57. குமுஸ்-ஐந்திலொரு பங்கு கடமை

பாடம் : 151 இறைமறுப்பாளர்களிடம் சிக்கிக் கொண்ட (முஸ்லிம்) போர்க் கைதி தன்னைச் சிறைபிடித்தவர்களிட மிருந்து தப்பிக்க அவர்களை ஏமாற்றவோ, கொன்று விடவோ அனுமதியுண்டா? இது பற்றி நபி (ஸல்) அவர் களிடமிருந்து மிஸ்வர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.130 பாடம் : 152 இணை வைப்பவன் ஒரு முஸ்-மை எரித்து விட்டால் (அதற்கு பதிலாக) அவனை எரிக்கலாமா?
3091. அலீ(ரலி) அறிவித்தார்.
பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி(ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு கூட விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து `இத்கிர்` புல்லைக் கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளையும் தீனிப் பைகள், மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களும் அன்சாரி ஒருவரின் அறையின் அருகே மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டிருந்தன. நான் சேரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது திரும்பி வந்தேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் இந்த (அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்த விடாமல்) கட்டுப்படுத்த முடியவில்லை. நான், `இதையெல்லாம் செய்தவர் யார்?` என்று கேட்டேன். மக்கள், `ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில் தான் இருக்கிறார்" என்று பதிலளித்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களிடம் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் செயலால் நான் அடைந்த வேதனை என் முகத்தில் தென்பட, அதைப் புரிந்து கொண்டார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், `உங்களுக்கு என்ன நேர்ந்தது?` என்று கேட்டார்கள். நான், `இறைத்தூதர் அவர்களே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கரமான) ஒரு நாளை ஒருபோதும் நான் பார்த்ததில்லை. ஹம்ஸா என் இரண்டு ஒட்டகங்களையும் தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) கிழித்துவிட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் நண்பர்கள் குழுவுடன் இருக்கிறார்" என்று சொன்னேன். உடனே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் அங்கி ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி அதையணிந்து நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் இப்னு ஹாரிஸாவும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஜா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபிக்கு அனுமதி கொடுத்தார்கள். அங்கே அவர்கள் (அனைவரும்) மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரண்டு கண்களும் சிவந்திருக்க, அவர் போதையுற்று விட்டிருந்தார். ஹம்ஸா, அல்லாஹ்வின் தூதரைப் பார்த்துப் பார்வையை உயர்த்தி அவர்களின் இரண்டு முழங்கால்களையும் பார்த்தார்; பிறகு பார்வையை உயர்த்தி, அவர்களின் வயிற்றுப் பகுதியைப் பார்த்தார். பிறகு, `நீங்கள் என் தந்தையின் அடிமைகள் தாமே?` என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, தாம் வந்த வழியே (திரும்பாமல்) அப்படியே பின் வாங்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.
Book : 57
3092. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அது இறைத்தூதர்(ஸல்), அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த, (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள்விட்டுச் சென்ற சொத்தாகும்.
Book :57
3093. ஃபாத்திமாவுக்கு அபூ பக்ர்(ரலி), `இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்` என்று சொல்லியிருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் பேசுவதைவிட்டுவிட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்துவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தனி நிதியாக)விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த அவர்கள் தர்மமாகவிட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். அபூ பக்ர்(ரலி) ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன். ஏனெனில், அவர்களின் செயல்களில் எதனையாவது நான்விட்டுவிட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்றார்கள். (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் தருமமாகவிட்டுச் சென்ற சொத்தை உமர் அவர்கள், அலீ அவர்களுக்கும் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் (அதன் வருமானத்திலிருந்து தம் பங்கின் அளவிற்கு எடுத்துக் கொள்ளும் படி) கொடுத்துவிட்டார்கள். கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துக்களை உமர் அவர்கள் (யாருக்கும் கொடுக்காமல்) நிறுத்தி வைத்துக் கொண்டு, `அவ்விரண்டும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தருமமாகவிட்டுச் சென்றவை. அவை நபி(ஸல்) அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் (திடீர் பொருளதாரப்) பிரச்சினை(கள் மற்றும் செலவினங்)களுக்காகவும் (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்றார்கள்.
இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) (இந்த ஹதீஸை அறிவித்த போது), `அந்த (கைபர், ஃபதக் பகுதியிலிருந்த) இரண்டு சொத்துக்களும் இன்று வரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன" என்றார்கள்.
Book :57
3094. முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார்.
நான் மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அவர்களிடம் சென்று அந்த (ஃபதக் தொடர்பான) நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன் அவர்கள் கூறினார்கள்.
கடும் உச்சி வெயில் அடித்துக் கொண்டிருந்த நீண்ட ஒரு பகல் வேளையில் என் வீட்டாருடன் நான் அமர்ந்திருந்தபோது (கலீஃபா) உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் தூதர் ஒருவர் என்னிடம் வந்து, `இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அழைக்கிறார், வாருங்கள்" என்றார். நான் அவருடன் சென்று உமர்(ரலி) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அவர்கள் அங்கே ஒரு கட்டிலில் ஈச்ச ஓலையாளலான மேற்பரப்பில் அதற்கும் தமக்கும் இடையே பாய் எதுவுமிலலாமல் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தேன். அப்போது அவர்கள், `மாலிக்கே! உங்கள் குலத்தாரில் சில குடும்பத்தார் நம்மிடம் வந்தனர். அவர்களுக்கு (அளவு குறிப்பிடாமல்) சிறிய ஓர் அன்பளிப்புத் தரும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். அதை உங்கள் கைவசமாக்கிக் கொண்டு அவர்களிடையே நீங்கள் பங்கிடுங்கள்" என்றார்கள். நான், `இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! வேறெவரிடமாவது இந்தப் பொறுப்பை நீங்கள் ஒப்படைத்தால் நன்றாயிருக்குமே" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், `நீங்கள் அதைக் கைவசமாக்கிக் கொண்டு சென்று அவர்களிடையே பங்கிடுங்கள்" என்று (மீண்டும்) உமர் அவர்கள் சொன்னார்கள். நான் உமரிடம் அமர்ந்து கொண்டிருந்தபோது, அவர்களிடம் அவர்களின் மெய்க் காவலர் `யர்ஃபஉ` என்பவர் வந்து, `உஸ்மான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா?` என்று கேட்டார். உமர்(ரலி), `ஆம்" என்று கேட்டார். உமர்(ரலி), அவர்கள், `ஆம்" என்று அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து சலாம் சொல்லி அமர்ந்தார்கள். பிறகு `யர்ஃபஉ` சற்று நேரம் தாமதித்து வந்து, `அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் தாங்ள் சந்திக்க விரும்புகிறீர்களா?` என்று கேட்டதற்கு உமர் அவர்கள், `ஆம்" என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர். அப்பாஸ்(ரலி), `இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்" என்றார்கள். அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு பனூ நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து (`ஃபய்உ` நிதியாகக்) கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டு வந்தனர். அப்போது உஸ்மான்(ரலி) மற்றும் அவர்களின் தோழர்களின் குழு, `இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள்" என்று கூறியது. உமர்(ரலி), `பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கிறேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `(நபிமார்களான எங்களுக்கு) எவரும் வாரிசாக மாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தருமமே" என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?` என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், `அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்" என்று பதிலளித்தனர். உடனே, உமர்(ரலி), அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, `அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?` என்று கேட்டார்கள். அவ்விருவரும், `ஆம், அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்" என்று பதிலளித்தனர். உமர்(ரலி), `அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இச்செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை.".. (என்று கூறிவிட்டு,) `அல்லாஹ் எச்செல்வத்தை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் துதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அச்செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்" என்னும் (இந்த 59:06) இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து, `எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமுமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை; அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செலவை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டு வந்தார்கள்" (இவ்வளவும் சொல்லிவிட்டு,) `அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை கேட்கிறேன். இதை நீங்கள் அறிவீர்களா?` என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், `ஆம் (அறிவோம்)" என்று பதிலளித்தார்கள். பிறகு, அலீ அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும், `உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன். நீங்கள் இதை அறிவீர்களா?` என்று கேட்டுவிட்டு (தொடர்ந்து), `பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது அபூ பக்ர்(ரலி), `நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநியாவேன்` என்று கூறி அ(ந்த செல்வத்)தைக் தம் கைவசம் எடுத்தார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போல் செயல்பட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்தார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான் அபூ பக்ர்(ரலி) அவர்களின் பிரதிநிதியாக ஆனேன். அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதில் நடந்து கொண்ட முறைப்படியும் அபூ பக்ர்(ரலி) நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டு வந்தேன். நான் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்து கொண்டேன்; நேரான முறையில் நடந்து கொண்டேன்; உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு, நீங்கள் இருவரும் என்னிடம் வந்து பேசினீர்கள்; நான் உங்களிடம் ஒரு முறை பேசினேன். உங்கள் இருவரின் விஷயமும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேரவேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்ட படி வந்தீர்கள். இவரும் என்னிடம் தன் மனைவிக்கு அவரின் தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கை (பெற) விரும்பிய படி வந்தார்... அலீ(ரலி) அவர்களைத் தான் அப்படிச் சொன்னார்கள். நான் உங்கள் இருவரிடமும், `இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `(நபிமார்களான நாங்கள்விட்டுச் செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தருமமே` என்றார்கள்` என்றேன். எனினும், `அதை உங்கள் இருவரிடமே கொடுத்து விடுவது தான் பொறுத்தமானது` என்று எனக்குத் தோன்றியபோது நான், `நீங்கள் இருவரும் விரும்பினால் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, `நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூ பக்ர்(ரலி) எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன் படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள்` என்னும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்து விடுகிறேன்` என்று சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும், `எங்களிடம் அதைக் கொடுத்து விடுங்கள்` என்று சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்து விட்டேன்" என்றார்கள். பிறகு (குழுவினரை நோக்கி), `எனவே, நான் உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன். நான் இவ்விருவரிடமும் அந்த நிபந்தனையின்படி அச்சொத்தைக் கொடுத்து விட்டேனா?` என்று கேட்டார்கள். குழுவினர், `ஆம் (கொடுத்து விட்டீர்கள்)" என்று பதிலளித்தனர். பிறகு அலீ(ரலி) மற்றும் அப்பாஸ்(ரலி) ஆகியோரை நோக்கி, `நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன். நான் அதை உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின்படியே கொடுத்து விட்டேனா?` என்று கேட்க, அவ்விருவரும், `ஆமாம்" என்றார்கள். உமர்(ரலி), `இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகிறீர்களா? எவனுடைய அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் அந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தர மாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்து விடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்" என்றார்கள்.
Book :57
பாடம் : 2 குமுஸ் கடமையை நிறைவேற்றுவது (போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து ஐந்திலொரு பங்கை இஸ்லாமிய அரசின் சிறப்பு நிதிக்குச் செலுத்துவது) மார்க்கத்தின் பாற்பட்டதாகும்.
3095. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் (நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். அவர்கள், `இறைத்தூதர் அவர்களே! (எங்களின்) இந்தக் கிளை `ரபீஆ` குலத்தைச் சேர்ந்ததாகும். எங்களுக்கும் உங்களுக்குமிடையே `முளர்` குலத்து நிராகரிப்பாளர்கள் (நாம் ஒருவரையொருவர் சந்திக்கத்) தடையாக உள்ளனர். எனவே, (போரிடுவதும் கொள்ளையும் வழிப்பறியும் அனைவராலும் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களிலே தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் தங்களிடம் வந்து சேர முடியாதவர்களாயிருக்கிறோம். எனவே, நாங்கள் எடுத்து நடக்கவும் எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் தங்கிவிட்ட)வர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்ற ஒரு விஷயத்தை எங்களுக்குக் கட்டளையிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `நான்கு விஷயங்களை உங்களுக்குக் கட்டளையிட்டு நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கிறேன். நான் கட்டளையிடுபவை: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; `வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமிலர்` என்று சாட்சியம் மொழிவது... (இதைச் சொல்லியபடி) நபி(ஸல்) அவர்கள் தம் கையால் (எண்ணிக்) கணக்கிட்டார்கள்... தொழுகையை (அதன்னுடையன் வேளையில் முறைப்படி ஜமாஅத்துடன்) நிலை நாட்டுவது, ஸக்காத் கொடுப்பது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களுக்குக் கிடைக்கும் போர்ச் செல்வங்களிலிருந்து ஐந்திலொரு பங்கை அல்லாஹ்வுக்காகச் செலுத்தி விடுவது ஆகியன. மேலும், (மது வைத்திருக்கப் பயன்படுகின்ற) துப்பா - சுரைக்காய்க் குடுவைகள்; மற்றும் நக்கீர் - பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், முஸஃப்பத் தார் பூசப்பட்ட பாத்திரங்கள், மற்றும் அல் - ஹன்த்தம் - மண்சாடிகள் ஆகியவற்றை (பயன்படுத்த வேண்டாமென்று) உங்களுக்குத் தடை செய்கிறேன்" என்று கூறினார்கள்.
Book : 57
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களுடைய துணைவியரின் வாழ்க்கைச் செலவு.
3096. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப் பங்காகப் பெற மாட்டார்கள் என் மனைவிமார்களுக்குச் சேர வேண்டிய வாழ்க்கைச் செலவும் என் பிரதிநிதியின் ஊதியமும் போக நான்விட்டுச் செல்பவையெல்லாம் தருமமேயாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 57
3097. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு, அதை நான் அளந்தேன். (அதனால், சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது.
Book :57
3098. அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும், அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள்.
Book :57
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யரின் இல்லங்கள் பற்றி வந்துள்ள செய்திகளும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்ட இல்லங்களும். அல்லாஹ் கூறுகிறான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞான காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலே தவிர,நுழை யாதீர்கள். (அங்கு) உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் செல் லுங்கள்; நீங்கள் சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்று விடுங்கள். பேச்சில் லயித்து விடாதீர்கள். நீங்கள் இவ்வாறு செய்வது நபிக்கு மனவேதனை யளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தினால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை. ஆனால், அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்ல வெட்கப்படுவதில்லை. நீங்கள் (நபியின் மனைவியரான) அவர்களிடம் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். அதுவே உங்களுடைய உள்ளங்களுக்கும் அவர் களுடைய உள்ளங்களுக்கும் தூய்மை யளிப்பதாகும். அல்லாஹ்வுடைய தூத ருக்குத் தொல்லை தருவது உங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. அவருக்குப் பின்னால் அவருடைய மனைவியரை நீங்கள் மணமுடிப்பதும் ஒரு போதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ் விடம் பெரும் பாவமாகும். (33:53)
3099. நபி(ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா(ரலி) கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் நோயின் கடுமை அதிகரித்துவிட்டபோது என் வீட்டில் தங்கி சிகிச்சையையும் பராமரிப்பையும் பெற்றிட தம் மற்ற மனைவிமார்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்.
Book : 57
3100. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் வீட்டில் என்னுடைய முறைக்குரிய நாளில் (வந்திருந்த போது) என் தொண்டைக்கும் என் மார்புக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அல்லாஹ் என்னுடைய எச்சிலையும் அவர்களின் எச்சிலையும் ஒன்று சேர்த்திருந்தான். (எப்படியெனில்) நபி(ஸல்) அவர்கள் (கடுமையான நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் - மிஸ்வாக் - குச்சியைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக இருந்தார்கள். எனவே, நான் அந்தக் குச்சியை எடுத்துமென்று பிறகு அதனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கி விட்டேன்.
Book :57
3101. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஸஃபிய்யா(ரலி) கூறினார்.
ரமளான் மாதத்தில் கடைசிப் பத்து நாள்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்தபோது நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன்; (சந்தித்து முடித்த) பின்பு திரும்பிச் செல்ல எழுந்தேன். என்னுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் எழுந்தார்கள். தம் (மற்றொரு) மனைவி உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டு வாசலை ஒடடியுள்ள பள்ளிவாசல் கதவுக்கு அருகே வந்து சேர்ந்தபோது எங்கள் இருவரையும் இரண்டு அன்சாரிகள் கடந்து சென்றனர். அவ்விருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி சலாம் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, `அவசரப்படாதீர்கள். (இவர் என் மனைவி தான்.)" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் இப்படித் தங்களிடம் சொன்னது அவர்களுக்க மன வருத்தத்தை அளித்தது. அதற்கு அவ்விருவரும், `அல்லாஹ் தூயவன். இறைத்தூதர் அவர்களே! (தங்களை நாங்கள் சந்தேகிப்போமா?)" என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `மனிதனின் இரத்தம் சென்றடையும் இடங்களில் எல்லாம் ஷைத்தானும் சென்றடைகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் சந்தேகம் எதையேனும் போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்" என்று பதிலளித்தார்கள்.
Book :57
3102. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டிற்கு மேலே (ஒரு வேலையாக) நான் ஏறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் கிப்லாவுக்கு முதுகைக் காட்டியபடியும் `ஷாம்` திசையை நோக்கியபடியும் (கழிப்பிடத்தில்) தம் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.
Book :57
3103. ஆயிஷா(ரலி) கூறினார்.
என் அறையிலிருந்து சூரிய வெளிச்சம் விலகாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுவார்கள்.
Book :57
3104. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, ஆயிஷா(ரலி) அவர்களின் உறைவிடத்தை (இராக் நாடு அமைந்துள்ள கிழக்குத் திசையை) நோக்கிச் சைகை செய்து, `இங்கிருந்து தான் குழப்பம் ஏற்படும்" என்று மூன்று முறை கூறிவிட்டு, `ஷைத்தானின் கொம்பு (தலையின் ஓரப்பகுதி) எங்கிருந்து உதயமாகிறதோ அங்கிருந்து..." என்று கூறினார்கள்.
Book :57
3105. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது ஒருவர் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டுக் கொண்டிருக்கும் குரலை செவியுற்றேன். உடனே நான், `இறைத்தூதர் அவர்களே! இதோ, ஒருவர் தங்கள் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்கிறார்" என்று கூறினேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `அவரை இன்னார் - ஹஃப்ஸாவின் தந்தைக்குப் பால்குடிச் சகோதரர் - என்று கருதுகிறேன்; (ஒருவரின் வயிற்றில்) பிறப்பது எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) புனித உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் (ஒருவரிடம்) பால்குடிப்பதும் புனிதமானவையாக்கி விடும்" என்று கூறினார்கள்.
Book :57
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, குவளை, மோதிரம் ஆகியனவும், இவற்றில் நபியவர்களுக்குப் பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன் படுத்திய பங்கிடப்பட வேண்டியவை" என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர்கள் இறந்த பின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் பரக்கத் (அருள்வளம்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, செருப்பு, பாத்திரம் ஆகியனவும்.
3106. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ பக்ர்(ரலி) கலீஃபாவாக ஆக்கப்பட்ட பொழுது, என்னை பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தார்கள். எனக்கு ஓர் ஆணையை எழுதி, அதில் நபி(ஸல்) அவர்களின் மோதிரத்தால் முத்திரையிட்டார்கள். அந்த மோதிரத்தில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன. `முஹம்மது` (என்னும் சொல்) ஒரு வரியிலும் `ரசூலு` (`தூதர்` என்னும் சொல்) ஒரு வரியிலும் `அல்லாஹி` (`அல்லாஹ்வின் எனும் சொல்) ஒரு வரியிலும் (`முஹம்மதுர் ரசூலுல்லாஹ்` - `இறைத்தூதர் முஹம்மது` என்று) பொறிக்கப்பட்டிருந்தது.
Book : 57
3107. ஈசா இப்னு தஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.
அனஸ்(ரலி) எங்களிடம் இரண்டு தோல்வார்கள் கொண்ட, (அணிந்து) நைந்து போன இரண்டு செருப்புகளைக் காட்டினார்கள். பின்னர், ஸாபித் அல் புனானீ(ரஹ்), `அவ்விரண்டும் நபி(ஸல்) அவர்களின் காலணிகள்" என்று அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்.
Book :57
3108. அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, `இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்" என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அபூ புர்தா(ரஹ்) கூறினார்.
ஆயிஷா(ரலி) யமன் நாட்டில் தயாரிக்கப்படுகிற கெட்டியான கீழங்கி ஒன்றையும் நீங்கள் `அல் முலப்பதா` (ஒட்டுப் போட்டது) என்றழைக்கிற வகையிலிருந்து ஒரு போர்வையையும் நபி(ஸல்) அவர்களுடையவை என்று) எடுத்துக் காட்டினார்கள்.
Book :57
3109. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் (மரத்தாலான) குவளை உடைந்துவிட்டது. (உடைந்து போய்) ஓட்டை (ஏற்பட்ட) பகுதியை நபி(ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியால் அடைத்துவிட்டார்கள்.
அறிவிப்பாளர் ஆஸிம்(ரஹ்), `நான் அந்தக் குவளையக் கண்டேன். (பரக்கத்தை விரும்பி) அதில் தண்ணீர் குடித்தேன்" என்று கூறுகிறார்கள்.
Book :57
3110. அலீ இப்னு ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன்)(ரஹ்) அறிவித்தார்.
நாங்கள் ஹுசைன் இப்னு அலீ(ரலி) - அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! - கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், `என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதூ? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)" என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு `அப்படி எதுவுமில்லை" என்று பதிலளித்தேன். மிஸ்வர்(ரலி), `அல்லாஹ்வின் தூதருடைய வாளை எடுத்துக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தினர் உங்களிடமிருந்து தம் அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும் வரை அது அவர்களிடம் சென்று சேராது" என்று கூறினார். (பிறகு பின் வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) ஃபாத்திமா(ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். - அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், `ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை - (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) - அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். `அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்னே;. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது" என்று கூறினார்கள்.
Book :57
3111. இப்னு ஹனஃபிய்யா(ரஹ்) அறிவித்தார்.
அலீ(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களைக் குறை பேசுபவர்களாக இருந்திருப்பின் மக்கள் சிலர் அவர்களிடம் வந்து, உஸ்மான்(ரலி) அவர்களின் (அரசின்) ஸகாத் வசூலிக்கும் ஊழியர்கள் குறித்து முறையிட்ட போதே குறை பேசியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அலீ(ரலி) என்னிடம் `நீ உஸ்மான்(ரலி) அவர்களிடம் சென்று, `இந்த ஏடு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நிர்ணயித்த ஸதகா (ஸகாத்தின் சட்டங்கள்) ஆகும். இந்த ஏட்டிலுள்ள படி ஸகாத் வசூலிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடுங்கள்` என்று தெரிவி" என்று கூறினார்கள். நான் அதை எடுத்துக் கொண்டு உஸ்மான்(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், `அது நமக்குத் தேவையில்லை. (அது ஏற்கனவே நம்மிடம் உள்ளது)" என்று கூறிவிட்டார்கள். எனவே, நான் அதை அலீ(ரலி) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்து விவரம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், `அதை எடுத்த இடத்திலேயே வைத்து விடு" என்று கூறினார்கள்.
Book :57
3112. முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா(ரஹ்) அறிவித்தார்.
என் தந்தை (அலீ இப்னு அபீ தாலிப்(ரலி)), `இந்த ஏட்டை எடுத்துக் கொண்டு உஸ்மான்(ரலி) அவர்களிடம் போ! ஏனெனில், இதில் தான் ஸகாத் பற்றிய நபி(ஸல்) அவர்களின் கட்டளைகள் உள்ளன" என்று சொல்லி என்னை அனுப்பினார்கள்.
Book :57
பாடம் : 6 குமுஸ் (ஐந்திலொரு பங்கு நிதி) அல்லாஹ்வின் தூதருடைய (அவசரத்) தேவைகளுக்காகவும் ஏழை எளியவர் களுக்காகவும் கடமையாக்கப்பட் டுள்ளது என்பதற்கான ஆதாரமும், (தம் மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் திருகையில் மாவரைத்து (கடும் சிரமத்திற்குள்ளாகி) அதைத் தம்மிடம் முறையிட்டு,போர்க் கைதிகளிலிருந்து ஒரு பணியாளைக் கொடுக்கும்படி கேட்ட போது திண்ணைத் தோழர்களுக்கும் விதவைகளுக்கும் நபி (ஸல்) அவர்கள் முன்னுரிமை வழங்கி விட்டு, தம் மகள் ஃபாத்திமாவின் பிரச்சினையை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டதும்.
3113. அலீ(ரலி) அறிவித்தார்.
(என் துணைவியாரான) `பாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா(ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. எனவே, ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபி(ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா(ரலி) விஷயத்தைச் சொன்னார்கள். (விபரமறிந்த) நபி(ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி(ஸல்) அவர்கள், `(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்" என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்தார்கள்.) பின்னர், `நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது `அல்லாஹு அக்பர் - அல்லாஹ் பெரியவன்` என்று முப்பத்து நான்கு முறையும், `அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்விற்கே` என்று முப்பத்து மூன்று முறையும், `சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்` என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்" என்றார்கள்.
Book : 57
பாடம் : 7 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், நீங்கள் தெரிந்து கொள் ளுங்கள்: போரில் உங்களுக்குக் கிடைக்கும் பொருள்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும்,வறியவர்களுக்கும் பயணிகளுக்கும் உரியதாகும். (8:41) அதாவது, இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு.28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப்பாளனும் மட்டுமேயாவேன். அல்லாஹ் தான் கொடுக்கின்றான்.
3114. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
எங்களில் - அன்சாரிகளில் - ஒரு மனிதருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு `முஹம்மத்` என்று பெயர் வைக்க அவர் விரும்பினார். அந்த அன்சாரித் தோழர் (அனஸ் இப்னு ஃபுளாலா(ரலி)) என்னிடம் கூறினார்: நான் அக்குழந்தையை என் கழுத்தில் சுமந்து கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்; நபி(ஸல்) அவர்கள், `என் பெயரைச் சூட்டி அழையுங்கள். ஆனால், (அபுல் காசிம் என்னும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டி அழைக்காதீர்கள். ஏனெனில், நான் உங்களிடையே பங்கீடு செய்பவனாகவே ஆக்கப்பட்டுள்ளேன்.
மற்றோர் அறிவிப்பில் ஜாபிர்(ரலி) கூறினார் என இடம் பெற்றுள்ளதாவது:
அந்த அன்சாரித் தோழர் `காசிம்` என்ற நபி(ஸல்) அவர்களின் பெயரைத் தன் குழந்தைக்குச் சூட்ட விரும்பினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், `என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்" என்றார்கள்.
Book : 57
3115. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் `காசிம்` என்று பெயர் சூட்டினார். அப்போது மற்ற அன்சாரித் தோழர்கள், `உம்மை நாங்கள் அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைக்கவும் மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்" என்று கூறினார்கள். அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, `இறைத்தூதர் அவர்களே! எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நான் `காசிம்` என்று பெயர் சூட்டினேன். அன்சாரித்தோழர்கள், `உம்மை நாங்கள் `அபுல் காசிம்` என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும் மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்` என்று கூறிவிட்டார்கள்" என்றார். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், `அன்சாரிகள் நல்ல வேலை செய்தார்கள். எனவே, என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என்னுடைய (அபுல் காசிம் என்னும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நான் பங்கிடுபவனே` என்று கூறினார்கள்.
Book :57
3116. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருக்கு அல்லாஹ் நன்மை புரிய நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைத் தருகிறான். அல்லாஹ்வே கொடுப்பவனாவான்; நான் பங்கிடுபவன் ஆவேன். இந்த (என்) சமுதாயத்தினர், அவர்களை எதிர்ப்பவர்களின் மீது ஆதிக்கம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். இறுதியில், அவர்கள் ஆதிக்கம் பெற்றவர்களாக இருக்கும் நிலையிலேயே இறைகட்டளை (மறுமை நாள்) வந்து விடும்.
என முஆவியா(ரலி) அறிவித்தார்.
Book :57
3117. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (எதையும்) உங்களுக்குக் கொடுப்பதுமில்லை; (எதையும்) உங்களுக்குக் கொடுக்காமல் தடுத்து நிறுத்திக் கொள்வதுமில்லை. நான் பங்கிடுபவனேயாவேன். எங்கு கொடுக்கும்படி (அல்லாஹ்வினால்) எனக்குக் கட்டளையிடப்படுகிறதோ அங்கு கொடுக்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :57
3118. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் (அநியாயமாகப் பங்கீடு செய்து) கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்.
என கவ்லா அல் அன்சாரிய்யா(ரலி) அறிவித்தார்.
Book :57
பாடம் : 8 போர்ச் செல்வங்கள் (என் சமுதாய மான) உங்களுக்கு (மட்டுமே) அனுமதிக் கப்பட்டுள்ளன என்னும் நபிமொழி. அல்லாஹ் கூறுகிறான்: ஏராளமான போர்ச் செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித் துள்ளான். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.31 மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கி யுள்ளான்.32மேலும், மக்களின் கரங்கள் உங்களுக்கெதிராக உயர்வதை அவன் தடுத்து விட்டான்.33 இது இறைநம்பிக்கை யாளர்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்வதற் காகவும், அல்லாஹ், நேர்வழியின் பக்கம் செல்லும் பேற்றை உங்களுக்கு வழங்கு வதற்காகவும் தான். (48:20)
3119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குதிரைகளின் நெற்றிகளில் நன்மையும் நற்பலனும் போர்ச் செல்வமும் மறுமை நாள் வரை பிணைக்கப்பட்டிருக்கின்றன.
என உர்வா அல் பாரிக்கீ(ரலி) அறிவித்தார்.
Book : 57
3120. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பாரசீகப் பேரரசர்) இப்போதைய கிஸ்ரா அழிந்துவிட்டால் அதற்குப் பின் கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். (ரோம, பைஸாந்தியப் பேரரசரான இப்போதைய) சீசர் அழிந்துவிட்டால் அதற்குப் பின் சீசர் எவரும் இருக்க மாட்டார். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவ்விருவரின் (கிஸ்ரா மற்றும் சீசரின்) கருவூலங்களை நீங்கள் இறைவழியில் செலவழிப்பீர்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :57
3121. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா அழிந்துவிட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். (தற்போதைய ரோமப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அதன் பிறகு சீசர் எவரும் இருக்க மாட்டார். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் அவ்விருவரின் கருவூலங்களையும் இறைவழியில் செலவழிப்பீர்கள்.
என ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.
Book :57
3122. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. (எனக்கு முந்திய இறைத்தூதர்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை).
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book :57
3123. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவழியில் போரிடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவன் பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் புகுத்துவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை அவரின் வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வர அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :57
3124. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், `ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன் வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல் இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்" என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார். ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக் கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப் போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, `நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்" என்று கூறிவிட்டு, `இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்து விடு" என்று பிரார்த்தித்தார். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும் வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது. (வெற்றி பெற்ற) பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து) நெருப்பு வந்தது. ஆனால், அவற்றை அது உண்ணவில்லை. எனவே, அந்த இறைத்தூதர் `உங்களிடையே (இந்தப் பொருட்களிலிருந்து) திருட்டுப் பொருள் ஏதோ ஒன்று உள்ளது. எனவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவர் என்னிடம் உறுதி மொழி கொடுக்கட்டும்" என்று கூறினார். (உறுதி மொழி கொடுத்துக் கொண்டிருந்த போது) ஒரு மனிதனின் கை இறைத் தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது. அப்போது இறைத்தூதர், `உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது. எனவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்" என்று கூறினார். (அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை அவரின் கையுடன் ஒட்டிக் கொண்டது. அப்போது அவர், `உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது" என்றார். எனவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக் கொண்டு வந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது. பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக் கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான். நம்முடைய பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :57
பாடம் : 9 போரில் கலந்து கொண்டவருக்கே போர்ச் செல்வங்கள் உரியவை.
3125. உமர்(ரலி) அறிவித்தார்.
முஸ்லிம்களின் வருங்காலத் தலை முறை இல்லாவிட்டால் நபி(ஸல்) அவர்கள் கைபர் பகுதியைப் பங்கிட்டதைப் போல் நான் வெல்கிற ஒவ்வோர் ஊரையும் (அவ்வூரிலுள்ள நிலங்களையும்) அதை வென்றவர்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன்.
என அஸ்லாம்(ரஹ்) அறிவித்தார்.
Book : 57
பாடம் : 10 போரில் கிடைக்கும் பொருட்களுக்காக (மட்டும்) போரிட்டவரின் நன்மை குறைந்து போய் விடுமா?
3126. `கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், `ஒருவர் போரில் கிடைக்கும் பொருட்களுக்காகப் போரிடுகிறார். மற்றொரு மனிதர் தான் (புகழ்ந்து) பேசப்பட வேண்டும் என்பதற்காகப் போர் புரிகிறார். (இவர்களில்) யார் இறைவழியில் போரிடுபவராவார்?` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்கவேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவர்தான் இறைவழியில் போரிடுபவராவார்` என்று பதிலளித்தார்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book : 57
பாடம் : 11 (பிற நாடுகளிலிருந்து) தமக்கு வருகின்ற அன்பளிப்புகளை (தம் தோழர் களிடையே) தலைவர் பங்கிட்டு விடுவ தும் பங்கிடும் போது வருகை தராதவர் அல்லது வெளியே சென்றிருப்ப வருக்காக (அவரது பங்கைத் தலைவர்) தனியே எடுத்து வைப்பதும்.
3127. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்குத் தங்கப் பித்தான்கள் கொண்ட பட்டு அங்கிகள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அதை அவர்கள் தம் தோழர்கள் சிலரிடையே பங்கிட்டார்கள். அவற்றிலிருந்து (ஒன்றை) மக்ரமா இப்னு நவ்ஃபல்(ரலி) அவர்களுக்காகத் தனியே எடுத்து வைத்தார்கள். மக்ரமா(ரலி), தம் மகன் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களுடன் வந்து வாசலருகே நின்று, `நபி(ஸல்) அவர்களை எனக்காகக் கூப்பிடு" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், மக்ரமா(ரலி) அவர்களின் குரலைக் கேட்டு, அங்கியை எடுத்துச் சென்று அவர்களைச் சந்தித்து, தங்கப் பித்தான்களுடன் அவர்களை வரவேற்று, `மிஸ்வரின் தந்தையே! உங்களுக்காக நான் இதை எடுத்து வைத்தேன். மிஸ்வரின் தந்தையே! உங்களுக்காக நான் இதை எடுத்து வைத்தேன்" என்றார்கள். (ஏனெனில்,) மக்ரமா(ரலி) அவர்களின் சுபாவத்தில் சிறிது (கடுமை) இருந்தது.
Book : 57
பாடம் : 12 பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரின் நிலங்களை நபி (ஸல்) அவர்கள் எப்படிப் பங்கிட்டார்கள் என்பதும் அவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் தம் அவசரத் தேவைகளுக்காகக் கொடுத்ததும்.
3128. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும் வரை (இலவசமாகப்) பயன்படுத்திக் கொள்ளும் படி தம்) பேரீச்ச மரங்களை நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் கொடுத்து வைத்திருந்தார்கள். அதன் (பனூ குறைழாவையும் பனூ நளீரையும் வெற்றி கொண்ட) பிறகு அவற்றை அவர்களிடமே நபி(ஸல்) அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
Book : 57
பாடம் : 13 நபி (ஸல்) அவர்களுடனோ, ஆட்சித் தலைவருடனோ சேர்ந்து அறப் போரிட்ட, உயிருள்ள அல்லது இறந்து விட்ட அறப்போர் வீரரின் செல்வத்தில் பரக்கத் (அருள் வளம்) உண்டு.
3129. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
(என் தந்தை) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) ஜமல் போரின்போது நின்றபடி என்னை அழைத்தார்கள். நான் அவர்களின் பக்கத்தில் சென்று நின்றேன். அவர்கள், `என் அன்பு மகனே! இன்று (தனக்கு எதிரானவரின் பார்வையில்) அக்கிரமத்காரராகவோ (தன் பார்வையில்) அநீதி இழைக்கப்பட்டவராகவோ இருப்பவரைத் தவிர வேறெவரும் கொல்லப்பட மாட்டார்கள். நான் இன்று அநீதியிழைக்கப்பட்ட நிலையில் (நிரபராதியாகக்) கொல்லப்பட்டு விடுவேன் என்றே கருதுகிறேன். (அதை விட) என்னுடைய கடன் தான் எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. நம்முடைய கடன் நம்முடைய செல்வத்தில் எதையவாது மீதம் வைக்கும் என்று நீ கருதுகிறாயா? மகனே! நம் சொத்தை விற்றுவிட்டு என் கடனை அடைத்து விடு" என்றார்கள். பிறகு, தம் சொத்தில் மூன்றிலொரு பங்கை (இன்ன நற்பணிகளுக்காகச் செலவிட வேண்டுமென்று இறுதி விருப்பம் தெரிவித்து) சாசனம் செய்தார்கள். அந்த மூன்றிலொரு பங்கில் மூன்றிலொரு பங்கைத் தம் மக்களுக்கு - அப்துல்லாஹ்வின் மக்களுக்கு - கொடுக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்கள். அதாவது, `ஒன்பதில் ஒரு பங்கை அதுவும் நம் சொத்திலிருந்து கடனை அடைத்த பின்பு மீதியிருந்தால் - உன் மக்களுக்குக் கொடுத்து விட வேண்டும்" என்று விருப்பம் தெரிவித்தார்கள்.
... ஏனெனில் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) கூறினார்:
அப்துல்லாஹ்(ரலி) அவர்களின் பிள்ளைகள் சிலர், ஸுபைர்(ரலி) அவர்களின் பிள்ளைகளான குபைப், அப்பாத் ஆகியோருக்கு ஈடான வயதுடையவர்களாய் இருந்தனர். அப்போது ஸுபைர்(ரலி) அவர்களுக்கு ஒன்பது ஆண் பிள்ளைகளும் ஒன்பது பெண் பிள்ளைகளும் இருந்தனர்...
(தொடர்ந்து) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்:
தம் கடனை அடைத்து விடும்படி என்னிடம் சொல்லத் தொடங்கினார்கள். பிறகு, `என் அன்பு மகனே! அதில் சிறிது உன்னால் அடைக்க முடியவில்லையென்றால் என் எஜமானிடம் உதவி கேள்" என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள், `என் எஜமான்` என்று யாரைக் குறிப்பிட்டார்கள் என்று (முதலில்) எனக்குத் தெரியவில்லை` அதனால் நான், `என் தந்தையே! தங்கள் எஜமான் யார்?` என்று கேட்டேன். அவர்கள், `அல்லாஹ் தான்" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களின் கடனை அடைப்பதில் எனக்குச் சிரமம் ஏற்பட்ட போதெல்லாம், `(என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களின் எஜமானனே! அவர் சார்பாக அவரின் கடனை நீ அடைப்பாயாக!" என்று பிரார்த்தித்து வந்தேன். அந்த (எஜமான்) அல்லாஹ்வும் அதை அடைத்து வந்தான். ஸுபைர்(ரலி) போரில் கொல்லப்பட்டார்கள். ஆனால், அவர்கள் ஒரு தீனாரையும் ஒரு திர்ஹமையும் கூட (ரொக்கமாக)விட்டுச் செல்லவில்லை; இரண்டு நிலங்களைத் தவிர. அவற்றில் ஒன்று ஃகாபாவில் ஒரு வீட்டையும் எகிப்தில் ஒரு வீட்டையும் அவர்கள்விட்டுச் சென்றார்கள். அவர்கள் மீதிருந்த கடன் ஏற்பட்ட விதம் இதுதான்: ஒருவர் ஸுபைர்(ரலி) அவர்களிடம் சில பொருட்களைக் கொண்டு வந்து அடைக்கலமாகத் தந்துவிட்டுச் செல்வது வழக்கம். ஸுபைர்(ரலி), `வேண்டாம். இதை நான் அடைக்கலப் பொருளாக ஏற்க மாட்டேன். மாறாக, இது என் பொறுப்பில் கடனாகும். அது அழிந்து போய் விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்" என்றார்கள். ஸுபைர்(ரலி) எந்த ஆட்சிப் பொறுப்பையும் ஒருபோதும் விரும்பியதில்லை. `கராஜ்` வரி வசூலிக்கும் பொறுப்பையோ வேறெந்தப் பணப் பொறுப்பையுமோ ஏற்றதில்லை; நபி(ஸல்) அவர்களுடன், அல்லது அபூ பக்கர், உமர், உஸ்மான் (ரலி - அன்ஹும்) ஆகியோருடன் புனிதப் போரில் பங்கெடுத்(து அதனால் கிடைத்த போர்ச் செல்வங்களில் பங்கு பெற்ற)ததைத் தவிர (அதிகாரத்தால் பொருளீட்டியதில்லை). நான் அவர்கள் மீதிருந்த கடனை எண்ணிப் பார்த்தேன். மொத்தம் இருபத்திரண்டு லட்சம் கடன் இருக்கக் கண்டேன். அப்போது ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) என்னைச் சந்தித்து, `என் சகோதரர் மகனே! என் சகோதரர் மீது எவ்வளவு கடன் இருக்கிறது?` என்று கேட்டார்கள். நான் அதை மறைத்து, `ஒரு லட்சம் தான்" என்று சொன்னேன். ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி), `அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் சொத்துகள் அவ்வளவு கடனை அடைக்கப் போதாதே" என்றார்கள். நான், `என் தந்தையின் கடன் இருபத்திரண்டு லட்சமாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `இவ்வளவு (பெருந் தொகையை அடைக்க) உங்களால் முடியாது என்றே கருதுகிறேன். உங்களால் அதில் ஓரளவு அடைக்க முடியாமல் போனால் என்னிடம் உதவி கேளுங்கள்" என்றார்கள்.
ஸுபைர்(ரலி) ஃகாபாவில் ஒரு லட்சத்து எழுபதாயிரத்திற்கு ஒரு சொத்தை வாங்கியிருந்தார்கள். அதை நான் பதினாறு லட்சத்திற்கு விலை மதிப்பிட்டிருந்தேன். பிறகு (மக்களிடையே), எழுந்து நின்று, `எவருக்கு ஸுபைர்(ரலி) கடன் தர வேண்டியுள்ளதோ அவர் நம்மிடம் ஃகாபாவுக்கு வரட்டும்" என்று அறிவித்தேன். உடனே அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி), என்னிடம் வந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு ஸுபைர்(ரலி) நான்கு லட்சம் தர வேண்டியிருந்தது. எனவே, அவர்கள் என்னிடம், `நீங்கள் விரும்பினால் என் கடனை உங்களுக்கேவிட்டுக் கொடுத்து விடுகிறேன்" என்றார்கள். நான், `வேண்டாம்" என்று சொன்னேன். உடனே அவர்கள், `சரி, நீங்கள் (சில கடன்களை) சற்றுத் தாமதமாக அடைப்பதாயிருந்தால் என் கடனையும் அப்படிப்பட்ட கடன்களில் ஒன்றாக நீங்கள் விரும்பினால் ஆக்கிக் கொள்ளுங்கள்" என்றார்கள். நான், `அதுவும் வேண்டாம் (உடனே உங்கள் கடனை வாங்கிக் கொள்ளுங்கள்)" என்று சொல்லி விட்டேன். அவர்கள், `அப்படியென்றால் (உங்கள் நிலத்திலிருந்து என் கடனுக்குச் சமமான) ஒரு துண்டை எனக்குத் தந்து விடுங்கள்" என்றார்கள். நான், `இங்கிருந்து இது வரை உங்களுக்கு உரியது" என்று (அவருக்குச் சேரும் நிலத்தின் அளவை வரையறுத்துச்) சொன்னேன். அதிலிருந்து சிறிதை நான் விற்று என் தந்தை ஸுபைர்(ரலி) கடனை (முழுவதுமாக) அடைத்து விட்டேன். ஃகாபாவின் நிலத்தில் நாலரைப் பங்குகள் மட்டும் விற்கப்படாமல் மீதமாயிருந்தன. முஆவியா(ரலி) அவர்களிடம் அம்ர் இப்னு உஸ்மான், முன்திர் இப்னு ஸுபைர், அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) ஆகியோர் இருக்க, நான் அங்கு சென்றேன். முஆவியா(ரலி) என்னிடம், `ஃகாபாவிலிருக்கும் (உங்கள் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களின்) ஃகாபாவிலுள்ள சொத்திற்கு எவ்வளவு விலைமதிப்பு சொல்லப்பட்டது" என்று என்னிடம் கேட்க, நான், `ஒவ்வொரு பங்கும் ஒரு லட்சம்" என்று பதிலளித்தேன். அவர்கள், `அதில் எவ்வளவு (விற்காமல்) எஞ்சியுள்ளது?` என்று கேட்டார்கள். நான், `நாலரைப் பங்குகள் எஞ்சியுள்ளன" என்று பதில் சொன்னேன். முன்திர் இப்னு ஸுபைர் அவர்கள், `நான் ஒரு பங்கை ஒரு லட்சம் கொடுத்து எடுத்துக் கொள்கிறேன்" என்றார். அம்ர் இப்னு உஸ்மான் அவர்கள், `நான் ஒரு பங்கை ஒரு லட்சம் கொடுத்து எடுத்து கொள்கிறேன்" என்றார்கள். இப்னு ஸம்ஆ(ரலி), `இப்போது எவ்வளவு மீதியுள்ளது?` என்று கேட்டார்கள். நான், `ஒன்றரைப் பங்கு (மட்டும் தான்) மீதியுள்ளது" என்று கேட்டார்கள். நான், `ஒன்றரைப் பங்கு (மட்டும் தான்) மீதியுள்ளது" என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், `நான் அதை ஒன்றரை லட்சம் கொடுத்து எடுத்துக் கொள்கிறேன்" என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) (தமக்கு வர வேண்டிய நான்கு லட்சத்திற்கு பதிலாக தமக்குத் தரப்பட்ட துண்டு நிலத்தை) முஆவியா(ரலி) அவர்களிடம் ஆறு லட்சத்திற்கு விற்று (இரண்டு லட்சம் லாபம் அடைந்து)விட்டார்கள். நான் என் தந்தையின் கடன்களையெல்லாம் அடைத்து முடித்த பிறகு (என் சகோதரர்களான) ஸுபைர்(ரலி) அவர்களின் மக்கள், `எங்களுக்கிடையே எங்கள் வாரிசுச் சொத்தைப் பங்கிட்டு விடுங்கள்" என்று என்னிடம் கோரினர். நான், `முடியாது, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (ஹஜ்) பருவத்தில் நான்காண்டுகளுக்கு, `ஸுபைர்(ரலி) எவருக்குக் கடன் தர வேண்டியுள்ளதோ, அவர் நம்மிடம் வரட்டும். நாம் அவர் கடனை அடைப்போம்" என்று அறிவிக்காமல் உங்களிடையே அவரின் சொத்துகளைப் பங்கிடவே மாட்டேன்" என்று சொல்லிவிட்டேன். பிறகு, ஒவ்வோர் ஆண்டும் ஹஜ்ஜுப் பருவத்தில் அறிவிப்புக் கொடுக்கத் தொடங்கினேன். நான்காண்டுகள் கழிந்துவிட்ட பின் (யாரும் ஸுபைர்(ரலி) கடன் தர வேண்டியிருப்பதாகக் கேட்டு வராததால் (என் சகோதர சகோதரிகளான) ஸுபைர்(ரலி) அவர்களின் மக்களுக்கிடையே மீதிச் சொத்துகளைப் பங்கிட்டு விட்டேன்.
(என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுக்கு நான்கு மனைவியர் இருந்தனர். ஸுபைர்(ரலி) தம் இறுதி விருப்பமாகத் தெரிவித்த (மரண சாசனப் பங்கான) மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்தது போக, மீதியை அவர்களின் துணைவியருக்குக் கொடுத்தேன். ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு லட்சம் கிடைத்தது. ஆக, ஸுபைர்(ரலி) அவர்களின் சொத்துகளுடைய மொத்த மதிப்பு (கடனுக்காகக் கொடுத்தது, நல்லறங்களுக்காகச் செய்த மரண சாசனத் தொகை, வாரிசுகளுக்குக் கிடைத்தது ஆகிய அனைத்தும் சேர்ந்து) ஐம்பது கோடியே இரண்டு இலட்சமாகும் (என மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.)
Book : 57
பாடம் : 14 (போரில் கலந்துகொள்ளாமல் வேறொரு பணியை முடித்து வரும்படி) ஒரு தேவைக்காக ஒரு தூதுவரைத் தலைவர் அனுப்பி வைத்திருந்தால் அல்லது (போருக்குச் செல்லாமல்) ஊரில் தங்கியிருக்கும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டால் அவர்களுக் கெல்லாம் (போரில் கிடைத்த பொருட்களில்) பங்கு தரப்படுமா?
3130. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உஸ்மான்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம், அவரின் மனைவியாக அல்லாஹ்வின் தூதருடைய மகள் (ருகைய்யா(ரலி)) இருந்தார்கள். மேலும், அவர்கள் நோய்வாய்ப்படடிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம், `பத்ருப் போரில் பங்கெடுத்தவருக்குரிய நற்பலனும் (போர்ச் செல்வத்தில்) அவருக்குரிய பங்கும் உங்களுக்கு உண்டு" என்று கூறினார்கள்.
Book : 57
பாடம் : 15 ஹவாஸின் குலத்தார் தம் குலத்துப் பெண்மணி ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் பால் குடித்து வளர்ந்திருக்கும் உறவை எடுத்துரைத்து,51 போரில் பறி கொடுத்த தமது பொருட்களைத் திருப்பித் தரும்படி கேட்ட போது போர்க் கைதிகளை விட்டுத் தரும்படி நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்டுக் கொண்டதும்,52 (போரிடாமல் வெற்றி கொள்ளும் போது கிடைக்கும்) ஃபய்உ" என்னும் செல்வத்திலிருந்தும் (போரில் கிடைக்கின்ற பொருட்களி லிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்) குமுஸ் எனும் ஐந்திலொரு பங்கின் குவியல்களிலிருந்து(கூடுதலாகவு)ம் மக்களுக்குக் கொடுப்பதாக நபி (ஸல்) அவர்கள் வாக்களித்து வந்ததும், அவர்கள் அன்சாரிகளுக்குக் கொடுத்ததும், ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கு கைபருடைய பேரீச்சம் பழங்களி லிருந்து கொடுத்ததும் குமுஸிலிருந்து முஸ்லிம்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக நிதி தரலாம் என்பதற்கான ஆதாரங்களாகும்.
3131. மர்வான் இப்னி ஹகம் மற்றும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் கூறினார்கள்.
"ஹவாஸின் குலத்தின் தூதுக் குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முஸ்லிம்களாக வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் தம் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் திருப்பித் தந்து விடும்படி கேட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `பேச்சில் எனக்கு மிகவும் பிரியமானது உண்மையான பேச்சேயாகும். போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வங்கள் இரண்டில் நீங்கள் விரும்பியதைத் திரும்பப் பெறுங்கள். நான் உங்களை எதிர்பார்த்(துக் காத்)திருந்தேன்" என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியபோது பத்துக்கும் மேற்பட்ட நாள்கள் ஹவாஸின் குலத்தாரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இரண்டிலொன்றைத்தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, `நாங்கள் எங்கள் கைதிகளையே திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்" என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குரிய முறையில் புகழ்ந்துவிட்டு, `அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின் கூறுகிறேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர். இவர்களில் (நம்மிடம்) போர்க் கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் பொருத்தமானதாகக் கருதுகிறேன். மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கிறவர் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லாஹ் (இனி வரும் நாள்களில்) முதலாவதாக நமக்குத் தரவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து அவருக்கு நாம் தருகிறவரை அவற்றைத் தம்மிடமே வைத்திருக்க விரும்புகிறவர் அவ்வாறே வைத்திருக்கட்டும்" என்று கூறினார்கள். மக்கள், `நாங்கள் மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத்) திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கிறோம், இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `உங்களில் இதற்கு சம்மதிக்கிறவர் யார், சம்மதிக்காதவர் யார் என எமக்குத் தெரியாது. எனவே, நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள். உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்களின் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும்" என்று கூறினார்கள். மக்கள் திரும்பிச் செல்ல, அவர்களிடம் அவர்களின் தலைவர்கள் பேசினார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தலைவர்கள் திரும்பி வந்து மக்கள் மனப்பூர்வமாகச் சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தார்கள்" என இப்னு ஷிஹாப்(ரஹ்) `இதுதான் ஹவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகள் குறித்து எமக்கு எட்டிய செய்தியாகும்" என்று கூறினார்.
Book : 57
3132. ஸஹ்தம்(ரஹ்) அறிவித்தார்.
நாங்கள் அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது கோழிக்கறிச் சாப்பாடு வந்தது. அவர்களிடம் தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ரோம நாட்டவரிடையேயிருந்து பிடித்துக் கொண்டு வரப்பட்ட) போர்க் கைதிகளில் ஒருவரைப் போல் காணப்பட்டார். அபூ மூஸா(ரலி) அந்த மனிதரை உணவு உண்ண அழைத்தார். அதற்கு அந்த மனிதர், `இந்தக் கோழி (அசுத்தம்) எதையோ தின்பதை பார்த்தேன். அது எனக்கு அருவருப்பையுண்டாக்கவே இதை இனி உண்பதில்லை என்று சத்தியம் செய்து விட்டேன்" என்றார். இதைக் கேட்ட அபூ மூஸா(ரலி), `இங்கே வா! இதைப் பற்றி உனக்கு (நபி(ஸல்) அவர்களிடமிருந்து) அறிவிக்கிறேன்" என்று சொல்லிவிட்டுக் கூறலானார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரிடம் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டுச் சென்றேன். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் இல்லை" என்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே எங்களைக் குறித்து, `அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?` என்று கேட்டுவிட்டு, எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட கொழுத்த (மூன்று வயதிலிருந்து பத்து வயதிற்குட்பட்ட) ஒட்டகங்களைத் தரும்படி உத்தரவிட்டார்கள். நாங்கள் (அதைப் பெற்று) சென்று கொண்டிருந்தபோது, நாங்கள் எங்களுக்குள், `நாம் என்ன காரியம் செய்து விட்டோம். (நமக்குக் கொடுக்க முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய பின் மீண்டும் இவற்றை நாம் வாங்கிச் சென்றால்) இவற்றில் நமக்கு பரக்கத் (அருள் வளம்) வழங்கப்படாதே" என்று பேசிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம். `நாங்கள் தங்களிடம், `நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு ஒட்டகங்கள் கொடுங்கள்" என்று கேட்டோம். `நாங்கள் ஏறிச் செல்ல ஒட்டகம் கொடுக்க முடியாது` என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே மறந்து விட்டீர்களா?` என்று கேட்டோம். அதற்கு அவர்கள், `நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை. மாறாக, அல்லாஹ் தான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒரு வாக்குக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதை விடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில், சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரம் செய்து விடுவேன்" என்றார்கள்.
Book :57
3133. ஸஹ்தம் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நாங்கள் அபூ மூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்ளிடம் இருந்தோம். அப்போது கோழிக்கறிச் சாப்பாடு வந்தது. அவர்களிடம் தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ரோம நாட்டவரிடையேயிருந்து பிடித்துக் கொண்டு வரப்பட்ட) போர்க் கைதிகளில் ஒருவரைப் போல் காணப்பட்டார். அபூமூசா (ரலி) அவர்கள் அந்த மனிதரை உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், இந்தக் கோழி (அசுத்தம்) எதையோ தின்பதை நான் பார்த்தேன். அது எனக்கு அருவரப்பையுண்டாக்கவே இதை இனி உண்பதில்லை என்று சத்தியம் செய்து விட்டேன் என்று சொன்னார். இதைக் கேட்ட அபூமூசா (ரலி) அவர்கள், இஙகே வா! இதைப் பற்றி உனக்கு (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) அறிவிக்கிறேன் என்று சொல்லி விட்டுக் கூறலானார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் (எனது) அஷ்அரீ குலத்தவர்கள் சிலருடன் எஙகளை(யும் எஙகள் பயணச் சமைகளையும்) சுமந்து செல்ல ஒட்டகஙகள் ஏற்பாடு செய்யும்படி கேட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உஙகளை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உஙகளை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகஙகள் என்னிடம் இல்லை என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே எங்களைக் குறித்து, அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே என்று கேட்டு விட்டு, எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட கொழுத்த (மூன்று வயதிலிருந்து பத்து வயதிற்குட்பட்ட) ஒட்டகங்களைத் தரும்படி உத்தரவிட்டார்கள். நாங்கள் (அதைப் பெற்றுக் கொண்டு) சென்று கொண்டிருந்த போது, நாங்கள் எஙகளுக்குள், நாம் என்ன காரியம் செய்து விட்டோம். (நமக்குக் கொடுக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பின் மீண்டும் இவற்றை நாம் வாஙகிச் சென்றால்) இவற்றில் நமக்கு பரக்கத் (அருள் வளம்) வழங்கப்படாதே என்று பேசிக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம். நாங்கள் தஙகளிடம், நாஙகள் பயணம் செய்ய எங்களுக்கு ஒட்டகங்கள் கொடுஙகள் என்று கேட்டோம். நாஙகள் ஏறிச் செல்ல ஒட்டகம் கொடுக்க முடியாது என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே மறந்நு விட்டீர்களா என்று கேட்டோம். அதற்கு அவர்கள், நான் உஙகளை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை. மாறாக, அல்லாஹ் தான் உஙகளை (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒரு வாக்குக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதை விடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில், சிறந்ததையே செய்வேன். சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரம் செய்து விடுவேன் என்று சொன்னார்கள்.
Book :56
3134. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு படைக் குழுவை `நஜ்து` நாட்டை நோக்கி அனுப்பி வைத்தார்கள். அதில் நானும் (ஒருவனாக) இருந்தேன். நாங்கள் நிறைய ஒட்டகங்களைப் போர்ச் செல்வமாகப் பெற்றோம். எங்கள் பங்குங்கள் (ஒவ்வொருவருக்கும்) பன்னிரண்டு ஒட்டகங்கள் அல்லது பதினொரு ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஒட்டகம் அதிகப்படியாகத் தரப்பட்டது.
Book :57
3135. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அறப் போருக்காகப்) படைக் குழுக்களில் தாம் அனுப்பி வைக்கும் சிலருக்கும் மட்டும் குறிப்பாகக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் பொதுவாகப் படையினருடன் சேர்ந்து பெறுகிற பங்குக்கு மேல் (சற்று) அதிகப்படியாகக் கொடுத்து வந்தார்கள்.
Book :57
3136. அபூ மூஸா அல்-அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரிய வந்தது. உடனே, நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி(ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூ புர்தா அவர்களும் மற்றொருவர் அபூ ருஹ்கி அவர்களுமாவர். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். `என் குலத்தாரில் ஐம்பதிற்கு மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்` என்றோ, `ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்` என்றோ என் தந்தை அபூ மூஸா(ரலி) சொன்னார்கள் என்று நான் நினைக்கிறேன்" என அறிவிப்பாளர் அபூ புர்தா(ரஹ்) கூறினார் - நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் மன்னர் நஜாஷீயிடம் எங்களை இறக்கிவிட்டது. அவரிடம் (அபிசீனியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் அவர்களையும் அவர்களின் சகாக்களையும் தற்செயலாகச் சந்தித்தோம். ஜஅஃபர்(ரலி), `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை இங்கு அனுப்பி (இங்கேயே) தங்கும்படி உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, நீங்களும் எங்களுடன் (இங்கேயே) தங்குங்கள்" என்று கூறினார்கள். எனவே, நாங்கள் அவருடன் தங்கினோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) சென்றோம். நபி(ஸல்) அவர்கள் கைபரை வென்றபோது அவர்களைச் சென்றடைந்தோம். உடனே அவர்கள் (கைபர் போரில் கிடைத்த பொருட்களில்) எங்களுக்கும் பங்கு கொடுத்தார்கள். அல்லது எங்களுக்கும் அதிலிருந்து கொடுத்தார்கள். கைபர் வெற்றியில் கலந்து கொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தரவில்லை. தம்முடன் (அதில்) பங்கெடுத்தவர்களுக்கு மட்டும் தான். பங்கிட்டுத் தந்தார்கள். ஆனால், எங்கள் கப்பலில் வந்தவர்களுக்கு மட்டும் ஜஅஃபர்(ரலி) அவர்களுடனும் அவர்களின் சகாக்களுக்கடனும் (சேர்த்துப்) பங்கிட்டுத் தந்தார்கள்.
Book :57
3137. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `பஹ்ரைனுடைய நிதி எம்மிடம் (அள்ளிக்) கொடுப்பேன்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் இறக்கும் வரை பஹ்ரைனுடைய நிதி வரவில்லை. (அபூ பக்ர்(ரலி) அவர்களின் காலத்தில்) பஹ்ரைனுடைய நிதி வந்தபோது அபூ பக்ர்(ரலி) பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவரை அனுப்பினார்கள். அவர், `அல்லாஹ்வின் தூதரிடம் (இருந்து வரவேண்டிய) கடனோ, (நிறைவேற்றப்பட வேண்டிய) வாக்குறுதியோ (நிறைவேறாமல்) இருக்குமாயின் அவர் நம்மிடம் வரட்டும்" என்று கூறினார். நான், `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் இன்னின்னவாறு சொன்னார்கள்" என்று கூறினேன். உடனே அபூ பக்ர்(ரலி) மூன்று முறை இரண்டு கைகளையும் குவித்து அள்ளித் தந்தார்கள்.
அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) தம் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து அள்ளிப் போடுவது போல் சைகை செய்யத் தொடங்கினார்கள். பிறகு எங்களிடம் `இப்படித் தான் எங்களிடம் முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்) சொன்னார்கள்" என்று கூறினார்கள்.
ஒரு முறை சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) (இப்னுல் முன்கதிர்(ரஹ்) வழியாகக்) கூறினார்.
ஜாபிர்(ரலி) கூறினார்.
நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. பிறகு மூன்றாம் முறையாக நான் அவர்களிடம் சென்று, `உங்களிடம் நான் (முதல் முறையாகக்) கேட்டும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று, நீங்கள் எனக்குத் தரவேண்டும்; இல்லையெனில், என்னிடம் நீங்கள் கஞ்சத்தனம் காட்டுவதாகப் பொருள்" என்று கூறினேன். அதற்கு அவர்கள், `நான் உங்களிடம் கஞ்சத்தனம் காட்டுகிறேன் என்றா சொன்னீர்கள்? நான் உங்களுக்குத் தராமலிருந்துவிட்ட ஒவ்வொரு முறையும் உங்களுக்குத் தர விரும்பிய நிலையில் தான் (இருந்தேன்; இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தாலேயே) அப்படிச் செய்தேன்" என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், `எனக்கு அபூ பக்ர்(ரலி) கைகள் நிறைய ஒரு முறை அள்ளித் தந்துவிட்டு, `இதை எண்ணிக் கொள்` என்று கூறினார்கள். நான் (எண்ணிப் பார்த்த போது) அது ஐந்நூறு இருக்கக் கண்டேன். அபூ பக்ர்(ரலி), `இது போன்றதை இரண்டு முறை எடுத்துக் கொள்` என்றார்கள்" என்று ஜாபிர்(ரலி) கூறினார்.
அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்), `கருமித் தனத்தை விட மோசமான நோய் உண்டா?` என்றார்கள்.
Book :57
3138. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `ஜிஇர்ரானா`வில் வைத்து போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் அவர்களிடம், `நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `(இறைத் தூதராகிய) நானே நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் (என்னைப் பின்பற்ற வேண்டிய) நீ வழிதவறிப் போய் விடுவாய்" என்று பதிலளித்தார்கள்.
Book :57
பாடம் : 16 (போர்ச் செல்வத்தில்) போர்க் கைதிகளை(யும் சேர்த்து) ஐந்து பாகங்களாக்காமலேயே அவர்களு (டைய விடுதலை)க்காக நபி (ஸல்) அவர்கள் உதவ முன் வந்தது.
3139. நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போரில் பிடிபட்ட கைதிகளைப் பற்றிப் பேசும்போது கூறினார்கள்:
முத்யிம் இப்னு அதீ அவர்கள் உயிரோடிருந்து, இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத் தொகை வாங்காமலே)விட்டு விடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால் நான் அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே)விட்டு விட்டிருப்பேன்.
என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
Book : 57
பாடம் : 17 நபி (ஸல்) அவர்கள் பனூ முத்த-ப் மற்றும் பனூ ஹாஷிம் குலத்தினருக்கு கைபருடைய குமுஸிலிருந்து பங்கிட்டுத் தந்தது, குமுஸ் தலைவருக்குரியது; அதை அவர் தம் உறவினர்களில் (தாம் விரும்பிய) சிலருக்கு மட்டும் தரலாம்" என்பதற்கு ஆதாரமாகும். உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தம் உறவினர்கள் அனைவருக்குமே (குமுஸிலிருந்து) கொடுக்கவில்லை. மிகவும் ஏழ்மையாக இருப்பவர்களை விட்டுவிட்டு தம் (நெருங்கிய) உறவினர்களுக்கு மட்டுமே கொடுக்கவுமில்லை. கொடுக்கப்பட்டவர் தூரத்து உறவினராக இருந்தாலும், அவர் தம் தேவையை முறையிட்டதால் அவருக்கே நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். தம்முடன் ஒத்துழைத்த வர்களுக்கு அவர்களுடைய குலத்தி னராலும் அவர்களுடைய ஒப்பந்தக் குலங்களாலும் துன்பம் ஏற்பட்ட காரணத்தால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள்.
3140. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
நானும் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, `இறைத்தூதர் அவர்களே! பனூ முத்தலிப் கிளையாருக்கு (குமுஸிலிருந்து) கொடுத்தீர்கள்; எங்களுக்குக் கொடுக்காமல்விட்டு விட்டீர்கள். நாங்களும் அவர்களும் உங்களுடன் ஒரே மாதிரியான உறவு முறை உடையவர்கள் தாமே?` என்று கேட்டோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `பனூ முத்தலிபும் பனூ ஹாஷிமும் ஒருவர் தாம்" என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், `பனூ அப்தி ஷம்ஸ் கிளையாருக்கும் பனூ நவ்ஃபல் கிளையாருக்கும் நபி(ஸல்) அவர்கள் (குமுஸில்) பங்கு தரவில்லை" என்று ஜுபைர்(ரலி) கூறினார்.
"பனூ அப்தி ஷம்ஸ், பனூ ஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் ஆகியோர் (ஒருவருக்கொருவர்) தாய் வழிச் சகோதரர்கள் ஆவர். அவர்களின் தாயார் ஆத்திகா பின்த்து முர்ரா என்பவராவார். நவ்ஃபல் என்பவர் இந்தக் குலங்களின் தந்தை வழிச் சகோதராவார்" என்று இப்னு இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.
Book : 57
பாடம் : 18 (போரில்) கொல்லப்பட்டவரின் உடலில் கிடந்த(சட்டை, ஆயுதம் போன்ற)வை குமுஸில் சேர்ந்தவை யாகக் கருதப்படாது; எவர் (புனிதப் போரில்) ஒருவரைக் கொல்கின்றாரோ அவருக்கே கொல்லப்பட்டவரின் உடைமைகள் சேரும்; அவை குமுஸில் சேர்க்கப்படாது என்பதும் இது குறித்துத் தலைவரின் கட்டளையும்.
3141. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இளவயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள். அப்போது, `அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா` என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, `என் பெரிய தந்தையே! நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா?` என்று கேட்டார். நான், `ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!" என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், `அவன் இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)" என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, `இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!" என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், `உங்களில் யார் அவனைக் கொன்றது?` என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், `நானே (அவனைக் கொன்றேன்)" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், `உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?` என்று கேட்டார்கள். இருவரும், `இல்லை" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, `நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் இப்னு அம்ர்டைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) `அபூ ஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருள்கள் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹுக்கு உரியவை" அவர்களும் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹ்(ரலி) அவர்களும் ஆவர்.
Book : 57
3142. அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட்டோம்.60 (எதிரிகளைப் போர்க்களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவியது. (அவர்கள் தோல்வியுற்றனர்.) நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து அவரைக் கொல்ல முயன்றான். நான் அவனைச் சென்று வாளால் அவனுடைய (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டினேன். உடனே அவன் (அந்த முஸ்லிமைவிட்டுவிட்டு) என்னை இறுக அணைத்தான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்கலானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னைவிட்டுவிட்டான். உடனே நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சென்றடைந்து, `மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `(இது) அல்லாஹ் விதித்த விதி" என்று பதிலளித்தார்கள். பிறகு, மக்கள் (அப்பாஸ்(ரலி) அழைத்தால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து, `போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை" என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, `எனக்கு சாட்சி சொல்வார் யார்?` என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து கொண்டேன். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், `போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை" என்று கூறினார்கள். உடனே, நான் எழுந்து நின்று, `எனக்கு சாட்சி சொல்வார் யார்?` என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு, மூன்றவாது முறையாக அதே போன்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே, நான் எழுந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `அபூ கத்தாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது?` என்று கேட்டார்கள். நடந்த நிகழ்ச்சியை நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். ஒருவர், `இவர் உண்மையே சொன்னார், இறைத்தூதர் அவர்களே! இவரால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் என்னிடம் உள்ளன. எனக்காக அவரை (ஏதாவது கொடுத்துத்) திருப்திப்படுத்தி விடுங்கள்" என்றார். அப்போது அபூ பக்ர் சித்திக்(ரலி), `இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் போரிட்டு (தன்னால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்" என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், `(அபூ பக்ர்) உண்மை சொன்னார்" என்று கூறிவிட்டு அதை எனக்கே கொடுத்துவிட்டார்கள். நான் அந்தப் போர்க் கவசத்தை விற்றுவிட்டு பனூ ஸலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டததை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் சேகரித்த முதல் சொத்தாகும்.
Book :57
பாடம் : 19 (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய,) உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்களுக்கும்,மற்றவர்களுக்கும் குமுஸ் முதலான நிதிகளிலிருந்து நபி (ஸல்) அவர்கள் கொடுத்து வந்தது... இது பற்றி அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து அறிவித்துள்ளார்கள்.
3143. ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (நிதயுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி) கேட்டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், `ஹகீமே! இச்செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும். கொடையுள்ளத்துடன் இதை(க்கொடுப்பவர் கொடுக்க, தானும்) பேராசையின்றி எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படும். பேராசையுடன் இதை எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் (நிறையத்) தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கை தான் (வாங்கும்) தாழ்ந்த கையை விட மேலானதாகும்" என்று கூறினார்கள். நான், `இறைத்தூதர் அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மீது சத்தியமாக! தங்களுக்குப் பின், நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை வேறெவரிடமிருந்தும் எதையும் பெற மாட்டேன்" என்று கூறினேன்.
அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்:
அபூ பக்ர்(ரலி) (தம் ஆட்சிக் காலத்தில்) ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்களுக்கு அன்பளிப்பு (நிதியை) வழங்க அழைப்புக் கொடுத்து வந்தார்கள். ஆனால், ஹகீம்(ரலி), அபூ பக்ர்(ரலி) அவர்களிடமிருந்து எதையும் ஏற்க மறுத்துவிட்டார்கள். பிறகு உமர்(ரலி) ஹகீம்(ரலி) அவர்களுக்கு நிதி வழங்க அழைப்புக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்தும் (உதவி நிதியை) ஏற்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். எனவே, உமர்(ரலி), `முஸ்லிம்களே! (வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கும்) இச்செல்வத்திலிருந்து அல்லாஹ், ஹகீம் அவர்களின் பங்காகக் கொடுத்த அவரின் உரிமையை அவர் முன் நான் சமர்ப்பித்து விட்டேன். அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்" என்று கூறினார்கள். இவ்விதம் ஹகீம்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் எவரிடமிருந்தும் எதையும், தாம் மரணமடையும் வரை பெறவில்லை.
Book : 57
3144. உமர் இப்னு கத்தாப்(ரலி), `இறைத்தூதர் அவர்களே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை தழுவும் முன்பு), ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லi. இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?` என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர்(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், உமர்(ரலி) ஹுனைன் போரில் பிடிபட்ட போர்க் கைதிகளிலிருந்து இரண்டு அடிமைப் பெண்களைப் பெற்றிருந்தார்கள். அவ்விருவரையும் மக்காவிலுள்ள ஒரு வீட்டில் தங்க வைத்திருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட கைதிகளுக்கு கருணை காட்டி அவர்களை சுதந்திரமாகவிட்டு விட்டிருந்தார்கள். எனவே, அவர்கள் சாலைகளில் (சுதந்திரமாக) நடமாடத் தொடங்கினார்கள். உடனே உமர்(ரலி) தம் மகன் அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம், `அப்துல்லாஹ்வே! இங்கே பார். என்ன இது?` என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), `இறைத்தூதர்(ஸல்) அவர்கள், போர்க் கைதிகளின் மீது கருணை புரிந்து அவர்களை சுதந்திரமாகவிட்டுவிட்டார்கள்" என்றார்கள். (உடனே) உமர்(ரலி), அப்படியென்றால் நீ சென்று அந்த இரண்டு அடிமைப் பெண்களையும் சுதந்திரமாகச் செல்லவிட்டு விடு" என்று கூறினார்கள். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜிஇர்ரானாவிலிருந்து உம்ரா செய்யவில்லை. அப்படி அவர்கள் உம்ரா செய்திருந்தால் அது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுக்குத் தெரியாமலிருந்திருக்காது.
மற்றோர் அறிவிப்பில், `குமுஸ் (ஐந்திலொரு பங்கு) நிதியிலிருந்து இந்த இரண்டு அடிமைப் பெண்களையும் நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்" என்று வந்துள்ளது.
உமர்(ரலி) அறியாமைக் காலத்தில் செய்த நேர்ச்சை குறித்த மற்றோர் அறிவிப்பில், `இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்" என்று மட்டுமே வந்துள்ளது. `ஒரு நாள் இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்" என்று (`ஒரு நாள்` எனும் சொல்) இடம் பெறவில்லை.
Book :57
3145. அம்ர் இப்னு தக்லிப்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிலருக்குக் கொடுத்துச் சிலருக்குக் கொடுக்காமல்விட்டுவிட்டார்கள். அவர்கள் (அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்) நபி(ஸல்) அவர்களைக் குறை சொல்வதைப் போன்ற சூழ்நிலை நிலவியது. எனவே, நபி(ஸல்), அவர்கள், `நம்பிக்கை பலவீனப்பட்டுவிடுவார் என்றும், பொறுமையிழந்து நிலை குலைந்துவிடுவார் என்றும் எவரைக் குறித்து நான் அஞ்சுகிறேனோ அவருக்குக் கொடுக்கிறேன். இன்னும் சிலருக்கு, அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மையையும் தன்னிறைவான (போது மென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல்விட்டு விடுகிறேன். அத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர் தான் அம்ர் இப்னு தக்லிப் அவர்களும்" என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை (நன்மையும் போதுமென்ற குணமும் உடையவர்களில் ஒருவனாகக் குறிப்பிட்டுப்) புகழ்ந்து பேசிய இச்சொல்லுக்குப் பகரமாக (விலையுயர்ந்த செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை எனக்குத் தருவதாக இருந்தாலும் நான் அவற்றை விரும்ப மாட்டேன்.
மற்றோர் அறிவிப்பில், `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு செல்வத்தை... அல்லது போர்க் கைதிகளைக் கொண்டு வந்து இவ்வாறு பங்கிட்டார்கள்" என்று வந்துள்ளது.
Book :57
3146. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் குறைஷிகளுடன் நேசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்குக் கொடுக்கிறேன். ஏனெனில், அவர்கள் அறியாமைக் காலக் கொள்கையைவிட்டுவிட்டு (இப்போது தான்) புதிதாக இஸ்லாத்தில் இணைந்துள்ளனர்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :57
3147. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை அல்லாஹ், தன்னுடைய தூதருக்கு (ஹுனைன் போரில்) அளித்தபோது அவர்கள் குறைஷிகளில் சிலருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள். உடனே அன்சாரிகளில் சிலர், `தன் தூதரை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் எதிரிகளுடைய இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷிகளுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டு விடுகிறாரோ" என்று பேசிக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அவர்களின் இந்தப் பேச்சு தெரிவிக்கப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை வரச் சொல்லி அவர்களை முழுதாகப் பதனிடப்பட்ட தோலால் ஆன கூடாரம் ஒன்றில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் வேறெவரையும் அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்று திரண்டுவிட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து, `உங்களைப் பற்றி எனக்கு எட்டியுள்ளதே, அச்செய்தி என்ன?` என்று கேட்டார்கள். அன்சாரிகளிடையே இருந்த அறிஞர்கள், `எங்களில் யோசனையுடையவர்கள் எதுவும் சொல்லவில்லை, இறைத்தூதர் அவர்களே! ஆயினும், எங்களிடையேயுள்ள இளம் வயது வாலிபர்கள், `தன் தூதரை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் ஹவாஸின் குலத்தாருடைய இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷிகளுக்குக் கொடுக்கிறார். ஆனால், நம்மைவிட்டு விடுகிறாரே` என்று பேசிக் கொண்டார்கள்" என்று பதில் கூறினர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `நிராகரிப்பைக் கைவிட்டு இப்போது தான் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு கொடுக்கிறேன். மக்கள், செல்வங்களை எடுத்துச் செல்ல, உங்கள் வசிப்பிடத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களை (உங்களுடன் அழைத்துக்) கொண்டு செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்பவற்றை விட நீங்கள் எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்வதே சிறந்ததாகும்" என்றார்கள். உடனே அன்சாரிகள், `இறைத்தூதர் அவர்களே! ஆம்; நாங்கள் (தாங்களே எங்களுக்குப் போதுமென்று) திருப்தியடைந்தோம்" என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், `எனக்குப் பின், (ஆட்சிப் பொறுப்பிலும் போரில் கிடைக்கும் செல்வங்களைப் பங்கிடுவதிலும்) உங்களை விட மற்றவர்களுக்கு மிக அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அந்நிலையில் அல்லாஹ்வையும் `ஹவ்ளுல் கவ்ஸர்` தடாகத்தின் அருகே அவனுடைய தூதரை (என்னை)யும் சந்திக்கும் வரை பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்" என்றார்கள்.
இதை அறிவித்துவிட்டு அனஸ்(ரலி), `ஆனால், நாங்கள் பொறுமையைக் கைக் கொள்ளவில்லை" என்றார்கள்.
Book :57
3148. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்களுடன் மக்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதரைப் பிடித்து (போரில் கிடைத்த பொருட்களிலிருந்து தங்களுக்குக் கொடுக்கும்படி) கேட்கலானார்கள். இறுதியில், அவர்களை (சூழ்ந்து நெருக்கியபடி) ஒரு கருவேல மரத்தின் அருகே தள்ளிக் கொண்டு சென்று அவர்களின் போர்வையைப் பறித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், `எனக்கு என் போர்வையைக் கொடுத்து விடுங்கள். இந்த (கருவேல மரத்தின்) முட்கள் அளவிற்கு ஒட்டகங்கள் (என்னிடம்) இருந்தாலும் அவற்றை நான் உங்களிடையே பங்கிட்டு விடுவேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவோ, பொய் சொல்பவனாகவோ, கோழையாகவோ பார்க்க மாட்டீர்கள்" என்றார்கள்.
Book :57
3149. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி நபி(ஸல்) அவர்களின் தோளின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்திருந்ததை கண்டேன். பிறகு அவர் (நபி(ஸல்) அவர்களிடம்), `தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்" என்று கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
Book :57
3150. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஹுனைன் போரின்போது நபி(ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா(ரலி) அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும்போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அப்போது ஒருவர், `அல்லாஹ்வின் மீதாணையாக! இது நீதியுடன் நடந்து கொள்ளாத ஒரு பங்கீடாகும். இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும்" என்று கூறினார். நான், `அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன்" என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? அல்லாஹ், (இறைத் தூதர்) மூஸா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதை விட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்தார்கள்" என்று கூறினார்கள்.
Book :57
3151. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்த நிலத்திலிருந்து (பேரீச்சங்) கொட்டைகளை நான் என் தலையில் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்தேன். அந்த நிலம் என் நாட்டிலிருந்து ஒரு ஃபர்ஸகில் மூன்றில் ஒரு பங்கு தூரம் இருந்தது. (அதாவது இரண்டு மைல் தொலைவு இருந்தது.)
"நபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் சொத்துக்களிலிருந்து ஒரு நிலத்தை ஸுபைர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள்" என்று உர்வா(ரஹ்) கூறினார்.
Book :57
3152. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர்வாசிகளை வென்றபோது அவர்களை கைபரிலிருந்து வெளியேற்ற விரும்பினார்கள். அவர்கள் அதை வென்றபோது அந்த நிலப்பரப்பு யூதர்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாக இருந்தது. யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், `அவர்கள் அதில் உழைத்துப் பயிரிடுவார்கள்; அவர்களுக்கு விளைச்சலில் பாதி தரப்பட வேண்டும்` என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களை (அங்கேயே தங்கி வகித்துக் கொள்ள)விட்டு விடும்படி கேட்டுக் கொண்டார்கள். அப்போது, `இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `நாங்கள் விரும்பும் வரை அதே நிபந்தனையின் படி நாங்கள் உங்களைவிட்டு வைப்போம்` என்று கூறினார்கள். உமர்(ரலி) அவர்கள தம் ஆட்சிக் காலத்தில் அவர்களை தைமா, ஜெரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தும் வரை அவ்வாறே அவர்கள் அங்கே வசித்து வர அனுமதிக்கப்பட்டார்கள்.
Book :57
பாடம் : 20 பகை நாட்டில் கிடைக்கும் உணவு.
3153. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர், கொழுப்பு அடங்கிய தோல்பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுக்க விரைந்து சென்றேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்களைக் கண்டு நான் வெட்க மடைந்தேன்.
Book : 57
3154. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
எங்கள் புனிதப் போர்களின்போது எங்களுக்குத் தேனும் திராட்சைப் பழமும் கிடைத்து வந்தன. அதை நாங்கள் உண்போம். ஆனால் அதை நாங்கள் (நபியவர்களிடமோ, சேகரித்து வைப்பதற்காகவோ) கொண்டு செல்வதில்லை.
Book :57
3155. இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
கைபர் கோட்டையின் முற்றுகையில் ஈடுபட்டிருந்த நாள்களில் நாங்கள் பசி பட்டினியால் பீடிக்கப்பட்டிருந்தோம். கைபர் போர் தொடங்கிய நாளில் நாங்கள் காட்டுக் கழுதைகளை வேட்டையாடிப் பிடித்து அவற்றை அறுத்தோம். (அவற்றைச் சமைக்கின்ற) பாத்திரங்கள் கொதிக்கத் தொடங்கியபோது அல்லாஹ்வின் தூதருடைய அறிவிப்பாளர், `பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள். கழுதைகளின் இறைச்சிகளில் சிறிதும் உண்ணாதீர்கள்" என்று (உரக்கக் கூவி) அறிவித்தார்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) (தொடர்ந்து) கூறுகிறார்கள்:
இந்த அறிவிப்பைச் செவியுற்ற நாங்கள், `அதிலிருந்து குமுஸ் - அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரிய ஐந்திலொரு பங்கு நிதி செலுத்தப்படாமல் இருந்ததால் தான் இப்படி அறிவிக்கப்படுகிறது" என்று சொன்னோம். மற்றவர்கள், `(அப்படியல்ல) அதை என்றைக்குமாக நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
Book :58

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.