெரும்பலானவை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களாலும் பேரீச்சங் கனிகளாலும் ஆனவையாகும்.
Book :74
5581. இப்னு உமர்(ரலி) கூறினார்
(என் தந்தை) உமர்(ரலி) சொற்பொழிவு மேடையின் மீது நின்று (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பின்) `ஐந்து வகைப் பொருட்களினால் மது தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. அவையாவன: திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற்கோதுமை. ஆக, அறிவுக்குத் திரையிடுவதெல்லாம் மதுவேயாகும்` என்று கூறினார்கள்.8
Book :74
பாடம் : 3 நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும் பேரீச்சங் கனியிலிருந்தும் மது தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மது விலக்கு வந்தது.
5582. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
அபூ உபைதா(ரலி), அபூ தல்ஹா(ரலி) மற்றும் உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களாலும் பேரீச்சங் கனிகளாலும் தயாரித்த மதுவை நான் ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, `மது தடை செய்யப்பட்டுவிட்டது` என்று கூறினார். உடனே அபூ தல்ஹா(ரலி), `எழுந்திரு, அனஸே! இவற்றைக் கொட்டிவிடு` என்று கூறினார்கள். நான் அவற்றைக் கொட்டிவிட்டேன்.9
Book : 74
5583. அனஸ்(ரலி) கூறினார்
நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரிடையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களால் ஆன மதுவை ஊற்றின் கொண்டிருந்தன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாயிருந்தேன். அப்போது `மது தடை செய்யப்பட்டுவிட்டது` என்று சொல்லப்பட்டது. உடனே (என் உறவினர்கள்) `அதைக் கவிழ்த்து (கொட்டி) விடு` என்று கூறினார்கள். அவ்வாறே நான் கவிழ்த்து(க் கொட்டி)விட்டேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அல்பஸரீ(ரஹ்) கூறினார்:
நான் அனஸ்(ரலி) அவர்களிடம் `அவர்களின் மது எத்தயைது?` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `பேரீச்ச செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்` என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் இப்னு அனஸ்(ரஹ்), `(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது` என்று கூறினார்கள். அனஸ்(ரலி) அதை மறுக்கவில்லை.
என் தோழர்களில் ஒருவர் கூறுகிறார்: அனஸ்(ரலி) `அதுதான் அவர்களின் அன்றைய மதுபானமாக இருந்தது` என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.
Book :74
5584. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
அன்றைய தினம் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும், பேரீச்சம் பழத்திலிருந்தும் தயாரிக்கப்பட்டது தான் மதுபானமாகும். என்றிருந்த நிலையில் மது தடை செய்யப்பட்டது.
Book :74
பாடம் : 4 தேனிலிருந்து தயாரிக்கப்படும் மதுவே பித்உ" எனப்படும்.10 மஅன் பின் ஈசா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் மா-க் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், உலர்ந்த திராட்சையினால் தயாரிக்கப்படும் மது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், அது போதையூட்ட வில்லையென்றால் அதனால் குற்றமில்லை என்று பதிலளித்தார்கள். அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அத் தராவர்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் (இந்த வகை மது குறித்து மதீனா அறிஞர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், அது போதை தராது என்றிருந்தால் அதனால் குற்றமில்லை என்று பதிலளித்தார்கள்.
5585. ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் `பித்உ` (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், `போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்` என்று பதிலளித்தார்கள்.
Book : 74
5586. ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் `பித்உ` குறித்துக் கேட்கப்பட்டது. அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன் வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , `போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும்` என்று கூறினார்கள்.
Book :74
5587. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , `(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும் (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற்றை ஊற்றி வைக்காதீர்கள்` என்று சொன்னதாக அனஸ்(ரலி) எனக்கு அறிவித்தார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) இவ்விரண்டுடன் மண் சாடியையும் பேரீச்சம் மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப் பானையையும் சேர்த்து அறிவித்துவந்தார்கள்.
Book :74
பாடம் : 5 மது என்பது அறிவுக்குத் திரையிடும் பானம்" என்பது பற்றி வந்துள்ளவை.
5588. இப்னு உமர்(ரலி) கூறினார்
(என் தந்தை) உமர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள்.
மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம் பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன் ஆகியனவே அந்தப் பொருள்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் தரையிடக் கூடியதாகும்.12 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:
1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ, மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவரின் பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?13
2. `கலாலா` என்றால் என்ன? 14
3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம் 15
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹய்யான் அத்தைமீ(ரஹ்) கூறினார்:
நான் ஆமிர் இப்னு ஷஅபீ (ரஹ்) அவர்களிடம், `அபூ அம்ரே! சிந்து சமவெளியில் அரிசியினால் தயாரிக்கப்படும் ஒரு வகை (மது)பானம் உள்ளதே? (அதன் சட்டம் என்ன?)` என்று கேட்டேன். அவர்கள், `அது `நபி(ஸல்) அவர்களின் காலத்தில்` அல்லது உமர்(ரலி) அவர்களின் காலத்தில் இருந்ததில்லை` என்று பதிலளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில் (ஐந்து வகைப் பொருட்களில் முதலாவதாக) `திராட்சை` என்பதற்கு பதிலாக `உலர்ந்த திராட்சை` என்று வந்துள்ளது.
Book : 74
5589. உமர்(ரலி) கூறினார்
மது ஐந்து பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அவை: 1. உலர்ந்த திராட்சை 2. பேரீச்சம் பழம் 3. கோதுமை 4. வாற்கோதுமை, 5. தேன்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :74
பாடம் : 6 மதுவை அனுமதிக்கப்பட்டதாகக் கருது கின்றவன் குறித்தும், அதற்கு மாற்றுப் பெயர் சூட்டுகின்றவன் குறித்தும் வந்துள்ளவை.
5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார்
`அபூ ஆமிர்(ரலி)` அல்லது `அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)` என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)
நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், `நாளை எங்களிடம் வா` என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
Book : 74
பாடம் : 7 கல், செம்பு, மரம் உள்ளிட்ட பாத்திரங்களில் பழச்சாறுகளை ஊறவைப்பது.
5591. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தம் திருமணத்திற்கு அழைத்தார்கள். அப்போது மணப்பெண்ணாயிருந்த அவர்களின் துணைவியாரே நபி(ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்பவராக இருந்தார்.
அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன புகட்டினார் தெரியுமா?
அவர் கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை இரவிலேயே ஊறவைத்திருந்தார். (மணவிருந்து உண்ட பின் நபியவர்களுக்கு அந்தப் பழச்சாற்றை அவர் புகட்டினார்.)
Book : 74
பாடம் : 8 பாத்திரங்கள் மற்றும் தோல் பைகளில் (பானங்களை ஊற்றிவைக்கத்) தடைவிதித்த பின் நபி (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதியளித்தது.19
5592. ஜாபிர்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சில வகைப் பாத்திரங்களுக்கு (அவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென)த் தடை விதித்தார்கள். அப்போது (மதீனாவாசிகளான) அன்சாரிகள் `அவை எங்களுக்குத் தேவைப்படுகின்றனவே!` என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், `அப்படியென்றால் தடை இல்லை. (அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்)` என்று சொல்லிவிட்டார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், `நபி(ஸல்) அவர்கள் (சில வகைப்) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று தடை விதித்த போது..` என்று வந்துள்ளது.
Book : 74
5593. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப்பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, `மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே` என்று சொல்லப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள், தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்தார்கள்.
Book :74
5594. அலீ(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவையையும், தார் பூசப்பட்ட பாத்திரத்தையும் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :74
5595. இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) கூறினார்
நான் அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்களிடம் `எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பது விரும்பத்தகாதது என இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நீங்கள் வினவியதுண்டா?` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `ஆம்(வினவினேன்). இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டாரான எங்களை சுரைக்காய் குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்` என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பாளர் இப்ராஹீம்(ரஹ்) கூறினார்:) `சுட்ட களிமண் பாத்திரத்தையும் மண்சாடியையும் ஆயிஷா(ரலி) அவர்ள் குறிப்பிடவில்லையா?` என கேட்டேன். அதற்கு அஸ்வத்(ரஹ்) `நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கேட்காத ஒன்றை உங்களுக்கு அறிவிக்க வேண்டுமா?` என்று கூறினார்கள்.
Book :74
5596. சுலைமான் இப்னு அபீ சுலைமான் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார்
`நபி(ஸல்) அவர்கள் பச்சை நிற சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள்` என்று அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) சொல்ல கேட்டேன். அப்போது `வெண்ணிற களிமண் பாத்திரத்தில் நாங்கள் அருந்தலாமா?` என்று வினவினேன். அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) `இல்லை. (அதுவும் கூடாது)` என்று கூறினார்கள்.
Book :74
பாடம் : 9 போதையூட்டக் கூடியதாக மாறாத வரை பேரீச்சம் பழ ஊறலை அருந்தலாம்.
5597. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் திருமணத்திற்கு அழைத்தார்கள். அன்று மணப்பெண்ணாக இருந்த அபூ உஸைதின் துணைவியாரே அவர்களுக்குப் பணிவிடை புரிபவராக இருந்தார். அவர், `நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக என்ன ஊறவைத்திருந்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் இரவிலேயே ஊறவைத்தேன். (நபியவர்கள் உணவு உண்டபின் அந்த ஊறலை அவர்களுக்குப் புகட்டினேன்)` என்று கூறினார்.
Book : 74
பாடம் : 10 பாதக்" எனும் பானமும், போதை தரும் அனைத்துப் பானங்களுக்கும் தடை விதிப்போரின் கூற்றும்.22 மூன்றில் (இரு பங்கு குறைந்து) ஒரு பங்கு இருக்கும் அளவுக்குச் சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாற்றை (திலா") அருந்தலாம் என உமர் பின் கத்தாப், அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ், முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோர் கருதினர். பராஉ பின் ஆஸிப், அபூஜுஹைஃபா (ரலி) ஆகியோர் சரி பாதியளவுக்குச் சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாற்றை அருந்தியுள்ளனர். காய்ச்சப்படாத (பச்சைப்) பழச்சாற்றை அருந்தலாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.23 உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (என் மகன்) உபைதுல்லாஹ்விடமி ருந்து ஒரு பானத்தின் நெடி வரக் கண்டேன். அது குறித்து விசாரிப்பேன். அது போதை தருவதாக இருந்தால் அவருக்குக் கசையடி கொடுப்பேன்.24
5598. அபுல் ஜுவைரியா(ரஹ்) கூறினார்
நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், `பாதக்` எனும் பானம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், `(இவர்கள் மதுவுக்கு) `பாதக்` எனும் புதுப பெயரைச் சூட்டுவதற்கு முன்பே (மது அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும் என) முஹம்மத்(ஸல்) அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். எனவே, போதையூட்டும் எதுவாயினும் அது தடை செய்யப்பட்டதுதான்` என்று பதிலளித்தார்கள்.
நான், `(பாதக் எனும் கெட்டியாகக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாறு) அனுமதிக்கப்பட்ட நல்ல பானமாயிற்றே!` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `அனுமதிக்கப்பட்ட நல்ல பொருளுக்கு அப்பால் தடை செய்யப்பட்ட கெட்ட பொருளைத் தவிர வேறெதுவும் இல்லை` என்று கூறினார்கள்.
Book : 74
5599. ஆயிஷா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பிவந்தார்கள்.
Book :74
பாடம் : 11 நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் (கனிந்த) பேரீச்சம் பழங்களையும் கலந்(து ஊற வைத்)தால் போதை தரும் என்றிருப்பின் அவ்வாறு கலக்கலாகாது என்றும், இரண்டு குழம்புகளை ஒரே குழம்பாகக் கலக்கலாகாது என்றும் கருதுவோரின் கூற்று.26
5600. அனஸ்(ரலி) கூறினார்
நான் அபூ தல்ஹா, அபூ துஜானா, சுஹைல் இப்னு பய்ளா(ரலி) ஆகியோருக்கு நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்கள் மற்றும் (கனிந்த) பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றின் கலப்பு ஊறலை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது தடை செய்யப்பட்டது. உடனே நான் அதை எறிந்துவிட்டேன். நான் அவர்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பவனாகவும் அவர்களில் வயதில் சிறியவனாகவும் இருந்தேன். நாங்கள் அந்தக் கலவையை அன்று மதுவாகவே கருதினோம்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.
Book : 74
5601. ஜாபிர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம் பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சக் செங்காய்களையும் கலந்து ஊற வைக்க வேண்டாமென்றும் தடை விதித்தார்கள்.
Book :74
5602. அபூ கத்தாதா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும், பேரீச்சம் பழத்தையும் உலர்ந்த திரட்சையையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும் தடை செய்தார்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித் தனியாக ஊற வைக்கலாம் (என அனுமதியளித்தார்கள்).
Book :74
பாடம் : 12 பால் அருந்துவது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறுகின்றான்: திண்ணமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கிறது; அவற்றின் வயிற்றி லுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். (அது) அருந்துவோருக்கு இனிமையானதாகும். (16:66)
5603. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பைத்துல் மக்திஸிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களிடம் பால் கிண்ணமும், மதுக் கிண்ணமும் கொண்டுவரப்பட்டன.27
Book : 74
5604. உம்முல் ஃபள்ல்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அரஃபாவில் தங்கியிருந்தபோது) `அரஃபா` (துல்ஹஜ் 9ஆம்) நாளில் நோன்பு நோற்றுள்ளார்களா (இல்லையா) என மக்கள் சந்தேகப்பட்டார்கள். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பால் நிரம்பிய பாத்திரம் பாத்திரம் ஒன்றைக் கொடுத்தனுப்பினேன். (அதை) அவர்கள் அருந்தினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைதீ(ரஹ்) கூறினார்.
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) சில வேளைகளில் `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் `அரஃபா` நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா (இல்லையா) என்று மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. எனவே, உம்முல் ஃபள்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு கிண்ணத்தில் பாலை) அனுப்பிவைத்தார்கள்` என்று (`உம்முல் பள்ல்(ரலி) அவர்களிடமிருந்து இதைத் தாம் கேட்டதாகச் சொல்லாமல்) நேரடியாக அறிவித்ததுண்டு. அவர்களிடம், `இது (அறிவிப்பாளர் தொடரில் முறிவு ஏற்படாத) மவ்ஸூலா(ன ஹதீஸா)? அல்லது (அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்டுள்ள) முர்ஸலா(ன ஹதீஸா)?` என்று கேட்கப்பட்டால், `இதை உம்முல் ஃபள்ல்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறேன். (எனவே, இது `மவ்ஸூல்` தான்)` என்று பதிலளிப்பார்கள்.
Book :74
5605. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
அபூ ஹுமைத் அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ(ரலி) `அந்நகீஉ` (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டுவந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் `இதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?` என்று கேட்டார்கள்.
Book :74
5606. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
அன்சாரிகளில் ஒருவரான அபூ ஹுமைத்(ரலி) `அந்நகீஉ` எனும் இடத்திலிருந்து பால் நிரம்பிய பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், `இதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக்கொண்டு வந்திருக்கக் கூடாதா?` என்று அவரிடம் கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :74
5607. பராஉ(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தம்முடன் அபூ பக்ர்(ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு மக்காவிலிருந்து (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து) வந்தார்கள். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை) அபூ பக்ர்(ரலி) கூறினார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாகத்துடன் இருந்தபோது நாங்கள் ஓர் ஆட்டிடையனைக் கடந்து சென்றோம். அப்போது நான் (ஆட்டிலிருந்து) ஒரு கிண்ணத்தில் சிறிதுப் பால் கறந்(து நபியவர்களுக்குக் கொடுத்)தேன். நான் திருப்தியடையும் வரை அதை நபி(ஸல்) அவர்கள் பரும்னார்கள். (எங்களைப் பிடிக்க) சுராக்கா இப்னு ஜுஉஷும் ஒரு குதிரையில் எங்களை நோக்கி வந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது சுராக்கா தனக்கெதிராகப் பிரார்த்திக்க வேண்டாமென்றும், தான் திரும்பச் சென்றுவிடுவதாகவும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக்கொண்டார். நபி(ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள்.29
Book :74
5608. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
(பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால் தருகிற ஒட்டகமும், (பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால் தருகிற ஆடும் தான் தர்மங்களிலேயே சிறந்ததாகும். (அதிலிருந்து) காலையில் ஒரு கிண்ணத்திலும், மாலையிலும் ஒரு கிண்ணத்தில் நீ பால் கறந்து கொள்ளலாம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :74
5609. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, `இதில் (பாலில்) கொழுப்பு இருக்கிறது` என்று கூறினார்கள்.
Book :74
5610. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
நான் (`மிஅராஜ்` எனும் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) `சித்ரத்துல் முன்தஹா` எனும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு நான்கு நதிகள் (ஓடிக் கொண்டு) இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் (ஓடிக் கொண்டு) இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நீல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் இரண்டு நதிகள் சொர்க்கத்திலுள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு நதிகளாகும். அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து (அதை) அருந்தினேன். அப்போது என்னிடம், `நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்` என்று சொல்லப்பட்டது.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா(ரஹ்) அவர்களிடமிருந்து ஹிஷாம், ஸயீத், ஹம்மாம்(ரஹ்) ஆகியோர் (சொர்க்கத்து) நதிகள் குறித்து மேற்கண்டபடி அறிவித்தார்கள். (ஆனால்,) மூன்று கிண்ணங்கள் பற்றி அவர்கள் (தம் அறிவிப்பில்) குறிப்பிடவில்லை.
Book :74
பாடம் : 13 சுவை நீரைத் தேடுவது
5611. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
மதீனா அன்சாரிகளிலேயே அபூ தல்ஹா ஸைத் இப்னு ஸஹ்ல்(ரலி) ஏராளமான பேரீச்ச மரங்களுடைய (பெரும்) செல்வராக இருந்தார். `அவரின் செல்வங்களில் `பைருஹா` எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். `நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்` எனும் (திருக்குர்ஆன் 03:92 வது) வசனம் அருளப்பெற்றதும் அபூ தல்ஹா(ரலி) எழுந்து, `இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் `நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்` எனக் கூறுகிறான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது `பைருஹா` (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும், அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர் பார்க்கிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்` என்று கூறினார்கள்.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , `நல்லது. அது `(மறுமையில் இலாபம் தரும் செல்வம்தானே!` அல்லது `(அழிந்து) போய்விடும் செல்வம்தானே!` என்று கூறினார்கள் - அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு மஸ்லமா (இவ்வாறு) சந்தேகத்துடன் அறிவித்தார்.
(தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள், `தர்மம் செய்வது குறித்து) நீங்கள் கூறியதை நான் செவியேற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (பொறுத்தமாகக்) கருதுகிறேன்` என்று கூறினார்கள்.
அதற்கு அபூ தல்ஹா(ரலி), `(அவ்வாறே) செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!` எனக் கூறிவிட்டுத் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.
இஸ்மாயீல் இப்னு அபீ உவைஸ்(ரஹ்) அவர்களும் யஹ்யா இப்னு யஹ்யா(ரஹ்) அவர்களும் `(அழிந்து) போய்விடும் செல்வம் தானே!` என்றே அறிவித்தார்கள்.
Book : 74
பாடம் : 14 பாலில் தண்ணீர் கலந்து அருந்துவது
5612. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காகக் கிணற்றிலிருந்து (நீர் எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின் இடப் பக்கத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்திருந்தனர். (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, `வலப்பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)` என்று கூறினார்கள்.34
Book : 74
5613. ஜாபிர்பின் அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூ பக்ர்) உடன் ஓர் அன்சாரியிடம் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த அன்சாரியிடம், `உங்களிடம் இன்று இரவு தோல் பையில் (ஊற்றி) வைக்கப்பட்ட தண்ணீர் இருந்தால் (அதை எங்களுக்குப் புகட்டுங்கள்). இல்லையென்றால் நாங்கள் (இந்தத் தொட்டியில்) வாய் வைத்துக் குடித்துக் கொள்வோம்` என்று கூறினார்கள்.
அப்போது அந்த அன்சாரி தம் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் `இறைத்தூதர் அவர்களே! என்னிடம் இரவிலேயே (தோல் பையில் ஊற்றி) வைத்த தண்ணீர் உள்ளது. பந்தலுக்கு வாருங்கள்` என்று கூறி இருவரையும் அழைத்துச் சென்றார்.
அங்கு கிண்ணமொன்றில் தண்ணீர் ஊற்றிப் பிறகு அதன் மீது தம்விட்டு ஆட்டிலிருந்து (பால்) கறந்து ஊற்றினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அதை) அருந்தினார்கள். பிறகு அவர்களுடன் வந்த அந்த நண்பரும் (அபூ பக்ர்) அருந்தினார்.35
Book :74
பாடம் : 15 இனிப்புச் சாறு, தேன் ஆகியவற்றை அருந்துவது. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (கடுமையான தாகம் போன்ற) நெருக்கடி நிலையில் கூட மனிதனின் சிறுநீரை அருந்துவது அனுமதிக்கப்பட்டதன்று. ஏனெனில், அது அசுத்தமாகும்.36 உயர்வான அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுக்குத் தூய்மையான (நல்ல) பொருட்கள் (மட்டுமே) அனுமதிக்கப்பட்டுள்ளன. (5:4) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மது பற்றிக் குறிப்பிடுகையில், அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ள பொருட்களில் உங்களது நலத்தை அவன் அமைக்கவில்லை என்று கூறினார்கள்.
5614. ஆயிஷா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பிவந்தார்கள். 37
Book : 74
பாடம் : 16 நின்று கொண்டு நீர் அருந்துவது38
5615. நஸ்ஸால் இப்னு சப்ரா(ரஹ்) கூறினார்
அலீ(ரலி) (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள்.
பிறகு `மக்களில் சிலர் நின்றுகொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால், (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்தைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் செய்ததை பார்த்தேன்` என்று கூறினார்கள்.
Book : 74
5616. நஸ்ஸால் இப்னு சப்ரா(ரஹ்) கூறினார்
(ஒரு முறை) அலீ(ரலி) தம் (ஆட்சியின் போது) லுஹ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு கூஃபா நகர(ப் பள்ளிவாசல்) முற்றத்தில் மக்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக அமர்ந்தார்கள். அதற்குள் அஸ்ர் தொழுகை வந்துவிட்டது. பிறகு தண்ணீர் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் (அதை) அருந்திவிட்டுத் தம் முகத்தையும் தம் இரண்டு கைகளையும் கழுவினார்கள். -அறிவிப்பாளர் ஆதம் இப்னு அபீ இல்யாஸ்(ரஹ்), தலை மற்றும் கால்களையும் குறிப்பிட்டார்கள். பிறகு எழுந்த அதன் மீதத்தை நின்றுகொண்டு பரும்னார்கள். பிறகு, `மக்கள் சிலர் நின்றுகொண்டு (நீர்) அருந்துவதை வெறுக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களோ நான் செய்ததைப் போன்று செய்தார்கள்` என்று கூறினார்கள்.
Book :74
5617. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் நின்றுகொண்டு `ஸம்ஸம்` கிணற்றிலிருந்து (நீர்) பரும்னார்கள்.
Book :74
பாடம் : 17 ஒட்டகத்தின் மீது இருந்து கொண்டு (நீர்) பருகுவது.
5618. உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ்(ரலி) கூறினார்
(அரஃபா தினமான துல்ஹஜ் 9ஆம் நாளில்) நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பால் கிண்ணம் ஒன்றை அனுப்பினேன். அவர்கள் அரஃபா நாளின் அந்த மாலை நேரத்தில் (அரஃபா பெருவெளியில்)ழூழூ நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களின் கரத்தால் (அக்கிண்ணத்தை (எடுத்து அதைப் பரும்னார்கள்.
மாலிக்(ரஹ்) அபுந்நள்ர் சாலிம்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் தம் அறிவிப்பில் `ஒட்டகத்தின் மீது இருந்தபடி (பரும்னார்கள்)` என்று அதிகப்படியாக குறிப்பிட்டுள்ளார்கள்.39
Book : 74
பாடம் : 18 (பானம் பரிமாறப்படும் போது அதை) அருந்துவதில் வலப் பக்கத்தில் இருப்பவர், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவர் (என்ற வரிசையில்) முன்னுரிமை பெறுவர்.
5619. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தண்ணீர் கலந்த பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களுக்கு வலப்பக்கம் கிராமவாசி ஒருவரும் இடப்பக்கம் அபூ பக்ர்(ரலி) அவர்களும் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் (அந்தப் பாலை) பரும்விட்டுப் பிறகு (மிச்சத்தை) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டார்கள். மேலும், `வலப் பக்கம் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)` என்று கூறினார்கள்.40
Book : 74
பாடம் : 19 ஒருவர் (தமக்கு இடப் பக்கமுள்ள வயதில்) மூத்தவருக்குப் பருகக் கொடுக்கத் தமது வலப் பக்கம் உள்ள(வயதில் சிறிய)வரிடம் அனுமதி கேட்க வேண்டுமா?
5620. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், `(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?` என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், `அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான்விட்டுத் தரமாட்டேன்` என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள்.41
Book : 74
பாடம் : 20 தொட்டியில் வாய் வைத்துப் பருகுவது.
5621. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூ பக்ர்) உடன் அன்சாரி ஒருவரிடம் (அவரின் தோட்டத்திற்குச்) சென்றார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழரும் (அந்த அன்சாரிக்கு) `சலாம்` (முகமன்) கூறினர். அந்த அன்சாரி பதில் சலாம் சொல்லிவிட்டு, `இறைத்தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இது வெப்பமான வேளை!` என்றார். அப்போது அவர் தம் தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள், `இரவில் தோல் பையில் (ஊற்றி) வைத்த தண்ணீர் உம்மிடம் இருந்தால் (எங்களுக்குத் தாருங்கள்). இல்லாவிட்டால் நாங்கள் (இரைத்து ஊற்றப்பட்டுள்ள இந்த நீரைத் தொட்டியில்) வாய்வைத்துக் குடித்துக்கொள்கிறோம்` என்று கூறினார்கள்.
(தம்) தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அந்த அன்சாரி, `இறைத்தூதர் அவர்களேஸ இரவில் தோல் பையில் (ஊற்றி) வைக்கப்பட்ட தண்ணீர் என்னிடம் உள்ளது` என்று கூறியபடி பந்தலை நோக்கி நடந்தார். பின்னர் அவர் கிண்ணமொன்றில் தண்ணீர் ஊற்றிப் பிறகு அதன் மீது தம் வீட்டு ஆட்டிலிருந்து பால் கறந்து (அதில் கலந்து)விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (அதைப்) பரும்னார்கள்.
பிறகு மறுபடியும் அவர் கொண்டு வந்தார். (அதை) நபி(ஸல்) அவர்களுடன் வந்திருந்த மனிதர் பரும்னார்.42
Book : 74
பாடம் : 21 சிறியோர், பெரியோருக்குப் பணிவிடை செய்வது.
5622. அனஸ்(ரலி) கூறினார்
நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரிடையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு நிறம் மாறிய பேரீச்சங்க காய்களால் ஆன மதுவை ஊற்றிக் கொண்டிருந்தேன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாக இருந்தேன். அப்போது `மது தடைசெய்யப்பட்டுவிட்டது` என்று சொல்லப்பட்டது. உடனே (என் உறவினர்கள்)` அதைக் கவிழ்த்து (கொட்டி)விடு` என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் கவிழ்த்து(க கொட்டி) விட்டோம்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அல்பஸரீ(ரஹ்) கூறினார்:
நான் அனஸ்(ரலி) அவர்களிடம், `அவர்களின் மது எத்தகையது?` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `பேரீச்சச் செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்` என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் இப்னு அனஸ்(ரஹ்), `(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது` என்று கூறினார்கள். அனஸ்(ரலி) அதை மறுக்கவில்லை.
என் தோழர்களில் ஒருவர் கூறினார்: அனஸ்(ரலி), `அதுதான் அவர்களின் அன்றைய மதுபானமாக இருந்தது` என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.43
Book : 74
பாடம் : 22 பாத்திரத்தை மூடிவைத்தல்
5623. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
`இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால்` அல்லது `அந்திப் பொழுதாம்விட்டால்` உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடிவையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.44
Book : 74
5624. ஜாபிர்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , `நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்` என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.
Book :74
பாடம் : 23 தண்ணீர் தோல் பைகளை வெளிப் பக்கமாகச் சுருட்டிவிட்டு அதில் வாய் வைத்து அருந்துவது.45
5625. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை `இக்தினாஸ்` செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அதாவது அவற்றின் வாய்ப் பகுதியை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதிலிருந்து நீர் பருகுவதைத் தடை செய்தார்கள்.
Book : 74
5626. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை `இக்தினாஸ்` செய்ய வேண்டாமெனத் தடை விதிப்பதை கேட்டுள்ளேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்) கூறினார்.
` `இக்தினாஸ்` என்றால், தோல் பைகளின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து பருகுவதாகும்` என மஅமர்(ரஹ்) அவர்களோ, மற்றவர்களோ அறிவித்தார்கள்.
Book :74
பாடம் : 24 தண்ணீர் தோல் பையின் வாயிலிருந்து குடிப்பது.46
5627. அய்யூப்(ரஹ்) கூறினார்
இக்ரிமா(ரஹ்) எங்களிடம் `அபூ ஹுரைரா(ரலி) அறிவித்த சிறுசிறு விஷயங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?` (என்று கேட்டுவிட்டு) `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தோலால் ஆன தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்றும், ஒருவர் தம் அண்டைவீட்டார் தம் வீட்டுச் சுவரில் (உத்திரம் முதலிய) மரக் கட்டையைப் பதிப்பதைத் தடுக்க வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்` என்று கூறினார்கள்.
Book : 74
5628. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர் அருந்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
Book :74
5629. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாயிலிருந்து (தண்ணீர்) குடிக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
Book :74
பாடம் : 25 (பருகும்) பாத்திரத்தில் மூச்சு விடலாகாது.47
5630. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
நீங்கள் (ஏதேனும்) பருகும்போது பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம். நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது உங்கள் பிறவி உறுப்பை வலக்கையால் தொடவேண்டாம். நீங்கள் சுத்தம் செய்யும்போது வலக் கையால் சுத்தம் செய்ய வேண்டாம்.
என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.48
Book : 74
பாடம் : 26 இரண்டு அல்லது மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது.
5631. ஸுமாமா இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்
(என் பாட்டனார்) அனஸ்(ரலி) பாத்திரத்தில் (பருகும்போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பரும்) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பரும்) வந்ததாகக் கூறினார்கள்.49
Book : 74
பாடம் : 27 தங்கப் பாத்திரத்தில் பருகுதல்50
5632. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்
ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) (இராக்கில் உள்ள) `அல்மதாயின்` (தைஃபூன்) நகரத்தில் இருந்தார்கள். அப்போது பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூலியான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரம் (ஒன்றில் தண்ணீர்) கொண்டு வந்தார். ஹுதைஃபா(ரலி) அதை அவரின் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) `நான் இவரை(ப் பலமுறை தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்த்துக் கொள்ளாததால் தான் நான் இதை அவரின் மீது வீசியெறிந்தேன். நபி(ஸல்) அவர்கள் சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியக் கூடாதென்றும் தங்கம் மற்றம் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். மேலும், அவர்கள், `அவை இம்மையிலும் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்` என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.51
Book : 74
பாடம் : 28 வெள்ளிப் பாத்திரங்கள்
5633. இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்
நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களுடன் புறப்பட்டோம். அவர்கள், `தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள். (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கம், மறுமையில் (இறைநம்பிக்யாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்.52 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள்.
Book : 74
5634. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான்.
இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
Book :74
5635. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள். நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும் படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் -எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும், விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், சலாம் எனும் முகமனைப் பரப்பும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
மேலும், (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், (யாரும்) வெள்ளிப் பாத்திரத்தில் நீர் அருந்த வேண்டாமென்றும், மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும், சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.53
Book :74
பாடம் : 29 கிண்ணங்களில் அருந்துவது
5636. உம்முல் ஃபள்ல்(ரலி) கூறியாவது:
(ஹஜ்ஜின்போது) நபி(ஸல்) அவர்கள் `அரஃபா` (துல்ஹஜ்9ஆம்) நாளில் நோன்பு நோற்றிருந்தார்களா என மக்கள் சந்தேகப்பட்டனர். எனவே, அவர்களிடம் பால் கிண்ணம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் பரும்னார்கள்.54
Book : 74
பாடம் : 30 நபி (ஸல்) அவர்களின் கிண்ணத்திலும் அவர்களின் பாத்திரங்களிலும் அருந்துவது. அபூபுர்தா ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பருகிய கிண்ணத்தில் உங்களுக்கு நான் பருகத் தரட்டுமா என்று கேட்டார்கள்.55
5637. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து `பனூ சாஇதா` குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், `உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்` என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் `என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்` என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), `இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?` என்று கேட்க, அவள் `தெரியாது` என்று பதிலளித்தாள். மக்கள், `இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்` என்று கூறினார்கள். அந்தப் பெண் `அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே` என்று (வருத்தத்துடன்) கூறினாள். 56
நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் முன்னே சென்று `பனூ சாஇதா` குலத்தாரின் சமுதாயக் கூடத்தில் அமர்ந்தார்கள். பிறகு `எங்களுக்குப் பருக (ஏதேனும்) கொடுங்கள். சஹ்லே!` என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குப் புகட்டினேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்:
ஸஹ்ல்(ரலி) அந்தக் கிண்ணத்தை எங்களுக்காக வெளியே எடுக்க அதில் நாங்கள் பரும்னோம். பிறகு உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்.
Book : 74
5638. ஆஸிம் அல்அஹ்வல்(ரஹ்) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களின் கிண்ணம் ஒன்றை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கண்டேன். அது பிளந்து விட்டிருந்தது. அதை அவர்கள் வெள்ளியால் ஒட்டவைத்தார்கள். அது ஒரு வகை சவுக்கு மரத்தால் செய்யப்பட்ட அகலமான உயர்ரகக் கிண்ணமாகும். அனஸ்(ரலி), `நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இந்தக் கிண்ணத்தில் இத்தனை இத்தனை முறைகளைவிட அதிகமாகப் பருகக் கொடுத்துள்ளேன்` என்று கூறினார்கள்.57
முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) கூறினார்.
அந்தக் கிண்ணத்தில் இரும்பு வளையம் ஒன்றிருந்தது. அனஸ்(ரலி) அதனிடத்தில் தங்க வளையம் அல்லது வெள்ளி வளையம் ஒன்றை வைக்க விரும்பினார்கள். அப்போது அபூ தல்ஹா(ரலி), `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த எதையும் நீங்கள் மாற்றாதீர்கள்` என்று (அனஸ்(ரலி) அவர்களிடம்) கூற, அனஸ்(ரலி) அதை (மாற்றாமல்)விட்டுவிட்டார்கள்.
Book :74
பாடம் : 31 வளம் (பரக்கத்) மிக்கத் தண்ணீரும் அதை அருந்துவதும்.
5639. ஜாபிர்(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது அஸ்ர் தொழுகை நேரம் வந்துவிட்டது. அப்போது மிச்சமிருந்த சிறிதுத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை. அது ஒரு பாத்திரத்தில் ஊற்றப்பட்டு நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அதில் தம் கையை நுழைத்துத் தம் விரல்களை விரித்தார்கள். பிறகு அவர்கள், `அங்கசுத்தி (உளூ) செய்பவர்களே! தண்ணீரிடம் வாருங்கள். இந்த வளம் (பரக்கத்) அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும்` என அழைத்தார்கள். அவர்களின் விரல்களுக்கிடையே இருந்து தண்ணீர் பீறிட்டுப் பாய்வதை கண்டேன் மக்கள் (அதில்) அங்க சத்தி செய்து அதை அருந்தவும் செய்தார்கள். நான் அதை வயிறு நிரம்ப அருந்துவதில் குறை வைக்கவில்லை. ஏனெனில், அது வளம் (பரக்கத்) மிக்கது என நான் அறிந்திருந்தேன்.
அறிவிப்பாளர் சாலிம்(ரஹ்) கூறினார்:
நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், `நீங்கள் அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்?` என்று கேட்க, `நாங்கள் ஆயிரத்து நான}று பேர் இருந்தோம்` என்று கூறினார்கள்.
இதே ஹதீஸ் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றில் ஜாபிர்(ரலி), `நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தோம்` என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
Book : 74

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.