15. மழை வேண்டுதல்

பாடம் : 1 மழை வேண்டுதலும், மழைவேண்டிப் பிரார்த்திக்க நபி (ஸல்) அவர்கள் (ஊருக்கு வெளியிலுள்ள தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றதும்.
1005. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி(த் தொழும் திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
Book : 15
பாடம் : 2 யூசுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.
1006. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் கடைசி ரக்அத்தின் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும் `இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்று; இறைவா! ஸலமாபின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்று. இறைவா! நம்பிக்கையாளர்களில் பலவீனர்களைக் காப்பாற்று. இறைவா! முழர் கூட்டத்தினர் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! இவர்களுக்கு யூஸுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போல் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!" என்று கூறுபவர்களாக இருந்தனர். மேலும் `ம்ஃபார் கூட்டத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! அஸ்லம் கூட்டத்தை அல்லாஹ் காப்பாற்றுவானாக! என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
இது ஸுப்ஹுத் தொழுகையில் நடந்ததாகும் என அபூ ஸீனாத் கூறுகிறார்.
Book : 15
1007. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிக்கக் கண்ட நபி(ஸல்) அவர்கள் `யூஸுஃப் நபி காலத்து ஏழாண்டுப் பஞ்சம் போல் இவர்களுக்கு ஏழாண்டுப் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!` என்று பிரார்த்தித்தனர். அவர்களுக்குப் பஞ்சம் ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தனர். அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு அனைத்தையும் வேரறுத்தது. தோல்கள், பிணங்கள் ஆகியவற்றை உண்ணலானார்கள். அவர்கள் (மழை மேகம் தென்படுகிறதோ என்று) வானத்தைப் பார்க்கும்போது பசியினால் புகை மூட்டத்தையே காண்பார்கள். இந்நிலையில் அபூ ஸுப்யான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `முஹம்மதே! நீர் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் உறவினர்களோடு இணைந்து வாழ வேண்டுமென்வும் கூறுகிறீர். உம்முடைய கூட்டத்தினரோ அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யும்` என்று கூறினார். அப்போது பின்வரும் வசனங்களை அல்லாஹ் கூறினான்.
`எனவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர்பாரும்!
(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும் `இது நோவினை செய்யும் வேதனையாகும்.
எங்கள் இறைவனே! நீ எங்களைவிட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறோம்` (எனக் கூறுவர்).
நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம் பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கிறார்கள்.
அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி `(மற்றவர்களால் இவர்) கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்` எனக் கூறினர்.
நிச்சயமாக! நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புவர்களே.
ஒரு நாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழிதீர்ப்போம்`. (திருக்குர்ஆன்: 44:10-16)
கடுமையான பிடி என்பது பத்ருப் போரில் ஏற்பட்டது புகை மூட்டமும் கடுமையான பிடியும் நடந்தேறியது. அதுபோல் ரூம் அத்தியாயத்தில் கூறப்பட்ட முன்னறிவிப்பும் நிறைவேறியது.
Book :15
பாடம் : 3 பஞ்சம் நிலவும் போது மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது.
1008. அப்துல்லாஹ் இப்னு தீனார் அறிவித்தார்.
`இவர் வெண்மை நிறத்தவர்; இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்` என்று அபூ தாலிப் பாடிய கவிதையை இப்னு உமர்(ரலி) எடுத்தாள்பவராக இருந்தனர்.
Book : 15
1009. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கீழே இறங்குவதற்குள் ஒவ்வொரு கூரையிலிருந்தும் தண்ணீர் வழிந்தோடியது.
`இவர் வெண்மை நிறத்தவர். இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்` என்ற அபூ தாலிபின் கவிதையை அப்பொழுது நான் நினைத்துக் கொள்வேன்.
Book :15
1010. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் பொழுது உமர்(ரலி), அப்பாஸ்(ரலி) மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். `இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய். (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!` என்று உமர்(ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.
Book :15
பாடம் : 4 (இமாம்) மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது.
1011. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டும்போது தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
Book : 15
1012. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
Book :15
பாடம் : 5 அல்லாஹ்வின் புனிதச் சட்டங்கள் பாழாக்கப்படும் போது மாண்பும் மகத்து வமும் வாய்ந்த அதிபதியான அவன் தன் படைப்புகளை பஞ்சத்தால் தண்டித்தல். பாடம் : 6 ஜுமுஆத் தொழுகை நடைபெறும் பள்ளி வாச-ல் மழைவேண்டிப் பிரார்த்தித்தல்.
1013. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர்த் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி `இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழித்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்ததி, `இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!` என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரித்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த அறிகுறிகளையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) `ஸல்ஃ` என்னம் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியாக இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின் புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி `இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி, `இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரியாது` என்றனர் என ஷரீக் கூறுகிறார்.
Book : 15
பாடம் : 7 ஜுமுஆ உரை நிகழ்த்தும் போது கிப்லாவை நோக்கித் திரும்பாமல் மழைவேண்டிப் பிரார்த்தித்தல்.
1014. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது `தாருல்களா` எனும் வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, `இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, `இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது அணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களக்கும் (அதாவது மதீனாவுக்கும்) `ஸல்ஃ` என்னும மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது.) அப்போது அம்மலைக்கப் பின்புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரைநிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, ` இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி `இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)` என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
இரண்டாவதாக வந்த மனிதர்முதலில் வந்தவர் தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் `தெரியாது` என்றனர் என ஷரீக் கூறுகிறார்.
Book : 15
பாடம் : 8 சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று மழைவேண்டிப் பிரார்த்தித்தல்.
1015. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். `இறைத்தூதர் அவர்களே! மழை பொய்ந்துவிட்டது. எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்று கூறினார் நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்ததும் மழை பொழிந்தது. எங்களால் எங்கள் இல்லங்களுக்குச் செல்ல இயலவில்லை. அடுத்த ஜும்ஆ வரை மழை நீடித்தது. அப்போது அந்த மனிதரோ அல்லது இன்னொரு மனிதரோ எழுந்து `இறைத்தூதர் அவர்களே! இம் மழையை எங்களைவிட்டும் (வேறு பகுதிக்குத் திருப்பி விடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் `இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (பொழியச் செய்வாயாக) எங்களுக்கு எதிரானதாக (இம்மழையை) ஆக்கிவிடாதே` என்று பிரார்த்தித்தார்கள். உடனே மேகம் வலப்புறமும் இடப்புறமுமாகப் பிரிந்து சென்று வேறு பகுதிகளில் மழை பொழிந்தது. மதீனாவில் மழை பொழியவில்லை.
Book : 15
பாடம் : 9 மழைவேண்டிப் பிரார்த்திக்க தனித்தொழுகை நடத்தாமல் ஜுமுஆத் தொழுகையை அதற்குப் பயன்படுத்திக் கொள்வது.
1016. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து `கால்நடைகள் அழிந்துவிட்டன் பாதைகள் துண்டிக்ப்பட்டுவிட்டன` என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜூம்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் அதே மனிதர் வந்து, `வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன. மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்றார். நபி(ஸல்) அவர்கள் எழுந்து `இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளைநிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)` என்றுபிரார்த்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது.
Book : 15
பாடம் : 10 பெரு மழையால் பாதைகள் துண்டிக்கப் பட்டால் பிரார்த்திப்பது.
1017. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து `கால்நடைகள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் ஒருவர் வந்து, `வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன` என்றார். நபி(ஸல்) அவர்கள் `இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளை நிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது.
Book : 15
பாடம் : 11 நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது தம் மேல் துண்டை மாற்றிப் போடவில்லை (எனவே, ஜுமுஆ நாளில் மழைவேண்டும் போது மேல் துண்டை மாற்றிப் போடுவது அவசியமில்லை) எனும் கூற்று.
1018. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
செல்வம் அழிவது பற்றியும் மக்கள் சிரமப் படுவது பற்றியும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள்.
இதில் நபி(ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கியதாகவும் மேலாடையை மாற்றிப் போட்டதாகவும் கூறப்படவில்லை என்று இஸ்ஹாக் இப்னு அப்தில்லாஹ் கூறுகிறார்.
Book : 15
பாடம் : 12 மக்கள் இமாமிடம் மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொண்டால் அதை அவர் மறுக்கலாகாது.
1019. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனஅவ அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் ஒருவர் வந்து `வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன` என்றார். நபி(ஸல்) அவர்கள் `இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளை நிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!) என்று பிரார்த்தித்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது.
Book : 15
பாடம் : 13 பஞ்சத்தின் போது இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களிடம் பிரார்த்திக்கும்படி கோரினால்...
1020. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
குறைஷீகள் இஸ்லாத்தை மறுத்தபோது அவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். இதனால் அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு அழிவுக்கு நெருங்கினார்கள். செத்தவற்றையும் எலும்புகளையும் கூட உண்ணலானார்கள். இந்நிலையில் அபூ சுஃப்யான், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `முஹம்மதே! உறவினர்களோடு இணைந்து வாழுமாறு கூறுகிறீர். உம்முடைய கூட்டத்தினர் அழிந்து கொண்டிருக்கிறார்கள் . எனவே அல்லாஹ்விடம் துஆச் செய்வீராக!` என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் `வானம் தெளிவான புகை மூட்டத்தை வெளிப்படுத்தும் நாளை எதிர் பார்ப்பீராக!` (திருக்குர்ஆன் 44:10) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் குரைஷீகள் நிராகரிப்பிற்கே திரும்பினார்கள். இதையே `அவர்களைப் பெரும்பிடியாக நாம் பிடிக்கக் கூடியநாளில்` (திருக்குர்ஆன் 44:16) என்ற வசனம் கூறுகிறது. இது பத்ருப் போரின்போது நிறைவேறியது.
நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்ததும் மழை பொழிந்தது. ஏழு நாள்கள் மழை நீடித்தது. பெருமழை குறித்து மக்கள் முறையிட்டபோது `இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக ஆக்கி விடாதே!` என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே மேகம் விலகியது. அவர்களின் சுற்றுப் புறத்தில் மழை பொழிந்தது.
Book : 15
பாடம் : 14 மழை அதிகமாகும் போது சுற்றுவட்டாரங்களுக்கு அதைத் திருப்பிவிடுமாறும் அது தமக்குப் பாதகமாக அமைந்து விடக் கூடாதெனவும் பிரார்த்திப்பது.
1021. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்தும்போது மக்கள் எழுந்து சப்தமிட்டனர். `இறைத்தூதர் அவர்களே! மழை பொய்த்துவிட்டது. மரங்கள் கருகிவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன. எனவே மழை பொழிச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்று கேட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் `இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்` என்று இரண்டு முறை கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அப்போது வானத்தில் எந்த மேகத்தையும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் தோன்றி மழை பொழிந்தது. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கித் தொழுகை நடத்தினார்கள். மழை அடுத்த ஜும்ஆ வரை நீடித்தது. (அடுத்த ஜும்ஆவில்) நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது `வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்`. என்று மக்கள் உரத்த குரலில் கூறினர். நபி(ஸல்) அவர்கள் புன்னகை செய்தார்கள். பின்னர் `இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இதைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக இதை ஆக்கிவிடாதே" என்று பிரார்த்தித்தார்கள். உடனே மதீனாவைவிட்டு மழை விலகியது. அதன் சுற்றுப் புறங்களில் மழை பெய்யத் துவங்கியது.மதீனாவில் ஒரு துளியும் விழவில்லை. மதீனாவை நான் பார்த்தபோது அது ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதைப் போல் இருந்தது.
Book : 15
பாடம் : 15 நின்று கொண்டே மழை வேண்டிப் பிரார்த்தித்தல்.
1022. அபூ இஸ்ஹாக் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு யஸீது(ரலி) (மழைத் தொழுகை நடத்தப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் பராஃ(ரலி), ஜைத் இப்னு அர்கம்(ரலி) ஆகியோரும் சென்றனர். அப்துல்லாஹ் இப்னு யஸீது(ரலி) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். மிம்பரில் ஏறாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தினார்கள். பின்னர் பாவமன்னிப்புத் தேடினார்கள். பிறகு சப்தமக ஓதி, இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பாங்கும் இகாமத்தும் சொல்லவில்லை.
Book : 15
1023. அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க மக்களோடு சென்றனர். நின்றவாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகு கிப்லாவை நோக்கித் திரும்பினார்கள். தம் மேலாடையையும் மாற்றிப் போட்டார்கள். அவர்களுக்கு மழை பொழிந்தது.
Book :15
பாடம் : 16 மழைவேண்டித் தொழும் போது சப்தமாகக் குர்ஆன் ஓதுவது.
1024. அப்துல்லாஹ் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கித் பிரார்த்தித்தார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.
Book : 15
பாடம் : 17 நபி (ஸல்) அவர்கள் தம் முதுகை மக்களுக்குக் காட்டும் விதமாக திரும்பி நின்றார்களா?
1025. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டபோது அவர்களை பார்த்தேன். அப்போது அவர்கள் மக்களுக்கு முதுகைக் காட்டிக் கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.
Book : 15
பாடம் : 18 மழைத் தொழுகை இரண்டு ரக்அத்களே.
1026. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். அப்போது தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
Book : 15
பாடம் : 19 திடலுக்குச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திப்பது.
1027. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கத் திடலுக்குச் சென்றார்கள். கிப்லாவை நோக்கி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். தம் மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.
மற்றோர் அறிவிப்பில் தம் ஆடையின் வலப்புறத்தை இடது தோளின் மீது போட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Book : 15
பாடம் : 20 மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது கிப்லாவை முன்னோக்குதல்.
1028. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (மழைத் தொழுகையைத்) தொழுவதற்காகத் திடலுக்குப் புறப்பட்டார்கள். துஆச் செய்தபோது அல்லது துஆச் செய்ய நாடியபோது கிப்லாவை முன்னோக்கினார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
Book : 15
பாடம் : 21 மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது இமாமுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்துவது.
1029. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு வெள்ளிக் கிழமையன்று ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். `இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் அழிந்துவிட்டன. குடும்பமும் அழிந்தது. மக்களும் அழிந்தார்கள்` என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காகத் தம் கைகளை உயர்த்தினார்கள். அவர்களுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தார்கள். நாங்கள் பள்ளியைவிட்டு வெளியே வருவதற்குள் மழை பெய்தது. அடுத்த ஜும்ஆ வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து `இறைத்தூதர் அவர்களே! பயணம் செல்வோர் கஷ்டப் படுகின்றனர். பாதை அடைபட்டுவிட்டது` என்றார்.
Book : 15
1030. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் அக்குள் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு (துஆச் செய்யும் போது) தம் கைகளை உயர்த்தினார்கள்.
Book :15
பாடம் : 22 மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது இமாம் கைகளை உயர்த்துவது.
1031. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப்பிரார்த்திக்கும்போது தவிர எந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை உயர்த்த மாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது) தம் அக்குள் வெண்மை காணப்படும் அளவிற்கு உயர்த்துவார்கள்.
Book : 15
பாடம் : 23 மழை பொழியும் போது கூற வேண்டியவை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (2:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸய்யிப் எனும் சொல்லுக்கு மழை என்று பொருள். (ஸய்யிப் என்பதன் கடந்தகால வினைச் சொற் களான) ஸாப, அஸாபா ஆகியவற்றின் எதிர்கால வினைச் சொல் யஸூபு என்பதாகும்.
1032. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது `பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)" என்று கூறுவார்கள்.
Book : 15
பாடம் : 24 ஒருவர் தமது தாடியில் தண்ணீர் வடியும் அளவிற்கு மழையில் நனைவது.
1033. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமையன்று மிம்பரில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒரு கிராமவாசி எழுந்தார். `இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குடும்பத்தினர் பட்டினியில் வாடுகின்றனர். எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்று அவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் (பிரார்த்திப்பதற்காகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். அப்போது வானத்தில் மேகம் எதுவும் இருக்கவில்லை. திடீரென மலைகளைப் போன்று மேகங்கள் திரண்டன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள் அவர்களின் தாடி வழியாக மழைத் தண்ணீர் வடிந்ததை கண்டேன். அன்றைய தினமும் மறுநாளும் மூன்றாவது நாளும் அதற்கடுத்த ஜும்ஆவரையுள்ள நாள்களிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. அப்போது அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து `இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்துவிட்டன. செல்வங்கள் மூழ்கிவிட்டன. எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தினார்கள். `இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இதைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக இதை ஆக்கிவிடாதே" என்று கூறினார்கள். அவர்கள் வானத்தை நோக்கித் தம்கையால் சைகை செய்த போதெல்லாம் மேகங்கள் விலகிச் சென்றன. முடிவில் மதீனா ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதைப் போல் மாறியது. `கனாத்` எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. எப்பகுதியிலிருந்து வரக்கூடியவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலில்லை.
Book : 15
பாடம் : 25 கடுங்காற்று வீசும் போது (என்ன செய்ய வேண்டும்?).
1034. அனஸ்(ரலி) அறிவித்தார்.
கடுமையான காற்று வீசும்போது நபி(ஸல்) அவர்கள் முகத்தில் ஏற்படும் மாறுதல் அனைவருக்கும் தெரியும்.
Book : 15
பாடம் : 26 நான் (ஸபா எனும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன் எனும் நபிமொழி.
1035. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
"நான் மழைக்காற்றின் மூலம் உதவப்பட்டுள்ளேன். `ஆது` கூட்டத்தினர் வெப்பக் காற்றினால் அழிக்கப்பட்டனர்."
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 15
பாடம் : 27 நிலநடுக்கங்களும் இறுதிநாளின் அடையாளங்களும்.
1036. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை - காலம் சுருங்கும் வரை - குழப்பங்கள் தோன்றும் வரை - கொலை செய்தல் அதிகமாகும் வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை - கியாம நாள் ஏற்படாது."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 15
1037. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"இறைவா! எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் `எங்கள் நஜ்து நாட்டிற்கும் (பிரார்த்தியுங்கள்)` என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் `அங்குதான் குழப்பங்களும் பூகம்பங்களும் ஏற்படும். அங்கு தான் ஷைத்தானின் கொம்பு தோன்றும்` என்று கூறினார்கள்.
Book :15
பாடம் : 28 உங்களுக்கு வழங்கிய வாழ்வாதாரத்திற்கு நீங்கள் பொய்பிப்பதையே (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?எனும் (56:82ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள ரிஸ்கக்கும் என்பதை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஷுக்ரக்கும்(உங்கள் நன்றியாக) என்று ஓதினார்கள்.
1038. ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி `உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?` என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் `அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்` என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்" என்று அல்லாஹ் கூறினான் எனக் குறிப்பிட்டார்கள்.
Book : 15
பாடம் : 29 மழை எப்போது வருமென்பதை இறைவனைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (குறிப்பு: காண்க ஹதீஸ்எண்-50)
1039. `ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதை எவரும் அறிய முடியாது. கருவறைகளிலுள்ள நிலைமைகளை எவரும் அறிய முடியாது. ஒருவர் நாளை எதைச் சம்பாதித்தார் என்று அறிய முடியாது. ஒருவர் தாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பதை அறிய முடியாது. மழை எப்போது வருமென்பதையும் எவரும் அறிய முடியாது` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 15

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.