பாடம் : 47 அநாதைகளுக்கு ஸகாத் கொடுத்தல்
1465. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் `என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்` எனக் கூறினார்கள். ஒருவர் `இறைத்தூதர் அவர்களே! (செல்வம் என்ற) நன்மை தீயதை உருவாக்குமா?` எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மெளனமானார்கள். உடனே அந்த நபரிடம், `என்ன ஆனது உம்முடைய நிலைமை? நீர், நபி(ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி(ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமாலிருக்கிறார்களே!` எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, `கேள்வி கேட்டவர் எங்கே?` என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, `நன்மையானது தீயதை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகிற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்று விடுகின்றன. அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன... பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும், சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போன்றே உலகிலுள்ள) இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ... அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்ற வனாவான். மேலும், மறுமை நாளில் அச்செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்" எனக் கூறினார்கள்.
Book : 24