1392. அம்ருப்னு மைமூன் அல்அவ்தீ அறிவித்தார்.
நான் உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி, அவர், `அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் கூறியதாகச் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான (நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்` எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்" என்றார். இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) `என்ன பதில் கிடைத்தது?` எனக் கேட்டார். இப்னு உமர்(ரலி) `இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்` எனக் கூறினார். உடனே உமர்(ரலி) `நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி, `உமர் அனுமதி கேட்கிறார்` எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள். நபி(ஸல்) தாம் அவர்கள் மரணிக்கும் வரை எவரெவர் விஷயத்தில் திருப்தி கொண்டிருந்தார்களோ அவர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிப் பொறுப்பிற்குத் தகுதியுடையவர்களாக எனக்குத் தெரியவில்லை. எனவே, எனக்குப் பிறகு இவர்களில் யாரை கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அவர் தாம் கலீஃபா! அவர் சொல்வதைக் கேட்டு அவருக்குக் கட்டுப்படுங்கள்` எனக் கூறிவிட்டு, உஸ்மான்(ரலி), அலீ(ரலி), தல்ஹா(ரலி) ஸுபைர்(ரலி) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார். அப்போது அன்ஸார்களில் ஓர் இளைஞர் வந்து `இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்! உங்களுக்கு இஸ்லாத்தில் இருந்த அந்தஸ்து என்ன என்பதைத் தாங்கள் அறிவீர்கள். பிறகு நீங்கள் தலைவராம் நீதி, நேர்மையை நிலைநாட்டினீர்கள். இதற்கெல்லாம் மேலாக ஷஹாதத்... வீரமரணமும் கிடைத்திருக்கிறது" என்றார். உமர்(ரலி) `என்னுடைய சகோதரரின் மகனே! என்னுடைய விருப்பமெல்லாம் இந்த ஆட்சிப் பொறுப்பு எனக்கு நன்மையைத் தேடித் தராவிட்டாலும் எனக்குத் தீமையை தந்துவிடாமலிருந்தால் அதுவே போதும் என்பதே` எனக் கூறிவிட்டு, `எனக்குப் பின்னால் தலைவராக வருபவருக்கு நான் கூறிக்கொள்வது யாதெனில், அவர் துவக்கத்தில் ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களின் விஷயத்தில் நல்லபடி நடந்து கொள்ளவேண்டும்; அவர்களின் உரிமைகளை அறிந்து அவர்களின் கண்ணியத்தையும் கெளரவத்தையும் பேணிக் காக்க வேண்டும். அதுபோன்றே அன்ஸார்களிடமும் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் (மதீனாவில்) இருப்பிடத்தையும் நம்பிக்கையையும் தக்க வைத்தவர்கள். அவர்களில் நல்லவர்களின் நற்செயலை ஏற்று மதிப்பளித்து தவறிழைக்கக் கூடியவர்களை மன்னித்துவிடவேண்டும். மேலும், அல்லாஹ்வினதும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் பொறுப்பிலுள்ள (முஸ்லிம்களில்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும். அவர்களைப் பாதுகாக்கப் போர் புரியவேண்டும். மேலும், அவர்களின் சக்திக்குமேல் அவர்களைச் சிரமப் படுத்தக் கூடாது" என்று கூறினார்.
Book :23