33. இஃதிகாஃப்

பாடம் : 1 (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பதும் எல்லாப் பள்ளிகளிலும் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதும். ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் மருவாதீர்கள்! இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள்! இவ்வாறே, மக்கள் (நேர்வழியையும் கீழ்ப்படியும் முறையையும் அறிந்து) விழிப்புடனிருப்பதற்காக, அல்லாஹ் தன்னுடைய சான்றுகளை அவர்களுக்குத் தெளிவாக்குகின்றான்! (2:187)
2025. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!"
Book : 33
2026. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!"
Book :33
2027. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். `யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!` எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன.
Book :33
பாடம் : 2 இஃதிகாஃப் இருப்பவரின் தலையை மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் வாரலாம்.
2028. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது தம் தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன்.
Book : 33
பாடம் : 3 இஃதிகாஃப் இருப்பவர் தேவை இருந்தால் தவிர மற்ற நேரங்களில் வீட்டிற்குச் செல்லக் கூடாது.
2029. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.
Book : 33
பாடம் : 4 இஃதிகாஃப் இருப்பவருக்கு (தலை) கழுவுதல்.
2030. & 2031. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அணைப்பார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்.
Book : 33
2032. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
`மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்` என்று உமர்(ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள்.
Book :33
பாடம் : 6 பெண்கள் இஃதிகாஃப் இருப்பது.
2033. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, `இவை என்ன?` என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், `இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?` என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதைவிட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Book : 33
பாடம் : 7 பள்ளியில் கூடாரங்கள்.
2034. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா(ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், னஸனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். `இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?` என்று கேட்டுவிட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பிவிட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Book : 33
பாடம் : 8 இஃதிகாஃப் இருப்பவர் தமது தேவைகளுக்காகப் பள்ளியின் வாசல் வரை செல்லலாமா?
2035. ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். உம்மு ஸலமா(ரலி)வின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளைச் சார்ந்த இருவர் நடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், `நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்" எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) `ஸுப்ஹானல்லாஹ்` என்றனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், `நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன்" எனக் கூறினார்கள்.
Book : 33
பாடம் : 9 இஃதிகாஃப் இருந்து விட்டு இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் வெளியேறியது.
2036. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், `ஆம்` நாங்கள் ரமலானின் நடுப்பத்து நாள்களில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், `எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது. அதை நான் மறந்து விட்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் ஸஜ்தாச் செய்வது போல் கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்` எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்க இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை கண்டேன்` என்று விடையளித்தார்.
Book : 33
பாடம் : 10 தொடர் உதிரப்போக்குடைய பெண் இஃதிகாஃப் இருப்பது.
2037. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் தொடர் உதிரப் போக்குடைய அவர்களின் மனைவியர்களில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சிலவேளை அவருக்கு அடியில் நாங்கள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார்.
Book : 33
பாடம் : 11 இஃதிகாஃப் இருக்கும் கணவரை மனைவி சந்தித்தல்.
2038. ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், `அவசரப்படாதே!" நானும் உன்னோடு வருகிறேன்" என்றார்கள். என் அறை உஸாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி(ஸல) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, `இங்கே வாருங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!` எனக் கூறினார்கள். அவ்விருவரும் `ஸுப்ஹானல்லாஹ் - இறைத்தூதர் அவர்களே!" என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், `நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்" என்று தெளிவுபடுத்தினார்கள்.
Book : 33
பாடம் : 12 இஃதிகாஃப் இருப்பவர் தமக்கு ஏற்படும் தீங்குகளைத் தடுக்கலாமா?
2039. அலீ இப்னு ஹுஸைன் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது ஸஃபிய்யா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் திரும்பிச் செல்லும்போது அவருடன் நபி(ஸல்) அவர்களும் நடந்தனர். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் அவர்களைக் கூர்ந்து பார்த்தார். அவர் கூர்ந்து பார்த்ததும் அவரை நபி(ஸல்) அவர்கள் அழைத்து, `இங்கே வா! இவர் ஸஃபிய்யா! நிச்சயமாக ஷைத்தான் ஆதமுடைய மக்களின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்` எனக் கூறினார்கள்.
ஸஃபிய்யா(ரலி) இரவு நேரத்திலா நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்? என்று நான் சுஃப்யானிடம் கேட்டேன். அதற்கவர் `இரவல்லாமல் வேறென்ன?` என்று விடையளித்தார் என்று அலீ இப்னுஅப்தில்லாஹ் கூறுகிறார்.
Book : 33
பாடம் : 13 இஃதிகாஃபிலிருந்து சுப்ஹு நேரத்தில் வெளியேறுதல்.
2040. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் எங்கள் பொருட்களைச் சேகரித்துக் கொண்டோம். அப்போது எங்களுடன் வந்த நபி(ஸல்) அவர்கள், `யார் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் தாம் இஃதிகாஃப் இருந்த இடத்திற்குச் செல்லட்டும். நிச்சயமாக நான் இந்த (லைலத்துல் கத்ர்) இரவைக் கனவில் கண்டேன். ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்வதாகக் கண்டேன்` எனக் கூறினார்கள். அவர்கள், தாம் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றதும் வானத்தில் மேகம் தோன்றி மழை பொழிந்தது. நபி(ஸல்) அவர்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மேல் ஆணையாக! அன்றைய தினம் கடைசி நேரத்தில் வானத்தில் மேகம் திரண்டது. (அன்றைய பள்ளிவாயில் பேரீச்சை ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மூக்கிலும் மூக்கின் ஓரங்களிலும் ஈரமான களிமண்ணின் அடையாளத்தை கண்டேன்.
Book : 33
பாடம் : 14 ஷவ்வால் மாதத்தில் இஃதிகாஃப் இருப்பது.
2041. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். ஸுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி தந்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா(ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப்(ரலி) மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பியபொழுது நான்கு கூடாரங்களைக் கண்டு, `இவை என்ன?` என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், `இவ்வாறு செய்வதற்கு நற்செயல்புரியும் எண்ணம்தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!" என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாப் இருந்தார்கள்.
Book : 33
பாடம் : 15 இஃதிகாஃப் இருப்பவர் நோன்பு நோற்றிருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
2042. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"இறைத்தூதர் அவர்களே! மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்!" என்று உமர்(ரலி) கூறினார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் `உம் நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள். உமர்(ரலி) ஓர் இரவு இஃதிகாஃப் இருந்தார்.
Book : 33
பாடம் : 16 அறியாமைக் காலத்தில் இஃதிகாஃப் இருப்பதாக நேர்ச்சை செய்து விட்டுப் பிறகு இஸ்லாத்தை ஏற்றால்...?
2043. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் உமர்(ரலி) நேர்ச்சை செய்திருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் `உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள்.
Book : 33
பாடம் : 17 ரமளானின் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருப்பது.
2044. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாஃப இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Book : 33
பாடம் : 18 இஃதிகாஃப் இருப்பதாக முடிவு செய்து விட்டுப் பின்னர் அம்முடிவை மாற்றிக் கொள்ளுதல்.
2045. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ரமலானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பது பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களிடம் நான் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினார்கள்.ஹப்ஸா(ரலி)தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கேட்டார். அவ்வாறு செய்தேன். இதைக்கண்ட ஸைனப்(ரலி) ஒரு கூடாரம் கட்ட உத்தரவிட்டார். அவ்வாறு கட்டப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் தம் கூடாரத்திற்குச் சென்றார்கள். அப்போது பல கூடாரங்களைக் கண்டு `இவை என்ன?` என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், `ஆயிஷா(ரலி), ஹப்ஸா(ரலி), ஸைனப்(ரலி) ஆகியோரின் கூடாரங்கள்` என்றனர். நபி(ஸல்) அவர்கள், `இதன் மூலம் நன்மையைத்தான் இவர்கள் நாடுகிறார்களா? நான் இஃதிகாஃப் இருக்கப் போவதில்லை" என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். நோன்பு முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Book : 33
பாடம் : 19 இஃதிகாஃப் இருப்பவர் தம் தலையைக் கழுவுவதற்கு வீட்டிற்குள் தலையை நீட்டலாமா?
2046. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது தம் தலையை அறையிலிருக்கும் என்னிடம் நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அதை வாருவேன்.
Book : 33

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.