18. கஸ்ருத் தொழுகை

பாடம் : 1 பயணத்தில் தொழுகைகளை சுருக்கித் தொழுவதும், எத்தனை நாட்கள் வெளியூரில் தங்கினால் சுருக்கித் தொழலாம் என்பது பற்றியும் வந்துள்ளவை.
1080. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்வோம். (அதை விட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம்.
Book : 18
1081. யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அறிவித்தார்.
`நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் மதீனா திரும்பும் வரை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்` என்று அனஸ்(ரலி) கூறியபோது நீங்கள் மக்காவில் எவ்வளவு நாள்கள் தங்கினீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் `பத்து நாள்கள் தங்கினோம்` என்று விடையளித்தார்கள்.
Book :18
பாடம் : 2 மினாவில் சுருக்கித் தொழுதல்.
1082. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
நான் நபி(ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருடனும் உஸ்மான்(ரலி) உடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பக்கட்டத்தில் உஸ்மான்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன். பின்னர் உஸ்மான்(ரலி) நான்கு ரக்அத்களாகத் தொழலானார்கள்.
Book : 18
1083. ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மினாவில் எதிரிகளைப் பற்றி எந்த அச்சமும் இல்லாத நிலையில் இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
Book :18
1084. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் அறிவித்தார்.
உஸ்மான்(ரலி) மினாவில் எங்களுக்கு நான்கு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். இது பற்றி இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது `இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்` என்று கூறினார்கள். பின்னர் `நான் நபி(ஸல்) அவர்களுடன் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். அபூ பக்ர்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். உமர்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். இந்த நான்கு ரக்அத்களுக்குப் பகரமாக ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் எனக்குப் போதும்` என்று கூறினார்.
Book :18
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது எத்தனை நாட்கள் (மக்காவில்) தங்கினார்கள்?
1085. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துலஹஜ் மாதம் நான்காம் நாள் காலையில் ஹஜ்ஜிற்கு இஹ்ராம் கட்டியவர்களாக வந்து சேர்ந்தனர். பலியிடப்படும் பிராணியைக் கொண்டு வந்திருப்பவரைத் தவிர மற்றவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
Book : 18
பாடம் : 4 எவ்வளவு தொலைவு பயணம் செய்யும் போது சுருக்கித் தொழலாம்? நபி (ஸல்) அவர்கள் (குறைந்த பட்சம்) ஒரு பகல் ஒரு இரவைப் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் 4 பரீத் அதாவது 16 பர்ஸக் (அதாவது 48மைல்) தொலைவிற்குப் பயணம் செய்யும் போது சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுவார்கள்; நோன்பை விட்டுவிடுவார்கள். (குறிப்பு: 1 பரீத் என்பது 12 மைல். இதன்படி 4 பரீத் என்பது 48 மைல்கள் ஆகும். 1 பர்ஸக் என்பது 3 மைல். இதன்படி 16 பர்ஸக் என்பது 48 மைல்கள் ஆகும்)
1086. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது`. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 18
1087. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர முன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது`.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :18
1088. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது`.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :18
பாடம் : 5 (பயணத் திட்டத்துடன்) ஒருவர் தமது இல்லத்தை விட்டுப் புறப்பட்டதும் கஸ்ர் செய்து தொழலாம். அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகரிலிருந்து பயணம்) புறப்பட்டுச் செல்லும் போது (உள்ளூரிலுள்ள) வீடுகள் கண்களுக்குத் தெரியும்போதே சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுதார்கள். திரும்பி வந்த போது இதோ கூஃபா (தெரிகிறது. இனி தொழுகையை சுருக்குவீர்களா? அலலது முழுமையாக்குவிர்களா?) என்று அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அவர்கள் இல்லை! நாம் ஊருக்குள் நுழையும் வரை (சுருக்கியே தொழுவோம்) என்று பதிலளித்தார்கள்.
1089. அனஸ்(ரலி) அறிவித்தார்
நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹர்த் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன்.
Book : 18
1090. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
தொழுகை ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை அவ்வாறே நீடித்தது. (சொந்த) ஊரில் தொழும் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமை படுத்தப்பட்டது.
நான் உர்வாவிடம் ஆயிஷா(ரலி) ஏன் முழுமையாக தொழுதனர் என்று கேட்டேன். அதற்கவர், `உஸ்மான்(ரலி) விளங்கியது போல் அவரும் விளங்கிவிட்டார். (அதாவது மக்காவைச் சொந்த ஊராக இருவரும் கருதிவிட்டனர்) என்று விடையளித்தார்.
Book :18
பாடம் : 6 மஃக்ரிப் தொழுகையைப் பயணத்திலும் மூன்று ரக்அத்களாகவே தொழவேண்டும்.
1091. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப் படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்.
இப்னு உமர்(ரலி) இவ்வாறே செய்வார்கள் என்று நாஃபிவு கூறுகிறார்.
Book : 18
1092. ஸாலிம் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) முஸ்தலிஃபா-வில் மஃரிபையும் இஷாவையும் ஜம்உச் செய்து தொழுவார்கள். ஒரு முறை இப்னு உமர்(ரலி) மஃரிபைத் தாமதப் படுத்தினார்கள். அவர்களின் மனைவி ஸஃபியா(ரலி) உடல் நலம் குன்றி இருந்தார்கள். (அவர்களைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்கள்) அவர்களிடம் தொழுகை என்று நினைவு படுத்தினேன். அப்போதும் `நட` என்றார்கள். இரண்டு அல்லது மூன்று மைல்கள் நடந்ததும வாகனத்தில் இருந்து இறங்கித் தொழுதார்கள். பின்னர் `நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்பட நேர்ந்தால் இப்படித்தான் தொழுவார்கள்` என்று குறிப்பிட்டார்கள். மேலும் `நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்பட நேர்ந்தால் மஃரிபைத் தாமதப் படுத்தி மூன்றுரக்அத்கள் தொழும் ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் பெரிய இடைவெளி ஏதுமின்றி இஷாவுக்கு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கொடுப்பார்கள். இஷாவிலிருந்து நள்ளிரவில் எழுவது வரை உபரியான தொழுகைகள் தொழ மாட்டார்கள்.` எனக் குறிப்பிட்டார்கள்.
Book :18
பாடம் : 7 வாகனம் எத்திசையில் சென்றாலும் அதன் மீதமர்ந்து உபரியான தொழுகைகளைத் தொழுதல்.
1093. ஆமிர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களை வாகனம் எத்திசையில் கொண்டு சென்றாலும் அவர்கள் வாகனத்தின் மீதமர்ந்து தொழுவதை பார்த்திருக்கிறேன்.
Book : 18
1094. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் செல்லும்போது கிப்லா அல்லாத திசையை நோக்கி உபரியான தொழுகைகளைத் தொழுதிருக்கிறார்கள்.
Book :18
1095. நாஃபிவு அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) தம் வாகனத்தில் அமர்ந்து உபரியான தொழுகைகளையும் வித்ருத் தொழுகைகளையும் தொழுதுவிட்டு நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.
Book :18
பாடம் : 8 வாகனத்தில் அமர்ந்து சைகை செய்து தொழுதல்.
1096. அப்தில்லாஹ் இப்னு தீனார் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) பயணத்தின்போது வாகனம் எத்திசையில் சென்றாலும் அதன் மீதமர்ந்து சைகை செய்து தொழுவார்கள்.நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ததாகவும் குறிப்பிடுவார்கள்.
Book : 18
பாடம் : 9 கடமையானத் தொழுகைகளைத் தொழும் போது வாகனத்தில் இருந்து இறங்க வேண்டும்.
1097. ஆமிர் இப்னு ரபிஆ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் வாகனத்தின் மீதமர்ந்து வாகனம் எத்திசையில் சென்றாலும் தம் தலையால் சைகை செய்து உபரியான தொழுகைகளைத் தொழுவார்கள். கடமையான தொழுகையின்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.
Book : 18
1098. ஸாலிம் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) இரவில் பயணம் செய்யும்போது தம் வாகத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். அவர்களின் முகம் எத்திசையில் இருக்கிறதென்பதைப் பற்றிக் கவலைப் பட மாட்டார்கள். மேலும் `நபி(ஸல்) அவர்கள் எத்திசையில் சென்றாலும் வாகனத்தின் மீது அமர்ந்து உபரியான தொழுகைகளையும் வித்ரையும் தொழுவார்கள் என்றாலும் கடமையான தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழ மாட்டார்கள்` என்றும் குறிப்பிட்டார்கள்.
Book :18
1099. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் அமர்ந்து கிழக்கு நோக்கித் தொழுவார்கள். கடமையான தொழுகையைத் தொழ விரும்பும்போது வாகனத்திலிருந்து இறங்கிக் கிப்லாவை நோக்குவார்கள்.
Book :18
பாடம் : 10 கழுதையின் மீது அமர்ந்து உபரியான தொழுகைகளைத் தொழுதல்.
1100. அனஸ் இப்னு ஸீரின் அறிவித்தார்.
அனஸ்(ரலி) ஸிரியாவிலிருந்து வந்தபோது அவர்களை நாங்கள் எதிர் கொண்டோம். ஐநூத்தம்ர் என்ற இடத்தில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்களின் முகம் கிப்லாவுக்கு இடப்புறமாக இருக்கும் நிலையில் கழுதையின் மீது அமர்ந்து அவர்கள் தொழுததை பார்த்தேன். கிப்லா அல்லாத திசையில் நீங்கள் தொழுகிறீர்களே என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்காவிட்டால் நான் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்` என்று விடையளித்தார்கள்.
Book : 18
பாடம் : 11 பயணத்தின் போது (கடமையானத்) தொழுகைக்கு முன்பும் பின்பும் உபரியான தொழுகைகளைத் தொழாமலிருக்கலாம்.
1101. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தில் உபரித் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்ததில்லை. `அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது` என்று அல்லாஹ் கூறினான்.
Book : 18
1102. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தின்போது இரண்டு ரக்அத்களை விட அதிகமாகத் தொழமாட்டார்கள். அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோரும் இவ்வாறே செய்துள்ளனர்.
Book :18
பாடம் : 12 கடமையான தொழுகைகளுக்கு முன்னரும் பின்னரும் தவிர மற்ற நேரங்களில் பயணத்தில் உபரியாகத் தொழுவது. நபி (ஸல்) அவாகள் பயணத்தின் போது ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (முன் சுன்னத்)கள் தொழுதிருக்கிறார்கள்.
1103. இப்னு அபீ லைலா கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுததாக உம்மு ஹானி(ரலி)யைத் தவிர வேறு எவரும் அறிவித்ததில்லை. `நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது என்னுடைய இல்லத்தில் குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும் ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்` என்று உம்மு ஹானி(ரலி) குறிப்பிட்டார்கள்.
Book : 18
1104. ஆமிர் இப்னு ரபிஆ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவில் பயணத்தின்போது தம் வாகனத்தின் மீது அமர்ந்து அது செல்லும் திசையில் உபரியான தொழுகைகளைத் தொழுததை பார்த்திருக்கிறேன்.
Book :18
1105. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தின் மீதமர்ந்து அது செல்லும் திசையில் உபரித் தொழுகைகளைத் தொழுவார்கள். (ருகூவு, ஸஜ்தாச் செய்யும் போது) தம் தலையால் சைகை செய்வார்கள்.
இப்னு உமர்(ரலி) இவ்வாறு செய்ததாக அவர்கள் மகன் ஸாலிம் கூறுகிறார்.
Book :18
பாடம் : 13 பயணத்தின் போது மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதல்.
1106. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்யும்போது மஃரிபையும் இஷாவையும் ஜம்உச் செய்வார்கள்.
Book : 18
1107. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும்போது லுஹர் அஸரையும் மக்ரிப் இஷாவையும் ஜம்உச் செய்து தொழுவார்கள்.
Book :18
1108. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பயணத்தின்போது மக்ரிப் இஷாவை ஜம்உச் செய்வார்கள்.
Book :18
பாடம் : 14 (பயணத்தில்) மஃக்ரிப் - இஷாவை சேர்த்துத் தொழும் போது பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டுமா?
1109. ஸாலிம் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) அவசரமாகப் பயணம் மேற்கொள்ளும்போது மக்ரிப் தொழுகையைத் தாமதப் படுத்தி இஷாவையும் மஃரிபையும் ஜம்உச் செய்வார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிடுவார்கள். மேலும் மஃரிபுக்கு இகாமத் சொல்லி மூன்று ரக்அத் தொழுது ஸலாம் கொடுப்பார்கள். பெரிய இடைவெளி ஏதுமின்றி இஷாவுக்கு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத்கள் தொழுது ஸலாம் கொடுப்பார்கள். அவ்விரு தொழுகைகளுக்குமிடையே எதனையும் தொழ மாட்டார்கள். இஷாவிலிருந்து நள்ளிரவு வரை எதையும் தொழ மாட்டார்கள்.
Book : 18
1110. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பயணத்தின்போது மக்ரிப் இஷாவை ஜம்உச் செய்வார்கள்.
Book :18
பாடம் : 15 சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணம் மேற் கொண்டால் லுஹ்ர் தொழுகையை அஸ்ர் வரை பிற்படுத்தலாம். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள் ளார்கள்.
1111. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணத்தை மேற்கொண்டால் லுஹரை அஸர் வரை தாமதப் படுத்தி ஜம்உச் செய்வார்கள். சூரியன் சாய்ந்த பிறகு புறப்பட்டால் லுஹர்த் தொழுதுவிட்டுப் புறப்படுவார்கள்.
Book : 18
பாடம் : 16 சூரியன் உச்சி சாய்ந்த பிறகு பயணம் புறப்பட்டால் லுஹ்ர் தொழுது விட்டே பயணம் மேற்கொள்ள வேண்டும்.
1112. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணத்தை மேற்கொண்டால் லுஹரை அஸர் வரை தாமதப் படுத்தி ஜம்உச் செய்வார்கள். சூரியன் சாய்ந்த பிறகு புறப்பட்டால் லுஹர்த் தொழுதுவிட்டுப் புறப்படுவார்கள்.
Book : 18
பாடம் : 17 உட்கார்ந்து தொழுவது.
1113. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருக்கும்போது தம் இல்லத்தில் உட்கார்ந்து தொழுதார்கள். அவர்களுக்குப் பின்மக்கள் நின்று தொழுதார்கள். அப்போது உட்காருமாறு மக்களுக்குச் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் `இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்கே. எனவே அவர் ருகூவுச் செய்யுங்கள் அவர் (ருகூவிலிருந்து) நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள்" என்று நபி(ஸல்) குறிப்பிட்டார்கள்.
Book : 18
1114. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் அவர்களின் வலது புறத்தில் காயம் ஏற்பட்டது. அவர்களை நோய் விசாரிக்க நாங்கள் சென்றோம். தொழுகை நேரம் வந்ததும் அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். நாங்களும் உட்கார்ந்து தொழுதோம். (தொழுது முடித்ததும்) `இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது அவர் பின் பற்றப்படுவதற்கே. அவர் தக்பீர் கூறும்போது நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ருகூவுச் செய்யும்போது நீங்களும் ருகூவுச் செய்யுங்கள். (ருவுவிலிருந்து) அவர் நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள். அவர் ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும்போது நீங்கள் ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறுங்கள்" என்று கூறினார்கள்.
Book :18
1115. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
நான் மூல வியாதி உடையவனாக இருந்ததால் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் `நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு" என்று விடையளித்தார்கள்.
Book :18
பாடம் : 18 உட்கார்ந்து சைகை செய்து தொழுவது.
1116. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
நான் மூல வியாதி உடையவனாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் `நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துக் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியின் பாதியே அவருக்கு உண்டு" என்று விடையளித்தார்கள்.
Book : 18
பாடம் : 19 உட்கார்ந்து தொழ முடியாவிட்டால் படுத்துத் தொழலாம். படுத்துத் தொழும் போது கிப்லாவை நோக்கித் திரும்ப முடியாவிட்டால் எந்தத் திசை நோக்கியும் தொழலாம் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1117. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
எனக்கு மூலம் இருந்தது. எவ்வாறு தொழுவது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `நீ நின்று தொழு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு" என்று விடையளித்தார்கள்.
Book : 18
பாடம் : 20 உட்கார்ந்து தொழும் போது நோய் நீங்கி விட்டால் அல்லது நோயின் கடுமை குறைந்து விட்டால் எஞ்சியதை எழுந்து தொழலாம். ஒரு நோயாளி விரும்பினால் இரண்டு ரக்அத்களை நின்றுதொழுது விட்டு (பிந்திய) இரண்டு ரக்அத்களை உட்கார்ந்து தொழலாம் என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்..
1118. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் முதுமையை அடையும் வரை இரவுத் தொழுகையை உட்கார்ந்து தொழ நான் பார்த்ததில்லை. முதுமையான காலத்தில் அவர்கள் உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ருகூவுச் செய்ய எண்ணும்போது எழுந்து முப்பது அல்லது நாற்பது வசனங்கள் ஓதிவிட்டுப் பிறகு ருகூவுப் செய்வார்கள்.
Book : 18
1119. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிவிட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.
Book :18

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.