பாடம் : 1 (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டதும் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு), பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ அல்லது ஒரு வேடிக்கையையோ கண்டால், அதன்பால் அவர்கள் சென்றுவிடுகின்றனர். மேலும், நின்றவண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையைவிடவும் வியாபாரத்தைவிடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லலாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்! என்று (நபியே!) நீர் கூறுவீராக! எனும் (62: 10,11ஆகிய) இறைவசனங்கள். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஒருவருக் கொருவர் இசைந்து ஏற்படுத்திக் கொள்கிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! (4:29)
2125. அதா இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார்.
நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, `தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!" என்றேன். அவர்கள், `இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. `நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியாக அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!" (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) `அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல்விட்டு விடுவார்! அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் `லாயிலாஹ இல்லல்லாஹு` என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!` என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!" என பதிலளித்தார்கள்.
Book : 34