72. (உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்

பாடம் : 1 வேட்டைப் பிராணியின் மீது (அம்பு எய்யும் போது) அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்") கூறுவது. உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் (சுலபமாக) அடையக்கூடிய வேட்டைப் பிராணிகளில் ஒன்றின் மூலம் அல்லாஹ் உங்களை நிச்சயமாகச் சோதிப்பான். (5:94)2 (இறைநம்பிக்கையாளர்களே!) உங்கள் மீது (தடைவிதித்துக்) கூறப்பட்டிருப்பவை தவிர மற்ற நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) அனுமதிக்கப்பட்டுள்ளன.(5:1) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (5:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்உகூத்" (ஒப்பந்தங்கள்) எனும் சொல் அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) என்றும், தடை விதிக்கப்பட்டவை (ஹராம்) என்றும் அறியப்பட்டவற்றைக் குறிக்கும். (இதே வசனத்தில் இடம்பெற்றுள்ள) உங்கள் மீது (தடைவிதித்துக்) கூறப்பட்டவை" என்பது பன்றியைக் குறிக்கும். (5:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா யஜ்ரிமன்னகும் ஷனஆனு கவ்மின்" எனும் தொடருக்கு அந்த மக்கள் மீதுள்ள விரோதம் உங்களைத் தூண்டிவிட வேண்டாம்" என்று பொருள். (5:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முன்கனிக்கா எனும் சொல்லுக்குக் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது" என்று பொருள். அல்மவ்கூதா" என்பது தடியால் பலமாக அடித்துக் கொல்லப்பட்டதைக் குறிக்கும். அல்முத்தரத்தியா" என்பது மலையிலிருந்து விழுந்து செத்துப்போனதைக் குறிக்கும். அந்நத்தீஹா" என்பது மற்ற விலங்குகளின் கொம்பால் குத்தப்பட்டு இறந்ததாகும். ஆனால், (இந்தப் பிராணிகளில்) இன்னும் தனது வாலையோ அல்லது கண்களையோ அசைத்துக் கொண்டு (குற்றுயிராக) இருக்கும் பிராணியை நீங்கள் கண்டால் அதை (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுத்து நீங்கள் சாப்பிடலாம்.
5475. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
இறகு இல்லாத அம்பின் (`மிஅராள்`) மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். `பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)` என்று பதிலளித்தார்கள்.
நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், `உங்களுக்காக அது கவ்விக்கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும் `உங்களின் நாயுடன்` அல்லது `உங்கள் நாய்களுடன்` வேறோரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களின் நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களின் நாயை அனுப்பியபோதுதான் வேறொரு நாய்க்காக அல்ல` என்று பதிலளித்தார்கள்.
Book : 72
பாடம் : 2 இறகு இல்லாத அம்பினால் (மிஅராள்") வேட்டையாடப்பட்ட பிராணி. களிமண் குண்டு, அல்லது ஈயக்குண்டு (அல்புந்துகா") மூலம் (வேட்டையாடிக்) கொல்லப்பட்ட பிராணி குறித்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது (மவ்கூதா")போன்றே (விலக்கப்பட்டது) ஆகும் என்று குறிப்பிட்டார்கள். இந்தக் குண்டினால் கொல்லப்பட்ட பிராணியை உண்பதை சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்),காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்), முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்),அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) மற்றும் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) ஆகியோர் வெறுத்துள்ளனர். ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் சிற்றூர்களிலும் நகரங்களிலும் இந்தக் குண்டை எறி(ந்து வேட்டையாடு)வதை விரும்பவில்லை. (மனித நடமாட்டமில்லாத) மற்ற இடங்களில் அதை உபயோகிப்பதை அவர்கள் தவறாகக் கருதவில்லை.
5476. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு (`மிஅராள்` மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், `அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது(போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்` என்று கூறினார்கள்.
நான், `என்னுடைய நாயை (வேட்டைக்காக) அவிழ்த்துவிட்டேன். (அது வேட்டையாடியக் கொண்டு வருவதை நான் சாப்பிடலாமா)?` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாளை அவிழ்த்துவிட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்` என்று பதிலளித்தார்கள்.
நான், `அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்...?` என்று கேட்டேன். அவர்கள், `அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது` என்று பதிலளித்தார்கள்.
`நான் என்னுடைய நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்... (இப்போது என்ன செய்வது? அது வேட்டையாடி வந்த பிராணியை நான் உண்ணலாமா?)` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களின் நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை` என்று பதிலளித்தார்கள்.
Book : 72
பாடம் : 3 இறகு இல்லாத அம்பின் பக்கவாட்டினால் வேட்டையாடப்பட்ட பிராணி.
5477. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான், `இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடியக் கொண்டு வருகிறவற்றை நாங்கள் உண்ணலாமா?)` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `அவை உங்களுக்காக (வேட்டையாடிக்) கவ்விப் பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்` என்று பதிலளித்தார்கள்.
நான், `(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே` என்று பதிலளித்தார்கள்.
நான், `நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகளின் மீது) எய்கிறோமே! (அதன் சட்டம் என்ன?)` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `அது (தன்னுடைய முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்` என்ற கூறினார்கள்.
Book : 72
பாடம் : 4 வில்லால் வேட்டையாடுவது ஹஸன் அல்பஸரீ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (அம்பு போன்ற ஆயுதத்தால்) ஒரு வேட்டைப் பிராணியைத் தாக்கியதால் அதன் கை, அல்லது கால் துண்டாகி விழுந்துவிட்டால் துண்டான உறுப்பைச் சாப்பிடாதீர்கள்! உட-ன் மற்ற பகுதிகளைச் சாப்பிடுங்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், நீங்கள் வேட்டைப் பிராணியின் கழுத்தையோ அதன் நடுப் பகுதியையோ தாக்கியிருந்தால் அதை உண்ணுங்கள் என்றார்கள். ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கு (அவர் வேட்டையாடச் சென்ற காட்டு)க் கழுதை ஒன்று அடங்க மறுத்தது. ஆகவே, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்) அவர்களால் இயன்ற முறையில் அதைத் தாக்கும்படி கட்டளையிட்டு, அதிலிருந்து (துண்டாகி) விழுவதை விட்டுவிடுங்கள். (மற்றதை) உண்ணுங்கள் என்று சொன்னார்கள்.
5478. அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார்
நான், `அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களின் பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா?6 மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கிறோம். நான் என்னுடைய வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்?` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `நீங்கள் குறிப்பிட்ட வேதக்காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் (அதைச்) சாப்பிடுங்கள்` என்று கூறினார்கள்.
Book : 72
பாடம் : 5 சிறு கற்களாலும் களிமண் குண்டு அல்லது ஈயக் குண்டாலும் வேட்டையாடுவது.7
5479. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்
நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், `சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்` அல்லது `சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்`. மேலும், நபி அவர்கள் `அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)` என்று கூறினார்கள்` எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் `சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்` அல்லது `சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்` என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்` என்று சொன்னேன்.
Book : 72
பாடம் : 6 வேட்டையாடுவதற்காகவோ கால்நடை களைப் பாதுகாப்பதற்காகவோ அல்லாமல் (தக்க காரணமின்றி) நாய் வைத்திருப்பது.
5480. & 5481. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு `கீராத்`கள் அளவு குறைந்து விடும்.8
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நாய் வைத்திருப்பவரின் (நற்செயல்களுக்குரிய) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் குறைந்துவிடும்; பிராணிகளை வேட்டையாடும் நாயையும், கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் தவிர.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 72
5482. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் அளவிற்குக் குறைந்துவிடும்; கால்நடையைப் பாதுகாக்கும் நாயையும் வேட்டையாடும் நாயையும் தவிர!
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :72
பாடம் : 7 வேட்டை நாய் (தான் வேட்டையாடிய பிராணியைத்) தின்றுவிட்டால் (அப் பிராணியை உண்பது கூடாது). உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) தமக்கு அனுமதிக்கப்பட்ட உண் பொருள் எது என அவர்கள் உம்மிடம் வினவு கின்றார்கள். நீங்கள் கூறுங்கள்: தூய்மையான பொருட்கள் (அனைத்தும்) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து நீங்கள் கற்பித்துப் பயிற்சியளித்த (வேட்டை விலங்கு முதலான)வை எதை உங்களுக்காகக் கவ்விக் கொண்டுவந்தனவோ அதையும் நீங்கள் உண்ணுங்கள். அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள். நிச்சயம் அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன் (5:4). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஜவாரிஹ்" எனும் சொல்லுக்கு வேட்டையாடி உழைக்கும் நாய்கள்"என்று பொருள். (இதன் வினைச் சொல்லும், 45:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) இஜ்தரஹூ"எனும் சொல்லுக்கு செய்தவர்கள்" என்று பொருள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: வேட்டைப் பிராணியை வேட்டை நாய் தின்றுவிட்டால் அது அதைக் கெடுத்து விட்டது (என்று பொருள்). அது தனக்காகவே அதைப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது. (எனவே, அதை உண்ணலாகாது.) உங்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததிலிருந்து அதற்கு நீங்கள் கற்றுத்தந்திருக்கிறீர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே, வேட்டை நாயை அடித்துத் திருத்தி அப்பிராணியை அது (தன் எசமானுக்காக) விட்டுவிடும் வரை அதற்குப் பயிற்சியளிக்க வேண்டும். நாய் தின்ற வேட்டைப் பிராணியை (உண்பதை) இப்னு உமர் (ரலி) அவர்கள் வெறுத்திருக்கிறார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், வேட்டை நாய், தான் வேட்டையாடிய பிராணியின் இரத்தத்தை மட்டுமே குடித்தி ருந்து (இறைச்சியைத்) தின்னாமல் இருந்தால் அப்போது அந்தப் பிராணியை உண்ணலாம் என்று கூறுகிறார்கள்.
5483. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
`நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்` என்று நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், `பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டையாடியக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள்!9
Book : 72
பாடம் : 8 (காயமடைந்த) வேட்டைப் பிராணி இரண்டு மூன்று நாட்கள் கழித்து (இறந்த நிலையில்) காணப்பட்டால்...?
5484. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களின் (வேட்டை) நாயை (வேட்டையாட) அனுப்பி, அது வேட்டைப் பிராணியைக் கவ்விப் பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். அது (அந்தப் பிராணியைத்) தின்றிருந்தால் நீங்கள் அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அப்போது அது அந்தப் பிராணியைத் தனக்காகவே பிடித்து வைத்துக்கொண்டுள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப்படாத பல நாய்களுடன் உங்கள் வேட்டை நாயும் கலந்துவிட அவை (அப்பிராணியைப்) பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அப்பிராணியைக் கொன்றது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒன்று அல்லது இரண்டு நாள்கள் கழித்து அதன் மீது உங்கள் அம்பின் அடையாளத்தைத் தவிர வேறெதுவுமில்லாதிருக்க நீங்கள் அதைக் கண்டால் அதை நீங்கள் உண்ணலாம். அது தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். (ஏனெனில், அது தண்ணீரில் விழுந்ததால் இறந்திருக்கலாம்.)
என அதீபின் ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
Book : 72
5485. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான், `ஒருவர் ஒரு வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து, (அது தலைமறைவாகி விட) இரண்டு அல்லது மூன்று நாள்கள் அவர் அதன் கால் சுவட்டைத் தொடர்ந்து சென்று தம் அம்பு அதன் உடலில் இருக்க, அது இறந்திருக்கக் கண்டால் (அவர் அதை உண்ணலாமா?)` என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `(கெட்டுப் போகாமல் இருக்கையில்) அவர் விரும்பினால் உண்ணலாம்` என்று பதிலளித்தார்கள்.
Book :72
பாடம் : 9 வேட்டைப் பிராணியுடன் மற்றொரு நாயைக் கண்டால்...?
5486. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான், `இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்வின் பெயர் கூறி என்னுடைய (வேட்டை) நாயை (வேட்டையாடி வர) அனுப்புகிறேன். (என்றால் அதன் சட்டம் என்ன?)` என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `நீங்கள் உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்ப, அது (ஒரு பிராணியைப்) பிடித்து அதைக் கொன்றது மட்டுமின்றி, (அதிலிருந்து சிறிது) தின்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், அப்போது அது (அப்பிராணியைத்) தனக்காகவே கவ்விக்கொண்டுள்ளது` என்று பதிலளித்தார்கள்.
`நான் என்னுடைய நாயை (வேட்டையாட) அனுப்புகிறேன். (வேட்டையாடியத் திரும்பும் போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன். அவ்விரு நாய்களில் எந்த நாய் அந்தப் பிராணியைப் பிடித்தது என்று எனக்குத் தெரியாது (இந்நிலையில் என்ன செய்வது?)` என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `(அதை) நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் நாயின் மீதுதான்; மற்றதன் மீது நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லவில்லை` என்று பதிலளித்தார்கள்.
இறகு இல்லாத அம்பின் (`மிஅராள்`) மூலம் வேட்டையாடுவது குறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், `அம்பின் முனையால் அதனை நீங்கள் தாக்கிக் கொன்றிருந்தால், (அதை) நீங்கள் உண்ணலாம். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கியிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டதுதான் (என்றே கருதப்படும்). எனவே, நீங்கள் (அதை) உண்ணாதீர்கள்` என்று பதிலளித்தார்கள்.
Book : 72
பாடம் : 10 வேட்டையாடும் பழக்கம் குறித்து வந்துள்ளவை.10
5487. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான் அல்லாஹ்வின் (தூதர்) அவர்களிடம் (வேட்டையாடுவது குறித்து) வினவினேன். `நாங்கள் இந்த நாய்களின் மூலம் வேட்டையாடுகிற சமுதாயத்தார் ஆவோம். (எனவே, அதன் சட்டத்தை எங்களுக்குக் கூறுங்கள்)` என்று சொன்னேன்.
அதற்கு அவர்கள், `பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் நாய்களை அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் அனுப்பியிருந்தால் அவை உங்களுக்காகக் கவ்விக்கொண்டு வந்தவற்றை நீங்கள் உண்ணலாம். ஆனால், நாய் (அதில் சிறிது) தின்றுவிட்டிருந்தால் (அதை) நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அப்போது நாய் (அப்பிராணியைத்) தனக்காகப் பிடித்து வைத்திருக்கலாம் என்று நான் அஞ்சுகிறேன். அதனுடன் வேறொரு நாய் கலந்துவிட்டால் (அவை வேட்டையாடிக் கொண்டுவரும் பிராணியை) நீங்கள் உண்ணாதீர்கள்` என்று கூறினார்கள்.
Book : 72
5488. அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, `இறைத்தூதர் அவர்களே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் வசிக்கிறோம்; அவர்களின் பாத்திரத்தில் சாப்பிடுகிறோம். மேலும், நான் வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் வசிக்கிறேன். நான் என்னுடைய வில்லாலும் வேட்டையாடுகிறேன். பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை அனுப்பியும் வேட்டையாடுகிறேன்; பயிற்சியளிக்கப்படாத நாயின் மூலமாகவும் வேட்டையாடுகிறேன். எனவே, இவற்றில் எது எங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை எங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை எனக்குத் தெரிவியுங்கள்` என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
வேதம் வழங்கப்பெற்றவர்களின் நாட்டில் நீங்கள் வசிப்பதாகவும் அவர்களின் பாத்திரத்தில் உண்பதாகவும் நீங்கள் சொன்னதைப் பொறுத்த அளவில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் உண்ணாதீர்கள். (வேறு பாத்திரம்) உங்களுக்குக் கிடைக்காவிட்டால், அதைக் கழுவிவிட்டு பின்னர் அதில் உண்ணுங்கள். வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் நிங்கள் வசிப்பதாகச் சொன்னதைப் பொறுத்த வரை, உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடியதை நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி (அறுத்து) பிறகு உண்ணலாம். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியதை அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் உண்ணலாம். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியது அறுப்பதற்கு ஏதுவாக (உயிர் பிரியாத நிலையில்) உங்களுக்குக் கிடைத்திருந்தால் அதை (அறுத்து) நீங்கள் உண்ணலாம்.
Book :72
5489. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
நாங்கள் `மர்ருழ் ழஹ்ரான்` எனுமிடத்தில் முயல் ஒன்றைத் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் களைத்துவிட்டனர். நான் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் பிடித்தேவிட்டேன். அதை எடுத்துக்கொண்டு அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் `அதன்பின்னர் சப்பைகளை` அல்லது `அதன் இரண்டு தொடைகளை` நபி(ஸல்) அவர்களுக்கு (அன்பளிப்பாக) அனுப்பி வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை ஏற்றார்கள்.12
Book :72
5490. அபூ கத்தாதா(ரலி) கூறினார்
(ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்ளுடன் (பயணத்தில்) இருந்தேன். நான் மக்கா (செல்லும்) சாலை ஒன்றில் இருந்தபோது (உம்ராவுக்காக) `இஹ்ராம்` கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின் தங்கி விட்டேன். அப்போது நான் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. இந்நிலையில் நான் (வழியில்) காட்டுக் கழுதையொன்றைக் கண்டு என்னுடைய குதிரையின் மீது நன்கு அமர்ந்து கொண்டு என் தோழர்களிடம் என் சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்தால் எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் என்னுடைய ஈட்டியை எடுத்துத் தரும்படி கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். எனவே, நானே அதையெடுத்து அந்தக் கழுதையைத் தாக்கிக் கொன்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் அதிலிருந்து உண்டார்கள். வேறு சிலர் (உண்ண) மறுத்துவிட்டனர். அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போய்ச்சேர்ந்தபோது அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். நபி(ஸல்) ஆவர்கள், `இதுவெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உண்ணக் கொடுத்த உணவாகும்` என்று பதிலளித்தார்கள்.13
Book :72
5491. அதாஉ இப்னு யஸார்(ரஹ்) அபூ கத்தாதா(ரஹ்) அவர்களிடமிருந்து இதே ஹதீஸை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பில், நபி(ஸல்) அவர்கள் `உங்களிடம் அதன் இறைச்சியில் ஏதேனும் (மீதி) உள்ளதா?` என்று கேட்டார்கள் என (அதிகப்படியாக) வந்துள்ளது.
Book :72
பாடம் : 11 மலைகளில் வேட்டையாடுதல்
5492. அபூ கத்தாதா(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே (`அல்கஹா` எனுமிடத்தில்) இருந்தேன். அப்போது மக்கள் (உம்ராவுக்காக) `இஹ்ராம்` கட்டியிருந்தார்கள். நான் `இஹ்ராம்` கட்டாமல் குதிரை மீது (பயணம் செய்துகொண்டு) இருந்தேன். நான் அதிகமாக மலையேறுபவனாக இருந்தேன். இந்நிலையில் மக்கள் ஆவலுடன் எதையோ பார்ப்பதைக் கண்டேன். நானும் கூர்ந்து கவனிக்கலானேன். அப்போது அங்கு ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. நான் மக்களிடம், `என்ன இது?` என்று கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்த காரணத்தினால்) `எங்களுக்குத் தெரியாது` என்றனர். நான், `இது ஒரு காட்டுக் கழுதை` என்று சொன்னேன். அப்போது மக்கள், `நீங்கள் பார்த்தது அதுதான்` என்று கூறினார்கள். நான் என்னுடைய சாட்டையை மறந்து விட்டிருந்தேன். எனவே, அவர்களிடம் `என் சாட்டையை எடுத்து என்னிடம் கொடுங்கள்` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `நாங்கள் உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவ மாட்டோம்` என்றனர். உடனே நானே இறங்கி அதை எடுத்தேன். பிறகு காட்டுக் கழுதையைப் பின்தொடர்ந்து சென்று தாக்கினேன். சிறிது நேரத்திற்குள் அதன் கால் நரம்புகளை வெட்டி (வீழ்த்தி)விட்டேன். பிறகு மக்களிடம் சென்று, `(இப்போது) எழுந்து, கழுதையை எடுத்துக் கொள்ளுங்கள்` என்று சொன்னேன். அதற்கு அவர்கள், `நாங்கள் அதைத் தொடமாட்டோம்` என்று கூறினர். எனவே, நானே அதைச் சுமந்து அவர்களிடம் கொண்டு சென்றேன். அவர்களில் சிலர் (அதை உண்ண) மறுத்துவிட்டனர். வேறு சிலர் உண்டனர். நான் `உங்களுக்காக நபி(ஸல்) அவர்களிடம் (இதன் சட்டம் என்ன என்று) கேட்டுத் தெரிந்துவருகிறேன்` என்று சொன்னேன். பிறகு நபி(ஸல்) அவர்களைச் சென்றடைந்து செய்தியை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம், `அதிலிருந்து உங்களிடம் ஏதேனும் எஞ்சியுள்ளதா?` என்று கேட்டார்கள். நான், `ஆம் (எஞ்சியுள்ளது)` என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், `உண்ணுங்கள்; அது அல்லாஹ் உங்களுக்கு உண்ணக் கொடுத்த உணவாகும்` என்று கூறினார்கள்.
Book : 72
பாடம் : 12 (இஹ்ராம் கட்டியுள்ள) உங்களுக்கும் இதர பயணிகளுக்கும் பயன் தரும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதை உண்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனும் (5:96ஆவது) வசனத் தொடர். உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஸைதுல் பஹ்ர்" (கடல்வேட்டை) எனும் சொல், வேட்டையாடப்பட்ட பிராணியையும் வ தஆமுஹு" (அதன் உணவு) என்பது, கரையில் ஒதுங்கிய (மீன் முத-ய)வற்றையும் குறிக்கும். அபூபக்ர் (ரலி) அவர்கள், செத்துப் போய் (நீரில்) மிதக்கும் உயிரினமும் அனுமதிக்கப்பட்டதே என்று கூறுகிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், வ தஆமுஹு" (அதன் உணவு) என்பது கட-ன் செத்த பிராணியைக் குறிக்கும். அவற்றில் நீ அருவருப்பாகக் கருதுவதைத் தவிர; விலாங்கு மீனை யூதர்கள் உண்ண மாட்டார்கள். ஆனால், நாம் அதை உண்போம் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழரான ஷுரைஹ் (ரலி) அவர்கள், கடலில் உள்ளவை அனைத்தும் அறுக்கப்பட்ட(தைப் போன்ற)வை தாம் என்று சொன்னார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் (கடல்) பறவைகளை அறுக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன் என்று கூறினார்கள். இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், ஆறுகள் மற்றும் வெள்ளப் பெருக்கினால் நிரம்பிய குளங்குட்டைகள் ஆகியவற்றின் வேட்டை(களான மீன் வகை)கள் கடல் வேட்டைப் பிராணிகளில் அடங்குமா? என்று கேட்டேன். அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். பிறகு இ(ந்த ஆற்று நீரான)து மதுரமானதும் குடிப்பதற்கு சுலபமானதும் ஆகும். இ(ந்தக் கடல் நீரான)து உவர்ப்பானதும் (தொண்டையைக்) கரகரக்கச் செய்யக் கூடியதும் ஆகும். (இருப்பினும்,) இந்த இரண்டிலிருந்தும் நீங்கள் புத்தம் புதிய (மீன்) இறைச்சியை உண்கிறீர்கள் எனும் (35:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் ளஅல்லது ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள்ன நீர் நாயின் தோலால் ஆன சேணம் பூட்டிய வாகனத்தின் மீது பயணம் செய்துள்ளார்கள். ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், என் வீட்டார் தவளைகளை உண்ணத் தயாராயிருந்திருந்தால் அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்திருப்பேன் என்று சொன்னார்கள். ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் ஆமையை உண்பதைத் தவறாகக் கருதவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், கடல் வேட்டைப் பிராணிகளை உண்ணலாம்; அதைப் பிடித்தவர் யூதராகவோ, கிறிஸ்தவ ராகவோ, (அக்னி ஆராதனை புரியும்) மஜூஸியாகவோ இருந்தாலும் சரி என்று சொன்னார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், முரீ" எனும் (போதை நீங்கிய) பானத்தைப் பற்றிக் கூறும் போது, மீன்களும் சூரிய வெப்பமும் இந்த மதுவை (போதையிழக்கச் செய்து) அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டன என்று சொன்னார்கள்.15
5493. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
`கருவேல இலை` (`கபத்`) படை(ப் பிரிவு)ப் போருக்கு நாங்கள் சென்றோம். (எங்களுக்கு) அபூ உபைதா(ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். (வழியில்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது செத்துப்போன பெரிய (திமிங்கல வகை) மீன் ஒன்று கரையில் ஒதுங்கியது. (அதற்கு முன்பு) அது போன்ற (பெரிய) மீன் காணப்பட்டதில்லை. அது `அம்பர்` என்றழைக்கப்படும். அதிலிருந்து நாங்கள் அரை மாதம் உண்டோம். அபூ உபைதா(ரலி) அதன் எலும்புகளில் ஒன்றை எடுத்து (நட்டு) வைத்தார்கள். வாகனத்தில் செல்பவர் அதன் கீழிருந்து சென்றார். (அந்த அளவுக்கு அந்த எலும்பு பெரியதாக இருந்தது.)
Book : 72
5494. ஜாபிர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் எங்களில் வாகனப் படைவீரர்களான முன்ன}று பேரை (ஒரு புனிதப் போருக்கு) அனுப்பினார்கள். எங்கள் (படைப் பிரிவின் தலைவராக) அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் ஒரு வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அப்போது எங்களுக்குக் கடும்பசி ஏற்பட்டது. (உணவு ஏதும் இல்லாததால்) கருவேலமரத்தின் இலைகளை நாங்கள் சாப்பிட்டோம். அதன் காரணமாக (எங்கள் படைக்கு) `கருவேல இலைப் படை` (ஜைஷுல் கபத்`) என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போது `அம்பர்` என்றழைக்கப்படும் பெரிய (திமிங்கல) மீன் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியது. அதை நாங்கள் அரை மாதம் வரை சாப்பிட்டோம். எங்கள் மேனிகள் செழுமையடையும் அளவிற்கு நாங்கள் அதன் கொழுப்பை எடுத்துப் பூசிக்கொண்டோம். அப்போது அபூ உபைதா(ரலி) அதன் விலா எலும்புகளில் ஒன்றையெடுத்து (பூமியில்) நட்டு வைக்க, அதன் கீழே வாகனத்தில் ஏறி ஒருவர் சென்றார். எங்களிடையே இருந்த ஒருவர் பசி கடுமையாக வாட்டியபோது மூன்று ஒட்டகங்களை அறுத்தார். மறுபடியும் இன்னும் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு அவரை (அப்படி அறுக்க வேண்டாமென) அபூ உபைதா(ரலி) தடுத்துவிட்டார்கள்.
Book :72
பாடம் : 13 வெட்டுக்கிளிகளை உண்பது
5495. இப்னு அபீ அவ்ஃபா(ரலி) கூறினார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் `ஏழு` அல்லது `ஆறு` புனிதப் போர்களில் கலந்து கொண்டோம். நபி(ஸல்) அவர்களுடன் நாங்களும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டு வந்தோம்.
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) முதலானோர் கூறுகிறார்கள்:
மற்றோர் அறிவிப்பில், `நபி(ஸல்) அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்துகொண்டோம்` என (ஆறா, ஏழா என்ற சந்தேகமின்றி) இப்னு அபீ அவ்ஃபா(ரலி) கூறினார்.
Book : 72
பாடம் : 14 (அக்னி ஆராதனை செய்யும்) மஜூஸி" களின் பாத்திரங்களைப் பயன்படுத்துவதும் செத்த பிராணிகள் குறித்த நிலையும்.
5496. அபூ ஸஅலபா அல்குஷ்னீ(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, `இறைத்தூதர் அவர்களே! நாங்கள் வேதம் வழங்கப் பெற்றவர்களின் நாட்டில் வசிக்கிறோம். எனவே, அவர்களின் பாத்திரங்களில் உண்கிறோம். மேலும், வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் நாங்கள் வசிக்கிறோம். நான் என்னுடைய வில்லாலும் வேட்டையாடுவேன்; பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை அனுப்பியும் நான் வேட்டையாடுவேன்; பயிற்சியளிக்கப்படாத என்னுடைய நாயின் மூலமாகவும் வேட்டையாடுவேன்` என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், `வேதம் வழங்கப் பெற்றவர்களின் நாட்டில் வசிப்பதாக நீங்கள் சொன்னதைப் பொறுத்த வரை (அதன் சட்டம் என்னவெனில்), மாற்று கிடைத்தபோதே தவிர, (வேறு எப்போதும்) அவர்களின் பாத்திரங்களில் நீங்கள் சாப்பிடாதீர்கள். மாற்று கிடைக்கவில்லையென்றால், அவர்களின் பாத்திரங்களை (நன்கு) கழுவிவிட்டு அவற்றில் சாப்பிடுங்கள். நீங்கள் வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் இருப்பதாகக் சொன்னதைப் பொறுத்த வரை (அதன் சட்டம் என்னவென்றால்,) நீங்கள் உங்கள் வில்லால் வேட்டையாடியதை அல்லாஹ்வின் பெயர் சொல்லிச் சாப்பிட்டுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் அனுப்பிய பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியதை உண்ணலாம். ஆனால், பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியது அறுப்பதற்கு ஏதுவாக (உயிருள்ள நிலையில்) உங்களுக்குக் கிடைத்திருந்தால் அதை (அறுத்து) நீங்கள் உண்ணலாம்` என்று கூறினார்கள்.
Book : 72
5497. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார்
கைபரை வெற்றிகொண்ட அன்ற மாலையில் மக்கள் நெருப்பு மூட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள், `நீங்கள் இந்த நெருப்பை எதற்காக மூட்டினீர்கள்?` என்று கேட்டார்கள். மக்கள், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிகளை சமைப்பதற்காக` என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், `அந்த அடுப்புகளில் இருப்பவற்றைக் கொட்டிவிட்டு, அவற்றின் பாத்திரங்களை உடைத்து விடுங்கள்` என்று கூறினார்கள். அப்போது மக்களிடையே இருந்த ஒருவர் எழுந்து, `பாத்திரங்களில் இருப்பவற்றைக் கொட்டிவிட்டு அவற்றை நாங்கள் கழுவி(ப் பயன்படுத்தி)க் கொள்ளலாமா?` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், `அவ்வாறே ஆகட்டும்` என்று கூறினார்கள்.19
Book :72
பாடம் : 15 அறுக்கப்படும் பிராணியை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுப்பதும், நினைவிருந்தும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிடுவதும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: பிராணியை அறுக்கும் போது (இறை நம்பிக்கையாளர்) ஒருவர் மறந்துபோய் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லவில்லை யென்றால் குற்றமாகாது. அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத பிராணியின் இறைச்சியை உண்ணாதீர்கள். அது (-அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சியை உண்பது-) பாவச் செயலாகும் (6:121). மறந்துவிட்டவன் பாவி எனக் குறிப்பிடப் பட மாட்டான். (தொடர்ந்து) அல்லாஹ் கூறுகின்றான்: திண்ணமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களுடன் (இது தொடர்பாக வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு வழிப்பட்டால், நிச்சயமாக நீங்களும் (அவர்களைப் போன்றே) இணைவைப்போர்தாம். (6:121)20
5498. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறினார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் துல்ஹுலைஃபாவில்ழூழூ இருந்தோம். அப்போது மக்களுக்குப் பசி ஏற்பட்டது. (இந்நிலையில்) எங்களுக்குச் சில ஒட்டகமும் ஆடுகளும் (போர்ச் செல்வத்திலிருந்து) கிடைத்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களின் பின் வரிசையில் இருந்தார்கள். எனவே, மக்கள் அவரசப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்துப்) பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதை அறிந்த) நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்துசேர்ந்து, பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்(டு அவற்றிலிருந்த இறைச்சிகள் வெளியே கொட்டப்பட்)டன. பிறகு நபி(ஸல்) அவர்கள் அவற்றைப் பங்கிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக்கினார்கள். அப்போது அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. மக்கள் (ஓடிப்போன) அந்த ஒட்டகத்தைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களுக்க அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. (நபித் தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அதை (ஓடவிடாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள், `வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்` என்று கூறினார்கள்.
நான் `(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால் அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்களே இல்லாத நிலையில் எதிரியை நாங்கள் சந்திக்க நேரிடுமோ என்று `அஞ்சுகிறோம்` அல்லது `உத்தேசிக்கிறோம்` எனவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?` என்று கேட்டேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், `இரத்ததைச் சிந்தச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில், அதை நீங்கள் உண்ணலாம். பல்லையும் நகத்தையும் (கொண்டு அறுப்பதைத்) தவிர. இதைப் பற்றி (இந்த இரண்டாலும் ஏன் அறுக்கலாகாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பற்களோ எலும்பாகும். நகங்களோ அபிசீனிய (எத்தியோப்பிய)ர்களின் கத்திகளாகும்` என்று கூறினார்கள்.
Book : 72
பாடம் : 16 ப-பீடங்கள் மற்றும் சிலைகளுக்காக அறுக்கப்பட்டவை.
5499. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமக்கு வேத அறிவிப்பு (`வஹீ`) அருளப்படுவதற்கு முன்பு (மக்கா அரும்லுள்ள) கீழ் `பல்தஹில்` ஸைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தமக்கு முன் வைக்கப்பட்ட குறைஷியரின்) பயண உணவு ஒன்றை ஸைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைல் அவர்களுக்கு முன் வைத்தார்கள். அதில் (பலிபீடங்களில் அறுக்கப்பட்டவற்றின்) இறைச்சி இருந்தது. எனவே, அதிலிருந்து உண்ண ஸைத் அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷியரிடம்), `நீங்கள் உங்கள் (சிலைகளுக்குப் பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை உண்ணமாட்டேன். (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் எதன் மீது கூறப்பட்டதோ அதைத் தவிர வேறெதையும் உண்ணமாட்டேன்` என்று கூறினார்கள்.
Book : 72
பாடம் : 17 அவர் (தனது குர்பானிப் பிராணியை) அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியது.
5500. ஜுன்தப் இப்னு சுஃப்யான் அல்பஜலீ(ரலி) கூறினார்
ஒரு (ஹஜ்ஜுப் பெரு) நாளின்போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தியாகப் பிராணிகளை அறுத்துக் குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களின் தியாகப் பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்துவிட்டனர். (தொழுகையிலிருந்து) திரும்பிய நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் `குர்பானி` கொடுத்துவிட்டிருப்பதைக் கண்டபோது, `தொழுகைக்கு முன் அறுத்துவிட்டவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். தொழும் வரை அறுத்திருக்காதவர் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்` என்று கூறினார்கள்.23
Book : 72
பாடம் : 18 (கூர்மையான) மூங்கில் கழி, வெள்ளைக் கல், இரும்பு ஆகியவற்றால் அறுக்கப் பட்டவை.24
5501. அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் இப்னு மாலிக்(ரஹ்) கூறினார்
என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்: எங்கள் பணிப்பெண் ஒருவர் `சல்உ` எனுமிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது தம் ஆடுகளில் ஒன்று சாகும் நிலையில் இருப்பதைப் பார்த்தார். உடனே ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்துவிட்டார். (விவரம் அறிந்த) நான் என் வீட்டாரிடம், `நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி நான் கேட்கும் வரை` அல்லது `நபி(ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி இது குறித்துக் கேட்கும் வரை` (இதைச்) சாப்பிடாதீர்கள்` என்று சொன்னேன்.
பிறகு `நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்` அல்லது `அவர்களிடம் ஆளனுப்பி வைத்தேன்`. அப்போது நபி(ஸல்) அவர்கள் அதைச் சாப்பிடுமாறு உத்தரவிட்டார்கள்.
Book : 72
5502. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்
கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் ஆடுகளை அவர்களின் அடிமைப் பெண் ஒருவர் மதீனாவின் கடைவீதிக்கு அருகில் `சல்உ` எனும் இடத்திலுள்ள சிறிய மலையொன்றில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடு ஒன்று காயமடைந்தது. உடனே அப்பெண் கல் ஒன்றை (கூர்மையாக) உடைத்து அதனால் அந்த ஆட்டை அறுத்தார். மக்கள் நபி(ஸல்)அவர்களிடம் இதைக் கூறி (இதை உண்ணலாமா என்று கேட்ட)னர். நபி(ஸல்) அவர்கள் அதை உண்ணும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
Book :72
5503. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், `இறைத்தூதர் அவர்களே! எங்களிடம் (கூரான) கத்திகள் இல்லையே` என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `இரத்ததைச் சிந்தக்கூடியது எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு)விட்டால் அதை நீங்கள் உண்ணலாம். நகத்தாலும் பல்லினாலும் (அறுக்கப்பட்டதைத்) தவிர. நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும். பல்லோ எலும்பாகும். (நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்திருந்த) ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதை ஒருவர் (அம்பெய்து) தடுத்து நிறுத்தினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வன விலங்குகளுக்கடையே கட்டுக்கடங்காதவை சில இருப்பதைப் போன்றே இந்த ஒட்டகங்களுக்கு இடையேயும் கட்டுக்கடங்காதவை சில உண்டு. எனவே, அவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்` என்று கூறினார்கள்.
Book :72
பாடம் : 19 (சுதந்தரமான) பெண் மற்றும் அடிமைப் பெண் அறுத்த பிராணி.
5504. கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
ஒரு பெண் ஓர் ஆட்டைக் (கூர்மையான) கல் ஒன்றினால் அறுத்தார். அது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அதை உண்ணும்படி உத்தரவிட்டார்கள்.
மற்றோர் அறிவிப்பில், `கஅப்(ரலி) அவர்களுக்குரிய அடிமைப் பெண் ஒருவர் (இவ்விதம் செய்தார்)` என அன்சாரிகளில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
Book : 72
5505. முஆத் இப்னு ஸஅத்(ரலி) அல்லது ஸஅத் இப்னு முஆத்(ரலி) கூறினார்
கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் அடிமைப் பெண் ஒருவர் `சல்உ` எனும் மலைப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அவற்றில் ஓர் ஆடு காயமுற்றது. உடனே அதைப் பிடித்து (கூர்மையான) கல் ஒன்றால் அப்பெண் அறுத்தார். (இது குறித்து) நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் `அதை நீங்கள் உண்ணலாம்` என்று கூறினார்கள்.
Book :72
பாடம் : 20 பல், எலும்பு, நகம் ஆகியவற்றால் (பிராணிகளை) அறுக்கலாகாது.
5506. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
இரத்தத்தை வடியச் செய்யும் (கூரிய ஆயுதம்) எதுவாயினும் அ(தனால் அறுக்கப்பட்ட)தை உண்ணுங்கள்; பல் மற்றும் நகம் (ஆகியவற்றால் அறுக்கப்பட்டதைத்) தவிர.
என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
Book : 72
பாடம் : 21 கிராமவாசிகள் முதலானோரால் அறுக்கப் பட்டவை.
5507. ஆயிஷா(ரலி) கூறினார்
ஒரு கூட்டத்தார் நபி(ஸல்) அவர்களிடம், `(கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டுவருகிறார்கள். (அதை அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?)` என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், `நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்` என்று பதில் கூறினார்கள்.
கேள்வி கேட்ட கூட்டத்தார் இறைமறுப்பை அப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.
இதே ஹதீஸ் வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 72
பாடம் : 22 வேதக்காரர்கள் அறுத்த பிராணிகளையும் அவற்றின் கொழுப்பையும் உண்ணலாம். அவர்கள் பகைநாட்டினராயினும், மற்றவர் களாயினும் சரியே. அல்லாஹ் கூறுகின்றான்: இன்று உங்களுக்குத் தூய்மையான பொருட்கள் அனைத்தும் அனுமதிக்கப் பட்டவையாக (ஹலாலாக) ஆக்கப்பட்டுள் ளன. வேதம் வழங்கப்பெற்றவர்களின் உணவு உங்களுக்கும், உங்கள் உணவு அவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (5:5) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அரபுக் கிறிஸ்தவர்கள் அறுத்த பிராணிகளை உண்பது தவறன்று. அல்லாஹ் அல்லாத வற்றின் பெயரால் அவை அறுக்கப்பட்டிருப்ப தாகக் கேள்விப்பட்டால் அதை உண்ண வேண்டாம். அப்படி கேள்விப்படவில்லை யென்றால் அல்லாஹ் அதை நமக்கு அனுமதித்துள்ளான். அவன் அவர்களுடைய இறைமறுப்பை அறிந்தும் உள்ளான். அலீ (ரலி) அவர்களைக் குறித்தும் இவ்வாறே (அவர்கள் கூறியதாக)அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களும், விருத்த சேதனம் (சுன்னத்) செய்யப்படாத வரால் அறுக்கப்பட்ட பிராணியை உண்பதில் தவறில்லை என்று கூறுகிறார்கள்.31 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (5:5ஆவது வசனத்திலுள்ள)அவர்களுடைய உணவு" என்பது அவர்களால் அறுக்கப்பட்ட பிராணிகளைக் குறிக்கும் என்று கூறுகிறார்கள்.
5508. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்
நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் கொழுப்பு நிரம்பிய தோல் பை ஒன்றை எறிந்தார். அதை எடுக்க நான் பாய்ந்து சென்றேன். அப்போது நான் திரும்பிப் பார்க்க, அங்கே நபி(ஸல்) அவர்கள் (நின்று கொண்டு) இருந்தார்கள். (என் ஆசை அவர்களுக்குத் தெரிந்துவிட்டால்) அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.
Book : 72
பாடம் : 23 வீட்டுப் பிராணிகளில் (கட்டுக்கடங்காமல்) வெருண்டோடக்கூடியவையும் காட்டு விலங்குகளாகவே கருதப்படும்.33 இதை (-கட்டுங்கடங்காத வீட்டுப் பிராணிகளைத் தாக்கிக் காயப்படுத்துவதை-) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அனுமதித் துள்ளார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உன் கைவசமுள்ள பிராணிகளில் உன்னைத் தோற்கவைப்பது வேட்டைப் பிராணி போன்றதாகும். கிணற்றில் விழுந்து விட்ட ஒட்டகத்தை உன்னால் முடிந்த விதத்தில் மீட்டு, அதை அறுத்து உண்ணலாம். அலீ (ரலி), இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோரும் இதே கருத்தைக் கொண் டுள்ளனர்.
5509. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறினார்
நான் (துல் ஹுலைஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது) `இறைத்தூதர் அவர்களே! (நம்மிடம் உள்ள கத்திகளால் ஒட்டகங்களை இன்று அறுத்துவிட்டால் அவற்றின் முனை மழுங்கி) நம்மிடம் கத்திகளே இல்லாத நிலையில் நாளை நாம் எதிரியைச் சந்திக்க நேருமே!` என்று சொன்னேன். அப்போது அவர்கள், `விரைவாக` அல்லது `தாமதமின்றி` (எதைக் கொண்டாவது அறுத்திடுங்கள்) இரத்தத்தை சிந்தச் செய்யும் (ஆயுதம்) எதுவாயினும் அதைக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். பல்லாலும் நகத்தாலும் அறுக்கப்பட்டதைத் தவிர! அவற்றைக் குறித்து உங்களுக்கு இதோ கூறுகிறேன்: பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும்` என்று கூறினார்கள்.
(அப்போது) நாங்கள் போர்ச் செல்வமாக ஒட்டகத்தையும் ஆட்டையும் பெற்றோம். அவற்றிலிருந்து ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதன் மீது ஒருவர் ஓர் அம்பை எய்து அதை (ஓடவிடாமல்) அவர் தடுத்து (நிறுத்தி)விட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , `வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை சில இருப்பதைப் போன்றே இந்த ஒட்டகங்களிலும் கட்டுக் கடங்காதவை உண்டு. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்` என்று கூறினார்கள்.
Book : 72
பாடம் : 24 நஹ்ரும் (ஒட்டகத்தின் கழுத்து நரம்பை அறுப்பதும்), தப்ஹும் (மற்றப் பிராணிகளின் குரல் வளைகளை அறுப்பதும்).35 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அதாஉ (ரஹ்) அவர்கள், குரல்வளையை அறுப்பதும் (தப்ஹ்), கழுத்து நரம்பை அறுப்பதும் (நஹ்ர்) அதனதன் இடத்தில் (-பிராணிகளில்-)தான் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்கள்; நான்,குரல்வளையை அறுக்கவேண்டிய பிராணியின் கழுத்து நரம்பை அறுத்தால் போதுமா? என்று கேட்டேன். ஆம். (போதும். கழுத்து நரம்பை அறுக்கவேண்டிய) பசுமாடு தொடர்பாக அல்லாஹ் குரல்வளையை அறுப்பது எனக் (குர்ஆனில்) குறிப்பிட்டுள்ளான். ஆகவே, கழுத்து நரம்பை அறுக்கவேண்டிய பிராணி யின் குரல்வளையை அறுத்தாலும் செல்லும். இருப்பினும், அதன் கழுத்து நரம்பை அறுப்பதே எனக்கு விருப்பமானதாகும். தப்ஹ்" என்பது (குரல்வளையை ஒட்டி இரு பக்கங்களிலும் உள்ள) இரு பெரிய நரம்புகளைத் துண்டிப்பதாகும் என்று சொன்னார்கள். நான், அந்தப் பெரிய நரம்புகளையும் தாண்டி (பின்) கழுத்து எலும்பைத் துண்டிக்க லாமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நான் அப்படிக் கருதவில்லை. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் கழுத்து எலும்பைத் துண்டிப்பதைத் தடை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள் கழுத்தெலும்புக்கு முன்புள்ள பகுதி வரைத் துண்டித்து, அது இறக்கும் வரை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று கூறினார்கள்" எனச் சொன்னார்கள் என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும் (இதையும் நினைவு கூருக:) மூசா தம் சமூகத்தாரிடம், நீங்கள் ஒரு பசு மாட்டை அறுக்க வேண்டும் (தப்ஹ்" செய்ய வேண்டும்) என்று திண்ணமாக அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகின்றான்என்று சொன்ன போது... மனமில்லாமலேயே அதை அவர்கள் அறுத்தார்கள் (2:67-71). சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஃதகாத்" (அறுத்தல்) என்பது குரல் வளையையும் கழுத்து நரம்பையும் அறுப்ப தாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் அனஸ் (ரலி) ஆகியோர் அறுக்கும் போது ஒருவர் தலையை (முற்றாகத்) துண்டித்துவிட்டாலும் பரவாயில்லை. (அந்தப் பிராணியை உண்ணலாம்) என்று கூறியுள்ளனர்.
5510. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து (`நஹ்ர்` செய்து) அதை உண்டோம்.
Book : 72
5511. அஸ்மா(ரலி) கூறினார்
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவில் இருந்தபோது குதிரையொன்றை (அதன் குரல் வளையை) அறுத்து (`தப்ஹ்` செய்து) அதை உண்டோம்.
Book :72
5512. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் குதிரையொன்றை (அதன் கழுத்து நரம்புகளை) அறுத்து (`நஹ்ர்` செய்து) அதை உண்டோம்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :72
பாடம் : 25 உயிருள்ள பிராணியின் அங்கங்களைச் சிதைப்பதும், அதைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதும்,பறவையைக் கூண்டில் அடைத்துவைத்து அம்பெய்து கொல்வதும் விரும்பத்தகாத செயல்களாகும்.
5513. ஹிஷாம் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார்
நான் (ஒரு முறை என் பாட்டனார்) அனஸ்(ரலி) அவர்களுடன் (பஸராவின் ஆட்சியரான) ஹகம் இப்னு அய்யூபிடம் சென்றேன். அங்கு சில `சிறுவர்கள்` அல்லது `இளைஞர்கள்` கோழியொன்றைக் கட்டி வைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்ததை அனஸ்(ரலி) `விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்` என்று கூறினார்கள்.
Book : 72
5514. ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) கூறினார்
இப்னு உமர்(ரலி) (என் தந்தையின் சகோதரர்) யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்களிடம் வந்தார்கள். அங்கு யஹ்யாவின் மக்களில் ஒரு சிறுவன் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தான். இப்னு உமர்(ரலி) அந்தக் கோழியை நோக்கிச் சென்று அதை அவிழ்த்துவிட்டார்கள். பிறகு அந்தக் கோழியையும் அந்தச் சிறுவனையும் தம்முடன் அழைத்துக்கொண்டு (யஹ்யா இப்னு ஸயீத் அவர்களிடம்) சென்று, `இந்தப் பறவையை அம்பெய்து கொல்வதற்காகக் கட்டிவைக்க வேண்டாமென்று உங்கள் சிறுவனைக் கண்டித்து வையுங்கள். ஏனெனில், ஒரு விலங்கையோ (பறவை போன்ற) வேறெதையுமோ கொல்வதற்காகக் கட்டி வைக்க வேண்டாமென்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்ததை கேட்டுள்ளேன்` என்று கூறினார்கள்.
Book :72
5515. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்
நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் `இளைஞர்கள் சிலரை அல்லது `மக்கள் சிலரைக்` கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்னு உமர்(ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியேவிட்டுவிட்டு கலைந்து சென்றுவிட்டனர். இப்னு உமர்(ரலி), `இதைச் செய்தது யார்? இவ்வாறு செய்பவர்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்` என்று கூறினார்கள்.
இதே ஹதீஸ் வேறு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்னு உமர்(ரலி) கூறினார்
பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
இதையே நபி(ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
Book :72
5516. அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள்.
Book :72
பாடம் : 26 கோழி இறைச்சி
5517. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் கோழி (இறைச்சி) உண்பதை பார்த்தேன்.
இதை ஸஹ்கம் அல்ஜர்மீ(ரஹ்) அறிவித்தார்.
Book : 72
5518. ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) கூறினார்
நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தோம். `ஜாம்` கூட்டத்தைச் சேர்ந்த எங்களக்கும் இந்த (அல்அரீ) கூட்டத்தாருக்குமிடையே சகோதரத்துவ உறவு (நட்பு) இருந்தது. அப்போது கோழி இறைச்சியுடன் உணவு கொண்டு வரப்பட்டது. மக்களிடையே சிவப்பான மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தார். (அவரை உணவு உண்ண அபூ மூஸா(ரலி) அழைத்தார்கள்.) ஆனால், அவர் உணவை நெருங்கவில்லை. அப்போது அபூ மூஸா(ரலி), `அருகில் வாருங்கள் (வந்து சாப்பிடுங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதைச் சாப்பிட நான் கண்டுள்ளேன்` என்று கூறினார்கள்.
அதற்கு அம்மனிதர், `இந்தக் கோழி (இனம், அசுத்தம்) எதையோ தின்பதை பார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே `இதை இனிமேல் உண்ணமாட்டேன்` என்று சத்தியம் செய்து விட்டேன்` என்று கூறினார்.
அதற்கு அபூ மூஸா(ரலி) `அருகில் வாருங்கள்; உங்களுக்கு (விவரமாக)த் தெரிவிக்கிறேன்` என்று கூறி(விட்டுப் பின் வருமாறு சொன்)னார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் சினத்துடன் இருந்தார்கள். தர்ம ஒட்டகங்களை அவர்கள் பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி அவர்களிடம் நாங்கள் வேண்டினோம். அப்போது அவர்கள் `உங்களைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் தர மாட்டேன்` என்று சத்தியம் செய்தார்கள். மேலும், `உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை` என்று கூறினார்கள்.
(சிறிது நேரத்திற்குப்) பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே (எங்களைக் குறித்து) `அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே? அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?` என்று (இரண்டு முறை) கேட்டுவிட்டு, (நாங்கள் வந்தபோது) எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை வழங்கினார்கள்.
நாங்கள் சிறிது நேரமே (அங்கு) இருந்திப்போம். அப்போது நான் என் தோழர்களிடம், `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நாம் ஏறிச் செல்ல ஒட்டகம் தரமாட்டேன் என்று செய்த) தம் சத்தியத்தை மறந்துவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களை, அவர்கள் செய்த சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பியிருந்தால் நாம் ஒருபோதும் வெற்றியடைய மாட்டோம்` என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது நாங்கள், `இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏறிச் செல்வதற்காகத் தங்களிடம் ஒட்டகம் கேட்டோம். அப்போது தாங்கள், எங்களை ஏற்றிச் செல்லும் ஒட்டகம் தரமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள். (ஆனால், பிறகு போரில் கிடைத்த ஒட்டகங்களை எங்களுக்குத் தந்தீர்கள்.) எனவே, நீங்கள் உங்களின் சத்தியத்தை மறந்துவிட்டீர்கள் என்று நாங்கள் எண்ணினோம்` என்று சொன்னோம்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ்வே உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பிடச் செய்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்துவிடுவேன்` என்று கூறினார்கள்.
Book :72
பாடம் : 27 குதிரை இறைச்சி
5519. அஸ்மா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் குதிரையொன்றை அறுத்து உண்டோம்.38
என ஃபாத்திமா பின்த் முன்திர்(ரஹ்) அறிவித்தார்.
Book : 72
5520. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள். குதிரையின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.39
என முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) அறிவித்தார்.
Book :72
பாடம் : 28 நாட்டுக் கழுதை இறைச்சி இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமி ருந்து சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.40
5521. இப்னு உமர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக்கூடாதெனத் தடை விதித்தார்கள்.
Book : 72
5522. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணவேண்டாமெனத் தடை செய்தார்கள்.
இதே ஹதீஸ் மற்ற அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :72
5523. அலீ(ரலி) கூறினார்
கைபர் போர் நடந்த ஆண்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இனி(த் தவணை முறைத் திருமணமான) `முத்ஆ` செய்யக்கூடாது என்றும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென்றும் தடை விதித்தார்கள்.
Book :72
5524. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை) உண்ணவேண்டாமென்று தடைசெய்தார்கள். குதிரைகளின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.
Book :72
5525. & 5526. 5526 பராஉ(ரலி) அவர்களும் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களும் கூறினார்கள்
நபி(ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
Book :72
5527. அபூ ஸ அலபா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்
நபி(ஸல்) அவர்கள், (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உடைய எதையும் உண்ண வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.
Book :72
5528. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
(கைபர் போரின்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, `கழுதைகள் உண்ணப்பட்டன` என்று கூறினார். பிறகு ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `கழுதைகள் உண்ணப்பட்டுவிட்டன` என்று கூறினார். மீண்டும் ஒருவர் வந்து, `கழுதை இறைச்சி (உண்டு) தீர்க்கப்பட்டுவிட்டது` என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மக்களிடையே அறிவிப்புச் செய்யும்படி) கட்டளையிட, அவரும் மக்களிடையே, `அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களை நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்கிறார்கள். ஏனெனில், அவை அசுத்தமானவையாகும்` என்று பொது அறிவித்தார். உடனே இறைச்சி வெந்து கொதித்துக்கொண்டிருந்த பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்டு (அதிலிருந்த இறைச்சி கொட்டப்பட்டு)விட்டது.
Book :72
5529. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்
நான் ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களிடம் `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளை உண்ணக் கூடாதெனத் தடை செய்திருப்பதாக (மக்கள்) கருதுகிறார்களே` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `ஹகம் இப்னு அம்ர் அல்கிஃபாரீ(ரலி) பஸராவில் வைத்து எம்மிடம் இதைச் சொல்லிவந்தார்கள். ஆனால், (கல்விக்) கடலான இப்னு அப்பாஸ்(ரலி) அதை மறுத்து, `(நபியே! இவர்களிடம்) கூறுங்கள்: எனக்கு அருளப்பெற்ற வேத அறிவிப்பில் (வஹீயில்), உண்பவர்களுக்கு எந்த உணவும் தடை செய்யப்பட்டதாக நான் காணவில்லை; செத்த பிராணியையும் சிந்தப்பட்ட இரத்தத்தையும் பன்றி இறைச்சியையும் தவிர. நிச்சயம் இவை அசுத்தமாகும்` எனும் (திருக்குர்ஆன் 06:145 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
Book :72
பாடம் : 29 விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள வற்றை உண்பது.
5530. அபூ ஸஅலபா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.46
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 72
பாடம் : 30 செத்த பிராணியின் தோல்
5531. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செத்த ஆடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது `இதன் தோலால் நீங்கள் பயனடையக் கூடாதா?` என்று கேட்டார்கள். மக்கள் `இது செத்துப்போனதாயிற்றே!` என்று கேட்க, அதற்கு அவர்கள், `இதை உண்பது தான் தடை செய்யப்பட்டுள்ளது` என்று பதிலளித்தார்கள்.47
Book : 72
5532. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செத்துப்போன பெட்டை வெள்ளாடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது `இதன் தோலால் பயன் அடைவதால் இதன் உரிமையாளர் மீது குற்றம் ஏதுமில்லை` என்று கூறினார்கள்.
Book :72
பாடம் : 31 கஸ்தூரி48
5533. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
இறைவழியில் (அறப்போரில்) காயப்படுத்தப்பட்டவர் தம் காயத்தில் இரத்தம் வழிய, மறுமை நாளில் (இறைவன் முன்னால்) வருவார். அவரின் (காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்த(ச் சிவப்பு) நிறமாயிருக்கும்; (அதன்) மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.49
Book : 72
5534. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.50
Book :72
பாடம் : 32 முயல்
5535. நாங்கள் `மர்ருழ் ழஹ்ரான்` எனுமிடத்தில் இருந்தபோது முயல் ஒன்றைச் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப்பிடிக்க முயன்று களைத்துவிட்டனர். நான் அதைப்பிடித்து (என் வளர்ப்புத் தந்தை) அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனை அறுத்து `அதன் இரண்டு பின் சப்பைகளையும்` அல்லது `அதன் இரண்டு தொடைகளையும்` (அன்பளிப்பாக) நபி(ஸல்) அவாக்ளுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.
Book : 72
பாடம் : 33 உடும்பு
5536. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`
உடும்பை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவுமாட்டேன்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 72
5537. காலித் இப்னு வலீத்(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அன்னாரின் துணைவியாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அப்போது பொரிக்கப்பட்ட உடும்புக் கறி கொண்டு வரப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கரத்தை அந்த உடும்பை நோக்கி நீட்ட (அங்கிருந்த) பெண்களில் ஒருவர், `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதைச் சாப்பிடப்போகிறார்கள் என்பதை அவர்களுக்கு (முன்பே) தெரிவித்துவிடுங்கள்` என்று கூறினார்.
அப்போது, `இது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!` என்று (அங்கிருந்தவர்கள்) கூறினார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கரத்தை (உடும்பைவிட்டு) எடுத்துவிட்டார்கள்.
அப்போது நான், `உடும்பு தடை செய்யப்பட்டதா, இறைத்தூதர் அவர்களே?` என்று கேட்டேன். அதற்கவர்கள், `இல்லை (தடை செய்யப்பட்டதன்று). ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை` என்று பதிலளித்தார்கள்.
நான் அதை (என் பக்கம்) இழுத்து வைத்துச் சாப்பிட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னைப்) பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
Book :72
பாடம் : 34 உறைந்த அல்லது உருகிய நெய்யில் எ- விழுந்துவிட்டால்...?53
5538. மைமூனா(ரலி) கூறினார்
(ஒரு முறை) எலி ஒன்று நெய்யில் விழுந்து இறந்துவிட்டது. (அந்த நெய்யை உண்ணலாமா? என்று) அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், `(உடயே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு அ(தில் மீதியுள்ள)தை உண்ணுங்கள்` என்று பதிலளித்தார்கள்.54
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:
இந்த ஹதீஸை ஸுஹ்ரீ(ரஹ்) உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவித்தார்கள். ஸுஹ்ரீயிடமிருந்து நான் இந்த ஹதீஸைப் பலமுறை செவியுற்றுள்ளேன்.
Book : 72
5539. யூனுஸ் இப்னு யஸீத்(ரஹ்) கூறினார்
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், எலி போன்ற உயிரினம் உறைந்த அல்லது உறையாத எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றில் விழுந்து இறந்துவிட்டால் (அப்பொருளை உண்ணலாமா?) என்பது குறித்து வினவப்பட்டது. அவர்கள், `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நெய்யில் (விழுந்து) இறந்துவிட்ட எலியையும் அதையொட்டி இருந்த நெய்யையும் (உடனே எடுத்து) எறியும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவை (எடுத்து) எறியப்பட்டன. பிறகு (அந்த மீதி நெய்) உண்ணப்பட்டது` என்று உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்துள்ள ஹதீஸ் குறித்து எங்களுக்குச் செய்தி எட்டியது` என்று பதிலளித்தார்கள்.
Book :72
5540. மைமூனா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்து (செத்து)விட்ட எலி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் `(உடனே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு (மீதி நெய்யை) உண்ணுங்கள்` என்று பதிலளித்தார்கள்.
Book :72
பாடம் : 35 பிராணிகளின் முகத்தில் அடையாளமிடல்.
5541. சாலிம்(ரஹ்) கூறினார்
இப்னு உமர்(ரலி) பிராணியின் முகத்தில் அடையாளமிடுவதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள், `பிராணிகளை அடிப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்` என்றும் கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் `(பிராணிகளின்) முகத்தில் அடிப்பதற்கு...` என வந்துள்ளது.
Book : 72
5542. அனஸ்(ரலி) கூறினார்
நான் என் (தாய்வழிச்) சகோதரன் ஒருவனை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். நபியவர்கள் இனிப்புப் பொருளைமென்று (குழந்தையாயிருந்த) அவனுடைய வாயிலிடுவதற்காக அவனை நான் கொண்டு சென்றபோது அவர்கள் தங்களின் (ஆட்டுத்) தொழுவம் ஒன்றில் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓர் ஆட்டிற்கு அதன் காதுகளில் அடையாளம் இட்டுக்கொண்டிருந்தைக் கண்டேன்.
Book :72
பாடம் : 36 ஒரு கூட்டத்தாருக்குக் கிடைத்த போர்ச் செல்வத்தில் ஓர் ஆட்டையோ, ஒட்டகத் தையோ அவர்களில் ஒருவர் மற்றவரின் அனுமதியின்றி அறுத்துவிட்டால் அதை உண்ணலாகாது. நபி (ஸல்) அவர்களிடமிருந்து ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள (பின்வரும்) ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும். தாவூஸ் (ரஹ்) அவர்களும் இக்ரிமா (ரஹ்) அவர்களும் திருடன் (திருடிக் கொண்டு வந்து) அறுத்த பிராணியைக் குறித்துக் கூறும் போது, அதை எறிந்துவிடுங்கள் என்று கூறினர்.
5543. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களிடம், `(இறைத்தூதர் அவர்களே! நாம் உணவுக்காக ஒட்டகங்களை அறுக்க நம் வாட்களை இன்று பயன்படுத்திவிட்டால் அவற்றின் கூர் மழுங்கி) நாளை நம்மிடம் (கூரான) வாட்களே இல்லாத நிலையில் எதிரியைச் சந்திக்க வேண்டிவருமே` என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `இரத்ததைச் சிந்தச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருந்தால் (அதை) உண்ணுங்கள். ஆனால், அது பல்லாலோ நகத்தாலோ மட்டும் அறுக்கப்பட்டிருக்கக் கூடாது. அது (ஏன் கூடாது என்பது) பற்றி இதோ நான் உங்களக்குக் கூறுகிறேன்: பல்லோ எலும்பாகும்; நகமோ அபிசீனியர்களின் கத்தியாகும்` என்று பதிலளித்தார்கள்.
மக்களில் அவசரப்பட்ட சிலர் (வேகமாக) முந்திச் சென்று போர்ச் செல்வங்களை எடுத்தார்கள். நபி(ஸல்) அவர்களோ மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். (போர்ச் செல்வமாகக் கிடைத்த பிராணிகளைப் பெற்ற) அந்த மக்கள் சமையல் பாத்திரங்களை (அடுப்புகளின் மீது) வைத்து (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் (பங்கிட்டுத் தருவதற்கு முன்பே இப்படி அவர்கள் செய்ததால்) அந்தப் பாத்திரங்களைக் கவிழ்த்து (அவற்றில் இருப்பவற்றைக் கொட்டி) விடும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன.
(பின்னர்) நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே (அச்செல்வங்களை) பங்கிட்டார்கள். அப்போது ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகளைச் சமமாக்கினார்கள். பிறகு (பங்கு வைக்கப்பட்ட) ஒட்டகம் ஒன்ற முன் வரிசையிலிருந்த மக்களிடையே இருந்து வெருண்டோடியது. அவர்களிடம் அப்போது (அதைப் பிடித்து வர) குதிரை எதுவும் இருக்கவில்லை. அப்போது ஒருவர் அதை நோக்கி ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அதைத் தடுத்து நிறுத்திவிட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள், `வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இந்தப் பிராணிகளிடையேயும் கட்டுக் கடங்காதவை உள்ளன. எனவே, இவற்றில் இப்படிக் கட்டுக்கடங்காமல் வெருண்டோடும் பிராணியை இதைப் போன்றே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்` என்று கூறினார்கள்.
Book : 72
பாடம் : 37 ஒரு கூட்டத்தாருக்குரிய ஒட்டகம் வெருண் டோடிட அவர்களில் ஒருவர் நன்மையை நாடி அதன் மீது அம்பெய்து அதைக் கொன்றுவிட்டால் அ(தை உண்ப)து செல்லும். நபி (ஸல்) அவர்களிடமிருந்து ராஃபிஉ (ரலி) அவர்கள் அறிவித்துள்ள (பின்வரும்) ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்:
5544. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒட்டகக் கூட்டத்திலிருந்து ஓர் ஒட்டகம் வெருண்டோடியது. அப்போது ஒருவர் அம்புகளை அதன் மீது எய்து அதைத் தடுத்து நிறுத்தினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் `வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இவற்றிலும் கட்டுக் கடங்காதவை உள்ளன. எனவே, இவற்றில் எது உங்களை மீறிச் செல்கிறதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்` என்று கூறினார்கள். நான், `இறைத்தூதர் அவர்களே! நாங்கள் புனிதப் போர்களிலும் பயணங்களிலும் இருப்போம். அப்போது நாங்கள் பிராணிகளை அறுக்க விரும்புவோம். (எங்களிடம்) கத்தி இருக்காது. (அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?)` என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `இரத்ததைச் சிந்தச் செய்யும் எதுவாயினும் அதைக்கொண்டு விரைவாக அறுத்திடுங்கள். (அதன் மீது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் (அதைச்) சாப்பிடுங்கள். பல்லாலும் நகத்தாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. ஏனெனில், பல் எலும்பாகும்: நகம் அபிசீனியர்களின் கத்தியாகும்` என்று பதிலளித்தார்கள்.
Book : 72

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.