6. மாதவிடாய்

பாடம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால்
294. `நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். `ஸரிஃப்` என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, `உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?` என்று கேட்டார்கள். நான் `ஆம்!` என்றேன். `இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்` என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் `குர்பானி` கொடுத்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 2 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் தன் கணவரின் தலையைக் கழுவுவதும் அவரது தலைமுடியை வாரிவிடுவதும்.
295. `நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
296. `ஒருவர் `தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?` என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா `அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்` என்றார்" என ஹிஷாம் அறிவித்தார்.
Book :6
பாடம் : 3 மாதவிடாய் நிலையிலுள்ள தம் மனைவியின் மடியில் தலைவைத்த வண்ணம் ஒருவர் திருக்குர்ஆன் ஓதுவது. அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் மாதவிடாய் நிலையிலிருக்கும் தம் பணிப் பெண்ணை (தம் முன்னாள் அடிமையான) அபூரஸீன் (மஸ்ஊத்பின் மாலிக் - ரஹ்) அவர்களிடம் அனுப்பிவைத்து,திருக்குர்ஆனை வாங்கி வரச் சொல்வார்கள். அவள் அந்தக் குர்ஆனைக் கட்டியிருக்கும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர்களிடம் வருவாள்.
297. `எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 4 பிரசவத் தீட்டைக் குறிக்கும் நிஃபாஸ் எனும் சொல்லை மாதவிடாய் (-ஹைள்)க்கும் பயன்படுத்துவது.
298. `நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். `உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். `ஆம்` என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்" என உம்முஸலமா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 5 மாதவிடாய் ஏற்பட்டுள்ள மனைவியை அணைத்துக் கொள்ளுதல்.
299. `நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (ஒன்றாக நீரள்ளி) கடமையான குளிப்பைக் குளித்தோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
300. `எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :6
301. `நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் `இஃதிகாப்` இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :6
302. `எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்?` என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :6
303. `நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்" என `நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Book :6
பாடம் : 6 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் நோன்பை விட்டுவிடுவது.
304. `ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, `பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது` என்று கூறினார்கள். `இறைத்தூதர் அவர்களே! ஏன்` என்று அப்பெண்கள் கேட்டதற்கு, `நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது `இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன` என்று பெண்கள் கேட்டனர். `ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, `ஆம்` என அப்பெண்கள் பதில் கூறினர். `அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் `ஆம்!` எனப் பெண்கள் பதில் கூறினர். `அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 7 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கடமைகள்அனைத்தையும் நிறைவேற்றலாம். இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் குர்ஆன் வசனங்களை ஓதுவதில் தவறேதுமில்லை என்று கூறியுள்ளார்கள். பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருப்பவர் குர்ஆனை ஓதுவதில் எந்தத் தவறுமில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் எல்லா நேரமும் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். (பெரு நாள் தினத்தன்று) மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களை(யும்) (தொழுகைத் திடலுக்கருகில்) அழைத்துச் சென்று ஆண்களைப் போன்று தக்பீர் சொல்லவும் பிராத்திக்கவும் நாங்கள் பணிக்கப்பட்டோம்என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள். அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமக்கு எழுதியிருந்த கடிதத்தைக் கொண்டு வரச் சொல்லி மன்னர் ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அதில் : பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா க-மத்தின் ... அளவிலா அருளாளன் நகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.... வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்குமிடையில் பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள் (3:64) என்று தொடங்கும் (குர்ஆன் வசனங்கள்) எழுதப்பட்டிருந்தது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின் போது) ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றினார்கள்; ஆனால் தொழவில்லை. இதை அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் பெருந்துடக்குடையவனாக (குளியல் கடமையான) நிலையிலும் (அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆடுமாடுகளை) அறுப்பேன். (ஏனெனில்) வ-வும் மாண்பும் உடைய அல்லாஹ், அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமல் அறுக்கப்பட்டதை நீங்கள் புசிக்க வேண்டாம் (6:121) என்று கூறியுள்ளான்.
305. `நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். `ஸரிஃப்` என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள், அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, `ஏனழுகிறாய்?` என்று கேட்டார்கள். `இவ்வாண்டு நான் ஹஜ் செய்ய முடியாது என்று கருதுகிறேன்` என்றேன். `உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?` என்று கேட்டார்கள். நான் `ஆம்!` என்றேன். அப்போது `இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர்த்து ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் செய்து கொள்` என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்
Book : 6
பாடம் : 8 உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா).
306. `பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?` என்று கேட்டதற்கு, `அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாயன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்` என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 9 மாதவிடாய் இரத்தத்தைக் கழுவுதல்.
307. `ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒரு பெண்ணின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அவள் எவ்வாறு (சுத்தம்) செய்ய வேண்டும்?` என்று கேட்டதற்கு, `உங்களில் ஒருத்தியின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விடட்டும். அதன் பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 6
308. எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும்போது அவர் தன்னுடைய ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்வதற்காகஆடையிலிருந்து இரத்ததைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவியப் பின்னர் ஆடையின் இதர இடங்களிலும் தண்ணீர் தெளித்து அந்த ஆடையுடன் தொழுவார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :6
பாடம் : 10 உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா) உள்ள பெண் பள்ளிவாச-ல் இஃதிகாஃப் இருப்பது.
309. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் உதிரப் போக்கினால் இரத்தத்தைக் காண்பவராக இருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தார்கள். சில வேளை இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே ஒரு தட்டை வைத்துக் கொள்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"மஞ்சள் நிற நீரைப் பார்த்ததாகவும் `இது இன்னவளுக்கு ஏற்படுகிற ஒன்றைப் போன்றே` என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என்றும் இக்ரிமா கூறினார்.
Book : 6
310. `நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் மஞ்சள் நிற உதிரப் போக்கு இரத்தத்தைக் காணும்போது தமக்கடியில் ஒரு தட்டை வைத்து நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தவாறு தொழுதார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :6
311. `இறைநம்பிக்கையாளர்களின் தாயான ஒருவர் உதிரப் போக்குள்ள நிலையிலும் இஃதிகாப் இருந்தார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :6
பாடம் : 11 ஒரு பெண் மாதவிடாய் ஏற்பட்ட ஆடையுடன் தொழலாமா?
312. `எங்களில் ஒருவருக்கு ஓர் ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவரின் மாதவிடாய் ஏற்படும். ஏதாவது இரத்தம் அந்த ஆடையில் பட்டால் தங்களின் எச்சிலைத் தொட்டு அந்த இடத்தில் வைத்துத் தங்களின் நகத்தால் சுரண்டி விடுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 12 மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும் போது நறுமணத்தைப் பயன்படுத்துதல்.
313. `இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாள்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 13 ஒரு பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் போது தமது உடலைத் தேய்த்துக் கழுவுவதும்,அவள் எப்படிக் குளிக்க வேண்டும் என்பதும், இரத்தம்போன இடத்தில் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்செடுத்து இரத்தம் படிந்த இடத்தை எப்படித் துடைக்க வேண்டும் எனும் முறையும்.
314. `ஒரு பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து `மாதவிடாய் நின்ற பின்பு எப்படிக் குளிக்க வேண்டும்?` என கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் அவள் குளிக்கும் முறையை அவளுக்குக் கூறிவிட்டு, `கஸ்தூரி வைக்கப்பட்ட பஞ்சை எடுத்து அதனால் நீ சுத்தம் செய்` என்றார்கள். அப்போது `நான் எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்?` என அப்பெண் கேட்டார். `அதைக் கொண்டு நீ சுத்தம் செய்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அந்தப் பெண் `எப்படி?` என்று கேட்டபோது `ஸுபஹானல்லாஹ்! சுத்தம் செய்து கொள்!` என்று கூறினார்கள். உடனே நான் அந்தப் பெண்ணை என் பக்கம் இழுத்து `கஸ்தூரி கலந்த பஞ்சைக் கொண்டு இரத்தம் பட்ட இடத்தில் வைத்துச் சுத்தம் செய்` என்று அவளிடம் கூறினேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 14 மாதவிடாய்க் குளியல்.
315. `அன்ஸாரிப் பெண்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து `மாதவிடாயில் இருந்த நான் சுத்தமாவதற்காக எவ்வாறுக் குளிக்க வேண்டும்?` எனக் கேட்டார். `கஸ்தூரி கலந்த பஞ்சை எடுத்து நீ சுத்தம் செய்` என மூன்று முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர்கள் வெட்கப்பட்டுத் தங்களின் முகத்தைத் திருப்பினார்கள். அல்லது `அதைக் கொண்டு நீ சுத்தம் செய்` என்று கூறினார்கள். அப்போது நான் அந்தப் பெண்ணைப் பிடித்து என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்பதை அவளுக்கு விளக்கினேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 15 ஒருபெண் மாதவிடாய் நின்றபின் குளியலின் போது சீப்பினால் தலையை வாரிக் கொள்ளுதல்.
316. நான் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜதுல் வதாவின்போது இஹ்ராம் அணிந்தேன். அறுத்துக் கொடுப்பதற்குரிய கால் நடையைக் கொண்டுவராத ஹஜ்ஜின் `தமத்துவ்` என்ற வகையை நிறைவேற்றுபவர்களுடன் இருந்தேன். மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தேன். அரஃபாவின் இரவு வரும் வரை நான் சுத்தமாகவில்லை. அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! இன்று அரஃபாவின் இரவு. நான் `உம்ரா`ச் செய்துவிட்டுத் திரும்ப இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன் என்றேன். `உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டு உம்ரா செய்வதை நிறுத்தி விடு. (ஹஜ்ஜிற்கு இஹ்ராம் அணிந்து கொள்)` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நானும் செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பின்பு, ஹஸ்பாவில் தங்கிய இடத்திலிருந்து தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று, எனக்கு விடுபட்ட உம்ராவிற்கு அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வருவதற்காக என்னை கூட்டிச் செல்லுமாறு (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானிடம் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 16 ஒருபெண் மாதவிடாய் நின்ற பின் குளியலின் போது தனது தலைமுடியை அவிழ்த்து விடுவது (அவசியமா?).
317. துல்ஹஜ் மாதப் பிறையைப் பயணத்தில் அடையும் நிலையில் புறப்பட்டோம். அப்போது `உம்ராச் செய்ய விரும்புவோர் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். நான் என்னுடன் அறுத்துக் கொடுப்பதற்குரிய பிராணியைக் கொண்டு வராதிருந்தால் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்திருப்பேன்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது சிலர் உம்ராவிற்காக வேறு சிலர் ஹஜ்ஜிற்காகவும் இஹ்ராம் அணிந்தனர். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்களுடன் இருந்தேன். நான் மாதவிடாயுடன் இருந்தபோது அரஃபா நாள் வந்தது. நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். `நீ உன்னுடைய உம்ராவைவிட்டு விடு; உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரி விடு; பின்னர் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து கொள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். ஹஸ்பாவில் தங்கிய இரவு என்னுடைய சகோதரர் அப்துர் ரஹ்மானை நபி(ஸல்) என்னுடன் அனுப்பினார்கள். தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று எனக்கு விடுபட்ட உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் அணிந்தேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"இந்த முறையில் செய்த எதிலும் அறுத்துப் பலியிடுவதோ, நோன்பு நோற்பதோ மற்றும் தர்மம் கொடுப்பதோ இருக்கவில்லை" என்று ஹிஷாம் குறிப்பிடுகிறார்.
Book : 6
பாடம் : 17 (பெண்ணின் கருவறையில்) வடிவமைக்கப்படும் சதைக்கட்டியும் வடிவமைக்கப்படாத (விழு) கட்டியும்.
318. `அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், `யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது `அலக்` (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது` என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 18 மாதவிடாய் ஏற்பட்டுவிட்ட பெண் எப்படி ஹஜ்ஜிற்காகவும் உம்ராவிற்காகவும் இஹ்ராம் கட்ட வேண்டும்?
319. நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களோடு சென்றோம். எங்களில் உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் `உங்களில் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராமல் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்கள் (உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமிலிருந்து விலகி கொள்ளலாம். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து தங்களுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவர்கள் தங்களின் குர்பானியைப் பத்தாவது நாளன்று அறுக்கும் வரை தங்களின் இஹ்ராமிலிருந்து விலக வேண்டாம். ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் தங்களின் ஹஜ்ஜை நிறைவேற்றட்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அது அரஃபா நாள் வரை நீடித்தது. நான் உம்ராவிற்காகத்தான் இஹ்ராம் அணிந்திருந்தேன். (இதை நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்) என்னுடைய தலை முடியை அவிழ்த்துவிட்டு அதை வாரி விடுமாறும், நான் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததைவிட்டுவிட்டுத் திரும்ப ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். நான் அவ்வாறே செய்தேன். என்னுடைய ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்னர் என்னுடன் (என்னுடைய சகோதரர்) அப்துர்ரஹ்மானை அனுப்பி, தன்யீம் என்ற இடத்திலிருந்து எனக்குவிடுபட்ட உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து வருமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
சில பெண்கள் மாதவிடாய் செல்லும் இடத்தில் வைத்துக் கட்டிய பஞ்சு மஞ்சள் நிறமாக இருக்கும்போது அதை ஆயிஷா(ரலி) அவர்களிடம் அனுப்பி மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வார்கள். அப்போது `மாதவிடாய் செல்லும் இடத்தில் வைக்கப்படும் பஞ்சு வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்பட்டு மாதவிடாயிலிருந்து சுத்தமாகி விட்டீர்கள் என்று கருதவேண்டாம்` என்று அப்பெண்களுக்கு ஆயிஷா(ரலி) கூறினார். சில பெண்கள் நடு இரவில் விளக்குகளைக் கொண்டு வரச் செய்து மாதவிடாயிலிருந்து சுத்தமாகி விட்டோமா என்பதைப் பார்ப்பார்கள் என்ற செய்தி ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் மகளுக்குக் கிடைத்தபோது, `நபி(ஸல்) காலத்துப் பெண்மணிகள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்` என்று இப்படி செய்யும் பெண்களைக் குறை கூறினார்கள்".
Book : 6
பாடம் : 19 மாதவிடாய் ஆரம்பிப்பதும் நிற்பதும். சில பெண்கள் (தங்கள் மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா என்பதை அறிய) மாதவிடாய் காலத்தில் அணையாடைக்குள் பயன்படுத்திய பஞ்சை ஒரு சிறிய கூடைக்குள் வைத்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தனர். அந்தப் பஞ்சில் மஞ்சள் நிறம் இருந்தது. (இதைக் காணும்) ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த பஞ்சில் (நிறமேதும் படாமல்) வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்பட்டுவிடாதீர்கள் என் றார்கள். அதாவது மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள் என்றார்கள். சில பெண்கள் நடு நிசி நேரத்தில் விளக்குகளைக் கொண்டு வரச் சொல்லி மாதவிடாயிலிருந்து தூய்மைய டைந்து விட்டோமா என்பதை (சிரமப்பட்டு) பார்க்கிறார்கள் என்ற செய்தி ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் புதல்விக்கு எட்டியது. அப்போது அவர் (நபி ளஸல்ன அவர்களது காலத்தில் வாழ்ந்த) அந்தப் பெண்கள் இப்படிச் செய்ததில்லை என்று கூறி அச்சிலரைக் கடிந்து கொண்டார்கள்.
320. `பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் உதிரப் போக்குடையவராக இருந்தார். நபி(ஸல்) அவர்களிடம் அப்பெண் (இது குறித்து) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் `அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டுத் தொழுது கொள்` என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 20 மாதவிடாய் காலத்தில் விடுபட்டுப்போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை. அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்: (மாதவிடாய் ஏற்பட்ட) அந்தப் பெண் தொழுகைகளை விட்டுவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
321. `பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின்னர் தொழுதால் மட்டும் போதுமா?` என்று ஒரு பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, `நீ `ஹரூர்` எனும் இடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது எங்களிடம் விடுபட்ட தொழுகையைத் தொழுமாறு ஏவ மாட்டார்கள்` என்று அல்லது அத்தொழுகையை நாங்கள் தொழ மாட்டோம்" என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என முஆதா அறிவித்தார்.
Book : 6
பாடம் : 21 மாதவிடாய் இரத்தம்பட்ட ஆடையை அணிந்திருக்கும் பெண்ணுடன் அவளுடைய கணவன் உறங்குவது.
322. நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அதை அணிந்தேன். `உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். `ஆம்` என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்" என்றும்,
"நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள். நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம்" என்றும் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 22 சுத்தமாக இருக்கும் போது அணியும் துணி அல்லாமல் மாதவிடாய்க் காலத்திற்கென பிரத்யோக துணியை ஒருபெண் வைத்துக் கொள்வது.
323. நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப்படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். `உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?` என்று நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக்கொண்டேன்" என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 23 மாதவிடாயுள்ள பெண்கள் இரு பெரு நாள் தொழுகைகளிலும் முஸ்லிம்களுடைய பிரசாரத்திலும் கலந்து கொள்வதும் அப்போது தொழும் இடத்தை விட்டும் அவர்கள் விலகி இருக்க வேண்டும் என்பதும்.
324. நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார்.
`நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா?` என நான் கேட்டதற்கு, `அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்கதளின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்` என்றார்.
உம்மு அதிய்யா(ரலி) வந்தபோது `நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?` என நான் கேட்டதற்கு `என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்` எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் `என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்` என்பதையும் சேர்த்தே கூறுவார்.
`கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்` என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, `மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?` என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்" என ஹஃப்ஸா அறிவித்தார்.
Book : 6
பாடம் : 24 ஒரு பெண்ணுக்கு ஒரே மாதத்தில் மூன்றுமுறை மாதவிடாய் ஏற்படுவதும், மாதவிடாய், கர்ப்பம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கூற்றை ஏற்றுக் கொள்வதும், மாதவிடாய் தொடர்பாக சாத்தியமுள்ள கூற்றே ஏற்கப்படும் என்பதும். ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: (அப்பெண்கள்) தங்கள் கருவறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது (2:228). ஒரு பெண் மார்க்கப்பற்றுள்ள தன் நெருங்கிய உறவினர்களில் ஒரு சாட்சியைக் கொண்டு வந்து (வழக்கமாக தனது குடும்பத்துப் பெண்களுக்கு ஏற்படுவது போன்று) தமக்கும் ஒரே மாதத்தில் மூன்று முறை மாதவிடாய் ஏற்பட்டதாகக் கூறினால் அவளது கூற்று ஏற்கப்படும் என அலீ (ரலி) , ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. (விவகாரத்துச் செய்யப்பட்ட) ஒரு பெண்ணின் இத்தா காலம் (விவாகரத்துக்கு) முன்னாலுள்ள அவளது (மாதவிடாய்கால) வழக்கத்தை ஒட்டியே கணிக்கப்படும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறே இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: மாதவிடாய் (குறைந்தது) ஒரு நாளிலிருந்து (அதிகபட்சமாக) பதினைந்து நாட்கள் வரை நீடிக்கலாம். சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் மாதவிடாய் நின்று தூய்மையடைந்ததிலிருந்து ஐந்து நாட்கள் கழித்து ஒரு பெண் இரத்தத்தைக் காண்பது குறித்து (அது மாதவிடாயாகக் கருதப்படுமா? என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், இது விஷயமாக பெண்களே நன்கறிவார்கள் என்று பதிலளித்தார்கள். இதைத் தம் தந்தை சுலைமான் (ரஹ்) அவர்களிடமிருந்து முஅதமிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
325. `பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விடலாமா?` என்று கேட்டதற்கு, `கூடாது. அது ஒரு நரம்பு நோய்; மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாள்களின் அளவுக்குத் தொழுகையைவிட்டுவிடு. பின்னர் தொழுது கொள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 25 மாதவிடாய் அல்லாத நாட்களில் மஞ்சளாகவோ கலங்கலான நிறமாகவோ வெளிப்படும் இரத்தம்.
326. `மாதவிடாய் அல்லாத நாள்களில் வெளிப்படும் மஞ்சள் நிற இரத்தத்தையும் ஒருவகை மண்நிற இரத்தத்தையும் மாதவிடாயாக நாங்கள் கருதுவதில்லை" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 26 உயர் இரத்தப்போக்கு நோய்.
327. `உம்மு ஹபீபா என்ற பெண் ஏழு ஆண்டுகள் உதிரப் போக்குடையவராக இருந்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, குளிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, `இது ஒரு நோய்` என்று கூறினார்கள். (இதனால்) ஒவ்வொரு தொழுகைக்கும் அப்பெண் குளிப்பவராக இருந்தார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 27 ஹஜ்ஜில், தவாஃபுல் இஃபாளா எனும் தவாஃபை முடித்தபின் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் (அவளுக்கு கடைசித் தவாஃபான தவாஃபுல் விதாஉ செய்ய அனுமதி உண்டா?) ளகுறிப்பு: ஹாஜிகள் துல்ஹஜ் 10ஆவது நாள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்தபின் மக்காவை நோக்கிப் புறப்பட்டுச் சென்று மீண்டும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வர வேண்டும். இதனை தவாஃபுல் இஃபாளா எனப்படுகிறது. இது தவாஃபுஸ் ஸியாரா, தவாஃபுர் ருக்ன் ஆகிய பெயர்களிலும் அறியப்படுகிறதுன
328. `ஹஜ்ஜின்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் ஸஃபியாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது` எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் `அவள் நம்மைப் பயணத்தைவிட்டு நிறுத்தி விடுவாள் போலிருக்கிறதே! உங்களுடன் அவள் தவாஃப் செய்யவில்லையா?` என்று கேட்டார்கள். `தவாஃப் செய்துவிட்டார்` என (அங்கிருந்தோர்) கூறினார்கள். `அப்படியானால் புறப்படுங்கள்` என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
329. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஹஜ்ஜில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தவாஃப் செய்யாமல்) வீடு திரும்புதல் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
Book :6
330. `ஹஜ்ஜில் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் சுத்தமான பின்னர் தவாஃபை நிறைவேற்றிவிட்டுத்தான் வீடு செல்ல வேண்டும்` என இப்னு உமர் ஆரம்பகாலத்தில் சொல்லியிருந்தார். ஆனால் பின்னர் `அவள் வலம் வராமலே வீடு திரும்பலாம்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) கூறினார்" என தாவூஸ் அறிவித்தார்.
Book :6
பாடம் : 28 உயர் இரத்தப்போக்கு ஏற்பட்ட ஒரு பெண் தமது இரத்தம் மாதவிடாய்க் கால இரத்தமல்ல என்று அறிந்து கொண்டால் (என்ன செய்யவேண்டும்?) சிறிது நேரம் அவள் சுத்தமானாலும் குளித்து விட்டு அவள் தொழுகையை நிறை வேற்றவேண்டும்; மிகப் பெரிய விஷயமான தொழுகையையே அவள் நிறைவேற்றலாம் எனும் போது அவளுடன் கணவன் தாம்பத்திய உறவுகொள்வதில் தவறில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
331. `மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்ததைச் சுததம் செய்துவிட்டுத் தொழுது கொள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 29 பிரசவ இரத்தப் போக்கின் போது உயிர்நீத்த பெண்ணுக்கு இறுதித் தொழுகை (ஸலாத்துல் ஜனாஸா) தொழுவதும், அதன் வழிமுறையும்.
332. `ஒரு பெண் பிரசவ நேரத்தில் இறந்தபோது அவருக்கு நபி(ஸல்) ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையின்போது ஜனாஸாவின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்" என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
Book : 6
பாடம் : 30
333. `எனக்கு மாதவிடாய் ஏற்படும்போது நான் தொழுவதில்லை. அந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் அருகில் படுத்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய பாயில் தொழுது கொண்டிருந்தார்கள். ஸஜ்தாச் செய்யும்போது அவர்கள் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி என் மீது படும்" என்று மைமூனா(ரலி) அறிவித்தார்.
Book : 6

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.