35. ஸலம் (விலைபேசி, முன்னரே விலையைக் கொடுத்து விடுதல்)

பாடம் : 76 வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை விற்பது.
2239. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் ஒரு வருடம், இரண்டு ஆண்டுகளில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். நபி(ஸல்) அவர்கள், `ஒருவர், (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்!" என்று கூறினார்கள்.
"ஒரு வருடம், இரண்டு ஆண்டுகளில்" என்றோ, `இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகளில்" என்றோ தனக்கு அறிவிக்கப்பட்டதாக அறிவிப்பாளர் இஸ்மாயீல் இப்னு உலய்யா(ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்.
Book : 35
பாடம் : 2 ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் கூற வேண்டும்.
2240. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது மக்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் பேரீச்சம் பழத்தைப் பெற்றுக் கொள்வதாக (ஒப்புக் கொண்டு, அதற்காக) முன்பணம் கொடுத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், `ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால், அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளுக்காக (மட்டுமே) கொடுக்கட்டும்!" என்றார்கள்.
Book : 35
2241. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தபோது, (ஸலம் பற்றி குறிப்பிடுகையில்) `அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளில்தான் அது அனுமதிக்கப்படும்!" என்றார்கள்.
Book :35
2242. & 2243. இப்னு அபில் முஜாலித்(ரலி) அறிவித்தார்.
"அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்களும் அபூ புர்தா(ரலி) அவர்களும் ஸலாம் விஷயத்தில் கருத்து வேறுபட்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீ அஃவ்பா(ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம் சென்று நான் இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், `நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் கோதுமை வாற்கோதுமை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பேரீச்சை ஆகியவற்றிற்காக முன்பணம் கொடுத்து வந்தோம்!" என்றார்கள். பிறகு இப்னு அப்ஸா(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அவர்களும் இவ்வாறே கூறினார்கள்!"
Book :35
2244. & 2245. முஹம்மத் இப்னு அபில் முஜாலித்(ரலி) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்களும், அபூ புர்தா(ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் அனுப்பி, `நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் கோதுமைக்காக முன்பணம் கொடுத்திருக்கிறார்களா?` என்று கேள்!" என்றனர். (அவ்வாறே நான் கேட்ட போது) அப்துல்லாஹ் இப்னு அபீ அஃவ்பா(ரலி), `கோதுமை, வாற்கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றிற்காக அளவும் தவணையும் குறிப்பிட்டு, ஷாம் வாசிகளான `நபீத்` எனும் குலத்தாரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்து வந்தோம்! என்றார். `தோட்டம் துரவும் விவசாய நிலமும் யாரிடம் இருக்கிறதோ அவரிடமா?` என்று கேட்டேன். அதற்கவர்கள், `நாங்கள் அதுபற்றி விசாரிக்கமாட்டோம்!" என்றார்கள். பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அவர்களிடம் அனுப்ப, அவர்களிடம் சென்று நான் கேட்டபோது, `நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்து வந்தனர்; (முன்பணம் பெறுபவர்களிடம்) `அவர்களுக்குத் தோட்டம் துரவு அல்லது விவசாய நிலம் இருக்கிறதூ` என்று நாங்கள் கேட்க மாட்டோம்!" என்று கூறினார்கள்.
Book :35
2246. அபுல் பக்தரி(ரஹ்) அறிவித்தார்.
பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுப்பது பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், `பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணும் பக்குவத்தை அடையும் முன்பும் அதை எடை போடுவதற்கு முன்பும் அவற்றை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!" என்று கூறினார்கள். அப்போது ஒருவர். `(மரத்திலுள்ளதை) எவ்வாறு எடை போடுவது?` என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டார். அவர்களுக்க அருகிலிருந்த மற்றொரு மனிதர் `எடை போடுவதன் கருத்து (அதன் எடை இவ்வளவு இருக்கும் என்று) மதிப்பிடுவதாகும்!" என்றார்.
Book :35
பாடம் : 4 பேரீச்சம் பழத்தில் ஸலம்.
2247. & 2248. அபுல் பக்தரி(ரஹ்) அறிவித்தார்.
பேரீச்சம் பழத்தில் `ஸலம்` வியாபாரம் செய்வது குறித்து இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், `மரத்திலுள்ள கனிகளைப் பக்குவடையும் வரை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது; மேலும், (தங்கத்திற்கு) வெள்ளியைக் கடனாக (பிறகு தருவதாக) விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது!" என்றார்கள். பேரீச்சம் பழத்தில் `ஸலம்` வியாபாரம் செய்வது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். `மரத்திலுள்ள கனிகள் உண்ணும் பக்குவத்தை அடையும் வரையிலும், எடைபோடப்படும் வரையிலும் அவற்றை விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!" என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book : 35
2249. & 2250. அபுல் பக்தரி(ரஹ்) அறிவித்தார்.
பேரீச்சம் பழத்தில் `ஸலம்` வியாபாரம் செய்வது குறித்து இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் `மரத்திலுள்ள கனிகள் பக்குவமடையும் வரை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்! மேலும், (தங்கத்திற்கு) வெள்ளியைக் கடனாக விற்பதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!" என்றார்கள்.
பேரீச்சம் பழத்தில் `ஸலம்` வியாபாரம் செய்வது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். `மரத்தின் கனிகள் உண்ணும் பக்குவத்தை அடையும் முன்பும் எடை போடப்படும் முன்பும் விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!" என்றார்கள். அப்போது ஒருவர் `மரத்திலுள்ளதை எவ்வாறு எடைபோடுவது?` என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டார். அருகிலிருந்த மற்றொரு மனிதர் `எடை போடுவதன் கருத்து (இவ்வளவு எடை இருக்கும் என்று) மதிப்பிடுவதாகும்!" என்றார்கள்.
Book :35
2251. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் உணவுப் பொருளை (குறிப்பிட்ட காலத்திற்குப்) பிறகு பெற்றுக் கொள்வதாக வாங்கினார்கள்; (அதற்கான பிணைப்பொருளாக) தம் இரும்புக் கவசத்தை அந்த யூதரிடம் அடைமானம் வைத்தார்கள்!"
Book :35
பாடம் : 6 ஸலமில் அடைமானம் வைத்தல்.
2252. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடம் குறிப்பிட்ட தவணையில் (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) உணவுப் பொருளை வாங்கினார்கள்; (அதற்காக) அந்த யூதர், நபி(ஸல்) அவர்களிடமிருந்து இரும்புக் கவசத்தை அடைமானமாகப் பெற்றார்!"
Book : 35
பாடம் : 7 ஸலமில் தவணை குறிப்பிடுதல். இப்னு அப்பாஸ் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அஸ்வத் (ரஹ்), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் இவ்வாறு (முதலில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பொருளைத் தருவதாகக் கூறி விற்பதற்கே ஸலம் என்று சொல்லப்படும் என்று)தான் கூறுகின்றனர். விலையும் தவணையும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கு முன்பணம் கொடுப்பது தவறில்லை! பலன் உறுதிப்படுத்தப்பட்ட பயிர்களில் மட்டுமே இவ்வாறு செய்யலாம்! என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
2253. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, மக்கள் இரண்டு மூன்று ஆண்டுகளில் கனிகளைப் பெற்றுக் கொள்வதாக முன்பணம் கொடுத்து வந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், `அளவும் தவணையும் குறிப்பிட்ட கனிகளுக்காக முன்பணம் கொடுங்கள்!" என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில் `அளவும் எடையும் குறிப்பிடப்பட்ட கனிகளுக்காக" என்றுள்ளது.
Book : 35
2254. & 2255. முஹம்மத் இப்னு அபில் முஜாஹித் அறிவித்தார்.
என்னை அபூ புர்தா(ரலி) அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் (ரலி) ஆகிய இருவரும் அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அவர்களிடமும் அப்துல்லாஹ் இப்னு அபீ அஃவ்பா(ரலி) அவர்களிடமும் அனுப்பினார்கள். அவ்விருவரிடமும் ஸலம் பற்றி கேட்டேன். அவ்விருவரும், `நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் போரிட்டு (அதில் கிடைக்கும் `கனீமத்` பொருட்களைப் பெறுவோம். அப்போது எங்களிடம் `ஷாம்` நாட்டைச் சேர்ந்த `நபீத் எனும் குலத்தார் வருவார்கள். குறிப்பிட்ட தவணையில் (தந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையுடன்) உலர்ந்த திராட்சை, கோதுமை, வாற்கோதுமை ஆகியவற்றிற்காக அவர்களிடம் முன்பணம் கொடுப்போம்!" என்று கூறினார்கள். அப்போது நான் `அவர்களிடம் தோட்டம் துரவு (அல்லது விவசாய நிலம்) எதுவும் இருந்ததா? இல்லையா?` என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும், `நாங்கள் இது பற்றி அவர்களிடம் கேட்டதில்லை!" என்றனர்.
Book :35
2256. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"இந்த ஒட்டகம் குட்டிபோட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்; அல்லது விற்று விடுகிறேன்!` என்ற அடிப்படையில், அன்றைய மக்கள் வியாபாரம் செய்து வந்தனர்; அதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!"
Book :35

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.