பாடம் : 22 மனப்பாடமாகக் குர்ஆனை ஓதுதல்
5030. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்
ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்` என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தம் தலையைத் தொங்கவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்வில்லை என்பதைக் கண்ட அந்தப்பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, `இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள்!` என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், `(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?` என்று கேட்டார்கள். அதற்கவர், `அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே!` ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே!` என்றார். நபி(ஸல்) அவர்கள், உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!` என்றார்கள். அவரும் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, `அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை இறைத்தூதர் அவர்களே!` என்று கூறினார். `இரும்பாலான ஒரு மோதிராவது கிடைக்குமா என்று பார்!` என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பிவந்து, `இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால், இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது` என்று கூறினார்.
-அறிவிப்பாளர் ஸஹ்ல்(ரலி) கூறினார்: அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. எனவேதான் தன்னுடைய வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார். -
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , `இந்த வேட்டியை நீர் அணிந்தால், அவளின் மீது ஏது இருக்காது. அவள் அணிந்தால், உம்மீது ஏதும் இருக்காது. (ஒரு வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்?)` என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்துகொண்டார். பிறகு, அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்டபோது, `உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது` என்று கேட்டார்கள். அவர், `இன்ன , இன்ன , இன்ன என்னுடன் உள்ளன` என்று எண்ணி எண்ணிக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், `அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?` என்று கேட்டார்கள். அவர், `ஆம் (ஓதுவேன்)` என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், `உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்!` என்று கூறினார்கள்.
Book : 66